பயிர் பாதுகாப்பு சில குறிப்புகள்
பயிர்களை நன்கு வளர்த்தால் மட்டும் போதாது அவற்றை நோய் பூச்சித் தாக்குதலிலிருந்து பாதுகாக்கவும் வேண்டும்.
கடந்த 30-35 ஆண்டுகளாக நாம் கணக்கில்லாத வகையில் உரம், பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தியுள்ளோம்.
இதனால் நமது நிலம், நீர், காற்று இவை மாசுபட்டதோடு மக்களின் உடல்நலமும் கெட்டுப்போய்விட்டது.
கணக்கில்லாத நோய்கள் பரவிவிட்டன.
உழவன் தனது உழைப்பை எல்லாம் பூச்சிகொல்லிகளுக்குச் செலவிட்டுவிட்டனர்.
எனவே உழவர்களாகிய நாம் இந்தக் கொடிய பூச்சிக் கொல்லிகளிடமிருந்து தப்ப வேண்டுமானால் இயற்கை வழியில் பூச்சி நோய் கட்டுப்பாட்டைப் பின்பற்றியாக வேண்டும்.
செலவில்லாத எளிய முறைகள் நம்மிடம் உள்ளன.
நோய், பூச்சிகள் வருமுன் காக்க வேண்டும்.
வந்தபின்னால் காப்பது கடினம்.
நோய் தாக்குதலும், பூச்சித் தாக்குதலும்
ஒரு பயிரில் குறைவான ஊட்டம் இருக்குமேயானால் அதாவது பயிருக்கு போதிய ஊட்டம் கிடைக்கவில்லையானால் பயிர் வலுவிழந்து நிற்கும். அப்போது அது நோய்த் தாக்குதலுக்கு இலக்காகிறது.
பயிரில் -நச்சுயிர் ( வைரஸ்) களும், நுண்ணுயிரிகளும், தாக்குதல் தொடுகின்றன நோய் பயிரின் உள்ளிருந்து தாக்குகின்றது.
ஒரு பயிரில் அளவிற்கு அதிகமாக ஊட்டம் இருக்குமானால் அதாவது பயிர் பச்சைப் பசேல் என்று கரும்பச்சையாக காணப்படுமேயானால் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கின்றது. இதை நாம் அதிக ஊட்டம் என்று கூறுகிறோம்.
பச்சை இலைகளைத் தின்ன வரும் பூச்சிகள் பயிர் முழுவதையும் அழிக்கின்றன.
பூச்சித்தாக்குதல் என்பது வெளியில் இருந்து நடக்கின்றது.
இதை நாம் புரிந்து கொண்டால் எளிய முறையில் இத்தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.