திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள்

கோட்பாடுகளும் பயன்களும்
திருந்திய நெல்சாகுபடி (எஸ்.ஆர்.ஐ) செயல்முறைகள் நாற்றங்கால்
நாற்றுகளைக் கையாளுதல்
களைக் கருவி உபயோகித்தல்
ஊட்டச்சத்து நிர்வாகம்
திருந்திய நெல் சாகுபடியால் ஏற்படும் நன்மைகள்

 

எஸ்.ஆர்.ஐ (SRI) என்ற திருந்திய நெல் சாகுபடி முறை சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் ஹென்றி டி லலானே என்ற கிறிஸ்துவப் பாதிரியாரின் முயற்சியால் மடகாஸ்கர் நாட்டில் நடைமுறை ஆராய்ச்சிகளுக்கு அப்பால் உருவான சாகுபடி முறையாகும். மடகாஸ்கரில் உள்ள ஏழை நெல் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டுமென்றால் குறைந்த இடுபொருள் செலவில் நெல் உற்பத்தித் திறனை உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோளோடு தொண்டாற்றிய பாதிரியார் சுமார் முப்பது ஆண்டுகள் நுணுக்கமாக கவனித்து, உழைத்து உருவாக்கியதுதான் எஸ்.ஆர்.ஐ.நெல் சாகுபடி முறையாகும்.

நடைமுறை நெல் சாகுபடி முறைகளிலிருந்து மாறுபட்ட உழவியல் முறைகள் இதில் கடைபிடிக்கப்படுகின்றன. நாற்று தயாரித்தல், நடுதல், களைக்கட்டுப்பாடு, நீர்ப் பாசனம் போன்ற பொதுவான வழிமுறைகள் இதில் இருந்தாலும் ஒவ்வொரு முறையும் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் கடைபிடிக்க வேண்டியுள்ளது. இந்த மாறுபட்ட வழிமுறைகளைக் கடைபிடிப்பதால் நெல் செடி வளரும் சூழ்நிலை சாதகமாக மாறுகிறது. வேர்கள் நன்றாக வளர்வதால் மொத்த பயிர் வளர்ச்சி மேம்படுகிறது. மகசூலும் அதிகரிக்கிறது.

 

 

கோட்பாடுகளும் பயன்களும்

இளநாற்று

 • அதிக தூர் வெடிக்கும் வீரியம்
 • அதிக தூர் வெடிக்கும் காலம்

அதிக இடைவெளியில் ஒற்றை நாற்று சதுர நடவு

செடிகளுக்கிடையே போட்டி குறைவு

அதிக தூர் வெடித்தல்

களைக் கருவி உபயோகித்தல்

 • மண் கிளறி விடப்படுதல்
 • பயிர் வளர்ச்சி ஊக்குவிப்பு
 • நுண்ணுயிர்கள் ஊக்குவிப்பு

சிக்கன நீர்ப் பாசனம்

 • மண்ணில் காற்றோட்டம்
 • 40 – 50 சதவீதம் நீர் சேமிப்பு

ஒருங்கிணைந்த உர நிர்வாகம்

 • அதிக நுண்ணுயிர்கள் செயல்பாடு
 • அதிக கூட்டுப் பயன்

திருந்திய நெல்சாகுபடி (எஸ்.ஆர்.ஐ) முறையை விவசாயிகள் ஏன் கடைபிடிக்க வேண்டும்?

 • குறைந்த சாகுபடிச் செலவு
 • ஏக்கருக்கு 2-3 கிலோ விதை போதுமானது.
 • ஏக்கருக்கு 1 சென்ட் நாற்றங்கால் போதுமானது.
 • குத்துக்கு ஒரு நாற்று போதுமானது.
 • ஒரு சதுர மீட்டருக்கு 16 குத்துகள் போதுமானது.
 • களையைக் கட்டுப்படுத்த களைக் கருவி உபயோகிப்பதால் ஆட்செலவு குறைவு
 • களைக் கருவி உபயோகிப்பதால் பயிர் வளர்ச்சி அதிகமாகிறது.
 • வயலில் நீரைத் தேக்கி வைக்க வேண்டியஅவசியமில்லை
 • பாசன நீர்த் தேவை 40 – 50 சதவீதம் குறைவு
 • நீர்ப்பாசனத்திற்கான மின்சாரச் செலவு குறைவு
 • அதிக வேர் வளர்ச்சி
 • அதிக வெள்ளை நிறப் பணியாற்றும் வேர்கள்
 • அதிக ஊட்டச்சத்து உபயோகத் திறன் அதிக தூர்கள்
 • அதிக கதிர்கள், அதிக மணிகள்
 • பயிருக்கு சாயாத தன்மை அதிகமாகிறது.
 • அதிக தானிய வைக்கோல் மகசூல்
 • அதிக லாபம்

திருந்திய நெல்சாகுபடி (எஸ்.ஆர்.ஐ) செயல்முறைகள் நாற்றங்கால்

திருந்திய நெல்சாகுபடியில் தேவைப்படும் நாற்றுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால் அவை சரியான முறையில் வளர்க்கப்பட வேண்டுமென்ற எண்ணத்தில் மேடை அமைத்து உருவாக்கும் முறை வழிவகுக்கப்பட்டுள்ளது.

 • ஏக்கருக்கு 3 கிலோ விதை
 • ஒரு ஏக்கர் நடவுக்கு ஒரு சென்ட்(40 சதுர மீட்டர்) நாற்று மேடை
 • நடவு வயலின் ஓரத்தில் 1 x 5 மீ. அளவுள்ள 8 மேடைகளை அருகிலிருக்கும் மண்ணை எடுத்து உருவாக்க வேண்டும்.
 • நன்கு மக்கிய தொழு உரத்தை வழக்கமான அளவு போடலாம்.
 • நாற்று மேடை மண் வளமானதாக இருந்தால் மேலுரம் இடத் தேவையில்லை. இல்லையெனில் நாற்று மேடை ஒன்றுக்கு 95 கிராம் வீதம் 8 நாற்று மேடைகளுக்குத் தேவையான 760 கிராம் டி.ஏ.பி. உரத்தை நன்கு பொடி செய்து மண்ணுடன் கலந்து நாற்று மேடைகளில் நிரப்பி விட வேண்டும்.
 • நிலப் பரப்புக்கு மேல் 5 செ.மீ. உயரம் மேடை அமைத்த பின் மேடை மேல் பாலிதீன் தாளையோ (அ) பிரித்த உரச் சாக்குகளையோ பரப்பி விட வேண்டும்.
 • மீண்டும் 4 செ.மீ. உயரத்திற்கு மண்ணை நிரப்பி விட வேண்டும்.
 • விதை நேர்த்தி செய்ய ஒரு கிலோ விதைக்கு சூடோமோனாஸ் 10 கிராம் மற்றும் அசோபாஸ் உயிர் உரம் 3 கிலோ விதைக்கு ஒரு பாக்கெட் (200 கி) என்ற அளவிலும் பயன்படுத்த வேண்டும். சூடோமோனாஸ் மற்றும் அசோபாஸ் ஆகியவற்றைத் தேவையான அளவு அரிசிக் கஞ்சி (அ) தண்ணீரில் கரைத்து பின் அவற்றை விதைகளுடன் நன்றாகக் கலந்து நிழலில் உலர்த்த வேண்டும். நிழலில் உலர்த்திய விதைகளை தண்ணீரில் 24 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி பின் (24 மணி நேரம்) முளைகட்ட வேண்டும்.
 • ஒவ்வொரு 5 ச.மீ மேடையிலும் 375 கிராம் (முளை கட்டும் முன் எடை) விதையை முளைக் கட்டிய பின் (இரண்டாம் கொம்பு) பரவலாக விதைக்க வேண்டும்.
 • பூவாளி கொண்டு நீர் தெளிக்கலாம் (அ) சுற்றியிருக்கும் பள்ளங்களில் நீர் நிரப்பலாம்.

நாற்றுகளைக் கையாளுதல்

 • நாற்றுகளை மேடை மண்ணோடு பெயர்த்து எடுத்து நடவு வயலுக்குக் கொண்டு செல்வது மிகச் சிறந்ததாகும்.
 • இதனால் நாற்றுகளின் வேர்ச் சூழ்நிலை மாறாமல் நடப்பட வாய்ப்பிருப்பதால், செடிகள் பச்சை பிடிப்பது உடனடியாகத் தொடங்கும்.
 • நாற்றுகளை மண்ணோடு பத்தை பத்தையாக எடுத்து முறத்திலோ(அ) அட்டைப் பெட்டியிலோ வைத்து நடவு இடத்தில் வைத்துவிட்டு நடும்போது நாற்றுகளைப் பிரித்து நடலாம்

நாற்றங்கால் அளவு மற்றும் விதைத் தேவை (ஒரு ஏக்கர் நடவு செய்ய)

சாகுபடி முறை நாற்றங்கால் அளவு(ச.மீ.) விதைத் தேவை(கிலோ)
நடைமுறை சாகுபடி 320 16-24
திருந்திய நெல்சாகுபடி 40 3*
 • நெல்மணியின் எடையைப் பொருத்து விதையின் அளவு சிறிது மாறுபடும். ஆனால் 3 கிலோ என்பது அதிக பட்சத் தேவையாகும்.
 • நடவு வயல்
 • நடவு வயலைச் சமன்படுத்துவது சரியாகச் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.
 • பள்ளமாக இருக்கும் இடங்களில் நடப்படும் இளநாற்றுகள் அழுகிவிட வாய்ப்புள்ளது.
 • முடிந்தவரை மேடுபள்ளமில்லாமல் பரம்படித்து சமன்படுத்த வேண்டும்.
 • நீர் வடியுமாறு சிறு வாய்க்கால்களை உருவாக்க வேண்டும். செம்மை நெல் சாகுபடியில் முன்பு 20 மு 20 செ.மீ, 22.5 மு 22.5 செ.மீ. இடைவெளி சிபாரிசு செய்யப்பட்டது. தற்போது 25மு 25 செ.மீ. சிபாரிசு செய்யப்படுகிறது.

நடவுக்கான நாற்றின் வயது

நெல் இரகம் நாற்று வயது
நடைமுறை சாகுபடி திருந்திய நெல் சாகுபடி
குறுகிய காலம்(105 -110 நாட்கள்) 25-30 14-15
மத்திய காலம்(125-135 நாட்கள்) 31-35 14-15
நீண்ட காலம்(150-155 நாட்கள்) 35-40 14-15
 • சதுர நடவு
 • ஒரு குத்துக்கு ஒரு நாற்று
 • முடிந்த அளவுக்கு வேர்கள் மேல் நோக்காமலும் ஆழமாக இல்லாமலும் நடுவது நல்லது.
 • 25மு 25 செ.மீ. இடைவெளியில் சதுர நடவு செய்ய வேண்டும்.
 • சதுர நடவு செய்வதற்கு அடையாளமிட்ட கயிறையோ (அ) நடவு அடையாளக் கருவியையோ பயன்படுத்தலாம்.

நடவு இடைவெளியும் பயிர் அடர்த்தியும்

சாகுபடி முறை நடவு இடைவெளி(செ.மீ.) பயிர் அடர்த்தி(ஒரு சதுர மீட்டருக்கு)
நடை முறை குறுகிய கால பயிர் மத்திய, நீண்ட காலப் பயிர் குறுகிய கால பயிர் மத்திய, நீண்ட காலப் பயிர்
15 மு 10 20 மு10 66 50
திருந்திய நெல் சாகுபடி முறை 25 மு 25 16

சிக்கன நீர்ப் பாசனம்

 • பொதுவாக மண் மேல் நீரைத் தேக்கி வைக்காமல் ஆனால் மண் ஈரமாக இருக்குமாறு செய்ய வேண்டும்.
 • நட்டதிலிருந்து தண்டு உருளும் பருவம் வரை 2.5 செ.மீ. உயரத்திற்கு நீரைக் கட்டி கின் அது வடிந்து லேசான கீறல் வெடிப்புகள் தோன்றியவுடன் மறுபடியும் 2.5 செ.மீ. உயரத்திற்கு நீரைப் பாய்ச்சுதல் வேண்டும்.
 • தண்டு உருளும் பருவத்திற்குப் பின் 2.5 செ.மீ. உயரத்திற்கு நீரைக் கட்டி பின் மண்ணின் மேற்பரப்பிலிருந்து நீர் மறைந்தவுடன் மறுபடியும் 2.5 செ.மீ. உயரத்திற்கு நீரைப் பாய்ச்சுதல் வேண்டும்.
 • காய்ச்சலும் பாய்ச்சலும் போன்ற இந்த நீர்ப் பாசன முறையால் மண்ணில் காற்றோட்டம் இருக்கும்.
 • வேர்களின் பணியும், நுண்ணுயிர்களின் செயல்பாடும் நன்றாக இருக்கும்.

 

 

 

திருந்திய நெல் சாகுபடியில் நீர் சேமிப்பு பற்றிய ஆராய்ச்சி

நடை முறை சிபாரிசு திருந்திய நெல் சிபாரிசு
பாய்ச்சிய நீர்(கன மீட்டர் / ஏக்கர்) 6654 3368
நீர் சேமிப்பு(சதவீதம்) 49.4

களைக் கருவி உபயோகித்தல்

 • நட்டதிலிருந்து 10 நாட்களுக்கு ஒரு முறை களைக் கருவியை (மொத்தம் 3-4 தடவை) குறுக்கும் நெடுக்குமாக உபயோகிக்க வேண்டும்.
 • ஒரு தடவை உபயோகிக்க ஏக்கருக்கு 3 ஆள் தேவைப்படும்.
 • களைக் கருவியை உபயோகிக்கும் போது களைகள் மண்ணில் அமுக்கி விடப்படுகின்றன. இதனால் களைச் செடிகளால் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் ஊட்டச்சத்துக்கள் மண்ணிற்கே திரும்புகின்றன.
 • களைகள் கட்டுப்படுத்தப்படுவது மட்டுமில்லாமல் களைக் கருவி உபயோகிப்பதால் ஏற்படும் முக்கிய பயன், மண் கிளறிவிடப்படுவதாகும். இதனால் ஏற்படும் பெளதீக, இரசாயன, நுண்ணுயிரியல் மாற்றங்கள் செடிகளின் வளர்ச்சியில் பெறும் முன்னேற்றத்தைத் தருகின்றன.
 • களைக் கருவி உபயோகிக்க மேலாக நீர் இருத்தல் வேண்டும்.
 • களைக் கருவி உபயோகித்த பின் விடுபடும் களைகளைக் கையால் எடுத்து விடுவது அவசியமாகும். இல்லாவிடில் தூர் வெடிப்பது குறையும்.

ஊட்டச்சத்து நிர்வாகம்

 • திருந்திய நெல் சாகுபடியில் ஒருங்கிணைந்த உர நிர்வாகத்தைக் கடைபிடிப்பது அவசியமாகும்.
 • முடிந்த அளவுக்கு இயற்கை உரங்கள் மற்றும் உயிர் உரங்களை இரசாயன உரங்களோடு பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பயிருக்குத் தேவைப்படும் காலகட்டங்களில் அவற்றைப் பிரித்து இட வேண்டும்.
 • மண் அடிக்கடி களைக் கருவியால் கிளறப் படுவதால் நுண்ணுயிர்களின் செயல்பாடும், ஊட்டச்சத்துக்களின் கிடைக்கையும் ஊக்குவிக்கப்படுகின்றன.
 • ஒரே அளவு உரமிடும் போது, எஸ்.ஆர்.ஐ பயிர் அதிக அளவு ஊட்டச்சத்துகளை எடுத்துக் கொள்கிறது. ஊட்டச்சத்துகளின் உபயோகத்திறன் அதிகமாகிறது.
 • அங்கக கரிமச்சத்தின் அளவு மண்ணில் அதிகமாக இருந்தால் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். அதோடு மட்டுமல்லாமல் இரசாயன உரங்களின் பயனும் அதிகமாக இருக்கும்.
 • தமிழ்நாட்டில் நெல் சாகுபடி செய்யப்படும் வயல்களில் அங்கக கரிமச்சத்து குறைவாக உள்ளது. (1 கிலோ மண்ணில் 5 கிராம்) இந்த அளவை அதிகரிப்பது பயிர் வளர்ச்சிக்கு நல்லது. ஆகவேதான் இயற்கை உரங்களான சாண எரு, பயிர்க்கழிவுகள், பசுந்தாள் உரங்கள் போன்றவற்றை மண்ணில் இடவேண்டும்.
 • நீர்ப்பாசன வசதி உள்ள விவசாயிகள், நெல் நடும் வயலில் சணப்பை, தக்கைப் பூண்டு, சீமை அகத்தி போன்ற பசுந்தாளுரப் பயிர்களை 40 நாட்கள் வளர்த்து மடக்கி உழுதால் ஏக்கருக்கு 8 டன் வரை பசுந்தாள் இட வாய்ப்புள்ளது.
 • இலைவண்ண அட்டையை உபயோகித்து தழைச் சத்து நிர்வாகம் செய்தால் பயிருக்குத் தேவையான நேரங்களில் மட்டும் உரமிட்டு பயன்பெறலாம்.
 • இலையின் பச்சை நிறம் அதில் உள்ள தழைச் சத்தின் அளவைப் பொருத்து வேறுபடும்.
 • இலைவண்ண அட்டையை உபயோகித்து தழைச் சத்து இருக்கிறதா இல்லையா எனத் தெரிந்து கொண்டு தழைச் சத்தை அளிக்க முடியும்.

திருந்திய நெல் சாகுபடியால் ஏற்படும் நன்மைகள்

 • இளநாற்றை நடுவதால் சடுதியில் நிலைகொண்டு, நடவு அதிர்ச்சியில்லாமல் வளரத் துவங்குகிறது.
 • வேர்களின் வளர்ச்சி அதிகமாகிறது.
 • அதிக தூர்கள் வெடிக்கின்றன.
 • இலைகள் அறுவடை வரை பசுமையாக இருப்பதால் சூரிய ஒளிச் சேர்க்கை கடைசி வரை நன்றாக இருக்கிறது.

 

ஆதாரம்: நீர்வள நிலவளத் திட்டம், நீர் நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories