முருங்கையில் களை மேலாண்மை

முருங்கையில் களை மேலாண்மை

பயிர் சாகுபடியில் களை மேலாண்மை முக்கியப் பங்கு வகிக்கிறது. சரியான களை கட்டுப்பாடு இல்லையெனில் பயிர்களில் 11-74 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது. முருங்கை சாகுபடியிலும் களை கட்டுப்பாடு மிக அவசியம். முருங்கையானது விதைத்தது முதல் சில நாட்களுக்கு மெதுவான வளர்ச்சியுடையதாகவும், செடிகளுக்கான இடைவெளி அதிகம் இருப்பதாலும், கிளைகள் படர்வது மெதுவாக உள்ளதோடு, தக்க உரமளித்து நீர் பாய்ச்சுவதாலும் இதில் களைகள் அதிகமாக உள்ளது. இக்களைகள் பயிர்களுக்கான சூழலில் இடர்பாடாக இருப்பதோடு மட்டுமல்லாமல் செடிகளுக்கு அளிக்கப்படும் அனைத்து வளங்களுக்கும் போட்டியாக உள்ளன. உயர்ந்த களை கட்டுப்பாடு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். இல்லையெனில் முருங்கைக்காக அளிக்கப்படும் உள்ளிட்டு பொருட்கள் அனைத்தும் களைகளைச் சென்றடையும். இந்தியாவில் முருங்கையை பிப்ரவரி – மார்ச், செப்டம்பர் – அக்டோபர் மற்றும் ஜூலை – ஆகஸ்ட் ஆகிய காலங்களில் பயிர் செய்யப்படுகிறது. நீண்ட காலப் பயிராதலால், பல வகையான களைகள் தாக்குகின்றன. செடிகள் பயிர் செய்யப்படும் சூழல், இடம் மற்றும் மேலாண்மை செயல்பாடுகளைப் பொருத்து களைகளின் வகையும் மாறுபடுகிறது. முருங்கை வயலில் காணப்படும் முக்கிய களைகள்

புல் வகைகள்

 • எக்கினோகுளோவா கிரஸ்கல்லி
 • டிஜிட்டேரியா சேனர்கினேலிஸ்
 • அக்ரோபைரான ரிபெனர்ஸ் பெரிய இலையுடைய களைகள்
 • ஐபோமியா பர்பியூரியா
 • சோலேனம் நைக்ரம்
 • டட்டுராஸ்ட்ரேமோனியம்
 • கினோபோடியம் ஆல்பம்
 • அமரேனிதஸ் கிரேஸிஷனர்ஸ்
 • அமரேனிதஸ் ரெட்ரோபிளக்ஸளப்
 • போர்ட்டுலகா ஒலிரேசியா
 • சிர்சியம் அர்வெனர்ஸ்
 • கனர்வால்வுலஸ் அர்வெனிசிஸ்
 • பைசேலிஸ்

கோரை வகைகள்

 • சைப்ரெஸ் எஸ்குளெனர்டஸ்

களைகளால் ஏற்படும் இழப்பு

முருங்கை மெதுவாக வளரும் தன்மையுடையதால், நடவு செய்த சில மாதங்களில் களைகள் அதிகமாக காணப்படுகிறது. களைகளால் ஏற்படும் இழப்பு பல வகையாக உள்ளது.

 1. பயிர்களுக்கும் களைகளுக்கும் ஏற்படும் போட்டியினால் மகதுல் குறைதல் (நேரடியான இழப்பு)
 2. விளையும் பொருளின் தரம் குறைதல் (மறைமுக இழப்பு)
 3. களைகளினால் நிலம் தயாரித்தல், அறுவடை போன்றவற்றிற்கு அதிக செலவு ஏற்படுகிறது.
 4. களைகளால் பூச்சி மற்றும் நோய்கள் தாக்குதல் அதிகரிக்கின்றது.
 5. இவை மட்டுமின்றி களைகள் நிலத்திலுள்ள ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்கிறது.
 6. களைகளின் தன்மை, அடர்த்தி ஆகியவை பொருத்து 11-74 சதவீதம் மகதல் குறைகின்றது.

பயிர் சாகுபடியின் பொழுது தக்க தருணத்தில் களைகளை அகற்றுவதன் முக்கியத்துவத்தை அறிதல் அவசியம். எந்த நேரத்தில் செடிகளுக்கும் களைகளுக்கும் போட்டி அதிகமாக உள்ளது என்பதைக் கணிடறிந்து, களைகளை அகற்றுவது அவசியம். பயிர் வளர்ச்சிப் பருவத்தில் எப்பொழுது களைகளை அகற்றினால் அதிக இலாபம் உண்டாகுமோ, அதுவே முக்கியமான காலம் என கருதப்படுகிறது. இந்தியாவில் முருங்கையில் நடவு செய்த 30-90 நாட்கள் களை கட்டுப்பாடு மிக அவசியமாகிறது.

முருங்கையில் களைகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்

கை களை மற்றும் இயந்திர களை கட்டுப்பாடு முறைகள்

மேற்கூறிய முறைகளில் எளிதாகவும், செலவு குறைவாகவும் களைகளைக் கட்டுப்படுத்தலாம். மேலும் இவற்றில் வேதிப்பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளும் இல்லை. ஆனால் இம்முறைகளில் மணல் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகமான பரப்பளவு மற்றும் சாதகமான சீதோஷண நிலை இல்லாத சூழ்நிலைகளில் இம்முறைகள் நன்மை அளிப்பதில்லை.

முருங்கையில் இடைவெளி அதிகமாக உள்ளதால், மேலோட்டமான வேர்களையுடைய களைகளை எளிதில் கட்டுப்படுத்தலாம். ஒவ்வொரு முறை நீர் பாய்ச்சிய பிறகு களைகளைக் கொத்தி அகற்றுவதால் பயிர்களுக்கு ஏற்படும் போட்டியைத் தவிர்க்க இயலும். இயந்திர களை எடுப்பாணிகளைப் பயன்படுத்தும்போது செடிகளுக்கு நடுவில் இருக்கும் களைகள் முழுவதும் அகற்றப்படுவதில்லை.

கை களை கட்டுப்பாடு

ஒராண்டு, ஈராணர்டு களைகள் மற்றும் படராத களைகளை எளிதாக கைகளால் அகற்றிவிட இயலும், மண்ணில் ஒரளவு ஈரப்பதம் இருக்கும் பொழுதும், விதை உணர்டாகுவதற்கு முன்பும் களைகளை அகற்ற வேண்டும். கை களை கட்டுப்பாடு முறை சிறிய பரப்பளவிற்கு மட்டுமே சாத்தியமாகிறது.

தரை மட்டத்திற்கு களைகளை அறுத்தல்

முருங்கையில் களைகள் அதிகமாக இருக்கும் பொழுது அவற்றை இயந்திரத்தினைக் கொண்டு தரை மட்டத்திற்கு அறுப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். இதனை களைகளில் விதை உண்டாகும் முன் செயல்படுத்துவது அவசியமாகும். நீண்ட நாள் வாழும் களைகளில் பல முறை அதனை அறுத்து, கட்டுப்படுத்துவது முக்கியம். ஒரே முறையில் அறுத்து கட்டுப்படுத்தக்கூடிய களைகளில், அவை பூப்பதற்கு முன்பு செய்வது அவசியமாகும். இதனால் விதை உண்டாவதைத் தடுப்பதோடு, வேர்களில் இருக்கும் உணவுச் சத்தும் குறைந்த அளவில் இருக்கும்.

பயிர் செய் முறையில் களை கட்டுப்பாடு

முருங்கை வயலில் உள்ள களைகளை பயிர் சுழற்சி, ஊடுபயிரிடுதல், நில போர்வை போன்ற முறையில் கட்டுப்படுத்தலாம்.

பயிர் சுழற்சி முறை

முருங்கையை தனிப்பயிராக பயிர்செய்யும் பொழுது, களைகளுக்கும் முருங்கை செடிகளுக்கும் உள்ள போட்டி அதிகமாக இருக்கும். இதனைத் தடுக்க, பசுமை உரப் பயிர்கள் அல்லது சோளம் போன்ற தீவனப் பயிர்களை பயிர் சுழற்சி முறையில் பயிர் செய்யலாம். இதனால் களைகளை ஒரளவு கட்டுப்படுத்த இயலும்.

உழவு முறை

பயிர் சாகுபடியில் நிலத்தை உழவு செய்வதன் மூலம் களை கட்டுப்பாடு தொன்றுதொட்டு நடைமுறையில் உள்ளது. பயிர் செய்யப்படாத நிலங்களில் மண் அரிப்பு அதிகமாக இருப்பதோடு, அங்கக பொருட்களின் மக்கும் தன்மையும் அதிகம். இந்நிலத்தில் நீர் உள்ளே செல்வது குறைவாகவும், அடித்துச் செல்வதன் மூலம் சேதமாகும் நீர் அதிகமாகவும் உள்ளது. இவற்றைத் தடுக்க சில குறிப்பிட்ட உழவு முறைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

பயிர் செய்யும் முனர் உழவு

பயிர் செய்வதற்கு முன் வயலில் உள்ள களைகளை உழுது அகற்ற வேண்டும். வாத்துப் புல் போன்ற புல் வகைகளை அழிக்க சட்டி கலப்பை அல்லது மண் தட்டும் வேளாணர் பொறியை (harrows ) பயன்படுத்தலாம்.

பயிர் வரிசையினர் இடையில் உழவு

முருங்கை தோட்டத்தில், மழை வந்த பிறகு ஒரிரு நாட்களில் மண்ணின் ஈரப்பதம் உழுவதற்கு ஏற்றதாக இருக்கும். அப்பொழுது செடிகளுக்கு இடையிலான வரிசையில் நன்கு உழுவதால், மண் கட்டியாவதை தடுப்பதோடு, புதிதாக வளரும் களைகளை அழிக்க ஏற்றதாகவும் இருக்கும்.

களைகளை எரித்தல்

முருங்கை நாற்றங்காலில் களைகள் முளைக்கும் முன்னர் அல்லது வளர்ந்த பின் அவைகளை எரித்து கட்டுப்படுத்தலாம். முதலில் களைகளின் விதைகளை முளைக்க விட வேண்டும். பதினைந்து நாட்களுக்குப் பின்னர் ஒரளவு வளர்ந்த களைகளை எரிக்க வேண்டும். களைகொல்லிகளைக் கொண்டும் கட்டுப்படுத்தலாம். பின்பு முருங்கை விதையினை விதைக்க வேண்டும்.

ஊடுபயிர் சாகுபடி

முருங்கை செடி அதிக இடைவெளியில் பயிரிடப்படுவதால், களைகள் அதிகம் தாக்குகின்றன. இதனைத் தடுக்க, குறுகிய கால ஊடுபயிர்களைப் பயிர் செய்யலாம். இரண்டாம் வருடத்திலிருந்து, மக்காச்சோளம், சூரியகாந்தி போன்ற பயிர்களை ஊடுபயிராக பயிரிடலாம். சூரியகாந்திப் பயிரானது நன்கு களைகளைக் கட்டுப்படுத்தும் தன்மையுடையது. ஆனால் கத்தரி, இனிப்பு மக்காச்சோளம் போன்றவற்றை முருங்கையில் ஊடுபயிராக பயிர்செய்யும் பொழுது, இப்பயிர்களுக்கிடையிலான போட்டியினால், முருங்கையின் மகசூல் 50 சதம் வரை குறைய வாய்ப்புள்ளது.

மூடுபயிர் சாகுபடி

சூரியகாந்தி மற்றும் சோளம் விதை போன்றவற்றை முருங்கையில் மூடுபயிராகப் பயிர் செய்யலாம். களைகளைக் கட்டுப்படுத்தும் தன்மையானது பயிர் செய்யப்படும் இரகம் மற்றும் மேலாண்மை உத்திகளைப் பொருத்து அமையும். சர்க்கரை வள்ளிக் கிழங்கை மூடுபயிராக சாகுபடி செய்வதால் பல வகையான களைகளைக் கட்டுப்படுத்துவதாக கணிடறியப்பட்டுள்ளது. மூடு பயிரிலிருந்து பெறப்படும் எஞ்சிய பொருட்கள் மண்ணின் மேல் பகுதியை மூடி இருப்பதால் களைகள் 75-90 சதம் முளைப்பது குறைகிறது. இந்த எஞ்சிய பொருட்கள் மக்கும் பொழுது, களையைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் குறையும். மக்கிய பொருட்கள் அடுக்காக இருப்பின் களை கட்டுப்பாடு அதிகமாக இருக்கும். வெளிச்சம் அதிகம் தேவைப்படும் சிறிய விதையுடைய களைகளின் முளைப்புத்திறன் மூடுபயிர் சாகுபடியால் வெகுவாகக் குறையும்.

நில போர்வை

நில போர்வை இடுவதால், களைகளுக்குத் தேவையான வெளிச்சம் கிடைப்பதில்லை. இதனால் அதற்கு தேவையான உணவைத் தயார் செய்ய முடியாமல் மடிந்துவிடுகிறது. வைக்கோல், இயற்கை உரங்கள், மரத்தூள் மற்றும் கருப்பு பாலித்தின் போன்றவற்றை நில போர்வைக்குப் பயன்படுத்தலாம். நில போர்வையின் மூலம் களை கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் மேலும் களை முளைக்காமல் இருக்க, வேறு ஏதாவது பயிர்களை விதைக்கலாம்.

கருப்பு பாலித்தினில் நில போர்வை

தோட்டக்கலைப் பயிர்களில் நில போர்வை இடுவதன் மூலம் களை கட்டுப்பாடானது நெடுங்காலமாக பல நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது. இதற்காக பல வகையான இயற்கை மற்றும் செயற்கை பொருட்கள் பரிந்துரைக்கப்பட்டாலும், கருப்பு பாலித்தின் கொண்டு நில போர்வை இடுவது களை கட்டுப்பாட்டில் சிறந்து விளங்குகிறது. கருப்பு பாலித்தின் வெளிச்சம் உள்ளே ஊடுறுவதைத் தடுத்து களைகள் உணவு தயாரித்தலைத் தடுக்கிறது. மேலும் இது மண்ணில் வெப்பநிலையை அதிகரிப்பதுடன், மண்ணிலிருந்து நீராவி ஆவதையும் தடுக்கிறது. இம்முறை களை கட்டுப்பாடு சுற்றுச்துழல் பாதுகாப்பில் பங்கேற்பதுடன், எல்லா வகையான களைகளையும் நன்றாக கட்டுப்படுத்துகிறது.

பயிர் கழிவுகளைக் கொண்டு நில போர்வை

முருங்கை செடிகள் முளைத்து 12 செ.மீ வளர்ந்ததும், இந்த முறையினைப் பின்பற்றலாம். இந்தப் பயிர் கழிவுகள் வெளிச்சத்தினைத் தடுத்து, களைகளைக் கட்டுப்படுத்துகிறது. இவை களைகளைக் கட்டுப்படுத்துவதோடு, மண்ணின் ஈரத்தைப் பாதுகாத்து, செடிகளுக்கு இயற்கை உரமாகவும் பயன்படுகிறது.

களைக் கொல்லி மூலம் களை கட்டுப்பாடு

களைக்கொல்லி மூலம் களைகளைக் கட்டுப்படுத்துவது அதிகமாக பயன்பாட்டில் உள்ள முறையாகும். மொத்தமாக களை கொல்லிகளை அடிக்காமல், வரிசையாக அடிப்பதன் மூலம் 75 சதம் வரை சேமிக்கலாம். முருங்கையில் களை கொல்லிகளைக் கொண்டு களை கட்டுப்பாடானது நிர்ணயம் செய்யபடவில்லை என்றாலும், கிளைபோசேட் என்ற களைக்கொல்லி வயல் தயாரிக்கும் முன்பே அடிக்கப்படுகிறது. இது அடித்த 30 நாட்கள் கழித்து விதைகளை விதைத்தல் அல்லது நாற்று நடவு செய்தல் போன்றவற்றை செயல்படுத்தலாம். இனி வரும் ஆராய்ச்சியிலாவது முருங்கையில் சிறந்த களை கட்டுப்பாடு செய்வது அவசியம்.

உயிரியல் முறையில் களை கட்டுப்பாடு

இம்முறையில் களைகளைக் கட்டுப்படுத்த உயிர் கொல்லிகள் பயன்படுத்தப்படுகிறது. இம்மாதிரியான உயிரியல் முறையில் சிறந்த பயிர் இரகங்கள், பூச்சி மற்றும் நோய்க் கிருமிகளைக் கொண்டு களைகள் கட்டுப்படுப்படுத்தப்படுகின்றது.

ஒருங்கிணைந்த களை நிர்வாகம்

நீண்ட நாட்கள் சிறந்த உத்திகளைக் கொண்டு எல்லா வகையான களைகளையும் கட்டுப்படுத்துவது ஒருங்கிணைந்த களை கட்டுப்பாடு ஆகும்.

நன்மைகள்

ஒரே வகையான களை கட்டுப்பாடு முறையைப் பயன்படுத்தும் போது களைகள் அவற்றிற்கு தாங்கி வளரும் தன்மை பெறும். ஆனால் பலமுறை களை கட்டுப்பாடானது இவ்வாறு இல்லாமல் சிறந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. இடத்திற்குத் தகுந்தாற்போல், நீண்ட நாளைய ஒருங்கிணைந்த களை கட்டுப்பாடு சிறந்ததாக அமையும். இம்முறையில் செலவு குறைவாகவும், களைகளை நன்கு கட்டுப்படுத்தும் தன்மையும், சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானதாகவும் இருக்கும். இதன் மூலம் மண்ணிலிருக்கும் களைகளின் விதைகளை அழிக்க உதவும். இச்செயலின் போது மண்ணின் தன்மை மாறாமல் இருக்க கவனம் செலுத்த வேண்டும். தற்பொழுது விவசாயிகள் அதிகப்படியாக செடி முருங்கையைச் சாகுபடி செய்து வருகின்றனர். மேற்கூறியது போன்று ஒருங்கிணைந்த களை கட்டுப்பாட்டின் மூலம் விவசாயிகள் அதிக இலாபம் பெறலாம்.

ஆதாரம் : தோட்டக்கலைக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories