5 முறை லிம்கா… ஒரு கின்னஸ்… அரபு விவசாயியின் அசத்தல் சாதனை!

என்னதான் காய்கறிகளை விளைய வைத்தாலும், நெல்லை விளைய வைத்து விட வேண்டும் என்ற எண்ணம் அவரை விடவில்லை. அதனால், 2014-ம் ஆண்டு முதன்முதலாக சுதீஷ், நெல் விளைவிக்க முயற்சி செய்தார்.

 

“விதைகள் மற்றும் செடிகளை மாணவர்களுக்குக் கொடுத்து அவற்றை வளர்க்கச் சொல்கிறோம். அதில் ஒரு போட்டி வைத்து செடிகளை வளர்க்கும் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதே என் திட்டம். இதன் மூலம் இயற்கை விவசாயம் பற்றிய நினைப்பு தொடர்ந்து மக்கள் மத்தியில் இருக்கும்” – இது அரபு பத்திரிகை ஒன்றிற்கு விவசாயி சுதீஷ் அளித்த பேட்டி.

யார் இந்த சுதீஷ்?

 

கேரளா மாநிலம், குருவாயூரைப் பூர்வீகமாகக் கொண்டவர், சுதீஷ். 1997-ம் ஆண்டு ஐக்கிய அரபு நாடான ஷார்ஜாவுக்கு இடம் பெயர்ந்துவிட்டார். பொறியாளராக அங்கு சென்றாலும், சென்றது முதல் விவசாயப் பணிகளில் ஆர்வமாக இருந்திருக்கிறார். அவ்வாறு விவசாயத்தை வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கும் இவர், லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறார். கடந்த 10 வருடங்களாக வெற்றிகரமாக விவசாயம் செய்து வரும் இவர், கடந்த ஆண்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்து அசத்தியிருக்கிறார்.

பாலைவன மண் கொண்ட ஷார்ஜாவில் பச்சைப் பசேல் என நெற்கதிர்களை விளையை வைத்திருக்கிறார் சுதீஷ். இதை நினைத்துப் பார்க்கும்போது சுலபமாகத்தான் தெரியும். ஆனால் செய்து காட்டுவது மிகவும் கடினம். தான் பொறியாளராக வேலைக்குச் சென்றாலும், தன்னுடைய ஆர்வம் காரணமாகத்தான் இயற்கை விவசாயத்துக்கு மாறியுள்ளார். அதைத் தொடர் முயற்சிகளால் முழுமையாகச் சாத்தியப்படுத்தியுள்ளார். இயற்கை விவசாயம் செய்து கொண்டே, தன்னுடைய வீட்டுக்குத் தேவையான காய்கறிகளையும் தொடர்ந்து உற்பத்தி செய்துகொண்டிருக்கிறார். தனது தோட்டத்தில் வெண்டை, நாட்டுத்தக்காளி, கீரைகள் எனப் பலவற்றையும் உற்பத்தி செய்து வருகிறார் இவர். நண்பர்களுக்கும் தோட்டம் அமைத்துக் கொடுத்து, அவர்களுக்குப் பயிற்சியும் கொடுத்து வருகிறார். இதனால் ஐக்கிய அரபு நாடுகளில் விவசாயம் தொடர்பான விஷயங்களில் இவரது பெயர் அதிகமாக உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

 

கின்னஸ் சாதனை!

 

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 4,916 கறிவேப்பிலை நாற்றுகளை சார்ஜா இந்தியப் பள்ளி (Sharjah Indian School) மாணவர்களுக்கு அளித்து சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முன்னர் 2,083 கன்றுகள் விற்பனை செய்ததே சாதனையாக இருந்தது. அதையும் செய்தது இவர்தான். இவர் கறிவேப்பிலையைக் கொடுக்க முடிவெடுத்ததற்குக் காரணம், ஐக்கிய அரபு நாடுகளில் அதிக பூச்சிக் கொல்லி காரணமாகக் கறிவேப்பிலை தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் கறிவேப்பிலையை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இயற்கை முறையில் உற்பத்தி செய்ய கன்றுகளைக் கொடுத்திருக்கிறார். 2018-ம் ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளைத் தோற்றுவித்த சயீது என்பவரின் நினைவு தினமாகக் கொண்டாடப்பட்டது. அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாகவும் சுதீஷ் இந்த கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டிருக்கிறார் இவர் .

கின்னஸ் சாதனைகளுக்கு முன்னர், ஐந்துமுறை லிம்கா புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சுதீஷ், 2012-ம் ஆண்டு தன் வீட்டுத் தோட்டத்தில் 41.91 செ.மீ நீளமான வெண்டைக்காய் விளைய வைத்து சாதனை செய்திருந்தார். இதுதவிர, சுதீஷ் 3.81 செ.மீ சிறிய அளவிலான வெண்டைக்காயும் விளைவித்திருக்கிறார், இந்த இரண்டு சாதனைகளும் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளவற்றில் குறிப்பிடத்தக்கவை.

அவரின் நெல் பயிர் முயற்சிக்கு ஷார்ஜா மின்சாரம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரி முழு மனதோடு ஆதரவு தெரிவித்தார். திட்டமிட்டபடி நெல்லை விளைய வைத்தார். வெற்றியும் கண்டார். அதன் பின்னர் 2016-ம் ஆண்டு ஷார்ஜாவில் உள்ள 3 இந்தியப் பள்ளிகளின் மாணவர்களுக்கு நெல் நடவு மற்றும் அறுவடை பற்றி வகுப்பெடுத்தார். அதன் தொடர்ச்சியாக கிரீன் லைப் ஆர்கானிக் ஃபார்மிங் நிறுவனம் மூலம் இயற்கை விவசாயம் செய்தும் பயிற்சிகள் அளித்தும் வருகிறார் இவர் .

கேரளாவில் நடக்கும் இயற்கை விவசாயம் சார்ந்த நிகழ்வுகளிலும், கருத்தரங்குகளிலும் அடிக்கடி இவரைப் பார்க்கமுடியும். இதுபோக வீட்டுத் தோட்டத் தொழில்நுட்பங்கள், விவசாய சாகுபடி தொழில்நுட்பங்கள் எனப் பல தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து விவசாயிகள் மத்தியில் எடுத்து சொல்லிக் கொண்டு வருகிறார். இதுதவிர ஹைட்ரோஃபோனிக்ஸ், தொட்டிகளில் காய்கறி உற்பத்தி, சொட்டுநீர்ப் பாசனம், அடுக்கு விவசாயம் எனப் பல தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொடுக்கிறார் இவர் .

காய்கறிகள் உற்பத்தி தவிர, மீன் வளர்ப்பிலும் அசத்தி வருகிறார். இதற்காக தனது நிலத்தில் சிறிய அளவிலான பண்ணைக்குட்டையையும் அமைத்துள்ளார். இயற்கை விவசாயத்தை மக்களிடம் அதிகமாகப் பரப்புவதுதான் எனது பணி என நம்பிக்கையோடு பணியாற்றி, இன்று வெற்றியும் பெற்றிருக்கிறார், சுதீஷ்.

2016ல் எடுத்த துபையில் உள்ள அவர் தோட்டத்தின் காணொளியை காண : https://youtu.be/zAtxm6JXEwc

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories