விவசாயத்தில் வறட்சி பாதிப்பைச் சமாளிக்க 8 வழிகள்!

விவசாயத்தில் வறட்சி பாதிப்பைச் சமாளிக்க 8 வழிகள்! இப்போதே வெயில் தனது உக்கிரத்தை காட்ட ஆரம்பித்துவிட்டது. கடந்த ஆண்டு போதிய பருவமழைப்பொழிவு இல்லாததே இதற்கு காரணம். இதன் காரணமாக தமிழ்நாட்டில் வறட்சி ஏற்பட்டு தண்ணீருக்கு பஞ்சம் ஏற்படும் என நீரியலாளர்களும் எச்சரித்து வருகிறார்கள். அதற்கு ஏற்றார்போல தமிழ்நாட்டில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் தண்ணீர் மட்டங்களும் குறைந்து கொண்டே வருகின்றன. இந்த சூழ்நிலையை சமாளிக்க தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இதற்கிடையே வீட்டில் மட்டுமல்லாமல் விவசாயத்துக்கும் தண்ணீர் சேமிப்பு என்பதும் அவசியம். அடுத்த பருவமழை ஆரம்பிக்கும் வரை விவசாயிகள் தங்களுடைய திறந்தவெளிக் கிணறுகளிலும், ஆழ்துளைக் கிணறுகளிலும் இருக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். விவசாயத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த எளிய வழிமுறைகளை பகிர்ந்துகொள்கிறார், திண்டுக்கல் மாவட்ட வேளாண்பொறியாளர் பிரிட்டோராஜ். “விவசாயத்தில் நீரினுடைய பயன்பாடு மிக முக்கியம். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நீரினை பயிருக்கு கொடுப்பதற்கு உதவுவது, பாசன முறைகள்தான். இன்று அறிவியலின் அதீத வளர்ச்சி காரணமாக நிலத்திலிருந்து நீரை உறிஞ்சி எடுக்கிறோம். அந்த தண்ணீரை முழுமையாக பயிருக்கு கொடுத்தால்தான் விவசாயத்தை லாபகரமானதாகவும் எளிதானதாகவும் மாற்ற முடியும். வறட்சிக்கு இன்றளவில் தெளிப்பு நீர் மற்றும் சொட்டுநீர் என பாசன முறைகளும் நமக்கு கைகொடுக்கலாம். மண்ணின் தன்மை, சீதோஷ்ண நிலை உணர்ந்து காலையிலோ, மாலையிலோ பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுதல் நலம்” என்றவர் பின்வரும் தகவல்களை சொல்கிறார். 1. மோட்டார் மூலம் கிணற்றிலிருந்து வாய்க்கால் வழியாக வயலுக்கு நீர் கொண்டுபோக விரும்பினால் அந்த நீர்த்தடத்தில் பிளாஸ்டிக் குழாய்கள் அமைத்து வயலின் ஒரு மூலையில் கேட்வால்வு அமைத்து தண்ணீர் பாசனம் செய்யலாம். இந்த பாசனம் மேற்கொள்ளும் போது தண்ணீர் வீணாவது 40% குறையும். 2. வறட்சியில் சொட்டுநீர் பாசனமே சரியான தீர்வு. குறைவான அளவு நீரை அனைத்துப் பயிர்களுக்கும் சமமாகவும், தேவையான அளவும் கொடுக்க முடியும். இதுதவிர இயற்கை இடுபொருட்களையும் கலந்து கொடுக்கவும் இதுதான் சரியான முறையாகும். தற்போது சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனங்களுக்கு தோட்டக்கலைத் துறை முலம் மானியம் கொடுக்கப்படுகிறது. 3. ஏற்கெனவே சொட்டுநீர் பாசனம் அமைத்திருப்பவர்கள் குழாய் வகையிலான சொட்டுவான்(tap) அமைத்திருந்தால், அதில் 40% நீரானது வெளியேறும் வகையில் இருக்குமாறு அமைக்க வேண்டும். 4. அனைத்து சொட்டுவான்களிலும் நீர் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதனால் பயிர்களுக்கான தினசரி நீரையும், அளவையும் உறுதி செய்யலாம். 5. அனைத்துப் பயிர்களிலும் சொட்டுவானிலிருந்து நீர் சொட்டும் இடங்களில் மூடாக்கு அமைப்பதால் 60% நீர் ஆவியாவது தடுக்கப்படும். இதனால் நீர் இழப்பு தவிர்க்கப்பட்டு நீரானது நிலத்தடியில் சென்று வேர்ப்பகுதியில் அகன்று பரவும். 6. தரைக்கு உட்பகுதியில் பதித்த சொட்டுநீர் பாசனம் அமைத்தவர்கள் ஆங்காங்கே தோண்டி மண்ணுக்குள் நீர் சரியான அளவு விழுவதை உறுதி செய்வது மிகவும் அவசியம். 7. உப்பு மற்றும் வேர் அடைப்பினால் நீர் வெளியேறுவது தடைபட்டிருந்தால் உடனடியாகத் தடுப்பு முறைகளைக் கடைபிடிக்க வேண்டும். 8. நிறைந்த நீர் இருந்தால் மட்டுமே தெளிப்பு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். உதாரணமாக, 2.5 அங்குலமுள்ள தண்ணீர் வெளியேறும் குழாயில் ஒரு மணி நேரம் தொடர்ந்து தண்ணீர் வந்தால் மட்டுமே தெளிப்பு பாசனம் செய்ய வேண்டும். எதிர்வரும் கோடையின் உக்கிரம் அதிகம் என்பதால் நீரீனை சேமித்து வைத்தால் நீண்ட நாட்களுக்குப் பயன் பெறலாம்!

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories