பாழ்பட்ட நிலத்தையும், வளமாக்கும் பலதானிய விதைப்பும்

பாழ்பட்ட நிலத்தையும், வளமாக்கும் பலதானிய விதைப்பும், விதைப் பரவலாக்கமும்.

 

சுனாமி பாதித்த நிலங்கள் மீட்பு
சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகை, கடலூர் மாவட்ட விவசாயிகளின் நிலமெல்லாம் கடல் நீர் புகுந்து உப்பு படிந்தது. நிலத்தை சோதித்த விவசாயத் துறை வல்லுநர்களும், மிகப் பெரும் விஞ்ஞானிகளும் நிலத்தை சோதித்து இந்த நிலத்தில் பயிர் செய்ய பல வருடமாவது ஆகும் என்றனர். நிறைய செலவும் ஆகும் என்று கைவிட்டனர்.

இந்நிலையில் நம்மாழ்வார் ஐயா அவர்கள் அந்த நிலங்களை வேளாண் நிலங்களாக மாற்ற முடியும் என்று கூறினார். பேசியதுமட்டுமல்ல, மூன்றே மாதங்களில் அந்த நிலங்களை விளை நிலங்களாக மாற்றியும் காட்டினார் அவர்.

பின்னர் அடுத்த வருடத்திலே அதே நிலங்களில் நெல் அறுவடை செய்து, அதைத் திருவிழாவாகக் கொண்டாடிக் காட்டினார்.

அதற்காக ஐயா அவர்கள் பயன்படுத்தியது தக்கைப் பூண்டு, சணப்பு, கொழுஞ்சி போன்று உப்பு நிலங்களிலும் விளையக் கூடிய எருச்( தழை) செடிகளும், தானியங்களும், பயறுவகைகளும் கலந்த பலதானிய விதைப்பு முறைதான்…

பலவகையான தானிய விதைகளையும் ஏக்கருக்கு 20கிலோ வரை விதைத்து 45 நாளில் ஒருமுறை மடக்கி உழுதும், தேவைப்பட்டால் மறுபடியும் ஒருமுறை விதைத்து 75நாளில் மடக்கி உழுதும் செய்வோமானால் நிலம் வளமானதாக மாறிவிடும் என்கிற எளிய தொழில்நுட்பம் இன்று உலகம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது.

தேவைப்பட்டால் நிலத்தின் தன்மைகேற்ப 2 அல்லது 3முறை விதைக்கலாம்.

பலதானிய விதைப்பை பயன்படுத்தும் முறை :
ஆரம்ப காலங்களில் தனியாக பலதானியத்தை மட்டும் பயிர் செய்து நிலத்தை வளமாக்கிவிட்டுப், பின்னர் நமக்குத் தேவையான பயிர்களை பயிர்செய்வது ஒரு வகை.

தற்போது நமது உழவர்கள் அதை இன்னும் பல பயன்பாடுகளுக்கு மற்றொரு வகையிலும் செய்து வருகின்றனர். அவற்றில் சில

• எல்லா வகை மரப்பயிர்களிலும் மரக்கன்றுகளுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் இந்த பலதானியப் பயிர்களை பயிர்செய்து அவற்றை அறுத்து மரக்கன்றுகளுக்கு மூடக்காகவும் பயன்படுத்தப் படுகிறது.

• பலதானியங்களை நெருக்கமாக விதைப்பதன் மூலம் களைகளையும் கட்டுப் படுத்துகிறது.

• மூடாக்காவும் பயன்படுத்தப் படுகிறது.

• ஒருமுறை விதைத்து மடக்கி உழுவதன் மூலம் நிலத்திற்கு 6டன் வரை இலை, தழைகள் உரமாகக் கிடைக்கிறது.

• குளிர்ச்சியான சூழலை உருவாக்கி தண்ணீர் தட்டுப்பாட்டையும் போக்குகிறது.

இது போன்ற நமது உழவர்களின் பாரம்பரிய அறிவை தொடர்ந்து வானகம் மற்றும் தேன்கனி பயிற்சி மையங்களில் கற்றுக் கொடுத்து வருகிறோம்.

கற்றவர்களில் பலர் அவர்களின் நிலங்களில் சோதித்துப் பார்த்தவற்றை ஆவணப்படுத்தியுள்ளோம்.

* பழக் கன்றுகளுக்கு இடையே சிவகாசி மான்சிங் அவர்கள் பண்ணையில் செய்தவைகளும்

* மதுரை சிதம்பரம் அவர்களின் தென்னந்தோப்பில் மற்றும் வளமிழந்த நிலத்தில் செய்தவைகளும்

* சங்கரன் கோவில் கார்த்திக் அவர்கள் வாழைகன்றுகளுக்கு இடையே செய்து கற்றுள்ள பலதானிய விதைப்பு முறைகள் என பலவற்றை கீழ் உள்ள புகைப்படங்களில் ஆவணப் படுத்தியுள்ளோம். உங்கள் பார்வைக்கு…

 

வாழைக்கு இடையே உள்ள இடைவெளிகளில் பலதானிய விதைப்பு..

தென்னை இடையே உள்ள இடைவெளிகளில் பலதானிய விதைப்பு

தேன்கனி பாரம்பரிய விதை சேகரிப்புக்குழு :
கடந்த 4ஆண்டுகளாக தேன்கனி இயற்கை விவசாயக் கூட்டமைப்பின் விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குழுவாக பாரம்பரிய நாட்டு விதைகளை பயிரிட்டுப் பாதுகாத்து, விதைப் பரவலாக்கம் செய்து வருகின்றனர். அவர்களின் அனுபவத்தில்…

பலதானிய விதைக் கலவையின் பட்டியல் :

1. எருச்செடிகள் : 
தக்கைப்பூண்டு, சணப்பு, கொழுஞ்சி

2. தானியவகைகள் :
நாட்டுக் கம்பு, காட்டுக்கம்பு, கேழ்வரகு, வரகு, குதிரைவாலி, சாமை, தினை, பனிவரகு, சிகப்பு இருங்கு சோளம், மாப்பிள்ளை மினுக்கி சோளம்…

3. எண்ணென்ய் வித்துக்கள் : 
எள், நிலக்கடலை, ஆமணக்கு

4. வாசனைப் பொருட்கள் : 
நாட்டு மல்லி, வெந்தயம், கடுகு, சீரகம்

5. நாட்டுப் பயறுவகைகள் : 
உளுந்து, பாசி, துவரை, சிகப்புக் கொள்ளு, கருப்புக் கொள்ளு, தட்டைப்பயறு, மொச்சைப் பயறு, கொண்டக்கடலை போன்ற பலதானிய விதைகள் கலந்த கலவைகளை தேன்கனி பாரம்பரிய நாட்டு விதைக்குழுவினர் விதைத்தேர்வு செய்து , பாதுகாத்து பரவலாக்கி வருகின்றனர்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories