கரும்பு – நிழல்வலைக் கூடத்தில் நாற்றங்கால்
கரும்பு கரணைகள்
சாதாரணமாக கரும்பு நடவின் போது 2 அல்லது 3 பரு உள்ள விதைக் கரணைகள் உபயோகிக்கப்படுகிறது. ஆனால், நவீன செம்மை சாகுபடி தொழில்நுட்பத்தில், ஒரு பரு கரணைகளை பயன்படுத்தி நிழல்வலைக் கூட நாற்றங்கால் அமைக்கப்படுகிறது.
கரணைகள் தெரிவுசெய்யப்பட்டு தேங்காய் நார்க் கழிவு உதவியோடு இதற்கென உள்ள பிளாஸ்டிக் ட்ரேயில் வளர்க்கப்படுகின்றன. இவ்வாறு நாற்றங்கால் அமைப்பதன் மூலம் அதிக அளவு முளைப்புத் திறனை குறைந்த நாள்களிலேயே அடைய முடியும்.
சாதாரண முறையில் நிலத்தில் வளர்க்கப்படும் கரும்பு கரணைகளில் 2 மாதத்தில் ஏற்படும் வளர்ச்சி இம்முறையில் ஒரு மாதத்தில் பெறப்படுகிறது.
நாற்றுகள் நடவு செய்தல்
நாற்றுகளை 25 முதல் 30 நாள்களுக்குள் நடவேண்டும். பார்கள் 4 அடி இடைவெளியில் அமைக்கப்பட வேண்டும். ஒரு ஏக்கர் நடவு செய்ய 5,450 நாற்றுகள் தேவைப்படும். 5 அடி இடைவெளி பார் என்றால் 4,350 நாற்றுகள் என கணக்கிட்டு நடவு செய்யவேண்டும். நாற்று நடவுக்கு ஒரு நாள் முன்பு நாற்றுகளுக்கு தண்ணீர் விடுவதை நிறுத்த வேண்டும். நாற்று நடும்போது இயற்கை உரம் அல்லது டிஏபி இடவேண்டும்.
உரம் இடுதல்
ஒவ்வொரு நிலத்திலும் அந்த மண்ணிலுள்ள சத்துகளின் அளவை மண்ணாய்வு செய்து அதற்கேற்றவாறு உரம் இடவேண்டும். அல்லது ஒரு ஏக்கருக்கு 110 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 45 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும்
ஆதாரம் : கரும்பு ஆராய்ச்சி நிலையம், சிறுகமணி.