மா மரங்களில் தண்டுத் துளைப்பான் மேலாண்மை
மாவில் விளைச்சலை பாதிக்கும் முக்கிய காரணிகளில் தண்டு துளைப்பான் பாதிப்பும் ஒன்றாகும். இதனால் எட்டு சதவிகிதம் வரை பாதிப்பு ஏற்படும். மா இரகங்களில் அல்போன்சா தண்டு துளைப்பான் பாதிப்பிற்கு உள்ளாகின்றது. பாதிக்கப்பட்ட மரங்களின் கிளைகள் மேலிருந்து கீழ் நோக்கி காய்வதால் விளைச்சல் பாதிக்கப்படுகின்றது. மரத்தின் வயது, காய்க்கும் திறன் மற்றும் வயது ஆகியவற்றை பொறுத்து ஒரு மரம் இறந்தால் இரண்டு முதல் நான்கு இலட்சம் வரை விளைச்சல் இழப்பு ஏற்படுகின்றது. வயதான மரங்களை மட்டும் தாக்கி வந்த தண்டு தற்பொழுது பரப்பளவு அதிகரித்த காரணத்தினாலும், புதிய இரகங்களை பயிரிடுவதாலும் இளம் துளைப்பான்கள் மரங்களை கூட தாக்குகின்றன. விவசாயிகள் தண்டு துளைப்பானின் பாதிப்பை கட்டுப்படுத்த மருந்துகளை உபயோகித்தாலும் முழுமையான கட்டுபாடு கிடைப்பதில்லை.
இதன் பாதிப்பை கட்டுப்படுத்த இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம், பெங்களுரு அறிமுகப்படுத்தியுள்ள அடைப்பான் மருந்தை (healer cum sealer) உபயோகப் படுத்துவதை பற்றிய செயல் விளக்கம் தருமபுரி விவசாயிகளிடையில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 80 சதவிகித மாவட்டத்தில் தோட்டங்களில் மரங்கள் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன. எனவே, இத்தொழில் நுட்பத்தை மற்ற விவசாயிகளும் பின்பற்றி பலனடையும் விதமாக மருந்தை உபயோகிக்கும் முறைப்பற்றி கீழே காண்போம்.
பாதிப்பின் அறிகுறிகள்
- தண்டில் துளைகள் காணப்படுதல்
- மரத்துகள்கள் (அ) சிறியமரத்துண்டுகள் (அ) வண்டின் எச்சம் போன்றவை மரத்தின் பட்டையின் மேலோ (அ) மரத்தின் அடியில் காணப்படுதல்
- பாதிக்கப்பட்ட இடத்தில் பிசின் போன்ற திரவம் வடிதல்
- பாதிப்பின் ஆரம்ப கட்டத்தில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதல்
- பாதிப்பு பாதியாக இருக்கும் போது நுனிக்கிளைகள் மேலிருந்து கீழாக காய்தல்
- பாதிப்பு இறுதி கட்டத்தின் போது வேகமாக மரங்கள் காய்தல்
அடைப்பான் மருந்தை உபயோகிக்கும் முறை
- மரத்தின் பாதிக்கப்பட்ட பகுதியில் வேகமாக மரங்கள் காய்ந்தால், அரிவாள் (அ) கோடாரி கொண்டு பாதிக்கப்படாத திசுக்கள் தெரியும் வரை நீக்குதல் வேண்டும்.
- பாதிக்கப்பட்ட மரத்தில் பெரிய வெட்டுக்காயம் எதும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- மரத்தின் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மரத்துகள்கள், வண்டின் எச்சம் மற்றும் பிசின் போன்றவற்றை கத்தியை கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
- உள்ளிருக்கும் புழுக்களை அழிக்க வேண்டும். இவ்விடங்களில் புழுக்களை அழிக்க டைக்குளோர்வாஸ் 5 மி.லி./லி. என்றளவில் பயன்படுத்தலாம்.
- மரத்தின் அடிப்பகுதியிலுள்ள கிளைகள் மற்றும் இதரப் பொருட்களை அகற்ற அடைப்பான் மருந்தை மாவுப்பதத்திற்கு தயாரிக்க வேண்டும்.
அடைப்பான் மருந்தை மாவுப்பதத்திற்கு தயாரித்தல்
- அடைப்பான் மருந்து 250 கிராமை 100 மி.லி. தண்ணிரில் கலந்து மாவு பதத்திற்கு தயாரிக்க வேண்டும்.
- இதனை சிறுசிறு உருண்டைகளாக்கி பாதிக்கப்பட்ட பகுதிக்கு அருகிலுள்ள துளைகளில் நிரப்ப வேண்டும்.
- கார்பன்டசிம் 1 கிராம் மற்றும் யூரியா 10 கிராம் / லிட்டர் கலவையை மரத்தை சுற்றிலும் ஊற்ற வேண்டும்.
- மரத்திற்கு தொடர்ச்சியாக தண்ணிர் ஊற்றுதல் வேண்டும். மானாவாரியாக இருந்தால் வாரம் ஒரு முறை தண்ணிர் ஊற்றுதல் வேண்டும்.
அடைப்பான் மருந்தை குழம்பு பதத்திற்கு தயாரித்தல்
- அடைப்பான் மருந்து 750 கிராமை 750 மி.லி. தண்ணீரில் கலக்க வேண்டும்
- அடைப்பான் மருந்தை தூரிகைகள் கொண்டு மரத்தைச் சுற்றி பூசும் பதத்திற்கு தயாரிக்க வேண்டும்.
- இதனுடன் 40 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு மருந்தைக் கலக்க வேண்டும். இது பாதிக்கப்பட்ட பகுதியில் புழுக்கள் உயிருடன் இருக்கின்றனவா என்பதை பார்க்க உதவும்.
- பாதிக்கப்பட்ட திசுக்கள் இருப்பின் மேற்காணும் முறையினை பயன்படுத்தி இடைவெளி இல்லாமல் அடைப்பான் மருந்தை பூசவேண்டும்.
- மருந்து தடவிய இடங்களில் பிசின் போன்ற திரவம் வடிந்தால் அச்சம்வேண்டாம். இது உள்ளே திசுக்கள் குணமாவதற்கான அறிகுறியாகும்.
பாதிப்பில் இருந்து மரம் மீள்வதற்கான அறிகுறிகள்
மரம் பாதிப்பிலிருந்து மீள்வதற்கான அறிகுறிகள் நான்கு மாதத்திற்கு பின்பே தெரியும். புதிய கிளைகள் மற்றும் இலைகள் தோன்றிய ஒரு மாதத்திற்கு பிறகு உரம், தழை, மணி, சாம்பல் மற்றும் நுண்ணூட்ட கலவையை அளிக்க வேண்டும்.
மரப்பட்டையினுள் பாதிக்கப்பட்ட திசுக்கள் முழுமையாக மறைந்து விடும். பாதிக்கப்பட்ட மரம் முதல் ஆண்டு விளைச்சலில் பாதியை கொடுக்கும். படிப்படியாக குணமடைந்து விளைச்சலையும் கொடுக்க ஆரம்பிக்கும்.
பத்து வயது மரத்தில் பாதிப்பு இருந்து அதனை குணப்படுத்தினால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு பலன் அளிக்கும். இதன் மூலம் ரூபாய் 200 செலவு செய்து அடுத்த 25 ஆண்டுகளுக்கு விளைச்சல் எடுக்கலாம்.
அடைப்பன் மருந்து புழுக்களின் சுவாசத்தை இழக்க செய்து புழுக்களை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதிலுள்ள நுண்ணூட்டச் சத்துக்கள் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுவதால் மரங்கள் பாதிப்பில் இருந்து வேகமாக மீள்கின்றன. எனவே, விவசாயிகள் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாமரங்களை தண்டுத் துளைப்பான்களின் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம்.