நெற்பயிரைத் தாக்கும் நோய்கள்! 

நெற்பயிரைத் தாக்கும் நோய்கள்!

நெற்பயிரைத் தாக்கும் நோய்கள்! 

லகளவில் இந்தியா, நெல் சாகுபடிப் பரப்பில் முதலிடத்திலும், உற்பத்தியில் இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. இந்திய மக்கள் 65% பேர் அரிசியை முதன்மை உணவாகக் கொண்டுள்ளனர். மக்கள் தொகை கூடிக்காண்டே இருப்பதால், உற்பத்தியையும் கூட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நவீனத் தொழில் நுட்பங்கள் இருந்தபோதும், உயிருள்ள, உயிரற்ற காரணிகள் மூலம் கடுமையான மகசூல் இழப்பு, அதாவது, 30-40% ஏற்படுகிறது. இவற்றில் நோய்களின் பங்கு மிகுதி. எனவே, நெற்பயிர் சாகுபடியில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை உத்திகளைக் கையாண்டு தரமான உற்பத்தியை அடைய வேண்டும்.

குலைநோய்

இந்நோய் மேக்னபோர்தி கிரிசே என்னும் பூசணத்தால் உருவாகிறது. இந்நோய், நவம்பர் முதல் பிப்ரவரி வரை மிகுதியான சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் காலத்தில் பகலில் வெப்பமும், இரவில் குளிரும் கூடுதலாக உள்ளது. இந்த நிலை பூசணம் வளர்வதற்கு ஏதுவாக உள்ளதால் நோயின் தாக்கம் மிகுந்திருக்கும். இந்நோய், இலை, தண்டு, கழுத்து, நெல் மணிகள் என அனைத்துப் பகுதிகளையும் தாக்குகிறது. இலைகளின் மேல், செம்பழுப்பு நிறத்திலிருந்து சாம்பல்நிற மையம் மற்றும் காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண்வடிவப் புள்ளிகள் காணப்படும். நோய் தீவிரமானால் பயிர்கள் எரிந்ததைப் போல் தெரியும். கழுத்து மற்றும் கணுப்பகுதியில் சாம்பல் நிறம் முதல் பழுப்புப் புள்ளிகள் வரையில் தோன்றிக் கறுப்பாக மாறும். இதனால் திசுக்கள் வலுவிழந்து விடும் சூழலில், வெளிவரும் கதிர்கள் உடைந்து கீழ்நோக்கித் தொங்கும். இதற்குக் கணுக்குலை நோய் என்று பெயர்.

குலைநோயைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு, 200 கிராம் டிரைசைக்ளோசெல் அல்லது 200 மில்லி எடிபன்பாஸ் அல்லது 200 மில்லி மெட்டாமினோஸ்ட்ரோபின் அல்லது 500 கிராம் மேங்கோசெப் மருந்தைத் தெளிக்க வேண்டும்.   

இலைப்புள்ளி நோய்

இந்நோயானது ஹெல்மிந்தோஸ்போரியம் ஒரைசே என்னும் பூசணத்தால் ஏற்படுகிறது. இதனால், இந்தியாவில் 1942-43 ஆம் ஆண்டில் பெங்கால் பெமைன் என்னும் வங்காளப் பஞ்சம் ஏற்பட்டது. இது பயிரின் அனைத்து வயதிலும், அனைத்துப் பகுதிகளையும் தாக்கிச் சேதத்தை ஏற்படுத்தும். இலையில் வட்ட வடிவத்தில் அடர் பழுப்பு அல்லது கறுப்பு நிறத்தில் தோன்றும். நோய் தீவிரமானால் வயல் காய்ந்ததைப் போலத் தோற்றமளிக்கும். 50% மகசூல் பாதிப்பு உண்டாகும்.

இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 200 மில்லி புரோபிகோனசோல் அல்லது 500 கிராம் மேங்கோசெப் மருந்தைத் தெளிக்க வேண்டும்.  

இலையுறைக் கருகல் நோய்

இது, ரைசக்டோனியா  சொலானி என்னும் பூசணத்தால் ஏற்படுகிறது. பயிர் துளிர்க்கும் போது தீவிரமாகத் தாக்கும். நீருக்கு அருகிலுள்ள இலையுறைகளில் பச்சை கலந்த பழுப்பில்  நீள்வட்டப் புள்ளிகள் தோன்றி, ஒன்றாக இணைந்து மேல்நோக்கிப் பரவி இலையுறை முழுவதையும் காயச் செய்யும். இலையை மெதுவாக இழுத்தாலும் முழுவதும் கையோடு வந்து விடும். நோய் தாக்கிய பயிர் நன்கு வளராமல் போவதால் மிகுந்த மகசூல் இழப்பு    ஏற்படும். இது மண் மற்றும் காற்று மூலம் வளமான மற்ற பயிருக்கும் பரவும்.

இலையுறைக் கருகல் நோயைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு, 200 மில்லி ஹெக்சகோனசோல் அல்லது 200 கிராம் கார்பண்டசிம் அல்லது 400 மில்லி வேலிடாமைசினைத் தெளிக்க வேண்டும்.  

 

இலையுறை அழுகல் நொய்

இந்நோயானது சாரோகிளோடியம் ஒரைசே என்னும் பூசணத்தால் ஏற்படுகிறது. நோயின் தாக்குதல் கதிர் வெளிவரும் தருணத்தில் கதிரைச் சுற்றியிருக்கும் இலையுறையின் அடியில் கருஞ்சிவப்பாக ஒழுங்கற்ற புள்ளிகள் தோன்றும். கதிர்கள் வருவதற்கு முன் தாக்கினால் கதிர்கள் வெளியே வராது. சில நேரங்களில் பாதிக் கதிர் வெளியேயும், பாதிக் கதிர் இலையுறைக்குள்ளும் இருக்கும். மேலும், நெல்மணிகள் கறுத்தும் பதராகவும் இருக்கும்.

இலையுறை அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு, 200 கிராம் குளோரோதலோனில் அல்லது 500 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு மருந்தைத் தெளிக்க வேண்டும். 

நெற்பழ நோய்

இந்நோய் யூஸ்டிலாஜினாய்டியா வைரன்ஸ் என்னும் பூசணத்தால் உருவாகிறது. குறைந்த வெப்ப நிலையும், மிகுதியான ஈரப்பதமும் இந்நோய்க்குக் காரணமாகும். பயிர்கள் பூக்கும் போது இதன் தாக்கம் தீவிரமாக இருக்கும். நோயியின் அறிகுறி பூத்த பின்பே தெரியும். இப்பூசணம் சூலகத்தைத் தாக்கி நெல் மணிகளில் மஞ்சள் அல்லது பச்சைநிற வெல்வெட்  உருண்டைகளாக மாறிவிடும். இந்நோய் காற்று மற்றும் நெல்மணிகள் மூலம் பரவுகிறது.

நெற்பழ நோயைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு, 200 மில்லி ஹெக்சகோனசோல் அல்லது 500 கிராம் மேங்கோசெப் மருந்தைத் தெளிக்க வேண்டும்.

பாக்டீரியா இலைக்கருகல் நோய்

இது, சேந்தோமோனாஸ் ஆக்சனபோடிஸ் பி.வி.ஒரைசே என்னும் பாக்டீரியாவால் உருவாகிறது. இந்நோய் இரண்டு நிலையில் பயிரைத் தாக்குகிறது. முதல் நிலையில், பயிர் குட்டையாகவும், தூர் கட்டத் தயாராகும் போது தாக்கும். இலைகளின் நுனிப்பகுதி சுருண்டு மஞ்சளாக மாறும். இறுதியில் தூர்கள் முழுமையாகக் காய்ந்து விடும். இதனால், எரிந்ததைப் போல வயல் காட்சியளிக்கும். இதற்கு கிரிசெக் வாடல் என்று பெயர்.

மற்றொரு நிலை இலைக்கருகல் அறிகுறியாகும். இலையின் ஒரு பகுதியில் அல்லது இரண்டு பக்கமும் ஓரத்தில் மஞ்சள் மற்றும் சாம்பல் நிறமாக மாறிவிடும். நோய் தீவிரமானால் முழுமையாகக் காய்ந்து விடும். நிழலுள்ள இடத்தில் தொடங்கி வயல் முழுதும் பரவும்.

பாக்டீரிய இலைக்கருகல் நோயைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு, 120 கிராம் ஸ்ரெப்டோமைசின் மற்றும் 500 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் பிளீச்சிங் பௌடர் என்னுமளவில் கலந்து தெளிக்க வேண்டும். 

துங்ரோ நச்சுயிரி நோய்

இது வைரஸ் என்னும் நச்சுயிரியால் ஏற்படுகிறது. இதனால் தாக்கப்பட்ட பயிரானது வளர்ச்சிக் குன்றியிருக்கும். இலைகள் மஞ்சள் முதல் ஆரஞ்சு நிறமாக மாறிக் காணப்படும். நுனியிலைகள் வெளிப்பக்கமாகச் சுருண்டும், இளம் இலைகள் உருமாறியும் இருக்கும். நோய் தீவிரமானால் பயிர்கள் தூர்ப் பிடித்தல் குறைந்து குட்டையாகவும், கதிர்களில் குறைந்த நெல் மணிகளுடனும் காணப்படும். பச்சைத் தத்துப்பூச்சியின் மூலம் இந்நோய் பரவுகிறது.

துங்ரோ நச்சுயிரி நோயைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு, 200 எஸ்.எல். 50 மில்லி அல்லது பிப்ரோனில் 5% எஸ்.சி. ஒரு லிட்டர் மருந்தைத் தெளிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை

நோய் தாக்காத வயலிலிருந்து எடுக்கப்பட்ட தரமான விதைகளை விதைத்தல். நோய் எதிர்ப்புத் திறனுள்ள இரகங்களைச் சாகுபடி செய்தல். பட்டம் விட்டுப் பயிர் செய்தல். பயிர்ச் சுழற்சி முறைகளைக் கடைப்பிடித்தல். அதாவது, நெல்லுக்குப் பிறகு, பயறு அல்லது  எண்ணெய் வித்துப் பயிர்களைச் சாகுபடி செய்தல். வரப்புகளையும் வயலையும் களைகளில்லாமல் பராமரித்தல். ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் அல்லது 10 மில்லி சூடோமோனாஸ் புளோரசன்ஸ் அல்லது 2 கிராம் கார்பண்டசிம் என்னுமளவில் கலந்து விதைநேர்த்தி செய்தல்.

நடவு வயலில் பசுந்தாள், பசுந்தழை உரப்பயிர்களைப் பயிரிட்டுப் பூக்கும் போதுமடக்கி உழுதல். நன்கு மட்கிய 25 கிலோ தொழுவுரம் ஒரு கிலோ அல்லது 400 மில்லி சூடோமோனாஸ் புளோரோசன்ஸ் அல்லது ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றைக் கலந்து தூவுதல். ஒரு ஏக்கருக்கான தொழுவுரத்துடன் 60 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 10 கிலோ சோடியம் ஹைபோகுளோரைடு என்னும் பிளீச்சிங் பௌடர் ஆகியவற்றைக் கலந்து இட்டு, மண்மூலம் பரவும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தலாம்.

நடவு நாற்றுகளின் வேர்களை, ஒரு கிலோ அல்லது 300 மில்லி சூடோமோனாஸ் புளோரன்சை 50 லிட்டர் நீரில் கலந்த கலவையில் அரைமணி நேரம் ஊறவைத்து நட வேண்டும். பயிர்களை நெருக்கமாக நடாமல் போதிய இடைவெளி விட்டு நட்டால், நோய்க் காரணிகள் உருவாகாத சூழல் ஏற்படும். தழைச்சத்து உரத்தை 3 அல்லது 4 முறையாக பிரித்து இட்டால் நோய்த்தாக்கம் குறையும். நடவு செய்த 30 நாட்களுக்குப் பிறகு 25 கிலோ தொழுவுரத்துடன் ஒரு கிலோ சூடோமோனாசைக் கலந்து தூவ வேண்டும்.

ஐந்து சத வேப்பம் கொட்டைச்சாறு அல்லது 3 சத வேப்ப எண்ணெய்க் கரைசல் அல்லது 10 சத வேலிக்கருவேல் இலைச்சாறு அல்லது 20 சத சாணக்கரைசலை, நோய் தோன்றும் போது தெளிக்க வேண்டும். நோயுற்ற பூக்கள் மற்றும் பயிரின் பாகங்களை அகற்றி அழிக்க வேண்டும். நோயுள்ள வயலில் இருந்து மற்ற வயலுக்கு நீர் பாய்ச்சுவதைத் தவிர்க்க வேண்டும். நோய் தீவிரமானால் இரசாயனப் பூசணக் கொல்லிகளைப் பரிந்துரைப்படி அளவாகப் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பு: ஒரே பூசணக் கொல்லியைத் தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது. பரிந்துரை செய்யப்பட்டுள்ள பூசணக் கொல்லிகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்தி நோய்க் காரணிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இதுவரை கூறியுள்ள நோய்த் தடுப்பு உத்திகளைச் சாகுபடியில் பயன்படுத்தி, மண்ணையும் மக்களையும் பாதுகாப்போம். மேலும் விவரங்களுக்கு: 04182-201525, 293484.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories