சம்பாவுக்கு ஏற்ற டி.கே.எம்.13 நெல்!  

சம்பாவுக்கு ஏற்ற டி.கே.எம்.13 நெல்!

 

சம்பாவுக்கு ஏற்ற டி.கே.எம்.13 நெல்!  

மிழ்நாட்டில் சுமார் 2.04 மில்லியன் எக்டர் பரப்பில், மூன்று  பட்டங்களில் நெல் பயிரிடப்படுகிறது. முதல் பட்டமான குறுவையில் சில மாவட்டங்களிலும், அடுத்து, காரில் சில மாவட்டங்களிலும், அடுத்து, சொர்ணவாரியில் சில மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான குறுவைப் பருவத்தில் 100-115 நாட்களில் விளையும் குறுவயது இரகங்கள் பயிரிடப்படுகின்றன. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான சம்பாப் பருவத்தில், முன் சம்பா, பின் சம்பா மற்றும் தாளடி எனப் பயிரிடப்படுகிறது.

முன் சம்பாப் பட்டத்தில் 145-155 நாள் வயதுள்ள நீண்டகால இரகங்களும், பின் சம்பா மற்றும் தாளடியில் 125-135 நாளில் விளையும் மத்திமக் கால இரகங்களும் பயிரிடப்படுகின்றன. டிசம்பர் ஜனவரியில் நடைபெறும் நவரை சாகுபடியில் 100-115 நாட்களில் குறுவயது வயது இரகங்களே பயிரிடப்படுகின்றன. 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமான திரூர் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து டி.கே.எம்.13 என்னும் நெல் இரகம் 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. WGL 32100, சுவர்ணா ஆகிய இரகங்களின் கலப்பில் உருவான இது 125-130 நாட்களில் விளையும். காவிரிப் படுகையில் செப்டம்பரில் பயிரிடப்படும் தாளடிக்கும், இதர மாவட்டங்களில் ஆகஸ்ட் செப்டம்பரில் பயிரிடப்படும் சம்பாவுக்கும் ஏற்ற இரகமாகும். இது சாயாது என்பதால் அறுவடைக்கு மிகவும் ஏற்றது.

அதிகத் தூர்களுடன் நடுத்தர உயரத்தில் வளர்ந்து எக்டருக்குச் சுமார் 6 டன் மகசூலைத் தரும். ஆயிரம் மணிகள் 13.8 கிராம் இருக்கும். இது, பிபிடி 5204 இரகத்துக்கு மாற்றாக சாகுபடி செய்ய ஏற்றது. ஏனெனில், சம்பாவில் பிபிடி 5204 இரகம் தான் தமிழ்நாட்டில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதைப் போலவே டி.கே.எம்.13 இரகமும் மத்திம மற்றும் சன்ன இரகமாக இருப்பதால் விவசாயிகள் மற்றும் வணிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

பிபிடி 5204 நீண்ட காலமாகச் சாகுபடியில் உள்ளதால், இது, பூச்சி மற்றும் நோய்களுக்கு உள்ளாகி வருகிறது. ஆனால், டி.கே.எம்.13 இரகமானது இலைச்சுருட்டுப்புழு, குருத்துப்பூச்சி, குலைநோய், செம்புள்ளி நோய், இலை உறை அழுகல் நோய் ஆகியவற்றை ஓரளவு தாங்கி வளரும் தன்மை கொண்டது. 75.5 சத அரவைத்திறன் மற்றும் 71.7 சத முழு அரிசி காணும் திறனுடன், நீண்ட சாதம், சிறந்த சமையல் பண்புகள் மற்றும் சுவையைக் கொண்டது.   

எனவே, இந்த நெல் இரகம் சம்பாவுக்கு மிகவும் ஏற்றது. இந்த இரக விதைகள் தேவைப்படுவோர், திரூர் நெல் ஆராய்ச்சி நிலையத்தை, 044-27620233 என்னும் எண்ணில் அல்லது அருகிலுள்ள வேளாண் அறிவியல் நிலையத்தை அல்லது வேளாண்மை விரிவாக்க மையத்தைத் தொடர்பு கொள்ளலாம். 

முனைவர் எஸ்.பானுமதி, வேளாண்மைக் கல்லூரி, மதுரை – 625 104.

முனைவர் ஆர்.ஜெகதாம்பாள், முனைவர் ஏ.ஷீபா, முனைவர் வி.எம்.சங்கரன், நெல் ஆராய்ச்சி நிலையம், திரூர், திருவள்ளூர் – 602 025.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories