வெங்காயத்துல இவ்வளவு பயன் இருப்பதால் தான் இதற்கு எப்பவும் மவுசு…

“காயம்” என்ற சொல்லுக்கு கறி வாசனைச் சரக்கு என்று அர்த்தமாகும்.

“வெங்காயம்” என்றால், அது வெண்மையான காயம் என்பதாகும்.

உள்ளி எனவும் இதை சொல்வார்கள்.

பூண்டு இனம் சார்ந்தது இது என்ற இனிய உரையும் உள்ளது.

காலத்தால் கணிக்க இயலாத ஓர் ஒப்பற்ற மூலிகை சின்ன வெங்காயம் (சிவனுள்ளி), பெரிய வெங்காயம் (பெல்லாரி), வெள்ளை வெங்காயம் ஆகிய மூன்று ரகங்களிலே பவனி வருகின்றது.

சமையலின் போது சைவ, அசைவ உணவுப் பதார்த்தங்கள் அனைத்திற்கும் இவை அரும் துணைப்பொருட்களாக அமைந்துள்ளன. இவை தாமச (கால நீட்ட) உணவாக உள்ளதால், உடம்பின் புலன் உணர்வுகளை உற்சாகப்படுத்துகின்றன.

உயிர்ச்சத்துக்களும், அமிலச் சத்துக்களும் இவற்றில் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் நோய்க் கிருமிகளை நசுப்பிக்கும் என்பது மருத்துவ ஆய்வுரை, இரத்தத்தைச் சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டது இவை என்கிறது ஆயுர்வேதம்.

வெங்காய விவசாயத்திற்குத் தரமான காற்று, வளமான மண் மிக அவசியமாகும். வெங்காயச் செடியின் வயது ஏறத்தாழ நூறு நாட்களாகும்.

ஒவ்வொரு நாற்றுக்கும் நீள வாக்கில் முப்பது சென்டி மீட்டரும், அகல வாக்கில் பத்து சென்டி மீட்டரும், இடைவெளி இட வேண்டும். மேலுரமிட்டு அவ்வப்போது நல்ல தண்ணீர் விட வேண்டும்.

நட்ட ஒன்றரை மாதங்கள் கழித்து பூக்கும் பூக்களை அகற்ற வேண்டும். இலைகள் வாடி உலர்ந்த பின்பு செடிகளைத் தோண்டி எடுத்து, நிழலான இடங்களில் ஐந்து நாட்களுக்கு காய வைக்க வேண்டும். இதுவே விவசாய முறை.

வளி (உடலில் வாத வதை), அழல் (எரி உணர்ச்சி), ஐயம் (சரீர சந்தேகப் புலன்) ஆகிய மூன்று குறைகளையும் முறிக்கின்ற திரி தோஷச் சமனிப் பொருளாக வெங்காயம் உள்ளது. இவ்வாறு சித்த மருத்துவம் சித்தரிக்கிறது.

வெப்பம், வெப்பக் கடுப்பு, மூலம், பித்தம், தாகம், கிரந்தி (அல்சர், வீக்கம், புண்) ஆகியவை வெங்காயத்தால் அகலும் என்று பதார்த்த குண சிந்தாமணி நூற் பாடல் சிறப்பிக்கின்றது. சிரங்கு, உஷ்ண பேதி முதலானவற்றுக்கும் வைத்தியப் பண்டமாக வெங்காயம் விளங்கிடுமாம்.

வெங்காயத்திலுள்ள ‘அலைன் புரோஸ்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெயே மருத்துவக் காரத் தன்மைக்கு காரணியாக அமைகின்றது. இது விஞ்ஞானிகளின் விளக்கம். வெங்காயத்தை நசுக்கி இரவில் முகர்ந்தால் அயர்ந்த தூக்கம் வரும்.

காலை மாலை முகர்ந்தால் சளி நீங்கும். மூக்கிலிருந்து நீர் வடிதலும் நின்று விடும். வெங்காயச்சாறை அதே அளவு விளக்கெண்ணெயில் கலக்கி, சூடாக்கி, ஆறிய பின், ஒரே ஒரு துளி கண்களில் விட்டால், கண்வலி, கண் சிவப்பு குணமாகும் என்றும், இதனால் கண் பார்வை மங்கல் நீங்கும் எனவும் மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

வெங்காயத்தில் மிக சிறப்பாக அமைந்துள்ள ‘அமிலோ’ அமிலங்கள் இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவுமாம். வெங்காயச்சாறை வியர்வைக்குரு மீது தொடர்ந்து தடவ குணம் காணலாம்.

வெங்காயத்தில் பொதிந்துள்ள ‘தையோசில்பனேட்’ என்பது தாம்பத்ய உறவைப் பலப்படுத்துகிறது என்பது ஏற்றம் மிகுந்த சித்தாந்தமாகும்.

இவ்வளவு பயன்கள் இருப்பதால் தான், வெங்காயத்தை அனைவரும் சாகுபடி செய்ய விரும்புவர்.

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories