வாழையில் காலநிலைப் பிரச்சனைகளைச் சமாளிப்பது எப்படி?

வாழையில் காலநிலைப் பிரச்சனைகளைச் சமாளிப்பது எப்படி?

காற்று
வறட்சி
கோடை காலம்
கேள்வி பதில்கள்வாழையில் உயிரிசாராப் பிரச்சினைகளான (abiotic stress) காற்று, தட்பவெப்பநிலை, வறட்சி போன்ற காலநிலைப் பிரச்சனைகளால் குறிப்பிடத்தக்க மகசூல் இழப்புகள் ஏற்படுகின்றன.

காற்று

அதிகவேகத்துடன் வீசும் காற்று, வாழைமரங்களை அதிக அளவில் பாதிக்கப்படுத்துவதால், காற்று வீசும் இடங்களில் வாழையைச் சாகுபடி செய்வதைத் தவிர்க்க வேண்டும். காற்றின் வேகம் மணிக்கு 10 கி.மீ முதல் 20 கி.மீ. வரை இருக்கும் பச்சத்தில் இலைகள், காய்களின் மீது தூசி படிந்தும், உராய்வு அல்லது கீறல்கள் ஏற்பட்டும் காயின் தரம் மற்றும் உற்பத்தி குறைகிறது. கோடை காலத்தில் வீசும் வறண்ட வெப்பக் காற்றினால், ஈரப்பதம் குறைந்து தற்காலிக வாடல் ஏற்பட்டு வாழையின் வளர்ச்சி குறைகிறது. காற்றின் வேகம் மணிக்கு 30 கி.மீ. ஐ தாண்டும் போது, மரங்களின் ஆட்டத்தால், இலைகள் நடு நரம்பின் இருபுறமும் பட்டை பட்டையாகக் கிழியும். காற்றின் வேகம் 45 கி.மீ ஐ தாண்டும் போது, வாழையில் ஒளிச்சேர்க்கை நடைபெறுவது குறைவதால், வளர்ச்சியில் பாதிப்பு உண்டாகி, குறிப்பிடத்தக்க மகசூலிழப்பு ஏற்படும். காற்றின் வேகம், 50 கி.மீ ஐ தாண்டும் போது, மரம் முழுவதும் வேரோடு சாய்ந்து விடும் அல்லது தண்டின் நடுப்பகுதியில் ஒடிந்து விழுந்துவிடும். இதனால் அதிகமான பொருளாதாரச் சேதம் ஏற்படுகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டில், சித்திரை மாதத்தில் (ஏப்ரல் & மே) ‘சித்திரைச் சுழி’ என்னும் சூறாவளி, காற்றின் வெப்பமாற்றத்தால் அங்குமிங்குமாக ஏற்படும். அப்பொழுது, வாழை மரங்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்படுவதால், வாழை விவசாயிகள் கடும் நஷ்டமடைகின்றனர். பொதுவாக, தைப்பட்டத்தில் (ஜனவரி & பிப்ரவரி) நடவு செய்யப்பட்ட வாழை மரங்கள் இரண்டு மாத வயதுடைய கன்றுகளாக இருப்பதால் இத்தகைய சேதத்திலிருந்து தப்பித்துவிடுகின்றன. ஆகவே, சித்திரை சுழியைக் கருத்தில் கொண்டு, வாழை நடவு பருவத்தை மாற்றியமைக்க வேண்டும். வாழை குலைதள்ளும் சமயத்தில், சற்று மிதமான காற்றைக்கூட தாங்காமல் மரம் ஒடிந்துவிட வாய்ப்புகள் உள்ளதால், திடமான மூங்கில் அல்லது சவுக்கு மரங்களைக் குலைக்கு எதிர்புறமாக முட்டு கட்ட வேண்டும். மேலும், மரத்தைச் சுற்றி மண் அணைக்க வேண்டும். வாழையில் மூங்கில் அல்லது சவுக்கு மரங்களைக் கொண்டு முட்டுக்கொடுப்பதற்குப் பதிலாக, குறைந்த செலவில், கயிற்றைக் கொண்டும், வாழைமரங்களை ஒன்றுடன் ஒன்றைக் கட்டி பாதுகாக்கலாம்.

இம்முறையில் வாழை மரங்களுக்கு நடுவில் ஆப்பு அடித்து, அதனைச் சுற்றியுள்ள மரங்களை கயிற்றினால் இழுத்துக் கட்டலாம். அல்லது ஒரு மரத்தின் அடிப்பகுதியையும், அடுத்துள்ள மரத்தின் கழுத்துப் பகுதியையும் கயிற்றால் இணைத்துக் கட்டலாம். மாற்று முறையாக, வாழை  மரங்களுக்கிடையே கட்டுக்கம்பியைக் கட்டிடங்கள் சாயாமல் தடுக்கும் முறை சிறந்த பலனை அளிக்கிறது இம்முறையில், முதலில், ஒவ்வொரு மரத்தைச் சுற்றி 7 அடி உயரத்தில் மணிக்கயிற்றைக் கட்டவேண்டும். பின்பு, வாழைக்கு வாழை நான்கு திசைகளிலும் 18 காஜ் கட்டுக்கம்பியைக் கட்ட வேண்டும். கடைசியில், ஓரங்களிலுள்ள வாழை மரங்களை தரையில் ஆப்படித்து (மின்கம்பங்களிலுள்ள ஸ்டே கம்பியைப் போல்) ‘ஸ்டே’ கம்பியைப் பலமாக கட்டவேண்டும். இம்முறையில், ஒரு ஏக்கருக்கு சுமார் 35 கிலோ கட்டுக்கம்பியும், 2 கட்டு மணிகயிறும் தேவைப்படுகின்றன. இவ்வாறு செய்வதால், காற்று எத்திசையிலிருந்து அடித்தாலும் மரங்கள் சாய்வதில்லை. இம்முறையில், ஒரு ஏக்கருக்கு ஆகும் செலவு 5000/- ரூபாய் மட்டுமே. ஆனால், சவுக்குக் கட்டையால் முட்டு கொடுக்கும் போது ஏக்கருக்கு 50000/- செலவு ஆகும்.

வறட்சி

வாழையின் வளர்ச்சிப் பருவத்தைப் பொருத்து, மரத்திற்கு சுமார் 5 முதல் 25 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதாவது, வாழையின் வாழ்நாளில், 1200 முதல் 1500 மி.மி தண்ணீர் அவசியம். பொதுவாக, ஆற்றுப் பாசனத்தையும் கிணற்றுப் பாசனத்தையும் நம்பியே வாழை பயிரிடபடுகின்றது. சித்திரை மாதத்தில், கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதால், வாழைக்குச் சரியான அளவில் நீர்பாசனம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் வாழை நீர்சத்து நிரம்பிய மென்மையான மரமாக இருப்பதால், கடுமையான வெப்பநிலையில், தண்ணீரைச் சேமித்து வைக்கும் திறனில்லாமல், வறட்சிக்காலங்களில், அதிகமான நீராவிப்போக்கால் அதிக அளவில் நீர்ச்சத்தை இழக்கிறது. இதனால், தேவையான ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து வாழை மரங்களால் எடுத்துக்கொள்ள முடியாமல் மகசூலில் அதிக இழப்பு எற்படுகிறது. இவ்வாறு வறட்சிக் காலங்களில், ஒரு குறிப்பிட்ட அளவைக்காட்டிலும் மரங்கள் அதிகமாக வாடிவிட்டால், அவைகள் தண்ணீர் பாய்ச்சினாலும் பழைய நிலைக்குத் திரும்பாமல் மரம் முழுவதும் காய்ந்துவிடும். இதனால், வாழையில் அதிக மகசூலிழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்கு, வாழையில் சொட்டுநீர் பாசானத்தைக் கடைபிடிப்பது மிகவும் அவசியம். வறட்சிக் காலங்களில், சொட்டுநீர் பாசனத்தின் மூலம், தேவையான அளவு தண்ணிரை சீராக எல்லா வாழை மரங்களுக்கும பகிர்ந்தளிப்பதால் மண்ணில் தேவையான ஈரப்பதம் காக்கப்படும், வாழையில் குறிப்பிடத்தக்க மகசூலிழப்பு ஏற்படுவதில்லை. மேலும், இம்முறையில், நாள்தோறும் தேவையான அளவு தண்ணீர் விடப்படுவதால், வாழை மரங்கள் காய்வதில்லை. சொட்டுநீர் பாசனத்துடன் தகுந்த மூடாக்கு. மண் போர்வை, ஈரங்காப்பிளிகளைச் சிறந்த முறையில் பயன்படுத்தினால், வறட்சிக்காலங்களில், குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு, வாழையில் அதிக மகசூல் பெறலாம். சொட்டுநீர் பாசனத்தின் மூலம் உரங்களை குறைந்த அடர்வில் நாள்தோறும் வாழைக்கு அளிப்பதன் மூலம், மரங்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதன் மூலம் வறட்சியின் கடுமையான விளைவுகளைக் குறைக்க முடியும்.

கோடை காலம்

தமிழ்நாட்டில் பெரும்பாலான வாழை சாகுபடிப்பகுதியில் கோடைக்காலத்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசைத் தாண்டுகிறது. மேலும், நண்பகலில் சூரிய வெளிச்சம் சுமார் 24000 கிலோ ஜூல்ஸைத் தாண்டுகிறது. இதனால், வாழையின் இலைகள் மற்றும் இலைக்காம்புகள் சூரிய வெப்பத்தால் வெந்து கருகிவிடுகின்றன. இதனால், இலைகள் ஒடிந்து தொங்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. இத்தகைய அறிகுறிகள் ரொபஸ்டா, கிராண்ட் நெயின் போன்ற இரகங்களில் அதிகமாகத் தென்படுகின்றன. இத்தகைய அறிகுறிகள் ரொயஸ்டடா, கிராண்ட் நெயின் போன்ற இரகங்களில் அதிகமாகத் தென்படுகின்றன. இதனைத் தவிர்ப்பதற்கு, வாழைத் தோட்டத்தில், கிழக்கு & மேற்காக உள்ள வரிசை மிக நீளமாகவும், வடக்கு & தெற்காக உள்ள வரிசை குறுகியதாகவும் அமைத்துக் கொள்ள வேண்டும். இதனால், ஒரு வாழைமரத்தின் நிழல் அதிக அளவில் அடுத்துள்ள மரத்தைப் பாதுகாக்கும்.

மேலும், கடுமையான வெய்யில் காலங்களில், வாழை தார் போட்டு வளர்த்து கொண்டிருந்தால், தாரின் கொள்ளையில் வளைந்த மேற்பகுதி பாதிக்கப்படுகிறது. இதன் மூலம் நோயை  உண்டாக்கும் ஒரு சில பூஞ்சக்காளான்கள் அல்லது பாக்டீரியாக்கள் தாக்குவதால் கொள்ளைப் பகுதி முழுவதும் பாதிக்கப்படுகிறது. இதனால், காய்களின் வளர்ச்சி தடைபட்டு, அதிக மகசூல் இழப்பு ஏற்படுகிறது. மேலும், வாழைக்காள்கள் முழுமையான முதிர்ச்சி அடையாமலேயே, காய்கள் பழுக்க ஆரம்பிக்கும். இத்தருணத்தில், கடுமையான வெப்பத்தினால், தோலிலிருந்து அதிக அளவு நீர்ச்சத்து வெளியேறுவதனால் முதலில் தோல்பகுதியில் வெடிப்புகள் தோன்றி பின்பு உட்சதையில் வெடிப்புகள் தோன்றும். இப்பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு, வாழைமரத்தில் உள்ள கண்ணாடிப் பாளையைக் கொண்டும், காய்ந்த இலைசருகுகளைக் கொண்டும், வெய்யில் தாக்காதவாறு கொள்ளைப்பகுதியை மூட வேண்டும். அல்லது கொள்ளைப் பகுதி முதல் நாரின் நுனி வரை, தகுந்த காற்றோட்டத் துளையுடன் (4&6%) கூடிய 100 காஜ் பாலிதீன் அல்லது பாலிப்ரபைலீன் உறைகொண்டு மூடவேண்டும்.

வெய்யில் காலங்களில், வாழைத்தோட்ட மண்ணின் வெப்பம் சுமார் 40 டிகிரி செல்சியசைத் தொடுகிறது. இவ்வெப்பமானது, வாழையின் தண்டுப்பகுதி மண்ணுடன் சேரும் பகுதியில் உள்ள திசுக்களைச் சேதப்படுத்துகிறது. இந்த காயத்தின் வழியான எர்வினியா பாக்டீரியா வாழை அழுகல் நோள் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க, மண்ணில் வாழைமரத்தின் தண்டைச் சுற்றி மூடாக்கு அல்லது பசுந்தாள் உரமான சணப்பையை பயிர்செய்து மண்போர்வை அமைக்க வேண்டும். மேலும், சொட்டுநீர் பாசனத்தின் மூலம், மரத்தைச் சுற்றி ஈரம் இருப்பதால், மண்ணின் வெப்பம் உயர வாய்ப்பில்லை… இதனால் இப்பிரச்சனையைத் தவிர்க்கலாம். வாழை மரங்களுக்கு குறிப்பாக கோடைக்காலங்களில் மாலை நேரங்களில் தண்ணீர் பாய்ச்சுவதன் மூலம், வேர்களுக்குச் சேதம் ஏற்படுவதை தவிர்க்கலாம். இவ்வாறு காலநிலை பிரச்சனைகளான அதிக வெப்பம், காற்று, வறட்சி, ஆகியவற்றின் பாதிப்புகளை தகுந்த தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வாழையின் வளர்ச்சியை ஊக்குவித்து அதிக லாபம் பெறமுடியும். இதனை வாழை விவசாயிகள் கருத்தில் கொண்டு செயல்படுவதன் மூலம் வாழையில் அதிக இலாபம் பெறமுடியும்.

ஆதாரம் : தேசிய வாழை ஆராய்ச்சி மையம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories