முருங்கையில் மரபுவழி மேம்பாடு மற்றும் இரகங்கள்

முருங்கையில் மரபுவழி மேம்பாடு மற்றும் இரகங்கள்

மொரிங்கா ஒலிபெரா, என்றழைக்கப்படும் முருங்கை மரம், முருங்கேசியே குடும்பத்தைச் சார்ந்ததாகும். இது இந்தியாவை தாயகமாகக் கொண்டதாகும். இது வடஇந்தியா, இமாலயா பகுதிகளில் இயற்கையிலேயே காணப்படுகிறது. இந்தியாவில் முருங்கை அதன், இலை, காய் மற்றும் பூவிற்காக வளர்க்கப்படுகிறது. முருங்கைக் காய் இந்திய சமையலில் அதன் மணத்திற்காகவும், சுவைக்காகவும் பெரிதும் விரும்பப்படுகிறது.

உயிரியியல் பல்வகைமை

மொரிங்கா பேரினத்தில் 13 சிற்றினங்கள் உள்ளன. அவை, இந்தியா, இலங்கை, வடகிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆப்ரிக்கா, மடகாஸ்கர் மற்றும் அரேபியாவில் காணப்படுகின்றன. இவற்றில் பொதுவாக காணப்படும் சிற்றினம் மொரிங்கா ஒலிபெரா என அழைக்கப்படுகிறது. மேலும், ரோஜாப்பூ நிறமுடைய சிற்றினங்கள் மொரிங்கா பெரிக்ரினா, மொரிங்கா ஆப்டிரா, மொரிங்கா அராபிக்கா, மொரிங்கா ஸைலானிக்கா. இவை வடகிழக்கு ஆப்ரிக்கா, சிரியா, பாலஸ்தீனம் மற்றும் அரேபியாவில் காணப்படுகிறது. மொரிங்கா ஸ்டினோபெட்டலா என்ற சிற்றினம் இயற்கையில் கடல் மட்டத்திலிருந்து 1000 முதல் 1800 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இது கென்யாவின் வடக்குப் பகுதியில் காணப்படுகிறது. இவற்றின் இலைகள் மருந்திற்காக பயன்படுத்தப்படுகிறது. மொரிங்கா கொண்கானெண்சிஸ் என்ற சிற்றினமும், இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது, இது சேலம் மாவட்டத்தில் ஏற்காடு மலைப்பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. மொரிங்கா டிரெளஹார்டியை, மடகாஸ்கர் பகுதியை தாயகமாகக் கொண்டது. மிக அதிகமான வறட்சியையும் உப்புத் தன்மையையும் தாங்கி வளரக் கூடியதாகும். பல்வேறு சூழ்நிலைகளில் தெரிவு செய்தல் ஆகும். அதன்பின்னர் கட்டுப்பாடான முறையில் இனச்சேர்க்கைக்கு உட்படுத்துதல் ஆகும். பி.கே.எம். 1 என்ற முருங்கை இரகம் இம்முறையிலிருந்து தெரிவு செய்யப்பட்டதாகும்.

முருங்கையின் முக்கிய இரகங்கள்

 • மூலனுார் முருங்கை,
 • வலயபட்டி முருங்கை,
 • சாவகச்சேரி முருங்கை,
 • செம்முருங்கை,
 • யாழ்ப்பான முருங்கை,
 • காட்டு முருங்கை,
 • கொடிக்கால் முருங்கை ,
 • பால் முருங்கை,
 • பூனை முருங்கை மற்றும்
 • பாலமேடு முருங்கையாகும்.

மூலனுார் முருங்கை

கரூர், தாராபுரம், ஈரோடு போன்ற பகுதிகளில் இம்முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. இம்முருங்கையின் நீளம் சுமார் 45 முதல் 50 செ.மீ. வரை இருக்கும். காயின் எடை 120 கிராம். ஒரு மரத்திற்கு ஒரு வருடத்திற்கு 200 கிலோ வரை உற்பத்தியை தரவல்லது. பதினைந்து ஆண்டுகள் வரை இம்மரத்தினை பராமரிக்கலாம்.

வலையபட்டி முருங்கை

இம்முருங்கை உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வாடிப்பட்டி மற்றும் வலையபட்டி பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது. காயின் நீளம் 65 செ.மீ. வரை இருக்கும் எடை 120 கிராம். உற்பத்தி ஒரு மரத்திற்கு ஒரு ஆண்டிற்கு 1000 முதல் 1200 காய்கள் வரை காய்க்கும். சாவகச்சேரி முருங்கை இது யாழ்ப்பாண முருங்கை வகையைச் சார்ந்தது. காயின் நீளம் 90 முதல் 120 செ.மீ. இது தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது.

செம்முருங்கை

இதுவும் யாழ்ப்பாண முருங்கையின் ஒரு வகையாகும். ஆண்டு முழுவதும் பூக்கவும், காய்க்கவும் அதிக உற்பத்தியை தரவும் வல்லது. காய் சிவப்பு நிறத்தில் இருக்கும். காய்கள் நடுத்தர உயரம் உடையது.

யாழ்ப்பாண முருங்கை

இது இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட முருங்கை வகையாகும். காய்கள் 60 முதல் 90 செ.மீ நீளம் உடையதாகும். சதைப்பற்றுடன் சுவையாகவும் இருக்கும் இது நட்ட இரண்டாவது வருடத்தில் 40 காய்களிலிருந்து 600 காய்கள் வரை உற்பத்தியை தரவல்லது. திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் அதிகப்படியாக பயிரிடப்படுகிறது.

காட்டுமுருங்கை

இது தமிழ்நாட்டின் வனப்பகுதிகளில் காணப்படுகின்ற முருங்கை வகையாகும். ஏற்காடு, சிறுமலை பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. காய்கள் குட்டையாக இருக்கும்.

கொடிக்கால் முருங்கை

இது திருச்சி மாவட்டத்தில் வெற்றிலை கொடிக்கால்களில் அதிகம் பயிரிடப்படுகிறது. காய்கள் மிகக் குட்டையாக பருத்து காணப்படும். ஆனால் இலை மற்றும் காய்கள் மிகவும் சுவையாக இருக்கும்.

பால் முருங்கை

இதன் சதைப்பற்றுள்ள சுவையான காய்களுக்காக அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது.

பூனை முருங்கை

இது திருநெல்வேலி, கண்ணியாகுமரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படுகிறது.

பாலமேடு முருங்கை

இதன் காய்கள் 60 செ.மீ. நீளமும் காயின் எடை 95 முதல் 100 கிராம் வரை இருக்கும். உற்பத்தி ஒரு மரத்திற்கு 100 காய்கள் வரை இருக்கும்.

செடிமுருங்கை

தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளத்திலிருந்து இரண்டு செடிமுருங்கை இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றின் வயது மிகக் குறைவாக இருப்பதாலும் விதை மூலம் பரவக்கூடியது என்பதாலும் செடிமுருங்கை தற்போது இந்தியா முழுவதும் அதிகப்படியாக சாகுபடி செய்யப்படுகிறது.

பி.கே.எம் – 1 செடி முருங்கை

 • விதை மூலம் சாகுபடி செய்யப்படுகிறது.
 • மரங்கள் 3-4 மீட்டர் உயரம் வளரும்.
 • விதைத்த 5-6 மாதங்களில் பூத்து 7-8 மாதங்களில் காய்க்கும்.
 • காய்கள் சராசரியாக 75 செ.மீ நீளமும்,
 • அதிக சதைப் பகுதி (70 சதம்) உடையவை.
 • ஒரு காயின் சராசரி எடை 150 கிராம் ஆகும். காயின் உற்பத்தி ஒரு எக்டருக்கு 58 டன்கள் வரை இருக்கும்.

பி.கே.எம் 2 – செடி முருங்கை

இது எம்.பி.31 மற்றும் எம்.பி.38 இரகங்களின் கலப்பினத் தேர்வு. காய்கள் சராசரி 126 செ.மீ நீளத்தில் அதிக சதைப் பற்றுடன் (70 சதம்) இருக்கும். ஒரு காயின் சராசரி எடை 280 கிராம். எக்டருக்கு 98 டன்கள் விளைச்சல் தரும்.

ஆதாரம் : தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிலையம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories