பாரம்பரிய நெல்ரகங்கள்:

பாரம்பரிய நெல்ரகங்கள்:

வளர்ந்து விளையும் வரப்புக் குடைஞ்சான், வறட்சி தாங்கி விளையும் வாடஞ்சம்பா, உடல் உழைப்புக் குறைந்தோர் விரும்பி உண்ணும் கிச்சடிச் சம்பா, சீரகச் சம்பா, அகிலம் போற்றும் ஆற்காடு கிச்சடி, நெல்லை மக்கள் தலைமுறை தலைமுறையாகப் பயிரிட்ட கொட்டாரஞ்சம்பா, நீரிழிவு நோய்க்கு மருந்தாகும்.

◆ விளையும் தன்மை…
ஆறு மாதத்தில் விளையும் வாடன் சம்பா, கட்டைச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பாவும் இருந்தன. ஐந்து மாதத்தில் விளையும் கிச்சடிச் சம்பா, கார்த்திகைச் சம்பா இருந்தன. மூன்று மாதத்தில் விளையும் குள்ளக்கார், கருங்குறுவை, செங்குருவை, செங்கல்பட்டுச் சிறுமணி இருந்தன.

ஈரக்கசிவிலேயே விளைச்சலுக்கு வரும் உவர் மொண்டானும், வெள்ளத்திற்கு மேல் கதிர் நீட்டும் மடுமுழுங்கியும் இருந்தன. அறுபது நாளில் விளையும் அறுபதாம் குருவை இருந்து. 70 நாளில் விளையும் பூங்கார் இருந்தது.

ரகமும் அதன் சிறப்பு:

கருப்பு அரிசி, சிவப்பரிசி, நீராகர ருசிக்காகப் பயிர் செய்யப்பட்ட சம்பா, மோசணம், குரங்கு பிடிப்பது போல மணி பிடித்த குரங்குச் சம்பா, மணம் கமழும் இலுப்பைப்பூச் சம்பா, புட்டு செய்வதற்கு ஏற்ற கவுணி, குமரி மாவட்ட மக்கள் விரும்பி உண்ணும் கட்டிச் சம்பா, இப்படி ஏராளமான நெல் ரகங்கள் இருந்தன.

◆ அரிசி உணவு…
அரசி உணவுவகைகள் நமது வாழ்வில் முக்கிய உணவு அங்கமாக உள்ளது. அதில் மாவுப்பொருள், வைட்டமின், புரோட்டீன் இரும்பு, மெக்னீசியம் என பல சத்துபொருள் அடக்கம். ஆனால் அதையும் நவீன அறிவியல் காரணமாக தீட்டி பயன்படுத்துவதால் அதில் இருக்கும் அனைத்து சத்தையும் மருத்துவ குணங்களையும் இழந்து வெறும் சக்பையை சாப்பிடுகிறோம்.

◆ உயரத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள்….
2 அடிக்கு சடார், 3 அடிக்கு அறுபதாம் குருவை, 4 அடிக்கு பூங்கார், 5அடிக்கு சீரக சம்பா, 6அடிக்கு ரோஸ்கார், 7அடிக்கு சிவப்பு குடை வாழை, 8அடிக்கு காட்டுயானம் மற்றும் மாப்பிள்ளை சம்பா என உயரத்துக்கு ஏற்ற பயிர் வகைகள் உள்ளன.

◆ அளவீடு…
சன்னம், மோட்டோ, நீளம், சிறிது உருண்டை என பல அளவீட்டில் உள்ளது.

◆ நிறங்கள்….
வெள்ளை, மஞ்சள், சிகப்பு, கருப்பு, பழுப்பு என பல நிறத்தில் உள்ளன.

◆ வளரும் நாட்கள்….
60நாள், 65, 70, 90, 100, 110, 120, 130, 140, 150, 160, 180நாள்களில் விளையும் நெல் ரகங்களும் உள்ளன. சில மலை ரகங்கள் 9 மாதம் காலம் விளைய எடுத்துக்கொள்ளுமாம்.

■ மருத்துவ குணங்கள்..
வாதம், பித்தம், கபம், காய்ச்சல், பித்த ரோகம், சிரஸ்தாபம், உஷ்ணம், குஷ்டம், விஷம், எலும்பு முறிவு, நியாபகம் சக்தி, மந்தம், சர்க்கரை நோய், குடல் சுத்தி, சொறி, சிரங்கு, பிசி எடுக்க, அஜீரணம் என பல வகையான நோய் தொந்தரவுகளில் இருந்து நலம் பெறவும் பலம், உடல் சுத்தி ஆரோக்கியம் கூட என பல வகையான பாரம்பரிய ரகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினார்கள். சிகப்பு மற்றும் கருப்பு நிற அரிசிவகைகள் அதீத மருத்துவ குணங்கள் நிறைந்ததாக கருதப்படுகிறது.

◆ பயன்பாடு….
பல வகையான உணவு வகைகள் செய்யவும் சாப்பாடு, சிற்றுண்டி பலகாரம், அவல், பொரி, கஞ்சி, நீராகாரம், சுவை, பூஜைக்கான என தனித்தனி பயன்பாடுகளுக்காவும் பல ரகங்கள் உள்ளன.

◆ சம்பா வகைகள்….
அரும்போக சம்பா, இராவணன் சம்பா, இலுப்பைப்பூ சம்பா, ஈர்க்குச் சம்பா, கட்டை சம்பா, கப்பச்சம்பா, கருடன் சம்பா, கருப்புச் சீரக சம்பா, களர்சம்பா, கர்நாடக சீரக சம்பா, கல்லுண்டைச் சம்பா, காடைச் சம்பா, காளான் சம்பா, கார்த்திகை சம்பா, கிச்சலி சம்பா, குண்டுச் சம்பா, குறுஞ்சம்பா, குன்றிமணிச்சம்பா, கைவரச்சம்பா (தங்கச் சம்பா), கோடைச் சம்பா, கோரைச் சம்பா, சம்பா மோசனம், சடைச் சம்பா, சிவப்பு சீரகச் சம்பா, சீரகச் சம்பா, செஞ்சம்பா, தோட்டச் சம்பா, பெரிய சம்பா, புனுகுச் சம்பா, புழுகுச் சம்பா, பூஞ்சம்பா, மல்லிகைப்பூ சம்பா, மணிச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, மிளகுச் சம்பா, மைச்சம்பா, நரிக்குருவை நீலச்சம்பா, வளைத்தடிச் சம்பா, வாடன் சம்பா, வாலான்

சம்பா, வெள்ளை சீரக சம்பா.

◆ கார் ரகங்கள்…
கப்பகார், கார்நெல், குள்ளக்கார், செங்கார், பெங்களூர்கார், பெருங்கார், பெரிய நெல், புழுதிக்கார், திருத்துறைப்பூண்டி கார், பூங்கார், முட்டக்கார், ராமக்குறிக்கார், ரோஸ்கார்.

◆ மற்றவை…
அறுபதாம் குருவை, அம்பாசமுத்திரம், அன்னமழகி, ஆற்காடு கிச்சலி, உத்தம்பாளையம் (செம்பாளை), உவர்முண்டான், ஒட்டுக்கிச்சடி, ஒட்டடையான், களர்பாளை, கட்டமோசனம், கல்லி மடையான், கருங்குறவை, காடை கழுத்தான், காட்டுயானம், குடைவாழை, குழியடிச்சான், குட்டவாழை, குதிரைவால் சிறுமணி, சடார், சிவப்புப் பொன்னி, சிவப்புக் குடவாழை, சீதா போகம், சீரக மல்லி, செங்கல்ப்பட்டு சிறுமணி, சொர்ணவாரி, சூரக்குருவை, தூயமல்லி, பிச்சவாரி, பிசினி, பெரிய நெல், பூம்பாளை, பொன்மணி, மணல்வாரி, மலைநெல், மலைக் கிச்சலி, மடுமுழுங்கி, மண்கத்தை, மஞ்சப்பொன்னி, முத்து வெள்ளை, மொட்டக்கூர் மோசனம், நெய்க்கிச்சலி, வைகுண்டா, வெள்ளை கட்டை, வெள்ளை செர்ணவாரி.

■சிறப்பம்சங்கள்:

● அறுபதாம் குருவை
எல்லா நில மண்ணுக்கும் ஏற்றது. அனைத்து பட்டத்திலும் நடலாம். 3 அடி வளரும். 60நாள் பயிர். 150 மற்றும் 180 நாள் பயிர்களுடன் கலந்து விதைத்து இரட்டை அறுவடை பெறலாம்.

● அன்னமழகி
நல்ல சுவையாக இருக்கும். மருத்துவ குணம் நிறைந்தது. ஆரோக்கியமானது. காய்ச்சல், பித்தம் மற்றும் வெப்பத்தை தீர்க்கும்.

● இலுப்பை பூ சம்பா
பித்தரோகம், சிரஸ்தாபம், உபசர்க்க தாகம், உஷ்ணம் ஆகியவற்றை தீர்க்கும்.

● ஈர்க்குச் சம்பா
சுவையாக இருக்கும். பூஜைக்கு அதிகம் பயன்படுத்துவர். கொஞ்சம் பித்தம் உண்டு.

● உவர்முண்டான்
உப்பு நிலத்திற்கு ஏற்றவை.

● கல்லுண்டைச் சம்பா
இதை உண்டால் மல்யுத்தவீரரை கூட எதுர்க்கும் அளவு பலம் கொடுக்கும் என்பர்.

● கருங்குறுவை
கறுப்புநிறமாக இருக்கும். இதை இந்திய வயாகரா என்று கூறுவர்.

● காடைச்சம்பா…
அற்பநோய்களை தீர்க்கும். பலம் கொடுக்கும்.

●கார்நெல்…
140 நாள் வயதுடையது. மந்த குணமுள்ளவர்களுக்கு உகந்தது. உடல் பலம் பெறும்.

●காளான் சம்பா…
உடல் உறுதி மற்றும் ஆரோக்கியம் கிட்டும். வாதம் போக்கும்.

● காட்டுயானம்…
8அடி வளரும். 180நாள் பயிர். இயற்கை சீற்றம் தாங்கும். விதை மற்றும் அறுவடை தான். களை வராது, பூச்சி தாக்குதல் இருக்காது. சிவப்பு ரகம். கஞ்சி, சிற்றுண்டி, பழையசாதம், சாப்பாடு மற்றும் அவல் பாயாசம் பிரமாதமாக இருக்கும்.

● கிச்சலிசம்பா…
சன்னரகம், பிரியாணிக்கு ஏற்றது. உடல் செமை மற்றும் பொழிவு பெறும்.

● குள்ளக்கார்….
அனைத்து பட்டத்துக்கும் ஏற்றது. 110நாள் பயிர். சிற்றுண்டிக்கு அருமையாக இருக்கும்.

● குடவாழை….
குடலுக்கு நன்மைபயக்கும்.
குடலை வாழ வைப்பதால் குடவாழை என்பர். சர்க்கரை நோயை தடுக்கும்.

● குண்டுசம்பா…
ரோகம் தீர்க்கும்.

● குறுஞ்சம்பா…
பித்தம், வாதம் போக்கும்.

● குன்றிமணிச்சம்பா…
சிற்சில் நோய்கள் தீர்க்கும். சரீர பலம் கிட்டும்.

● குழியடிச்சான்….
மோட்டாரகம். வறட்சயை தாங்கும். ஒரு மழையே போதும். உப்பு நிலத்திற்கு ஏற்றவை. பூச்சி தாக்காது. 90 நாள் வயதுடையது. பலகாரம் செய்ய ஏற்றவை.

● கைவரச்சம்பா…
அனைத்து நிலத்திற்கு ஏற்றவை. பலம் கொடுக்கும். பித்தம் குறைக்கும்.

● கோடைச் சம்பா…
வாதம் போக்கும். சிற்சில நோய் தீர்கும்.

● கோரைச் சம்பா…
பித்தம், நமைச்சல் போக்கும். சூடு தனித்து குளிர்ச்சி உண்டாக்கும்.

● சடார்….
2 அடி வளரும். சன்னரகம். 65 நாள் வயதுடையது. நாகை மாவட்டத்தை கொண்டது.

● சம்பாமோசனம்….
பூம்பாலை என்றும் அழைப்பர். மோட்டாரகம். 160 நாள் வயது. அவல் இடிக்க சிறந்தவை.

● சிவப்பு குடவாழை…
அதீத மருத்துவ குணம் நிறைந்தது. சர்க்கரை நோய்க்கு சிறந்தவை. சிவப்பு ரகம். 150நாள் வயது. இயற்கை சீற்றத்தை சமாளித்து வளரக்கூடயவை. கஞ்சி மற்றும் நீராகாரத்துக்கு அருமையாக இருக்கும்.

● சீரகச் சம்பா….
5 அடி வளரும். 150 நாள் வயது. சன்னரகம். சுவையானது.

● சீரகமல்லி..
130 நாள் வயது. சன்னரகம். சாப்பாட்டுக்கு ஏற்றவை.

● செஞ்சம்பா…
சொறி சிரங்கு போக்கும். பசி உண்டாக்கும்.

● தூயமல்லி…
130 நாள் வயது. சாப்பாடுக்கு ஏற்றவை. கர்பினி பெண்களுக்கு ஏற்றவை.

● பிச்சவாரி நெல்…
மருத்துவகுணம் நிறைந்தது. இதன் தவிடு வைக்கோல் மாடுக்கு கழிச்சலை போக்கும்.

● பிசினி….
130 நாள் வயது. சிற்றுண்டிக்கு ஏற்றது.

● பெங்களூர் கார்….
120 நாள் வயது. 5 அடி வளரும்.

● பெருங்கார்…
130 நாள் வயது. நிறைந்தவை. சாப்பாடு பலகார வகை என அனைத்திற்கும் ஏற்ற ரகம்.

● புழுகுச் சம்பா…
பலம் உண்டாகும். தாகம் தீர்க்கும்.

● பூங்கார்..
70 நாள் வயது. ஆண்டுக்கு 5 முறை விதைக்கலாம். இயற்கை சீற்றம் தாங்கி வளரக்கூடியது. கர்ப்பிணி பெண்களுக்கு பத்தியகஞ்சிக்கு ஏற்றவை.

● மடுமுழுங்கி…
வெள்ளம் இருந்தாலும் அதை தாண்டி வளரும்.

● மணக்கத்தை…
குஷ்டம், புண், ரணம் குணமாகும்.

● மணிச்சம்பா…
உடல் சுத்தி செய்யும்.

● மஞ்சள் பொன்னி…
100 நாள் வயது. அனைத்து உணவுக்கும் ஏற்றவை.

● மாப்பிள்ளை சம்பா…
180 நாள் வயது. மோட்டாரகம். உடல் பலம் பெறும். சிவப்பு ரகம்.

● மிளகு சம்பா. …
உடல் பலம் பெறும்.

● முட்டக்கார்…
120 நாள் வயது. மோட்டா ரகம். சிற்றுண்டிக்கு ஏற்றது.

● மைச்சம்பா….
வாதம் பித்தம் போக்கும்.

● நீலச்சம்பா….
180 நாள் வயது. மோட்டா ரகம். சிற்றுண்டிக்கு ஏற்றது.

● ராமகுறிக்கார்…
4 அடி வளரும். 100 நாள் வயது. உருண்டை வடிவம் கொண்டது. சுவையானது, அனைத்து உணவுக்கும் ஏற்றது.

● ரோஸ்கார்….
களிமண் பகுதிக்கு ஏற்றது. நீருக்குள் மூழ்கி இருந்தாலும் வளரும்.

● வளைத்தடிச் சம்பா…..
வாதம், பித்தம், உப்பசம், ரோகம் தீர்க்கும்.

● வாடன் சம்பா…
160 நாள் வயது. மோட்டா ரகம். வறட்சி தாங்கி வளரும். சிற்றுண்டிக்கு ஏற்றவை.

● வாலான் சம்பா…
தேக பொழிவு பெறும்.

● வைகுண்டா….
150 நாள் வயது. பொரிக்கு ஏற்றவை.

#குறிப்பு:
இந்த தகவல்கள் எல்லாம் சிலரின் அனுபவ பதிவுகள். இடத்துக்கு இடம் சூழலுக்கு சூழல் இதன் பெயர் மற்றும் தன்மை, கால வயது எல்லாம் மாறியிருக்கும். 1 மாத காலமாக இந்த பதிவை தயார் செய்ய சில புத்தகங்களும் உதவின அவை விதைப்போம் அறுப்போம் மற்றும் வயிற்றுக்கு சோறிடல் வேண்டும்.

இயற்கை அளித்த பல பாரம்பரிய ரகங்கள் இன்று நம்மிடம் இல்லை. இருக்கும் எஞ்சிய சில ரகங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கடத்தவேண்டிய கடமை நமக்கு உண்டு

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories