அமெரிக்காவிற்கு பறக்கும் பெரியகுளம் முருங்கை விதை : பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லுாரி முருங்கை விதையை, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிகளவில் வாங்கிச்செல்கின்றனர். பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், குறுகிய காலத்தில் அதிக மகசூல் தரக்கூடிய வகையில் ஓராண்டு பயிராக செடிமுருங்கை ரகங்களை உருவாக்கி, 5 ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ளது. இந்த செடிமுருங்கையின் இலைகள், பூக்கள் மற்றும் காய்களில் புரதம், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘சி’ போன்றவை அடங்கியுள்ளன. இதனால் செடி முருங்கைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரியில் பி.கே.எம் 1 என்ற ரகத்தை சேர்ந்த செடி முருங்கையின் விதைகள் விற்பனைக்கு உள்ளன. 100 கிராம் ரூ.300 க்கு விற்கப்படும் இந்த விதைகள் அனைத்து வகையான மண்ணிற்கும் ஏற்றதாக உள்ளன. இந்த ரக முருங்கை செடிகளில் இருந்து160 முதல் 170 நாட்களில் காய்களை அறுவடை செய்யலாம். ஒரு செடியிலிருந்து ஆண்டுக்கு சுமார் 275 காய்கள் கிடைக்கும். இவற்றின் எடை 33 முதல் 35 கிலோ வரை இருக்கும். இச்செடி முருங்கையை மறுதாம்பு பயிராக 3 ஆண்டுகள் வரைப் பராமரிக்கலாம்.முருங்கை விதைகளில் இருந்து எடுக்கப்படும் ‘பெண் ஆயில்’ என்ற எண்ணெய், முருங்கை இலைப்பொடி உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படுகிறது.
