பயறுவகைபயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கி, டிஏபி , தெளிக்கும் முறை:
தமிழகத்தை பொறுத்தவரை துவரை, பாசி பயறு, மொச்சை போன்ற பயறு வகைகள் கூடுதல் சாகுபடியாகவோ, அல்லது ஊடு பயிராகவோ பயிரிடப்படுகிறது. பல இடங்களில் மானாவாரி நிலங்களில் பயிரிடப்படுகின்றன. இதனால் உரிய சத்துக்கள் இன்றி பயறு வகைகளின் மகசூல் குறைவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது
.எனவே பயறு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்காத நிலையும் இருந்து வருகிறது. இந்த நிலையில் பயறுகளுக்கு பேரூட்டூச்சத்துக்களையும், நுண்ணூட்டச்சத்துக்களையும் வழங்கவல்ல பல்ஸ் ஒண்டர் அல்லது பயறு ஒண்டர் என்ற கலவையை கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் பயிர் வினையியல் துறை கண்டுபிடித்துள்ளது.
நுண்ணூட்ட சத்தாக பயன்படுத்த பயறு ஒண்டர் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ தேவை. இதை 200 லிட்டர் நீரில் கலந்து ஒட்டும் திரவம் சேர்த்து பூக்கும் தருணத்தில் தெளித்தால், செடிகள் வறட்சியைத் தாங்கி அதிகளவில் காய்த்து 20-25 சதவிகிதம் வரையில் கூடுதல் மகசூலைக் கொடுக்கும்.
பயறு வகைகளில் 20 முதல் 24 சதவீத புரதச்சத்து உள்ளது. இச்சத்து உற்பத்தியாவதற்கு மணிச்சத்து அவசியம்.மண்ணில் இருந்து கிடைப்பதை விட, தாவரங்களின் இலை வழியாக
மணிச்சத்து எளிதாக கிடைக்கிறது. பூக்கும் பருவத்துக்குப் பிறகு பயிர்களின் வேர்களில் ஊட்டச்சத்து எடுக்கும் தன்மை குறைந்து விடும். பயிர்கள் சத்துக்களை எடுத்துக் கொள்ள
டிஏபி கரைசல் தெளிக்க வேண்டும்.
டிஏபி கரைசல் தெளிக்கும் முறை:
பயறு வகை பயிர்களுக்கு பூக்கும் ஒரு வாரத்திற்கு முன்பும், பூத்த ஒரு வாரத்திற்கு பின்பும் இரு முறை தெளிக்க வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 2 கிலோ டிஏபி யை. 200 லிட்டர் தண்ணீரில் முதல் நாளே பிளாஸ்டிக் வாளியில் ஊறவைக்க வேண்டும் அடுத்த நாள் தெளிந்த நீரை எடுத்து பயிறுக்கு காலை அல்லது மாலை வேளையில் தெளிக்க வேண்டும். மறுநாள் வாளியின் மேல் தெளிந்திருக்கும் நீரை வடிகட்டி எடுக்க வேண்டும் .இந்த கரைசலை கைத்தெளிப்பான் மூலம் இலைகளில் நன்கு படும்படி மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும் . இவ்வாறு 2 முறை தெளிக்க வேண்டும் .
பூச்சி மருத்துகளை சேர்த்து தெளிக்கக் கூடாது
ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்