எந்த நிலத்தில்… என்ன பயிர் சாகுபடி?
ஆடிப்பட்டம் தேடிப்பார்த்து விதைப்பது மட்டும் போதாது.
நிலத்திற்கு ஏற்ற பயிர்களை விதைத்தால் லாபம் அடையலாம்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகில் உள்ள ஆறகளூர் பகுதியைச் சேர்ந்த ஐக்கிய விவசாயிகள் சங்கத்தலைவர் வையாபுரி என்றால், எல்லோருக்கும் தெரியாது. ‘பயிர்வாரி முறை வையாபுரி’ என்றால், எல்லோருக்கும் தெரியும்.
கடந்த 50 ஆண்டுகளாக பயிர் வாரி முறையைப் பற்றியே பேசி வருகிறார். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆகியோர் ஆட்சியில் இருந்தபோதும் சரி, தற்போது கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதும் சரி இந்த பயிர்வாரி முறையை செயல்படுத்த தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்.
அதற்காக பல போராட்டாங்களையும் முன்னெடுத்துள்ளார். இப்படி இவர் மூச்சுக்கு முன்னூறு முறை பயிர்வாரி முறை பற்றியே வலியுறுத்தி வந்துள்ளார். அப்படி என்னதான் இந்த பயிர்வாரி முறையில் இருக்கிறது என்று அவரிடம் கேட்டோம். ஆர்வமாக அவர் பேசியதிலிருந்து,
என்னதான் இந்த பயிர்வாரி முறையில் இருக்கிறது
“இன்றைக்கு விவசாயம் பாதாளத்தை நோக்கிப் போவதற்கு காரணம் நகர மயமாக்கல், பெருகி வரும் தொழிற்சாலைகள், சுற்றுச்சூழல் மாசுபாடு, பருவம் தப்பிய மழை என பல காரணங்களைச் சொன்னாலும், பயிர்வாரி சாகுபடி முறையை கைவிட்டதுதான் முக்கிய காரணம்.
ஐவகை நிலங்கள்
நம் சங்க காலத் தமிழர்கள் நமது நிலப்பரப்பை அவற்றின் தன்மைகளுக்கு ஏற்ப ஐவகை நிலங்களாகப் பிரித்து சாகுபடி செய்து வந்தனர். மலைப்பகுதியையும், காடுகள் அடர்ந்த பகுதியையும், வயல்கள் நிரம்பிய பகுதியையும், கடலோரப் பகுதியையும்,
வறட்சியான பகுதிகளையும், தனித்தனியாகப் பாகுபாடு செய்தனர். மலையும் மலை சார்ந்த நிலம் குறிஞ்சி எனவும், காடும் காடு சார்ந்த நிலம் முல்லை எனவும், வயலும் வயல் சார்ந்த நிலம் மருதம் எனவும், கடலும் கடல் சார்ந்த நிலம் நெய்தல் எனவும், மணலும் மணல் சார்ந்த வறண்ட நிலம் பாலை எனவும் பிரித்து வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் கிழக்கும், மேற்கும், தெற்கும் கடல் எல்லையாக இருந்தது. இந்தக் கடலையும் கடலைச் சார்ந்த இடத்தையும் நெய்தல் நிலம் என்றனர். பருவ காலத்தில், பெய்ய வேண்டிய மழை பெய்யாமல், வறட்சி ஏற்பட்டு, முல்லை நிலம் பசுமை இல்லாமல் வறண்டு இருக்குமானால் அப்பகுதியை, ‘பாலை‘ என்றும் வகைப்படுத்தினர்.
நீரை நிலத்தில் தேடாதே வானத்தில் தேடு
ஆனால், அதையெல்லாம் மறந்து இன்றைக்கு நாம் மனம் போனப்போக்கில் விவசாயம் செய்து வருகின்றோம். இதுவே நம் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததற்குக் காரணம். நிலத்திலிருந்து பெறும் நீரில் 97% உப்பு நீராகவே உள்ளது. 3% மட்டுமே பயன்பாட்டுக்கு உரிய நீராக உள்ளது. அதிலும் மூன்றில் இரண்டு பங்கு பனிப் பாறைகளில் மற்றும் துருவப் பகுதிகளில் உறைந்துள்ளது.
இந்த நிலையில் மக்கள் தொகைப்பெருக்கம், இயற்கைக்கு முரணான விவசாய முறைகள், பிளாஸ்டிக் கழிவுகள், ஆறுகளில் மாசு கலத்தல், நச்சுப்புகைகளின் வெளிப்பாடு என பூமிப்பந்தையே நெருப்புக்கோளம் சூழ்ந்தது போன்ற நிலை.
இப்படிப்பட்ட சூழலில் நம் பாரம்பரிய பாசன முறைகளை விடுத்து, கிணறு-போர்வெல்களை அமைத்து நிலத்தடி நீரையும் மொட்டையடித்துக்கொண்டு வருகிறோம். நம்மாழ்வார், ‘நீரை நிலத்தில் தேடாதே வானத்தில் தேடு’ என்று சொல்வார்.
பயிர் வாரி முறை சாகுபடி
நமது அரசாங்கங்கள் நிலத்தடி நீரின் இழப்பை குறித்து கவனம் செலுத்தும் அளவு, பயிர் வாரி முறை சாகுபடி பற்றி கவனமே செலுத்துவதில்லை. விவசாயி ஏற்கனவே அறியாமையில் கடனாளியாகிக் கிடந்து தவிக்கிறான்.
அரசுகள் அவர்களை விட கைபிசைந்த நிலையில் அறியாமையில் உழல்கின்றன. இயற்கை விவசாய முன்னோடிகள் ஆர்வலர்களை மதிப்பதே இல்லை.
உதாரணமாக, காவிரி நீர் பாயும் கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் சிறுதானியமான கேழ்வரகு தான் அதிக பரப்பளவில் பயிர் செய்யப்படுகிறது. நெல்லை விட, கேழ்வரகில் நல்ல லாபம் எடுக்க முடியும்.