விதைநேர்த்தி செய்வது எதற்காக?

மண், நீர், காற்று, விதைகள் மூலம் பூஞ்சாண நோய் மற்றும் பாக்டீரியா நோய்கள் பரவுகின்றன. விதை நேர்த்தி செய்வதன் மூலம் பயிர்களை நோயில் இருந்து பாதுகாக்கலாம். விதை அழுகல், நாற்று அழுகலில் இருந்து பாதுகாத்து விதையின் முளைப்புத்திறனை அதிகரிக்கிறது. என்னென்ன பயிர்களுக்கு எந்த வகையான விதை நேர்த்தி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். மானாவாரி பயிர்களுக்கு உயிர் உரம், பூஞ்சாணகொல்லி மற்றும் விதை கடினப்படுத்துதல் முறைகளில் விதைநேர்த்தி செய்யலாம். உயிர் உரங்கள் மண்ணில் கரையாமல் உள்ள மணிச்சத்தை கரையச் செய்தும், காற்றில் உள்ள தழைச்சத்தை பயிரின் வேர்களில் சேமிக்கவும் உதவுகின்றன. இதன் மூலம் உரச்செலவை குறைப்பதோடு ரசாயன உரங்களால் மண்ணில் ஏற்படும் மாசுக்களையும் குறைக்கலாம். உயிர் உர விதைநேர்த்தி நெல்லுக்கு அசோஸ்பைரில்லம் லிப்போபெரம் நுண்ணுயிர் உரம், நிலக்கடலை, பயறு வகைகளுக்கு ரைசோபியம், மற்ற பயிர்களுக்கு அசோஸ்பைரில்லம் பிராசிலென்ஸ் நுண்ணுயிர் உரம் பயன்படுத்த வேண்டும். கரையாத கூட்டுப்பொருளாக உள்ள மணிச்சத்தை கரையச் செய்து பயிருக்கு எளிதில் கிடைக்கும் உரமாக மாற்றுவதற்கு பாஸ்போ பாக்டீரியா பயன்படுகிறது. ஒரு ஏக்கருக்கு தேவையான நெல் விதையுடன் தலா ஒரு பொட்டலம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியாவை ஆறிய கஞ்சியில் கலந்து அரை மணி நேரம் நிழலில் உலர்த்தி 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும். திரவ உயிர் உரமாக இருந்தால் தலா 50 மில்லி இரண்டையும் ஆறிய கஞ்சியில் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும். நிலக்கடலை மற்றும் பயறு வகைகளுக்கு தலா ஒரு பொட்டலம் ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியாவும் திரவ உயிர் உரமாக இருந்தால் தலா 50 மில்லி அளவு கஞ்சியில் கலந்து நிழலில் உலர்த்தி 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும். இந்த உரங்கள் அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் பல்கலைகளிலும் கிடைக்கும். பூஞ்சாண கொல்லி விதைநேர்த்தி மண்ணின் மூலம் பரவக்கூடிய வேர் அழுகல், நாற்று அழுகல், வாடல் நோய், இலைவழி பரவும் குலைநோய், இலையுறை கருகல், இலைப்புள்ளி, ஆந்த்ராக்னோஸ் நோய் பாதிப்பை குறைப்பதில் சூடோமோனஸ் மற்றும் டி.விரிடி இவற்றின் பங்கு அதிகம். நெற்பயிரைத் தாக்கும் இலைச்சுருட்டு புழு, தண்டு துளைப்பான் பாதிப்பை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸ், 4 கிராம் டி.விரிடி இரண்டும் கலந்தோ தனித்தனியாக கலந்தோ விதை நேர்த்தி செய்யலாம். இவற்றை மற்ற பூஞ்சாண கொல்லி, பூச்சி மருந்துகளுடன் கலக்கக்கூடாது. உயிர் உரங்களுடன் கலந்து பயன்படுத்தலாம். விதை கடினப்படுத்துதல் ராமநாதபுரத்தில் பருவமழையை நம்பியே நெல் விதைப்பு நடை பெறுகிறது. சில நேரங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் வறட்சியை தாங்க முடியாமல் துவண்டு விடுகின்றன. இதற்கு விதை கடினப்படுத்துதல் அவசியம். ஒரு ஏக்கருக்கு தேவையான நெல் விதையுடன் 300 கிராம் பொட்டாஷ் உரத்தை 30 லிட்டர் தண்ணீரில் கரைத்து 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் நிழலில் உலர்த்தி 24 மணி நேரம் கழித்தோ ஒரு மாதம் வரை வைத்திருந்தோ விதைக்கலாம். இந்த விதைகளை உயிர் உரங்களுடனோ பூஞ்சாண கொல்லியுடனோ விதைப்பதற்கு அரைமணி நேரம் முன்பாக கலந்து பயன்படுத்தலாம். விதை கடினப்படுத்துவதால் விதை முளைக்கும் வீரியம் துாண்டப்படுவதோடு பயிர் வளர்ச்சியும் அதிகரிக்கிறது. – கண்ணையா வேளாண் துணை இயக்குனர் சீதாலட்சுமி, வேளாண் அலுவலர் உழவர் பயிற்சி நிலையம், பரமக்குடி 9442049291

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories