பெருமழை கொடுத்த பாடம் -கலந்துரையாடல்.

பெருமழை கொடுத்த பாடம் -கலந்துரையாடல்.
(பாரம்பரிய விதைகள் மையம்-கலசபாக்கத்தின் சார்பாக நடந்து)

அறிமுகம்: எளிமையாக அனைவரும் ஒருவருக்கொருவர் வழக்கம் போல் இயல்பாக அறிமுகம் செய்துக்கொண்டோம்.

தலைப்புக்குள் உரையாடல் சென்றது…

# சதிஷ், பருவதமலை,
மழையை குறைசொல்றது தப்பு, நம் பயிரு எதுவும் பெருசா சேதாரம் இல்லை…

# பாபு, திடீர் குப்பம்,
எங்கள் ஒருங்கிணைந்த பண்ணையின் எல்லா குளங்களும் நிரம்பியது ,இருப்பினும் April மாதம் தண்ணீர் பற்றாக்குறை ஆகிவிடுகின்றது.நிறைய ஆடுகள் இறந்துவிட்டது.நெல் பாரம்பரிய ரகமாக இருந்ததால் சேதாரம் ஆகவில்லை.

# சம்பத்,
நெல்லுல மஞ்சா நோய் மொத்தமா வந்திருச்சி,மாட்டுங்களுக்கு கோமாரி வந்தது.

# ருத்ரேஷ் ,சதுப்பேரிபாளையம்.
RNR முழுசா படுத்துச்சி,கருப்புகவுணி சாயல…

# தமிழரசன்
கல்லகொடி சேதாரம் ஆகிடுச்சி, மாடு கால் கோமாரியால அதிகம் பாதிச்சது.

# வண்ணியனூரார்,
மாட்டுக்குலா வாய்புண்ணு,கால் புண்ணு’ வந்து ரொம்ப சிரமம்பட்டுச்சிங்க,
மிளகு(50’கிராம்),சீரகம்(50’கிராம்),வெந்தையம்(25’கிராம்) இது எல்லாத்தையும் வறுத்து,கலந்து போட்ட மூனாவது நாள்’ல இருந்து குணமாக ஆரம்பிச்சிடுச்சி.
இடைவெளி கொடுத்தும் கருப்புகவுணி சாய்ந்துவிட்டது,(குறிப்பு:அங்கு வந்திருந்த யாருக்கும் கருப்புகவுணி சாயவில்லை ,இவருடையது மட்டும் சாய்ந்துள்ளதால் சில அனுபவ விவசாயிகள் நேரில் சென்று என்ன காரமாக இருக்குமென அறிய விரும்பினர்)ஆனா மணிசம்பா சாயவில்லை,ஒவ்வொரு தண்டும் வரல்சோடு இருக்குது,கதுரு வாழைகொலையாட்டு இருக்குது.
நாம பெரியவுங்க சொல்லிட்டுபோன மேல்நோக்குநாளில் நாத்துவிடனும்.

# (அவர் பெயர் தெரியவில்லை)
ஓடைகளை நாம் சேதாரம் செய்தோம் இயற்கை நம்மை சேதாரம் செய்கின்றது…

# செந்தில்குமார்,பில்லூர்
இந்த தாட்டி RNR பாலே ஏறல,பூரா கருப்பு தட்டிச்சி,ஒரு கதுர உருவி ஊதுனா நாலு நெல்ல தவிர மொத்தும் ஓடுது…(#லெனின்: எப்ப நாத்துவிட்டது…?)
ஆவணி-11&ஆவணி 15 ரெண்டு சுத்தமா போயிட்சி…

# பச்சியப்பன், அத்திமூர்,
ஐப்பசி 10,12’ல தான் சீரக சம்பா,கருப்புகவுணி நடவு போட்டேன் பாதிப்பு இல்லை.

# (அவர் பெயர் தெரியவில்லை)
40’ஏக்கர் குளோஸ்,என்னாத்த சொல்றது…

# துரைசாமி,பெரியகாலூர்.
மாப்பிளசம்பா சாயல,செம்மண்ணுதான் நல் கெட்டி பூமிதான் இருந்து தானா கெணுரு உள்வாங்கிட்சி,அந்த அனியால ஏரி தண்ணி பெலாசூர் ஏரிக்கு போகும் போது,மேட்டு நெலத்துலகூட ஊத்து ஓடுது,எட்டுனதூரத்துக்கு இருந்த காவா இன்னிக்கு திமோண்டு இருக்குது.மன்னர்கள்,முன்னோர்கள் வைத்திருந்ததை இழந்துள்ளோம்.மழைய கொரசொல்ரது நியாயம் இல்ல.அந்த தம்மா எடத்துல எம்மா வெளஞ்டபோது.
ஏரி கோடிபோற எடத்துல வைக்கபோர் போடுரான்,கெண்து மோட்ட அள்ளியாந்து கொட்டுரான்,பாதிப்பு நம்மலால தான்.

# வாசு,காப்பலூர்
இந்த தாட்டி ஆடிமாசமே மழை எறங்கிட்டதால 2’ஏக்கராவ சொம்மாவேவிட்டுட்டேன்,
சுதாரிச்சிக்குனு.மாட்டுக்கு பில்லுக்கு ஆச்சி…

# பரசுராமன், சின்ன காலூர்
ஏரிக்கு-ஏரி இருந்த நீர்வழி போக்க அழித்ததால் நமக்கே பாதிப்பு திரும்பியுள்ளது.
துயரப்பதிவு -தும்பைகாட்டு பக்கம் குமரவேல் என்றவிவசாயி காட்டு வெள்ளம் வந்துபோது கிணத்துமேட்டிலிருந்த மாட்ட காப்பாத்தபோய் கிணறு சரிந்து மாட்டோட தன்னுயிரையும் இழந்த செய்தியை கூறினார்.

# சதிஷ், சாலையனூர்
ஆடி-18’க்கு நாத்துவிட்டது பெருத்த சேதாரம்,மாட்டுங்குளுக்கு நோயதாண்டி தீணி ரொம்ப டிமாட்டாபோச்சி.மழையை குறைகூறமுடியாது.26’வருசங்கழிச்சி எங்கூர் ஏரி கோடிபோச்சி…

# செங்கம் விவசாய குழுசார்பாக வந்தவர்,
ஏரி ஆக்கிரமிப்பால் தவறு இழைக்காதவர்களுக்கும் பாதிப்பு.

# நந்தகுமார்,கேளூர்
25’ஆண்டுகள் கழித்து எங்க ஏரி கோடிபோச்சி.மூதாதைகள் காரணமில்லாமல் வரப்புகளையும்,கால்வாய்களையும் பராமரிக்கவில்லை,மழையின் அளவுகளை கணித்து அதற்கான வரத்து கால்வாய்-வடிகால் கால்வாய் என முறையாக பராமரித்துவந்தனர்.ஒருத்த இருபது வருசங்கழிச்சிகூட அந்தவழியா போவான் நடுவுல யாரும் வருவதில்லைனு அந்தவழிய மூடக்கூடாது அவனுக்காகத்தான் அந்த வழி போடப்பட்டிருக்கும்,யாரு அதை அழிக்கக்கூடாது.அற்பகாரணங்களுக்காக அண்டப்பாத்தியில் ஆக்கிரமிப்பு செய்கின்றனர்(எலி மோட்ட வைக்கு,மாடு மேயும்,ஆர்வளர்கள் விதைதத்து வளர்ந்த பணங்கண்ணு வளந்தா நெழல் விழும்னு கடப்பாரைய உட்டு ஆட்டி அழிக்கிராங்க…)
மூனு கிலோமீட்டர் ஏரிக்கரைக்கு மூனு பணை போதுமா? கடைசில ஊர் தலைகட்டுங்க ஏரிகரைக்கு ஆபத்து வந்துடுமோன்னு காவல்காத்துனு இருந்தாங்க…
பயிர் சாய்தலை சமாளிக்க எத்தனைபேர் வயலைச்சுற்றி அகத்தி,கிளைரிசிரியா நட்டுள்ளோம்?

# ஜகன்நாதன்,துரிஞ்சிக்குப்பம்
நல்லா நீர் நிலைகளில் குளிச்சோம்.
அப்போலா ஆக்கிரமிப்பு இல்லை, அதனால பாதிப்பும் இல்லை.

# ஜகதிஷ்வரன்,துரிஞ்சிக்குப்பம்
மனமகிழ்ச்சி,அறுவி,ஓடை எல்லாம் நிரம்பியுள்ளது. கழலினங்கள் பெருகியுள்ளது,மீன் உற்பத்தி பெருகியுள்ளது.இதையேல்லாம் இந்த தலைமுறை பார்க்க வாய்பாகியுள்ளது.

# சந்திரசேகர், சோர்பணந்தல்
துரிஞ்சல் ஆற்றில் 50’ஆண்டுகள் கழித்து இத்தகைய பெருவெள்ளம் வந்துள்ளதாக ஊர் பெரியவர் கூறினார்.
அப்போதும் இப்போது கால்நடைகள் பெரிதாக பாதித்துள்ளது.கொட்டகை,பாலங்கள்,சாலைகள் என பலவற்றை சேதபடுத்தியது.
முன்னெச்சரிக்கை அரசு செய்யவில்லையா,ஊர்மக்களிடம் இல்லையா என தெரியவில்லை.
அரசின் இழப்பீடு போதுமானதாக இருக்காது.
குறிப்பாக பகுதிநேர விவசாயிகளைவிட முழுநேர விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
தீர்வு என நான் நினைப்பது ,
சரியான நிலவடிவமைப்பு காணாமல் போனது,வரப்பு இல்லை.
இரசாயணம் சார்ந்த நிலத்தின் நீர் இரசாயணம்சாராத நிலத்தில் பாய்ந்தோடியது.என்தோட்டத்தில் வரப்பு 2,3அடி உயரம் இருந்ததால் நெல்பயிர் சாயவில்லை.

# திருநாவுக்கரசு ,மேலரணி
சேனக்கிழங்கு தண்ணி கோத்துக்குனு இருந்தும் ஒன்னு ஆவல.கண்ணுகுட்டிமட்டும் தாய்க்கு கோமாரி சரியாடிச்சினு ஒருவேல பால் குடிக்கவிட்டேன் தவறிடுச்சி .ஏர்மாடாவந்திருக்கும்.
மேல மலையில யாரோ தேவைக்கு வெட்டிக்குனு மூங்கிலின் மீச்சத்த அப்டியே உட்டுட்கிறாங்க அது வெள்ளதுல வந்து பாலத்துல 20,30 அடிக்காட்டு அடசிக்கிச்சாங்காட்டியு பாலத்துக்கு இன்னாட்ட 20’அடி அன்னாட்ட 20’அடி ரோடு அறத்துக்குனு போய்டுச்சி, பாலம் பம்புசெட்டு மாதிரி அளுக்கா நிக்கிது.(கீழ்பாலூரில் இருந்து மூலகாடு போரவழியில)

# சந்தோஷ், சோவூர்
டேம் தண்ணி(சாத்தனூர்) வழக்கமாவருன்றதால வாய்காலா சரியாத்தான் இருக்கும்.அதனால பாதிப்பு குறைவு.ரெண்டாங்கள எடுக்கமுடியல,பட்டதோட பயிர் செய்த நான் மாட்டிக்கொண்டேன் மற்றவர்கள்(சுற்றியிருப்போர்) பருவத்துக்கு மாற்றா பயிர் செய்து அறுவடை செய்துவிட்டனர்.
என்னுடைய பாடம்,
செலவு குறைத்தது தான்,நஷ்டம் பெருநஷ்டமாகாமல் போனது.
# பார்த்தசாரதி,கீழ்பாலூர்
இது சிறிய மழைதான், இதை ஒரு எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன்.
வழக்கமா எங்க மேட்டுநிலத்தில் மழைநீர் நிலத்தை அறுத்து செல்வதால் அரசுதிட்டத்தை பயன்படுத்திகுளம் வெட்டினோம்,அப்போதும் குளம்நிரம்பி நிலத்தை மழைநீர் அறுத்து கொண்டு சென்றது.மழை இருந்தால்தானே எல்லாரும் சாப்பிட முடியும்,அப்புறம் மழையை வேண்டாம்னு சொல்றதுல அர்த்தமில்லை.[அப்போது ,தமிழரசன்:லாக்டவும் நேரத்தில் இயற்கை தன்னை சீர் படுத்திக்கொண்டு மழையை கொடுக்கின்றது என நினைக்கிறேன்.]

# செவலாம்பாடி,இராஜேந்திரன்
நீங்க எல்லா நெல் பத்தி பேசுரிங்க, நான் காய்கறி ஏன் யாரும் நடரதில்லைனு கேக்குறேன்…
அடுத்த வருசம் நான் 2’ஏக்கர் பல காய்கறி நடபோறேன் யாராவது வித்துகுடுங்க!

# அத்திமூர்,விவசாயி
வெதச்ச நாள்’ல இருந்து புடுங்குறவரைக்கும் மழைதான்.களைகூட கையால தண்ணிலியேதான் புடுங்குனோம்.ஒருமுறை ஜீவாமிர்தம்,அசோஸ்பைரில்லம் மட்டும் குடுத்தோம்.கூட வெதச்சவுங்கலா சேடை ஓட்டிட்டாங்க,நமக்கு நாலுமூட்டை கெடச்சது தலா 5ஆயிரம்னு 20 ஆயிரத்துல 13’ஆயிரம் செலவு போச்சி,
இயற்கைவிவசாயத்துல பெரிய லாபம் இல்லனாலும் கையகடிக்கல…
அரசாங்கம் வடிகால்களை Survey எடுத்து முறைபடுத்த வேண்டும்.

# ரவிச்சந்திரன்.துரிஞ்சாபுரம்
சுத்தி trench எடுத்தது ரொம்ப உபயோகமாக இருந்தது.மஞ்சள் பயிரில் மஞ்சள் நோய் தட்டுப்பட்டது.கரும்பு, நெல் இரண்டும் இந்த தொடர்மழையால் ருசி மாறுபமான்னு யோசிக்கிறேன்…
(பில்லூர்-செந்தில்: ருசி பெருசா மாறாது கரும்பு பாவு கூடுரதுக்கு ரெண்டு மணிநேரம்’ன்றது மூனு மணிநேரமாவும் அவ்வளவுதான்)

# இராஜேந்திரன்,கலசபாக்கம்
எல்லோருக்கும் போன் மூலம் பேசிக்கொண்டிருந்தேன்(விவசாயிகளுக்கு ஆறுதல் குரல் கொடுக்க)
தரை ஈரத்தை கட்டுப்படுத்த முடியல,ஆடு,மாடுங்க படுக்க எடமில்லை,நமக்குமட்டும் டைல்ஸ் போட்டுக்குறோம்,அதுங்களுக்கு ஒரு மொட்டாந்தரை சம்பாதிக்கமுடியல…
வண்ணியனூர்ல-10
பெரியகாலூர்ல-10
கிட்டத்தட்ட * இந்த 2021 மழை நம்ம திருவண்ணாமலை மாவட்டத்துல 1000 கிணறுகளை உள்வாங்க வைத்துள்ளது* .டெல்டா ஆறுசார்ந்த வேளாண்மை என்றால் திருவண்ணாமலை கிணறு சார்ந்தது.கிணற்றுமேடு பராமரிப்பு முக்கியம்.இரண்டு நாளைக்குமுன் பம்புசெட்டில் மின்சாரம் தாக்கி(ஒயரிங் சரியில்லை) ஒருவிவசாயி உயிரிழந்துள்ளார்.
நெல்லில் குண்டு(ADT-37’போன்றவை) சாய்ந்தால் முளைத்துவிடும் தூயமல்லி முளைக்காது(விதை உறங்குங்காலம் அதிகம்)
எட்டு நாத்து -எட்டுநாத்துனு வச்சா கண்டிபா சாயும்,ஒத்த நாத்துவச்சா சாயாது தூர்நல்லாவிடும்.அதேபோல புழுதியில் விதைக்கும் நெல்லு சாயாது(உ தா: வாடஞ்சம்பா).
கையறுவடைக்கு தயங்கி எந்திர அறுவடைக்காக நடவு தள்ளிப்போடுவதால் பட்டத்தை இழக்கின்றனர்.
(அப்போது, லெனின்: ஆடி-18’க்கு எல்லோருக்கும் நாற்றுவிட தண்ணி வருவதில்லை குறிப்பாக புரட்டாசி முதல் வாரம் வரை முப்பதுநாள் தொடர்ந்த வரட்சியால் மானாவாரி விதைப்பு மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது)
பல கேள்விகளும்,பல செயல்களும் எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்பட வேண்டியுள்ளது.
வரட்சியால் தள்ளிப்போவதை ஏற்கலாம் ஆனால்,கிணற்றில் தண்ணீர் வைத்துக்கொண்டு எந்திர அறுவடைக்குத்தான் நடவு செய்வேன் என்பது தான் சிக்கல்,விவசாயி குடும்பத்தோட இறங்கி அறுத்தால் ரெண்டுன்றது ஆறுநாளாவுமே தவிர முடியாத ஒன்றல்ல.கால்காணிய ரெண்டுபேர் அறுத்துடலாம்.அறுவடை எந்திரம் தவிர்த்து,கையறுவடை,கையால் கட்டடிப்பது என எல்லாம் Manual ‘ஆக செய்தால் 25’ஆயிரம் ஒரு ஏக்கருக்கு பத்தாதது என்பது உண்மைதான். ஆனால்,சம்பா போகத்திற்க்கு செய்துதான் ஆகவேண்டும்.அதில் வாய்ப்புள்ள இடங்களில் செலவுகளை குறைப்பது பற்றி யோசிக்க வேண்டியுள்ளது,விவாதிப்போம்…
உதாரணமாக:
கரும்பு ஆல ஆடுரவுங்க ஒரு மாசத்துலேர்ந்து ரெண்டு மாசம்வரை தொடர்ந்து செய்ராங்க அதேபோல நெல் அறுவடையும் ஒருவாரம் நீட்டி செய்தால் நஷ்டம் வராது.மாறாக ஒரே நாளில் அறுத்து ஈரத்தோட கமிட்டிக்கு எடுத்துபோனா நம்ம நஷ்டத்த பெல்டு மிசினும், மூவிங் மிசினும்சான் எடுத்து செல்லும்.
நம்மருகே உள்ள ஏரி,மதுக்களை தொடர்து கண்காணிக்க வேண்டும்.

# சபை சலசலத்தது…
சம்பாவுல ஈரநெல்ல காயவச்சி கம்மிட்டில (ஒழுங்குமுறை விற்பனைகூடம்)போட்டா வெல கூடுது,அதுவரை கூட்டுறவு குடோன்ல வைத்து அதற்கான வட்டியில்லா கடனாக மூட்டைக்கு ஆயிரம் வாங்கிக்கொள்ளலாம்.பயிருக்கு பயிரு 20’ரூபாய் பிளாஸ்டிக் பைதான் வாங்க முடியுதே ஒழிய நிரத்திரமா தேவைக்கான கோணிபையே விவசாயிடம் இல்லாதபோது எங்கிருந்து இருப்புவச்சி போடுரது…

# கோகுல்,செங்கம்
கிணறை பராமரிக்காமல் நிவாரணம் கேட்கிறோம்,ஓடைகளை வாய்காலாக வைத்துள்ளோம்.
நீங்க சில தொழில்நுட்பத்த பயன்படுத்தலாம்,சிலத நான் சொல்றேன் அது உங்க பிரச்சனைக்கு உதவலாம்[முன்னதாக தன்னுடைய கல்வி B.sc (agri),பணிசெய்யும் களம் குறித்தும் கூறியிருந்தார்]
குழுவாக அரசை அனுகினால் உங்களுக்கு Polyhouse-ஒரு Incubator மாதிரி, Without chemicals நீங்க காய்கறி சாகுபடி செய்யலாம் ,solar dryer நெல் காயவைக்க இன்னும் பல வகையில் நீங்க பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.
(இதன் பின் சபை தொழில்நுட்பம் குறித்து கிட்டத்தட்ட 25’நிமிடங்கள் கருத்தை பரிமாறிக் கொண்டது-கொஞ்சம் காரசாரமாக…)

# சந்தோஷ்
* Agri officer -subsidy -equipment -particular brand-particular quotation -then why subsidy?
நம்ம தேவைக்கு ஏத்த வடிவமைலதான் சின்ன சின்னதா Equipment தேவை.

# செவலாம்பாடியார்,
*தொழில்நுட்பம் முக்கியம், பழச எதையும் நாம இப்ப Follow பன்றதில்ல,கஞ்சி குடிக்கிறதில்ல,பண்ணை கீரை சாப்பிடிரதில்லை…

# லெனின்,
தொழில்நுட்பம் வேண்டாம் என்பதில்லை கருத்து,Polyhouse’ஒ, Solar dryer’ஒ. எதாவது Agri officers உதவியோடவாவது வாங்கி பயன்படுத்துங்க அதைக்கொண்டு விவசாயி (வேளாண் குடி) வாழ்வு மேம்படுகின்றதா என்பது தான் முக்கியம்.[உண்மையில் அப்போது ‘விவசாயி சாகாம இருப்பாரா ?’என்று தான் கூறினேன்]

# PTR’ஐயா,
Madras productive council ‘ன் அறிக்கையில்
பசுமைப்புரட்சியை பற்றி கூறும்போது, கல்வி வளர்ச்சிக்கு ஏற்றார்போல் தொழில்நுட்பம் கொடுக்க வேண்டும்,என்கிறார்கள்.
அதிகப்படியான தொழில்நுட்பம் கொடுக்கும் போது விவசாயி அடைவது தோல்விதான் என்கிறார்கள்.
உதா: சொட்டுநீர்பாசனம், ஜீவன்தாரா கிணறு…
சிறுவிவசாயிகளின் Buying capacity’க்கு ஏற்றார்போல் தொழில்நுட்பம் கொடுப்பது தான் சரி.எளிய தொழில்நுட்பங்கள் தான் தீர்வு என்கின்றது அறிக்கை…

# சபை சலசத்தது…
* பயிருக்கு பயிரு பயன்படுத்துர சாக்கு பைய தரமா வச்சிகாம(அதற்கான முதளீடோ, எலியிடம் பாதுகாக்க இடமோ கேள்விக்குறிதான்) பிளாஸ்டிக் பைய வாங்குற நெலமையில தான் விவசாயி இருக்காரு,
*தொடர் மழைக்கு மாடு ,ஆடு ஒன்டிக்கவும் அதுகளுக்கு கொஞ்ச தீணிய நிச்சையப்படுத்திக்கவும்,குளுருக்கு அதுகளுக்கு கஞ்சி காசிக்க ஊத்த நாலு வெறுவு கட்டைகளை எடுத்து போட்டுவை முடியாத எடத்துல தான் பலர் இருக்காங்க.
*Mass production விவசாயிகளுக்கு எதிரானது.
15’மூட்டை இருப்பு வைக்க ஒருவரால முடியும் 125 ‘மூட்டை வைக்க முடியாது(கமலக்கண்ணன்’அண்ணாவின் கூற்று)
* 10’செண்ட்டு பீர்கங்காய் போட்டா சமாளிக்கலாம், எளிது அதுவே 3’மூனு ஏக்கராகும்போது முதளீடு அதிகமாகி கடனாளியாகினார்(@PTR’ஐயாவின் கூற்று)
*# துரிஞ்சாபுரம்.ரவிச்சந்திரன்
தங்கள் ஊரில் Polyhouse போட்டு 50% மானியம் போக 9’லட்சம் கடனாளியான ஒரு விவசாயின் கதையை கூறினார்.
*# வழுதலங்குளத்தார்(அருணாசலம்-ஐயா)
18’ஆண்டுகளுக்கு முன்பாகவே தான் தக்காளி சாகுபடியில் நூறுநாட்களில் அடைந்த 33’ஆயிரம் நஷ்டத்தை கூறினார்(மிக முக்கியம் தக்காளியின் தரத்திலோ ,உற்பத்தி அளவிலோ குறையில்லை).
Polyhouse என்பது நம்ம வட்டாரத்துக்கு முற்றிலும் அற்த்தமற்ற திட்டம்(இன்னு கடுமையாகத்தான் தன் அபிப்பிராயத்தை கூறினார்)

# ராமசுப்பிரமணியன்(சிறப்பு விருந்தினர்)
அதுவரை மிகுந்த ஆர்வத்தோடு கலந்துரையாடலை உற்றுநோக்கிக்கொண்டிருந்தவர்
தொழில்நுட்த்தையும்,அறிவியலையும் தனித்தனியாக விளக்கினார்.

தொழில்நுட்பம் (Technology) என்பது applied science (நடைமுறை படுத்துவது)
நவீன அறிவியல் என்பது an interpretation of nature (ஒரு மொழிபெயர்ப்பு அல்லது ஒரு விதமாக இயற்கையை புரிந்து கொள்ளவது.

முன்னாதாக, விவசாய கல்வி-இந்தியாவின் பல்கலைகழகங்களில் இயற்கை வேளாண்மை கூறுகள் எவ்வாறுள்ளது-என்பது பற்றி ஆய்வு செய்த அனுவத்தை கூறி அதில் தொழில்நுட்பம் எந்த இடத்தில் உள்ளது என்று கூறினார்.
நம் பல்கலைகழகங்களில் கொடுக்கப்படும் நவீன அறிவியல் அனைத்தும் இயற்கையை ஒருவிதமாக புரிந்துகொள்ளுதலால் கிடைத்தது.
மக்களின் அறிவும் theories பன்னப்படாமலுள்ள நிலை-மக்களின் தொழில்நுட்டத்தை தொழில்நுட்பமாக நாம் எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை.
இங்கேயே அகத்தி நடுவதைபற்றியும்,மாடுகளை ஈரப்பதம் அண்டாமல் காப்பது பற்றியும் சிலர் கூறினீர்…
அவைகளும் தொழில்நுட்பம் தான்.

If technology is the solution, what is the problem?

[பிரச்சனை என்ன?யாருடையது?
தீர்வு தொழில்நுட்டமென்றால் அந்த தீர்வு யாருக்கானது உள்ளூர் விவசாயிக்கா ,எங்கோ இருக்கும் நுகர்வோருக்கா -நிறுவனத்துக்கா என அந்த ஆங்கில வாசகம் தொடர்ந்து வளர்ந்து கொண்டே செல்கின்றது …]

# நல்வன்பாளையம்,
தன்னிறைவு-கமலக்கண்ணன்.
மொத்தமா ஒரே தீர்வாக இல்லாமல் ஊருக்கு ஏற்ற உக்த்திகளை மட்டும் நகர்த்த வேண்டும். Complete lockdown, complete demonetization போன்றல்லாமல் பிரச்சனை உள்ள இடத்திற்க்கு மட்டும் தீர்வை தேடலாம்.பாரம்பரிய அரிசியில் பொறி செய்ய வேண்டியுள்ளது,இன்னும் சின்ன சின்ன தீர்வுகளை கண்டடையவேண்டும்,மழைக்கு வெயிலும் ஏற்றார்போல் வாழ்க்கை முறையை தகவமைத்துக்கொள்ள வேண்டும்.
# தேனியிலிருந்து வந்த மருத்துவர்,பேராசிரியர்,மற்றும் விவசாயி திராட்சை விவசாயம் பற்றி கூறினார்.
# அருள்குமார்,அத்திமூர்
வெள்ள அபாயத்திலிருந்து மீண்டுவந்து,ஊருக்குள் வெள்ளம் வந்து,இந்த ஆண்டின் முழுஉழைப்பான சீரகசம்பாவில் புரண்ட வெள்ளம் உளவியலாக எவ்வளவு தன்னை பலமிழக்க செய்தது என்றார்.40’மூட்டை அறுக்க வேண்டிய இடத்துல 15’மூட்டை அறுத்துள்ளேன்.
இந்த மழை அளவுகோளாக வைத்து வடிகால்களை மீட்டு எடுக்க வேண்டும்,”வயல்ல வெலையாததா வரப்புல வெளஞ்சிட போவுது”.
எல்லாரும் பயிரு படுத்துக்குச்சி அதான் மொலசிச்சின்னாங்க ஆனா நம்ம வட்டாரத்துல நின்னுகிர பயிர்லயே Co 51,RNR லா கதிர்லயே மொளச்சிக்கிச்சி(உரிய நேரத்தில் அறுக்க முடியாததால் ஈரக்காற்றிலேயே)…

# மணிவண்ணன்,சதுப்பேரிபாளையம்
உபரி நீர் வெளியேர தனியா பைப்பு(குழாய்) தரமட்டத்துலலேர்ந்து 5,6 அடி கீழையே புதைச்சுவிட்டா கிணறு,குளம் இவற்றின் கரைகளை பாதுகாக்களாம்.முன்பு வரட்சியில் மழைநீரை சேமிக்க உருவாக்கப்பட்ட வரப்பு,நில அமைப்புக்களை நீர் வெளியேற்றும் வண்ணமும் மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.(#லெனின்: கேரளா, நாகர்கோயில் பகுதிகளில் மரவள்ளி, வாழைக்கு செய்யும் வடிகால் முறை போல)

# டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் களந்து கொண்ட மூவர்க்கு கைத்தறி ஆடை அணிவித்து சபையில் மரியாதை செய்யப்பட்டது.(அவை கமலக்கண்ணன் அவர்கள் பங்களிப்பு செய்த ஆடைகள்)
#அவர்கள் கூறிய பங்கேற்ப்பு அனுபவம்.
தமிழகத்திலிருப்பதைவிட ஒற்றுமை சிறப்பாக இருந்தது.பாகுபாடில்லை.இலவச உணவு,20’கிலோமீட்டருக்கு போராட்டகுழு இருந்து.தினமும் இதுபோல உரையாடல் நடக்கும்.நாங்க 700 ‘பேர் போனோம் நாலுநாள் அங்கிருந்தோம்.
#சாந்தி,தென்முடையூர்
200’பேர் பெண்கள் இணைப்புகுழு சார்பாக கலந்துகொண்டோம்.இவ்வளவு தூரம் வந்து பங்கேற்தற்கு மகிழ்ச்சி என விருந்தோம்பல் செய்தனர்.
#மற்றொருவர்,நாராயணசாமி.

# டெல்லி போராட்டத்துக்கு நம்மாளால முடிஞ்ச சிறிய பொருளாதார உதவியாக ஒரு மூவாயிரத்துசொச்சம் திரட்டி கொடுத்தோம்-PTR’ஐயா.

உரையாடல் நிறைவு பகுதிக்குவந்தது

#ராமசுப்ரமணியம்(சிறப்பு விருந்தினர்)
விவசாயிகள் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் தொழில்நுட்பங்களை தவிர்ப்பது நல்லது.
சமீபத்தில் Agri-tech இல் Artificial intelligence (செயற்கை நுண்ணறிவு) Package of practices மொத்தமா வந்துகொண்டுள்ளது.அதன் Terms and conditions விவசாயிகளுக்கு நிச்சையம் சாதகமாக இருக்கப்போவதில்லை.அவைகள் பல்கலைகழகங்கள் வழியாக வரும்.தற்போதே Officers வழியா Data entry நடந்துட்டு இருக்கு.விரைவில் மனிதனை தூக்கிவிட்டு எந்திரங்களௌ அங்குவைக்கப்படும்.ஒருவர் ஒரு சிறு Agri tech நிறுவனத்தில் பணியாற்றுவது, மறைமுகமாக இன்னாரு ராட்சத நிறுவனத்தில் சென்று முடியும்.எல்லா துறையிலும் Data centralization நடந்துட்டிருக்கு,விவசாய அளவில் தீவிரமாக நடந்து கொண்டுள்ளது.எதிர்காலத்தில் உணவு Lab இல் இருந்து வரும் நிலைநோக்கி செல்கிறோம்.Agritech நிறுவனங்களை தவிர்க்கவும் அல்லது ஒன்னுக்கு நூறு கேள்விகளை கேட்கவும்.

#பாஸ்கர் ‘அண்ணா,திருவண்ணாமலை.
(இதுவரையில் உரையாடலுக்கு அவசியமான இடத்தில் மட்டும் ஒன்றிரண்டு வார்தைகளை கூறி,உரையாடலை கேட்டுக்கொண்டிருந்தார்)
என்னோட கண்ணுக்கு எப்பவும் தெரிவதுகுழந்தைகள் தான், நாமலா சொம்மா உறுரோட இருக்கோம்னு வச்சிக்கலாம்.மிகமோசமான வரவுகலெல்லாம் வரிசையா இருக்கு,
சமீபத்தில் மனித கண்களை 3D’organ print success பன்னிருக்காங்க,Plant based meat,பால் கொழுப்பு சார்ந்தாக கொண்டது போல- காய்கறி’ய Protein இருந்தா காய்கறின்னு சொல்ல போராங்க,

விளையிரத திங்கனும்,சந்தை உந்துவதை(market driven)விளைவிப்பதில் பல சிக்கல் இருக்கும்.
உள்ளூர் வியாபாரத்தையும்-சந்தையைவிடுத்து,
கிராமத்தின் பொருளாதாரத்தை நகரத்தை நோக்கி
நகர்த்தக்கூடாது.
விவசாயிங்ககிட்ட அறிவு இல்லாம இல்ல இருக்கு,Agri tech மாதிரியே இந்த பக்கத்திலயுமே பஞ்சகாவியா,அந்த கரைசல் இந்தகரைசலுனு, பயிற்ச்சிகளாவும், பிரச்சாரம்னு விவசாயிகளை மறுபடியும் ஒன்னு தெரியாதவங்களா ஆக்கும் பார்வை ஒருபக்கம் ஓடிகிட்டிருக்கு.உள்ளூர் தொழில்நுட்பத்துக்கு சென்று சேரனும்.அறிவியல் பொதுவானது தொழில்நுட்பம் உங்களுடையது.அனைவருக்கும் பொதுவான பிரச்சைனையை, பொதுவாக பேசவேண்டியதை பேசுவோம்.(உதாரணத்துக்கு கோமாரி,கிணறு…)

ஒருசின்ன கதையோட முடிச்சிக்கிறேன்,இதே மாதிரி ஒரு சபையில ஒரு பெரியவரிட்ட கேக்கும் போது சீக்கிரம் செத்துடனும்னு சொல்ராரு,கேட்டவுங்களுக்கு அதிர்ச்சி பெரிய மனுசன் சொந்த பள்ளிகூடம் நெல புலத்தோட வாழுர மனுசன் இப்பிடி அறுத்து சொல்ராறேன்னு,
ஏன்னு கேட்டாங்க,
அடுத்த தலைமுறை வளந்துவந்து கேக்கபோற கேள்விக்குதான்னார்,
அந்த கேள்வி என்னாவா இருக்கும்…

‘ஏங்க தாத்தா, உங்க தாத்தா உங்ககிட்ட இந்த பூமிய இப்பிடியா குடுத்துட்டு போனாங்கனு’கேட்டுட்டா பதிலில்லை.ஆகையினால அதுக்கு முன்ன செத்துடனும்னு சொன்னாராம்

கதை முடிஞ்சது.

இந்த புள்ளிக்கு வந்துட்டா அறிவியல் தொழில்நுட்பம் எல்லாம் தானாவந்துடும்னு,நிறுத்தினார்.

# மெல்ல சபை களையத்தொடங்கியது.
வழக்கமான சில அறிவுப்புகள்,உணவு விருந்தோம்பல் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சோவூர்.சந்தோஷ்,பொன்னி அரிசி ஒரு சிப்பம் கொடுத்த பூவாம்பட்டு சிவக்குமார் இருவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

#பாண்டியன்,இரண்டேரிப்பட்டு(போளூர்)
பெண்கள் இணைப்பு குழு சார்பாக பாரத பிரதமருக்கு இயற்கை வேளாண்மை சார்பாக 5’கோரிக்கைகளை கூறும் 1’இலட்சம் தபால் அனுப்பும் கவண ஈர்ப்பு செயல்பாடுக்கு உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும்.மாதிரிகளை காண்பித்தார்.

#விருதுகவி (தலைமை ஆசிரியர்)
நம்மள மாதிரி இயற்கை விவசாயிகள் ஒன்று சேர்ந்து கடைபோட வேண்டும் என்றார்.விளைபொருள்களை விற்க்க…

#வாணி,தி.மலை
வீட்டில் தான் வைத்துள்ள இயற்கை அங்காடியை இங்குள்ள விவசாயிகள் விற்பனைக்காக அனுகலாம் என்றார்.

#நந்தா ‘அண்ணா
ஆக்கிரமிப்புகளை பற்றி VAO மற்றும் தலைமை செயலகத்துக்கும் கடிதம் எழுத முயற்ச்சியுங்கள் என்றார்…

சந்தை மற்றும் சாப்பாடுக்கு பிறகு,அவரவர் வீடுக்கு வந்து சேர்தோம்.
அடுத்த 5’ஆம் தேதி சந்திப்போம்.

நன்றி,

[இந்த நிகழ்வை எழுதி முடிக்கையில் இந்த ஒருவரி தான் எனக்கு வந்து சேர்ந்தது.
Great purpose is not substitute for simple work.
இது பிரன்னா அவர்கள் ஓர் உரையாடலில் கூறிய வரி]

அன்புடன்,
லெனின்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories