குறுவை சாகுபடிக்கு ஏ.டி.டீ- 53 நெல் ரகத்தை பயிரிட வேண்டும்!!
எக்டேருக்கு சராசரியாக 6,334 கிலோ மகசூல் கிடைக்கும் ஏ.டி.டீ.-53 நெல் ரகத்தை குறுவை சாகுபடிக்கு பயன்படுத்துங்கள் என்று ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம் பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்தின் மொத்த நெல் சாகுபடி பரப்பான 19.2 லட்சம் எக்டேரில் குறுகிய கால நெல் சாகுபடி பரப்பு 7.35 லட்சம் எக்டேர் ஆகும்.
இது மொத்த சாகுபடி பரப்பில் 38.2 விழுக்காடு கொண்டுள்ளதோடு 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தியைத் தருகிறது. கோடை, குறுவை, சொர்ணவாரி பருவங்களில் ஏ.டி.டீ.-36, ஏ.டி.டீ-37, ஏ.எஸ்.டி-16, ஏ.டி.டீ. 43, ஏ.டி.டீ (ஆர்) 45, கோ-51 ஆகிய ரகங்கள் பயிர் செய்யப்படுகின்றன.
இதில் ஏ.டி.டீ- 43 நெல் ரகம் மிக சிறந்த சமையல் பண்புகளும் அரவை ஆலை ஏற்புத் திறனும் கொண்டுள்ளது. குறுகிய கால நெல் ரகங்களில் கோ 51 மட்டுமே விவசாயிகளின் தேர்வு ரகமாக இருக்கிறது.
எனவே கோடை, குறுவை பருவங்களுக்கு புதிய தேர்வு ரகங்கள் மிகக் குறைவாக உள்ளது. தற்போது கோடை சாகுபடி பரப்பு அதிகரித்து இருப்பதாலும், குறுவை பருவத்தில் திட்டமிட்ட மகசூல் நிர்ணயம் உள்ளதாலும், அதிக மகசூல் தரக்கூடிய, சாயாத தன்மை கொண்ட விற்பனைக்கு உகந்த, காவிரி டெல்டா மண்டலத்திற்கு ஏற்புத் திறன் கொண்ட புதிய நெல் ரகம் விவசாயிகளின் எதிர்ப்பார்பாக உள்ளது.
இதையடுத்து ஆடுதுறை நெல்
ஆராய்ச்சி நிலையம், குறுவை,
கோடை பருவங்களுக்கு ஏற்ற
குறுகிய கால நெல் ரகமான ஏட.டி.டீ.- 53 கடந்த ஆண்டு வெளியிட்டது.
இந்த ரகம் 110 முதல் 115 வயதுடையது. ஏ.டி.டீ 43, ஜே.ஜி.எல். 384 கலப்பில்
இருந்து உருவாக்கப்பட்டது.
இந்த ரகம் கட்சிதமான செடி
அமைப்பும், அடர்ந்த கதிர்களுடனும்
தண்டுத்துளைப்பான், இலைமடக்குப் புழுவிற்கு மிதமான எதிர்ப்புத் திறன்
கொண்டது.
சன்ன ரக அரிசியான இது 65
விழுக்காடு முழு அரிசி காணும் திறனும், சிறந்த சமையல் பண்புகளையும் கொண்டது.மேலும் எக்டேருக்கு 6,334 கிலோ
சராசரி மகசூல் தரவல்லது. மற்ற ரகங்களைக் காட்டிலும் அதிக மகசூல் கொண்ட இந்த ரகம் கோடை, குறுவை
பருவத்துக்கு ஏற்றது.
மேலும் விவரங்களுக்கு ஆடுதுறை நெல் ஆராய்ச்சிநிலையத்தை -9442875303, 9443587352, 9698369927 ஆகிய
எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில்
உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர்
தெரிவித்துள்ளார்.
வேளாண்மை செய்தித்தொகுப்பு அன்பரசு