வாழையில் கூன் வண்டை கட்டுப்படுத்துவது எப்படி?

வாழையில் கூன் வண்டை கட்டுப்படுத்துவது எப்படி?

வாழை
தாக்குதலின் அறிகுறிகள்
வாழை மரப்பொறி

வாழை

முக்கனிகளில் ஒன்றான வாழை, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் பயிரிடப்பட்டு வருகிறது. கிழங்கு முதல் பூ வரை வாழையின் அனைத்துப் பாகங்களும் உணவு, தீவனம் மற்றும் மருத்துவப் பயன்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

எளிதில் செரிமானம் ஆகக்கூடிய மாவுச்சத்துக்களும், பல்வேறு சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் வாழையில் உள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த வாழைப் பயிரை 30ற்க்கும் மேற்பட்ட பூச்சிகள் தாக்குகின்றன. அவற்றுள் முக்கியமானது தண்டு கூன் வண்டு. இந்த வண்டுகளின் தாக்குதலானது 5 முதல் 70 சதவீதம் வரை மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன. அன்றாட உணவுப் பழக்கத்தில் வாழை முக்கிய இடம் பெற்றுள்ளதால் இயற்கையான முறையில் பூச்சி மேலாண்மையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

தாக்குதலின் அறிகுறிகள்

தண்டு கூன் வண்டின் புழுக்களானது 5 முதல் 6 மாத வயதுடைய மரங்களையே பெரும்பாலும் தாக்குகின்றன. இப்புழுக்கள் தண்டினை விரும்பி உண்பதால் 7ஆவது மாதத்துக்கு மேல் இதன் தாக்குதல் அதிகமாக காணப்படும். இந்தப் புழுக்கள் மரப்பட்டையைக் குடைந்து உள்ளே செல்வதால், துவாரம் ஏற்பட்டு அதில் பிசின் வெளிப்படும்.

இவற்றின் தாக்குதலால் பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்து மற்றும் நீர் போன்றவை தடைபட்டு வளர்ச்சி குன்றிவிடும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதுடன் தண்டு திசுக்கள் அழுகிவிடும், வாழைப் பூ வெளிவருவது தடைபடும் மற்றும் காய்கள் சிறுத்துவிடும்.

பாதிப்பு அதிகம் ஏற்படும்போது லேசான காற்றில் கூட மரங்கள் சாய்ந்துவிடும். நேந்திரன், மொந்தன், ரொபஸ்டா, செவ்வாழை மற்றும் கற்பூரவள்ளி போன்ற ரகங்களில் இந்த வண்டுகளின் தாக்குதல் அதிகமாக காணப்படும்.

தாய் வண்டானது தன்னுடைய மூக்கினால் தண்டில் சிறிய துளைகளை ஏற்படுத்தி அதில் முட்டையிடுகின்றன. முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்களானது தண்டினை தின்று உள்ளேயே கூட்டுப்புழுக்களாக மாறுகின்றன. பின்னர், கூட்டுப்புழுவில் இருந்து கருப்பு நிற வண்டு வெளிவரும்.

இயற்கை வழி மேலாண்மை: பூச்சி மற்றும் நோய் தாக்காத கிழங்குகளில் இருந்து தாய்க் கிழங்குகளை தேர்வு செய்ய வேண்டும். காய்ந்த இலைகள் மற்றும் சருகுகளை அவ்வப்போது அகற்றுவதன் மூலமாக இந்த வண்டுகள் பெருகுவதை தவிர்க்கலாம். வண்டு தாக்குதல் அதிகம் உள்ள பகுதிகளில் அடர் நடவு முறையை தவிர்த்தல் சிறந்த பலனளிக்கும்.

அறுவடைக்குப் பிறகு வாழைத் தோட்டங்களில் வாழைத் தண்டினைப் பிளந்து வைப்பதன் மூலமாக வண்டுகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதுடன் எளிதில் அவற்றை கவர்ந்து அழிக்கலாம். காஸ்மோலியூர் என்ற கிழங்கு கூன் வண்டு இனக்கவர்ச்சிப் பொறியை ஏக்கருக்கு 2 என்ற விகிதத்தில் வைப்பதால் இதனைக் கட்டுப்படுத்தலாம்.

வாழை மரப்பொறி

ஒரு அடி நீளமுள்ள வாழைத் தண்டினை இரண்டாகப் பிளந்து அவற்றில் உயிர் பூச்சிக்கொல்லியைத் தூவி ஏக்கருக்கு 40 என்ற விகிதத்தில் வாழைத் தோட்டங்களில் வைப்பதால் கூன் வண்டுகளைக் கவர்ந்து அளிக்கலாம். தேர்வு செய்யப்பட்டு பிளக்கப்பட்ட தண்டுக்கு 20 கிராம் பெவேரியா பேசியானா என்னும் உயிரியல் பூச்சிக்கொல்லியை வெட்டப்பட்ட பகுதியில் தூவி, வெட்டப்பட்ட அல்லது பிளக்கப்பட்ட பகுதி தரைப்பகுதியில் இருக்குமாறு தோட்டங்களில் ஆங்காங்கே வைக்க வேண்டும்.

தண்டுப் பகுதியில் உள்ள ஈரப்பதத்தின் மூலமாக உயிரி பூச்சிக்கொல்லிகள் பல்கிப் பெருகுவதுடன் அதிலிருந்து வெளிப்படும் வாசம், தாய் வண்டுகளைக் கவர்ந்து இழுக்கின்றன. இவ்வாறு கவர்ந்திழுக்கப்பட்ட வண்டுகள், தண்டுப் பொறியை உண்பதன் மூலமாக அவை பெருகுவது தடுக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.

இத்தகைய இயற்கை முறையைக் கையாண்டு கூன் வண்டுத் தாக்குதலை கட்டுப்படுத்துவதுடன் சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாத்து, நச்சுத் தன்மையற்ற பழங்களை உற்பத்தி செய்யலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories