முள் இல்லா மூங்கிலின் பயன்பாடுகள் 

முள் இல்லா மூங்கிலின் பயன்பாடுகள்

அறிமுகம்

மூங்கில் மிக வேகமாக வளரக் கூடிய புல் வகையைச் சார்ந்த பயிராகும். உலகெங்கும் சுமார் 2000 வகையான மூங்கில் இரகங்கள் பரவியுள்ளன. இவற்றில் நம் இந்தியாவில் மட்டும் 130 மூங்கில் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. பெரும்பாலான மூங்கில் வடகிழக்கு இந்தியாவில் (சுமார் 40 சதவீதம்) பரவியுள்ளது. ஒரு காலத்தில் ஏழைகளின் மரத்துண்டு (Poor Man’s Timber) என்று அழைக்கப்பட்ட மூங்கில் தற்பொழுது வசதியானவர்களின் மரத்துண்டாக (Rich Man’s Timber) மாறி வருவதற்கு காரணம் மூங்கிலிலிருந்து பெறப்படும் அதிக மதிப்புள்ள உப பொருள்களே ஆகும். வேகமாக வளரக் கூடிய தன்மை உடையதால் மூங்கிலை தோட்டப் பயிராக நான்கு வருடங்கள் வளர்த்து அதிலிருந்து மற்ற விவசாய தோட்டப் பயிரைக் காட்டிலும் அதிக விளைச்சலையும், இலாபத்தையும் பெற முடியும்.
மூங்கிலை பெரும்பாலானோர் விவசாயப் பயிராக பயிர் செய்யாமல் இருப்பதற்கு அதன் முட்களும், பாம்பு தங்கும் என்ற பயம் போன்ற காரணங்களாகும். மூங்கிலில் முள் உள்ளதால் கழித்து விடுதல், அறுவடை செய்தல் போன்றவை கடினமாக இருக்கும். அறுவடை செய்ய ஆகும் செலவும் அதிகம். ஆனால் தற்போது திசுவியல் முறையில் ஓசூரில் உள்ள குரோமோர் பயோடெக் நிறுவனம் உற்பத்தி செய்து, விற்பனை செய்து வரும் மூங்கிலில் முட்கள் கிடையாது. ஆகவே மேற்கூறிய சிரமங்கள் இல்லாமல் அறுவடைக்கும் அதற்கு பின் உள்ள பராமரிப்பு பணிகளையும் சுலபமாக கையாள முடியும்.
ஏற்கெனவே கூறியதுபோல் மூங்கிலில் 1000க்கும் மேற்பட்ட வகைகள் இருந்தாலும் சுமார் 20 வகையான முள்ளில்லா மூங்கில் நம் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 11 வகையான மூங்கில் தமிழ்நாட்டுக்கு உகந்தவை. அவை அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய, மாநில அரசிற்கும் விவசாயப் பெருமக்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மூங்கில் நன்கு முற்ற நான்கு வருடங்கள் ஆகும். முற்றிய மூங்கிலை இரண்டு முதல் நான்கு வருடம் முடிவில் தேவைக்கு ஏற்ப வருடா வருடம் அறுவடை செய்யலாம். மின்சார உற்பத்திக்காக எனில் இரண்டு வருடம் முற்றிய மூங்கிலை அறுவடை செய்யலாம். மேலும் வருடா வருடம் மூங்கிலை அறுவடை செய்ய முடியும்.

மூங்கில் பஞ்சு மற்றும் ஆடை தயாரிப்பு

மூங்கிலின் உபயோகம் புல்லாங்குழலிலிருந்து வீடு கட்டுமானம் வரை பரவியுள்ளது. இதை நாம் அனைவரும் அறிந்ததே. நம் நாட்டில் பருத்தி பயிரிட்டு அதனால் கிடைக்கும் பஞ்சு வளர்ந்து வரும் தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் நூலின் தேவையைப் பூர்த்தி செய்ய இயலவில்லை. எனவே பெரும்பாலான பஞ்சு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. மூங்கில் நார் செல்லுலோஸ் என்ற இயற்கையாக கிடைக்கும் நார் வகையாகும். மூங்கில் நாரிலிருந்து பஞ்சு பிரித்தெடுக்கப்பட்டு நூலாக்கி ஆடை தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. சீனா போன்ற நாடுகளில் மூங்கில் ஆடை தயாரிப்பு மிகவும் புகழ் பெற்றது. ஒரு ஏக்கரில் பருத்தியிலிருந்து அதிகபட்சமாக 600 கிலோ வரை பஞ்சு கிடைக்கிறது. ஒரு ஏக்கர் மூங்கிலிலிருந்து 40 டன் வரை மூங்கிலின் மகசூல் கிடைக்கிறது. இதிலிருந்து 25% மூங்கில் நார் கிடைக்கும். எனவே நூல் பற்றாக்குறையை போக்க மூங்கில் நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் ஆகும். மூங்கில் விவசாயம் செய்ய பராமரிப்பு செலவு மிகக் குறைவு.

மூங்கில் பஞ்சு இலையின் சிறப்பு

  1. பாக்டீரியா கிருமிகளை எதிர்க்க வல்லது. பலமுறை நீரில் அலசிய பின்பும் இத்தன்மை மாறாதது.
  2. குளிர்ச்சியானது. காற்றோட்டம் உள்ளது.
  3. பட்டுப்போல் மிருதுவானது.
  4. பருத்தியை விட மூன்று மடங்கு அதிக அளவு நீர் உறிஞ்சும் தன்மை உள்ளது.
  5. கோடையில் உடல் உஷ்ணத்தை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைக்கவல்லது.
  6. எளிதில் மட்கக்கூடியது. மட்கும்போது சுற்றுச்சூழல் கெடாமல் பாதுகாக்க வல்லது.
மேலும், மூங்கில் – பிளாஸ்டிக் சேர்ந்த கலவை கார், விமானம், செல்போன், லேப்டாப் ஆகியவற்றின் உதிரிபாகங்கள் தயாரிப்பதற்கும் பெரிதும் பயன்படுகிறது. இனிவரும் காலங்களில் அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருள்களிலும் 30 முதல் 50% வரை மூங்கில் நார் கலந்திருக்கும். இது பிளாஸ்டிக் பொருள்களின் விலையை குறைக்க உதவும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற அரிய பொருட்கள் மூங்கிலின் தேவையை அதிகப்படுத்தும். ஆனால் அதிகப்படியான தேவையை பூர்த்தி செய்ய மூங்கில் கிடைக்கப் போவதில்லை.

கார்பன் கிரடிட்

உலகில் வேகமாக வளரக்கூடிய தாவரமான மூங்கில் கரியமிலவாயுவை ஒளிச்சேர்க்கையின் மூலம் உயிர் பொருள் (பயோமாஸ்) தயாரிக்க உட்கிரகிக்கிறது. நல்ல பயிர் செய்யும் முறை மூலம் மூங்கிலிலிருந்து 40 முதல் 50 டன் வரை உயிர் பொருள் (பயோமாஸ்) பெற முடியும். இதில் 42 முதல் 50% வரை கார்பன் அடங்கியுள்ளது. ஒரு ஏக்கர் மூங்கில் சராசரியாக 60 டன் கரியமிலவாயுவை ஒரு வருடத்திற்கு உட்கிரகிக்கிறது. மூங்கில் ஒரு அற்புதமான கார்பன் சேமிப்புத் தொட்டியாகும் (Carbon sink). எனவே உட்கிரகிக்கும் கார்பன் கிரடிட் (Carbon Credit) ஆக வியாபாரம் செய்யப்படுகிறது. கார்பன் வெளியிடும் அளவு வளர்ந்த மற்றும் முன்னேற்றம் அடைந்த நாடுகளில் அபாயகரமாக அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.
வளிமண்டலத்தில் உள்ள கார்பன் அளவைக் குறைக்க எடுத்துக் கொண்ட பல முயற்சிகளில் மூங்கில் விவசாயம் மிக சிறந்ததாக உள்ளது. மூங்கிலிலிருந்து தயாரிக்கும் பொருட்களுக்காக மூங்கில் வளர்ப்பது குறைந்து, மூங்கில் வளர்ப்பது கார் பன் கிரடிட் ஆக மட்டும் உருவாகும் என்ற நிலை வெகுதூரத்தில் இல்லை. தற்போதைய நிலவரப்படி நன்கு வளர்ந்த மூங்கில் பண்ணைக்கு கார்பன் கிரடிட் ரூபாய் 40,000/- வரை ஒரு ஏக்கர் வருடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு குறைந்த பட்சம் 200 ஏக்கர் மூங்கில் பரப்பளவு தேவை. இது ஒரே விவசாயியின் பண்ணையாகவோ அல்லது பல விவசாயிகள் வெவ்வேறு இடங்களில் மூங்கில் பயிர் செய்யும் பண்ணைகளாகவோ இருக்கலாம். கார்பன் கிரடிட் தனியார் நிலத்தில் வளர்த்து விவசாயம் செய்த மூங்கில் பண்ணைக்கு மட்டுமே கிடைக்கும் ; வனத்துறை சார்ந்த நிலத்தில் உள்ள மூங்கில் காட்டிற்கு கிடையாது. நான்கு வருடத்திற்கு மேல் உள்ள மூங்கில் பண்ணை இதற்கு தகுதியானது.

சுகாதார கேட்டிற்கு தீர்வாகும் மூங்கில் வளர்ப்பு

தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் கழிவு நீரிலும் மூங்கிலை பயிர் செய்யலாம். அந்த கழிவு நீரையும் அதிக அளவு உள்ள உப்பு நீரையும் மூங்கில் வளர்ப்பதற்கு உபயோகப்படுத்த முடியும். சாயப்பட்டறையிலிருந்து வெளிவரும் கழிவு நீரினால் வரும் இடர்பாடுகளை நம் தமிழகத்தில் திருப்பூரில் நாம் கண்டு வருகிறோம். இந்த கழிவு நீரை நிலத்தில் பாய்ச்சும்போது நிலத்தடி நீரின் தன்மை மாறுகிறது. மேலும் மேல்மட்ட மண்ணும் எந்த பயிரும் பயிர் செய்ய உகந்ததற்ற நிலமாக மாறிவிடுகிறது. இந்த சாயப்பட்டறையிலிருந்து வெளிவரும் கழிவு நீரை மூங்கில் விவசாயம் செய்ய பயன்படுத்தலாம். தற்போது சாயக் கழிவு நீரையும் முற்றிலும் மூங்கில் பயிர் எடுத்துக் கொண்டு நிலத்தடிக்கு கீழே போகாதவாறு உபயோகப்படுத்தும் தொழில் நுட்பம் உள்ளது. இதற்கு ஆகும் செலவு மிக குறைவதுடன் மூங்கில் மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது.

மூங்கில் பண்ணை உருவாக்கம்

தற்போது நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வரும் மூங்கில் வளர்ப்பு முறை சரிவர முன்னேற்றம் அடையாமல் உள்ளது. வளர்ந்து வரும் மூங்கில் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய மூங்கில் விவசாயத்தை பண்ணை அளவில் விவசாயம் செய்ய வலியுறுத்தப்படுகிறது. மூங்கிலை விவசாயமாக எடுத்து பயிர் செய்யும்போது அதிக அளவு விளைச்சலை தருகின்றன (20 முதல் 40 டன் வரை). சிறிய அளவிலேனும் பூச்சிகொல்லி, உயர்ந்த உர மேலாண்மை மற்றும் நீர் நிர்வாகம் மற்றும் மிகக் குறைந்த நேரடி நிர்வாகம் மூலம் இவ்விளைச்சலை மிக சாதாரணமாக பெற முடியும். மூங்கிலிலிருந்து முழு விளைச்சலை நான்கு வருடம் கழித்து பெற முடியும். எரிசக்திக்காக விவசாயம் செய்யும் பொழுது இரண்டு வருடங்களிலேயே அறுவடை செய்ய முடியும். அதுவும் வருடா வருடம் செய்யலாம். ஆனால் ஒரு ஏக்கருக்கு 1000 செடிகள் பயிர் செய்ய வேண்டும். மூங்கிலை எரிசக்தி தயாரிக்க பயன்படுத்தும்போது சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. எரிசக்தி தயாரிக்க மூலப்பொருளாக மூங்கில் உபயோகப்படுத்தும்போது (Fossil fuels) நிலக்கரி, இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் ஆகியவற்றிற்கு மாற்றாக உபயோகப்படுத்தப்படுகிறது. இவை எரிக்கப்படும்போது சுழற்சி செய்ய முடியாத கரிய மிலவாயு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் மூங்கிலை பயன்படுத்தும்போது வெளியிடும் கரியமிலவாயு சில வருடங்களிலேயே சுழற்சி வட்டத்திற்குள் வந்து மரம் செடிகளால் உபயோகப்படுத்தப்படுகிறது.
இந்த பசுமை குடில் வாயுவானது உலகளவில் வெப்பத்தை (குளோபல் வார் மிங்) அதிகப்படுத்துகிறது. ஆனால் மூங்கில் வளரும் போது மற்ற மரங்களைவிட அதிக கரியமிலவாயுவை வளிமண்டலத்திலிருந்து உட்கிரகித்து அதை உயிர் பொருளாக மாற்றுகிறது. மூங்கிலை கரும்பு போல ஒரு ஏக்கருக்கு 200 செடிகளுக்கு பதில் 1000 செடிகள் 10 X 4 அடி இடைவெளியில் நடவு செய்து மின்சார உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு எரிசக்தி தயாரிக்க பயன்படுத்தலாம். பெரும்பாலான விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் மின்சாரம் உற்பத்தி செய்ய விவசாய கழிவுகளை எரிசக்திக்காக உபயோகப்படுத்துகிறது.
தொழிற்சாலை முன்னேற்றம் அடைந்து வரும் இன்றைய காலகட்டத்தில் வளர்ச்சிக்கு ஏற்ப எரிசக்தி பொருள் கிடைக்காமல் தட்டுப்பாடு உள்ளது. இதுவரை வேளாண்மை கழிவுகளை நம்பி மின்சாரம் உற்பத்தி செய்து வந்த தொழிற்சாலைகளுக்கு எரிசக்தி பொருள் கிடைப்பது மிக குறைவாக உள்ளது. இதனால் மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள்கள் கிடைப்பது 50 % க்கும் கீழ் குறைந்துவிட்டது. மேற்கூறிய பிரச்சனைக்கு தீர்வாக முள்ளில்லா மூங்கிலை பயிர் செய்வது ஒரு வெற்றிகரமான தீர்வாகும். சுமார் 20 மெகா வாட் மின்சார சக்தியை உருவாக்கும் தொழிற்சாலைக்கு 4500 ஏக்கரில் விளையும் மூங்கில் இடுபொருள் தேவைப்படுகிறது.
வடகிழக்கு மாவட்டங்களில் அதிகமாக பயிரிடும் மூங்கிலை நம் தமிழ்நாட்டிலும் கடந்த வருடம் முதல் பயிரிட்டு வருகிறார்கள். இவற்றில் முன்னோடி விவசாயிகளின் முயற்சி போற்றத்தக்கதாகும். இவைகளின் வெற்றிப்பாதை பல ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வழிகாட்டியாக அமையும். முன்னேறி வரும் இக்காலத்தில், விவசாயத்தில் வேலை பார்த்து வரும் ஆட்களின் எண்ணிக்கை குறைந்து வரும் காலத்தில், நீரின் அளவு குறைந்து வரும் காலத்தில், விவசாயத்தில் ஈடுபாடு குறைந்துவரும் இரண்டாம் தலைமுறைகளுக்கு மூங்கிலே ஒரு மாற்றுப் பயிராக அமையும் என்பதில் ஐயமில்லை

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories