மானாவாரியில் மகசூலைப் பெருக்கும் நுட்பங்கள்!

மானாவாரியில் மகசூலைப் பெருக்கும் நுட்பங்கள்!

மானாவாரியில் மகசூலைப் பெருக்கும் நுட்பங்கள்!

ழைநீரைக் கொண்டும், நிலத்திலுள்ள ஈரப்பதத்தைக் கொண்டும், வறண்ட மற்றும் மிதமான தட்பபெட்ப நிலையில் செய்யப்படும் சாகுபடி, மானாவாரி சாகுபடியாகும். இந்தப் பகுதிகளில் ஆண்டு மழையளவு சராசரியாக 800 மி.மீ.க்கும் குறைவாகவே இருக்கும். மேலும், மானாவாரியில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள் வறட்சிக்கும் உள்ளாகும். இந்நிலையில், வறட்சியை எதிர்கொண்டு அதிக மகசூலைப் பெற்றிட உதவும் தொழில் நுட்பங்களைப் பற்றி இங்கே காணலாம்.

கோடையுழவு

கோடை மழையால் கிடைக்கும் ஈரத்தைக் கொண்டு உழவு செய்வதால், மேல்மண் பொலபொலப்புத் தன்மையைப் பெறுகிறது. இதனால், மழைக்காலத்தில் பொழிகின்ற மழைநீரை நிலத்துக்குள் ஈர்த்து வைக்க ஏதுவாகிறது. இந்த நீர், அடுத்துச் செய்யப் போகும் பயிர்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே, கோடையுழவு செய்வது அவசியமாகும். சரிவுக்குக் குறுக்கே உழுதால், உழவுச் சால்களில் மழைநீர் தேங்கி மண்ணுக்குள் புகும். மேலும், கோடையுழவு மண்ணரிப்பைத் தடுக்கும், முந்தய பயிர்களின் தூர்கள் அழிய உதவும். களைகளும், பயிரைத் தாக்கும் பூச்சிகளும் கட்டுப்படுத்தப்படும்.

ஆழ உழுதல்

இரும்புக் கலப்பையால் தொடர்ந்து உழும்போது, சற்றுக் கீழேயுள்ள மண்ணில் கடினப்பகுதி தோன்றும். இதனால், குறிப்பிட்ட ஆழத்துக்குக் கீழ் மழைநீர் இறங்க முடியாத நிலை ஏற்படும். இதனைத் தடுக்க, உளிக்கலப்பையால் ஒரு மீட்டர் இடைவெளியில் ஆழமாக உழ வேண்டும். இப்படிச் செய்தால், நிலத்தின் பொலபொலப்புத் தன்மையின் ஆழம் கூடி, மழைநீர் நிறையளவில் சேமிக்கப்படும். இது, மழையில்லாத காலங்களில் பயிர்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.

ஆழச்சால் அகலப்பாத்தி

மண்ணின் சரிவு குறைவாக இருக்கும் மானாவாரி நிலங்களில் (0.4லிருந்து 0.8 சதத்திற்குள் இருந்தால்) இவ்வகைப் பாத்திகளை அமைக்கலாம். 30 செ.மீ. அகலம், 15 செ.மீ ஆழத்தில் வடி வாய்க்காலும், 120 செ.மீ. அகலத்தில் மேட்டுப்பாத்தியும் அடுத்தடுத்து இருக்குமாறு அமைப்பது ஆழச்சால் அகலப்பாத்தி ஆகும். கூடுதலாக மழை பெய்யும் காலத்தில், ஆழச்சாலில் சேமிக்கப்படும் மழைநீர், அகலப் பாத்திகளில் உள்ள பயிர்களின் வேர்களுக்கு ஊடுருவல் முறையில் கிடைத்து அவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.

சமமட்ட வரப்புகள்

சரிவுக்குக் குறுக்கே சமமட்ட வரப்புகளைப் போட வேண்டும். பயிர் செய்யும் நிலத்தின் சரிவு ஒரு சதத்துக்குள் இருந்தால், சமமட்ட வரப்புகளை வடிகால் வசதியோடு அமைக்க வேண்டும். சமமட்ட வரப்புகள், மழைநீர் வழிந்து ஓடுவதைத் தடுக்கும். இந்த வரப்புகளின் இருபுறமும் வெட்டிவேரை நடவு செய்தால், மண்ணரிப்பும், வரப்புகள் இடிந்து விழுவதும் தடுக்கப்படும். நிலம் மேடு பள்ளமாக இருந்தால் சரிவுகளைச் சரிசெய்து வரப்புகளை அமைக்கலாம்.

விதைகளைக் கடினப்படுத்துதல்

விதைகளை விதைப்பதற்கு முன், தகுந்த கரைசலில் ஊற வைத்து, பிறகு அவற்றைச் சாதாரண ஈரப்பத நிலைக்கு உலரச் செய்து விதைப்பதே, விதைகளைக் கடினப்படுத்தி விதைத்தல். இதனால் விதைகளின் முளைப்புத்திறன் சிறப்பாக இருக்கும்; வீரியமாகவும், வறட்சியைத் தாங்கியும் பயிர்கள் வளர்வதால் கூடுதலான விளைச்சல் கிடைக்கும்.

பருவ மழைக்கு முன் விதைத்தல்

மழை பெய்த பின்பு மண் சரியான ஈரப்பத்துக்கு வரும் வரையில் காத்திருந்து விதைப்பதால், மண்ணிலுள்ள ஈரம் வீணாகி விடுகிறது. மேலும், பருவமழை தேவையான அளவில் பெய்யாமல் போனால், நல்ல விளைச்சல் கிடைக்காது. இந்நிலையைத் தடுக்க, மழை பெய்யும் சூழல் தெரிந்ததும் விதைத்து விட்டால், கிடைக்கும் மழைநீர் முழுவதும் பயிர்களின் வளர்ச்சிக்காகப் பயன்படும்.

நுண்ணுயிர் உரங்களைப் பயன்படுத்துதல்

விதைப்பதற்கு முன், ஆறிய அரிசிக் கஞ்சி மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா கலந்த கலவையில் விதைகளைக் கலந்து, பத்து நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். மேலும், தேவையான பாஸ்போபாக்டீரியாவைத் தொழுவுரத்துடன் கலந்து நிலத்தில் சீராகத் தூவ வேண்டும். நிலக்கடலை மற்றும் பயறு வகைகளுக்கு, அசோஸ்பைரில்லத்துக்குப் பதிலாக ரைசோபியத்தைப் பயன்படுத்த வேண்டும்.

விதைக்கும் கருவியைப் பயன்படுத்துதல்

விதைக்கும் கருவியைக் கொண்டு விதைத்தால், விதைகள் தக்க ஆழத்தில் விழுந்து சீராக முளைக்கும்; பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்படும். இதனால், சரியான விளைச்சல் கிடைக்கும். மேலும், மண்ணிலுள்ள சத்துகளும் வளரும் பயிர்களுக்கு எளிதாகக் கிடைக்கும்.

பயிர் எண்ணிக்கையைக் குறைத்தல்

பயிர்களின் வளர்ச்சிப் பருவத்தில் வறட்சி ஏற்பட்டால், நிலத்திலுள்ள நீரை எடுத்துக் கொள்வது, பயிர்களிடையே போட்டியாக அமையும். இதைத் தவிர்க்க, பயிர்களைக் களைத்து எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். நாட்டுக் கலப்பையால் பயிர்களுக்கு இடையே உழுது பயிர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

நிலப்போர்வை அமைத்தல்

மண்ணிலுள்ள நீர் ஆவியாகி வீணாவதைத் தடுக்க, பயிர்க் கழிவுகளை நிலத்தில் பரப்பி விடலாம். இதையே நிலப்போர்வை என்கிறோம்.

களைக் கட்டுப்பாடு

மானாவாரி நிலத்தில் நீர்ப் பற்றாக்குறை பெரிய பிரச்சனையாக இருக்கும். அதை மேலும் தீவிரமடையச் செய்யும் வகையில், பியருக்குப் போட்டியாகக் களைகள் முளைக்கும். இவற்றில், கோரை, அறுகு, ஆடுதின்னாப்பாலை போன்ற களைகள் பெரும் பிரச்சனையாகவே உள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்த, தக்க சமயத்தில் களையெடுக்க வேண்டும். மேலும், சரியான களைக்கொல்லியைத் தெளிக்கலாம், நட்சத்திரச் சக்கர வடிவக் களைக்கருவி, கூரிய பல் களைக்கருவியைப் பயன்படுத்தலாம்.

இதுவரை கூறிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தினால் மானாவாரி நிலங்களில் நல்ல விளைச்சலைப் பெறலாம்.

மு.தனநிவேதா, வை.ஹரிஹரசுதன், பூ.மு.சண்முகம், செ.இராதாமணி, வேளாண்மைக் கல்வி நிறுவனம், குமுளூர் – 621 712, திருச்சி மாவட்டம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories