மா’வில் அதிக விளைச்சல் பெற

மா’வில் அதிக விளைச்சல் பெற நவீன தொழில் நுட்பங்கள்


அறிமுகம்
இரகங்கள்
மண், தட்பவெப்பநிலை
நடும் பருவமும், செடி தேர்வும்
இடைவெளியும், குழி அளவும்
நடவு செய்தல்
பின் செய் நேர்த்தி
ஊடுபயிர்
உர நிர்வாகம்
மாவில் நுண்ணூட்டச் சத்துக்கள் இலைவழி ஊட்டம்
விளைச்சலை அதிகரிப்பதற்கான நுட்பங்கள்
வளர்ச்சி ஊக்கிகளைத் தெளித்தல்
கவாத்து செய்தல்
அறுவடை

அறிமுகம்

மா தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பணப்பயிர். இந்தியாவில் குளிர்பிரதேசமான காஷ்மீர், இமாச்சலபிரதேசம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் பயிர் செய்யப்படுகின்றது. தமிழ் நாட்டில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளுவர், மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிக பரப்பளவில் பயிர் செய்யப்படுகின்றது.

மாவில் “அந்தந்த பகுதிகளுக்கேற்ற இரகங்களைத் தேர்ந்தெடுத்தல்”, “ஒட்டுக் கன்றுகளை சாகுபடி செய்தல்”, “சரியான இடைவெளி, சரியான குழி அளவு”, “சரியான பருவம்”, “நடவு செய்யும் முறை”, “சரியான உர அளவு”, “நடவுக்குப் பிந்தய தொழில் நுட்பங்கள்”, ”விளைச்சலை அதிகரிப்பதற்கான பயிர் வளர்ச்சி ஊக்கிகளைத் தெளித்தல்”, “கவாத்து செய்தல்” போன்ற தொழில் நுட்பங்களைக் கடைப்பிடிப்பதால் நாம் அதிக விளைச்சலைப் பெறலாம்.

இரகங்கள்

தமிழகத்தில் நீலம், பெங்களுரா, ருமானி, பங்கனப்பள்ளி, மல்கோவா, அல்போன்சா, பி.கே.எம்.1, பி.கே.எம்.2, இமாம் பசந்த், காலப்பாடு, செந்தூரா, பையூர்.1 போன்ற இரகங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

நமது நாட்டில் மாவின் உற்பத்தி திறன் விகிதம் (Productivity) முன்னேறிய நாடுகளை ஒப்பிடும் போது குறைவாகவே உள்ளது. இதற்கு நமது பொருளாதார நிலைமை பெருமளவில் காரணமாக இருப்பினும், சரியான தொழில் நுட்பங்கள் வேளாண் பெருமக்களைச் சரிவர சென்றடையவில்லை, சென்றடைந் திருப்பினும் முறையாகப் பின்பற்றப்படவில்லை.

பங்கனப்பள்ளி

தமிழ்நாட்டில் வணிக ரீதியாக சாகுபடி செய்யப்படும் இந்த இரகம் ‘பணேசான்’ “இராசபாளையம் சப்பட்டை” போன்ற வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகின்றது. இது ஒரு முன் பருவ காய்ப்பு இரகமாகும். தொடர்ந்து சீராக விளைச்சல் தரவல்லது. ஒரு பழம் 400 – 500 கிராம் எடை கொண்டது. நார் பகுதி அரவே அற்ற நறுமனமுடைய சிறந்த இரகம்.

ருமானி

இதன் பழங்கள் ஆப்பில் வடிவில் இருக்கும். இதன் தோல் மெல்லியதாகவும், சாம்புராணி வாசத்துடனும் காணப்படும். அதிக விளைச்சல் தரவல்ல இரகம். பழங்களை அதிக நாள்கள் சேமித்து வைக்கலாம். சுமாரான தரத்துடன் காணப்படும்.

பெங்களூரா

இந்த இரகம் ‘கல்லாமை’ ‘தோதாபூரி’ போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் வணிக ரீதியில் வளர்க்கப்படும் இரகங்களில் இது முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு பழம் 400 – 500 கிராம் எடை கொண்டது. பழங்கள் தடிமனான தோலைக் கொண்டுள்ளதால் நீண்ட நாள்களுக்கு வைத்திருக்க முடியும். மேலும், மாம்பழ கூழ் தயாரிப்பதற்கு இந்த இரகம் அதிகமாக பயன்படுகிறது.

ஏற்றுமதிக்கும், பதப்படுத்துவதற்கும் உகந்த இரகங்கள்

அல்போன்சா, பங்கனப்பள்ளி, செந்தூரா ஆகியவை ஏற்றுமதிக்கு உகந்த இரகங்கள். அல்போன்சா, பங்கனப்பள்ளி, தோதாபூரி ஆகியவை பதப்படுத்துவதற்கு உகந்த இரகங்கள்.

மண், தட்பவெப்பநிலை

மா வெப்ப பிராந்திய பழமரம். மா சாகுபடிக்கு நல்ல வடிகால் வசதியுடைய ஆழமான குறுமண், செம்மண் நிலம் ஏற்றது. மண் 3 அடிக்கு மேல் 6 அடி ஆழம் வரை இருத்தல் நல்லது.

நடும் பருவமும், செடி தேர்வும்

ஜூலை முதல் டிசம்பர் வரை கன்றுகளை நடலாம். செடி தேர்வு : நெருக்கு ஒட்டு, குறுத்து ஒட்டு, மென்தண்டு ஒட்டு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட 12 முதல் 18 மாத வயதுடைய செடிகளை நடவு செய்யப் பயன்படுத்த வேண்டும்.

இடைவெளியும், குழி அளவும்

இடைவெளியைப் பொறுத்தவரை மாவிற்கு 25 அடியிலிருந்து 30 அடி வரை வரிசைக்கு வரிசையும், வரிசையில் செடிக்கு செடியும் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். அடர்வு எண்ணிககை நடவு முறையில் (High density planting system) அல்போன்சா, பங்கனப் பள்ளி, மல்லிகா போன்ற இரகங்களுக்கு 10க்கு 5 மீட்டர் இடை வெளியில் (அதாவது வரிசைக்கு வரிசை 10 மீட்டர், மரத்திற்கு மரம் ஒரே வரிசையில் 5 மீட்டர் இடைவெளிவிட்டு) நடவு செய்யலாம். ஒரு மீட்டர் நீள, அகல, ஆழமுள்ள குழிகளைச் செடிகள் நடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன் எடுத்து ஆறவிட வேண்டும்.

நடவு செய்தல்

நடும் போது குழிக்கு பத்து கிலோ நன்கு மக்கிய தொழுவுரத்துடன் மேல்மண்ணை நன்றாக கலந்து குழிகளை நிரப்பவும். பின்பு ஒட்டுச் செடிகளைச் சட்டியிலிருந்து பிரிக்கும் போது வேர்ப் பகுதியிலுள்ள மண் சிதைந்து விடாமல் மூடிய செடியை குழியின் நடுவில் வைத்து மண்ணை செடியைச் சுற்றித்தள்ளி நன்கு அழுத்திவிட வேண்டும். நடவு செய்யும் போது ஒட்டுப்பகுதி தரைமட்டத்திலிருந்து மேலே இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.

பின் செய் நேர்த்தி

நடவு செய்தவுடன் நீர் ஊற்ற வேண்டும். பிறகு முதல் இரண்டு வருடங்களுக்கு பத்து நாள்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சுதல் அவசியம். கோடையில் மரங்கள் காய்ந்து விடாமல் இருக்க சுமார் பத்து லிட்டர் கொள்ளவுள்ள பானையை புதைத்து சொட்டு நீர் பாசனம் கொடுப்பது நல்லது.

வளர்ந்த மரங்களுக்கு, பூப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பும், பூக்கும் தருணத்திலும் பாசனம் செய்யக் கூடாது. பிஞ்சு பிடித்து, காய் வளர்ச்சி நிலைகளின் பொழுது 10-15 நாள்கள் இடைவெளியில் பாசனம் செய்வதன் மூலம் பழங்கள் உதிர்தலைக் குறைத்து பழங்களின் அளவு, தரத்தை மேம்படுத்தலாம். குளிர் காலத்தில் பூமொட்டு விடும் நிலையில் நீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட வேண்டும். இக்காலத்தில் நீர் பாய்ச்சினால் பூப்பதற்குப் பதிலாக இலை வளர்ச்சியே காணப்படும். காய்களின் வளர்ச்சி முதிர்ச்சி நிலையின் பொழுது காணப்படும் மண்ணின் ஈரப்பதத்தைப் பொருத்தே பழங்களின் தரம் அமையும்.

மாவில் கல்டார் – மரத்திற்கு பத்து கிராம் என்ற அளவில் செப்டம்பர் முதல் வராத்தில் மண் வழியாக கொடுப்பதால் காய்ப்பு இல்லாத பருவத்திலும் அதிக அளவு காய்கள் அறுவடை செய்யலாம்.

ஊடுபயிர்

மரங்கள் காய்ப்புக்கு வரும் வரை பயரு வகைகள், காய்கறி வகைகள், நிலக்கடலை போன்ற பயிர்களை ஊடுபயிராகப் பயிரிட்டு கூடுதல் வருமானத்தைப் பெறலாம்.

உர நிர்வாகம்

மரத்தின் வயது, இரகம், மண்ணின் தன்மை, மண்ணின் வளம் போன்றவற்றைப் பொறுத்து உரமிட வேண்டும். போதிய அளவு சத்துக்கள் மரத்திற்கு கிடைக்காத தருணத்தில் பூக்கள், பிஞ்சுகள் அதிகளவு உதிர்ந்துவிடுகின்றன. இதற்கு காரணம் காய்களின் வளர்ச்சிக்கு போதுமான அளவு சத்துக்கள் கிடைக்காததேயாகும். செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் உரமிடுவது சிறந்தது. மாமரங்களுக்கு அதன் வயதிற்கேற்ப உரங்களை இடவேண்டும்.

உரமிடும் முறை

இளம் கன்றுகளுக்கு உரங்களை மரத்தின் அடிப்பகுதியிலிருந்து 60 செ.மீ தூரத்திலும், வளர்ந்த காய்க்கும் மரங்களுக்கு 160 செ.மீ. தூரத்திலும் இடவேண்டும். அதாவது மரத்தின் கிளைகள் படர்ந்துள்ள தூரத்தில் உரங்களை இட வேண்டும். இப்பகுதியிலே உறிஞ்சும் வேர்கள் அதிகம் காணப்படுகின்றன. மேலும், உறிஞ்சும் வேர்கள் மண்ணின் 10 – 15 செ.மீ. ஆழத்திலேயே அடர்த்தியாக உள்ளன. இதனால் உரங்களை மரத்தின் அடிப்பகுதியிலிருந்து 6 அடி தூரத்தில் வட்டமாக 15 செ.மீ. ஆழமுள்ள குழி எடுத்து மரத்தை சுற்றிலும் இடவேண்டும். இவ்வாறு இடுவதால் உரங்கள் வீணாகாமல் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. உரம் இடும்பொழுது நிலத்தில் ஈரம் இருப்பது அவசியம். இல்லையெனில் நீர்ப்பாய்ச்ச வேண்டும்.

மாவில் நுண்ணூட்டச் சத்துக்கள் இலைவழி ஊட்டம்

நுண்ணூட்டச் சத்துக்களை இலைவழி ஊட்டமாக கொடுப்பதன் மூலம் விளைச்சலை அதிகரிக்க முடியும். பூப்பதற்கு முன் 3 சதம் போராக்ஸ் கரைசலை தெளிப்பதால் தரமான பழங்கள் கிடைக்கின்றன. 0.3 சதம் மாங்கனீசு சல்பேட், 0.25 சதம் சிங்க் சல்பேட், 0.3 சதம் கால்சியம் கரைசலைத் தெளிப்பதால் பழங்களின் எண்ணிக்கையும், எடையும் கூடுகிறது. மற்ற தண்டுகளை நீக்கி விடுவது நல்லது. தேவையற்ற தண்டுகளை ஒவ்வொரு ஆண்டும் குறைக்க வேண்டும். இதனால் மரங்கள் தவறாமல் பூக்க ஆரம்பிக்கும். காவத்து செய்தவுடன் வெட்டப்பட்ட இடங்களில் போர்டோ பசை அல்லது பைட்டலான் பசையை தடவ வேண்டும். கவாத்து செய்தபின் உரமிடுவது நல்லது.

விளைச்சலை அதிகரிப்பதற்கான நுட்பங்கள்

பிப்ரவரி முதல் வாரத்தில் பூ பூக்காத கிளைகளில் 0.5 சத யூரியா கரைசல் (5 கிராம் யூரியா 1 லிட்டர் தண்ணீரில் கலந்து) அல்லது பொட்டாசியம் நைட்ரேட் 1.0 சதம் (10 கிராம் பொட்டாசியம் நைட்ரேட்டை 1 லிட்டர்  தண்ணீரில் கலந்து) தெளிப்பதால் 10-15 நாள்களில் கிளைகளில் பூக்கள் தோன்றும்.

வளர்ச்சி ஊக்கிகளைத் தெளித்தல்

வளர்ச்சி ஊக்கி மருந்தை 20 பி.பி.எம். என்ற அளவில் (அதாவது 20 மில்லி கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து) இரண்டு முறை, பூக்கும் தருணத்தில் ஒரு முறையும், பிஞ்சுகள் மிளகு அளவில் இருக்கும் போது ஒரு முறையும் தெளிப்பதால், பூக்கள் பிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு காய்ப்புத் தன்மை அதிகரிக்கும்.

கவாத்து செய்தல்

சிறிய மரத்தில் ஒட்டுக்குக் கீழ் வேர்க் குச்சியிலிருந்து தோன்றும் பக்கக் கிளைகளை அவ்வப்போது நீக்க வேண்டும். ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்கள் பெரிய மரங்கள் கவாத்து செய்வதற்கு ஏற்ற காலமாகும். மரங்களில் தேவையற்ற உட்புறமுள்ள கிளைகளையும், நோயுற்ற, காய்ந்த கிளைகளையும் வெட்ட வேண்டும். இதனால் மரத்தின் மேல் பகுதியில் சூரிய ஒளியும், காற்றும் நிறைய கிடைக்கும்.

அறுவடை

காய்களை வெப்பநிலை குறைவாகக் காணப்படும் காலை நேரத்தில் அறுவடை செய்வது நல்லது. கை அரிவாள் அல்லது நீண்ட அறுவடை செய்வதற்கான வலைக் கூடை கருவி மூலமாக அறுவடை செய்யலாம். மிகவும் உயரமான கிளைகளில் உள்ள மாங்காய்களை ஏணிகளைப் பயன்படுத்தி அறுவடை செய்வதன் மூலம் காய்களில் சேதம் இல்லாமல் தடுக்கலாம். இவ்வாறு அறுவடை செய்யும் பொழுது 10 முதல் 20 செ.மீ நீளமுடைய காம்போடு சேர்த்து அறுவடை செய்யவேண்டும். பின் காய்களின் காம்புகளை 1 செ.மீ நீளம் மட்டும் விட்டு கூர்மையான கத்தி கொண்டு வெட்டிய பின்னர் காய்களை தலைகீழாக மூன்று முதல் நான்கு மணி நேரம் நிழலில் அடுக்கி வைக்க வேண்டும். இதனால் காய்களிலிருந்து பிசின் போன்ற பால் முழுமையாக வடிந்து விடும்.

இதன் பின்னர் காய்களை நல்ல ஓடும் நீரில் கழுவி தோலில் ஒட்டியிருக்கும் மண், பூச்சி, பறவைகளின் எச்சம் போன்றவற்றை நீக்க வேண்டும்.

விளைச்சல்

இரகத்திற்கேற்பவும், மரங்களின் வயதிற் கேற்பவும், நடப்படும் இடைவெளிக்கேற்பவும் விளைச்சல் மாறுபடும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories