#மாவுப்பூச்சியை கட்டுப்படுத்தும் முறை

#மாவுப்பூச்சியை கட்டுப்படுத்தும் முறை
இப்பூச்சியானது இலை, தண்டு, கணுக்கள் மற்றும் உரிந்த பட்டைகளுக்கு இடையில் பரவலாகக் காணப்பட்டாலும் பழக் கொத்துகளில் மிகுந்த சேதத்தை ஏற்படுத்துக்கிறன.
தாய்மாவுப்பூச்சி இளசிவப்பு நிறத்தில் வெள்ளையான மெழுகால் சூழப்பட்டிருக்கும். ஒரு தாய்ப்பூச்சி ஒருவார காலத்தில் 500 முதல் 850 முட்டைகளை மெல்லிய பஞ்சு போன்ற அமைப்பினுள் இடும்.
முட்டைகளிலிருந்து 5 முதல் 10 நாட்களுக்குள் வெளிவரும் இளம் பூச்சிகள் ஆரஞ்சு நிறத்தில் காணப்படும்.
இவை ஒரு மாத காலத்தில் முழு வளர்ச்சி அடைக்கின்றன.
மாவுப் பூச்சிகள் பெருக்கம்
கோடைக் காலங்களில் மாவுப்பூச்சிகள் விரைவில் பெருகுகின்றன.
மாவுப்பூச்சிகள் மற்றும் செதிள் பூச்சிகள் பட்டைகளில் இருந்து மேலே சென்று தண்டு, பூங்கொத்து மற்றும் பழக்கொத்துக்களைத் தாக்குகின்றன.
இப்பூச்சிகள் தாக்கிய இலை மற்றும் தண்டுப்பகுதிகள் சிறுத்தும் உருக்குலைந்தும் காணப்படும்.
இப்பூச்சிகள் வெளியேற்றும் திரவ சர்க்கரைப் பொருட்கள், கரும்பூசணத்தை இலைகளில் வளரச் செய்து மேலும் சேத அளவை அதிகமாக்குகிறது.
தாக்கப்பட்ட பழங்கள் கறுப்பாக மாறும். சுவை குறைந்ததாக இருக்கும்.
சேதமான பழங்களிலிருந்து தயாரிக்கப்படும். பழரசத்தின் தரமும் குறைந்து விடும்.
தரம் குறைந்த பழங்களை விற்பனை செய்ய முடியாது.
அண்மைக் காலங்களில் மாவுப்பூச்சி மற்றும் செதிள்பூச்சிகள் மா மற்றும் கொய்யா வகைப் பழப்பயிர்களைத் தாக்கி விளைச்சலைக் குறைக்கின்றன.
மேலும் இப்பூச்சிகள் பழங்களைத் தாக்குவதால் தரமும் குறைக்கின்றது.
மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்த பொறி வண்டுகள்
மாவுப்பூச்சிகள் மற்றும் செதிள்பூச்சிகளைச் சுற்றிலும் பாதுகாப்பான மெழுகுப் போர்வை மூடியிருப்பதால் பூச்சிகொல்லி மருந்துகள் அவற்றின் உடலினுள் திறம்பட ஊடுருவி அவற்றை அழிக்க முடிவதில்லை.
இவை உரிந்த மரப்பட்டைகளுக்கு இடையில் ஒளிந்து வாழ்வதால் இவற்றைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.
மேலும் பழங்களில் மருந்து அடிப்பதால் பழங்களில் தங்கும் எஞ்சிய நஞ்சு பழத்தை உண்பவர்களையும் பாதிக்கின்றது.
எனவே சாறுறிஞ்சும் பூச்சிகளை அழிக்கப் பொறி வண்டினை விடுவதே நலம் பயக்கும்.
ஆஸ்திரேலிய ( கிரிப்டோலமஸ்) பொறி வண்டுகள் இயற்கையிலேயே மாவுப்பூச்சி மற்றும் செதிள் பூச்சிகளைத் தாக்கி இரையாக உண்டு அழிக்கின்றன.
பொறிவண்டின் மொத்த வாழ்க்கை சுழற்சிக் காலம் சுமார் ஒருமாதம் ஆகும்.
தாய் வண்டுகள் இனச்சேர்க்கை முடிவடைந்த 10 நாட்களுக்குப் பின் முட்டையிடுகின்றன.
ஒவ்வொரு தாய் வண்டும் 40 முதல் 50 நாட்களில் 200 முதல் 220 முட்டைகள் இடுகின்றன.
இதிலிருந்து 6 நாட்களில் புழுக்கள் வெளியே வந்து 20 நாட்களில் முழு வளர்ச்சியடைந்து பின்னர் கூட்டுப்புழுவாக மாறுகின்றன.
கூட்டுப்புழு பருவம் 7 முதல் 9 நாட்களாகும்.
வளர்ந்த பொறி வண்டும். புழுப்பருவமும்
மாவுப்பூச்சியின் எல்லா வளர்ச்சிப் பரவங்களையும் உண்டு அழிக்கின்றன. ஒருபுழு முழு வளர்ச்சி அடைவதற்குள் 900 முதல் 1500 தீங்கு செய்யும் மாவுப்பூச்சிகள் அல்லது 300 குஞ்சுகள் அல்லது 30 வளர்ச்சியடைந்த மாவுப்பூச்சிகள் மற்றும் செதிள் பூச்சிகளை உண்ணுகிறது.
மாவுப் பூச்சிகள் அதிகம் நகராமல் ஒரே இடத்தில் இருந்து சாறை உறிஞ்சிச் சேதத்தை விளைவிப்பதால் பொறிவண்டுகள் அவற்றை எளிதாக தேடிப் பிடித்து உண்டு விடுகின்றன.
பொறிவண்டுகளை வளர்க்கும் முறை
மாவுபப்பூச்சிகளை பூசணிக்காய் மீது பரவ விட வேண்டும்.
மாவுப்பூச்சிகள் பூசணிக்காய் மீது ஓரிரு மாதங்;களில் எளிதில் பரவிவிடும்.
பின் அதனை ஒரு காற்று புகும் கூண்டில் வைத்து 10 முதல் 15 பொறிவண்டுகளைக் கூண்டினுள் விட வேண்டும்.
பொறிவண்டுகள் மாவுப்பூச்சிகளை உண்டு ஒரு பூசணிக்காயிலிருந்து 30 முதல் 40 நாட்களில் சுமார் 200 முதல் 250 வண்டுகளாகப் பெருகி விடும்.
பொறிவண்டைத் தோட்டங்களில் விடும் முறை
ஒரு எக்டருக்கு 1000 பொறிவண்டுகள் தேவைப்படும்.
இவற்றை மாவுப்பூச்சியின் சேத நிலையைப் பொறுத்து 2 அல்லது 3 முறை விடுவது சாலச் சிறந்தது.
குறைந்தது மரம் ஒன்றிற்கு 10 வண்டுகள் தேவைப்படும்.
காலை 8 மணி முதல் 9 மணிக்குள் அல்லது மாலை 4 மணிக்கு மேல் பொறிவண்டை விடவேண்டும்;.
மாலையில் விடுவதால் பொறிவண்டுகள் மாவுப்பூச்சிகள் மற்றும் செதிள் பூச்சிகளை விரைவாக சென்றடைந்து அடுத்தநாள் காலை முதல் முட்டையிடுவதற்கு ஏதுவாகின்றது.
பொறிவண்டுகளைச் சிறிய திறந்த அட்டைப் பெட்டிகள் அல்லது காலிப்புட்டிகளில் வைத்துத் தோட்ங்களில் எடுத்துச் செல்லும் போது அவை விரைவில் சீராகவும் வெளிவருகின்றன.
மாவுப்பூச்சிகள், செதிள் பூச்சிகள் அதிகமாக இருக்கும் மா, கொய்யா கிளைகளின் அருகில் பொறிவண்டுகளை விட்டால் அவை தங்களின் இலக்கை எளிதாகச் சென்று அடைய முடியும்.
தோட்டத்தில் எறும்பு அதிகமாகக் காணப்பட்டால் பொறிவண்டுகள் விடுவதற்கு முன்னால் எறும்புப் புற்றுகளில் மாலத்தியான் 10 சதத்தூள் அல்லது0.11 விழுக்காடு மருந்து தெளித்து எறும்புகளை அழிக்க வேண்டும்.
பொறிவண்டுகள் விடப்பட்ட தோட்டங்களில் 20 நாட்கள் வரை பூச்சி கொல்லிகள் எதுவும் பயன்படுத்தக்கூடாது.
பொறிவண்டினால் ஏற்படும் நன்மைகள்.
ஒரு எக்டருக்குத் தேவைப்படும் பொறிவண்டினை வளர்த்து விடுவதற்கு ஆகும் செலவு சுமார் 1000 ரூபாய் மட்டுமே
ஒரு தோட்டத்தில் விடப்படும் பொறிவண்டுகள் அருகில் உள்ள தோட்டங்களுக்கும் பரவிச் சென்று அங்குள்ள மாவுப் பூச்சிகளையும் அழிக்கின்றன.
நன்மை செய்யும் இதர இரை விழுங்கிகளோ, ஒட்டுண்ணிப் பூச்சிகளோ இதனால் பாதிக்கப்படுவதில்லை
பொறிவண்டுகள் ஓர் இடத்தில் நிலைபெற்று பின் தானாகப் பரவி நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்கும்.தன்மை உடையன.
பொறிவண்டை விடுவதனால் மா, கொய்யா போன்ற பழங்களை உட்கொள்ளும் கோடிக்கணக்கான பூச்சி மருந்தின் எஞ்சிய நச்சுத்தன்மையிலிருந்து காப்பாற்றப்படுகின்றார்கள்.
இம்முறை எளிதானது. பாதுகாப்பானது சிக்கனமானது. விரைந்து செயல்படும் திறனுடையது.
எனவே உயிரியல் பயிர்பாதுகாப்பின் முக்கிய காரணிகளுள் ஒன்டறான பொறிவண்டுகளைப் பயன்படுத்தி பழப்பயிர்களைப் பாதுகாத்தல் அவசியம்.
மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்த
வேப்ப எண்ணெய் – 2 சதவீதம் கரைசல், வேப்பங்கொட்டை பருப்புச்சாறு – 5 சதவீதம் கரைசல், மீன் எண்ணெய் சோப்பு – ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம், சேதம் அதிகமாக இருக்கும் போது ரசாயனப் பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்கவும்
ஆரம்ப கட்டமாக இருந்தால் வேம்பு எண்ணெயை கலந்து அடித்தால் போதுமானது.
முற்றிய நிலையில் 1 லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி புரபனோபாஸ் கலந்து அடிக்கலாம்.
அல்லது 10 லிட்டர் தண்ணீருடன் 6 மில்லி இமியோகுளோபிரிட் கலந்து அடிக்கலாம்.
அல்லது 1 லிட்டர் தண்ணீரில் 2 கிராம் நீட்டோமைல் கலந்து கைப்பம்பு மூலம் அடிக்கலாம்.
பார்த்தீனிய செடிகளின் மூலமே இப்பூச்சி பரவுவதால் விவசாயிகள் இச்செடிகளை உடன் அகற்றி விட வேண்டும்..

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories