மாவுப்பூச்சியின் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் எளிய வழிமுறைகள்..

மாவுப்பூச்சி இந்த மாவுப் பூச்சியானது பப்பாளி, மரவள்ளி, கொய்யா, மல்பெரி, பருத்தி, கத்தரி, வெண்டை, செம்பருத்தி ஆகிய செடிகளை அதிகளவு தாக்கி பெரும் சேதத்தை விளைவிக்கின்றன.

இந்த மாவுப்பூச்சியின் தாக்குதலால் பயிர்கள் 30 முதல் 40 சதவீதம் வரை மகசூல் இழக்க வாய்ப்புள்ளது. வறட்சியும், வெப்பமும் அதிகமாக உள்ள கோடை காலங்களில் மாவுப்பூச்சியின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படும்.

மாவுப்பூச்சியின் குறுகிய வளர்ச்சிக் காலமும், பூச்சியின் அதிக இனப்பெருக்கத் திறனும், இப் பூச்சியின் மேல் இருக்கும் மாவு போன்ற பாதுகாப்பு கவசத்தால் பூச்சிக்கொல்லிகள் ஊடுருவிச் செல்வதைத் தடுக்கும் திறனும் உள்ளதால் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தும் இப் பூச்சியைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

மாவுப்பூச்சியின் அறிகுறிகள்

மாவுப்பூச்சி தாக்கப்பட்ட ஆரம்ப நிலையில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். இலைகள் வளைந்தும், நெளிந்தும், குறுத்தில் இலைகள் சிறுத்து திருகிக் கொண்டிருக்கும். இலையின் அடிப்பகுதி, குருத்து, கிளைகள், தண்டுப்பகுதிகளில் வெள்ளையாக அடை போல மாவுப்பூச்சிகள் படர்ந்திருக்கும்.

சிவப்பு, கருப்பு எறும்புகளின் நடமாட்டம் தென்படும். பளபளப்பான ஒட்டும் தன்மை கொண்ட தேன் போன்ற கழிவுகளும் அதன் மேல் கரும்பூசண வளர்ச்சியும் காணப்படும்.இப்பூச்சியின் தாக்குதல் அதிகளவில் இருக்கும்போது இலைகள் வாடி கருகிவிடும்.

மாவுப்பூச்சியை கட்டுப்படுத்தும் முறைகள் களைகளை அகற்றி வயல்களை சுத்தமாகப் பராமரிக்கவும். மாவுப்பூச்சிகள் தாக்கப்பட்ட செடிகள், களைச் செடிகளைப் பூச்சிகள் அதிகம் பரவாமல் பிடுங்கி அழிக்க வேண்டும். ஆரம்ப காலத்திலிருந்தே செடிகளில் மாவுப்பூச்சிகள், எறும்புகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும். தாக்குதல் குறைவாக இருக்கும்போதே பயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும்.

ஒட்டுண்ணிகள், இரைவிழுங்கிகள் அதிகம் இருக்கும்போது, பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும். சேதம் குறைவாக இருக்கும் போது இயற்கைப் பூச்சிக்கொல்லிகளை தாக்கப்பட்ட செடிகள், அதனைச் சுற்றியுள்ள பகுதியில் தெளிக்க வேண்டும்.

வேப்ப எண்ணெய் – 2 சதவீதம் கரைசல், வேப்பங்கொட்டை பருப்புச்சாறு – 5 சதவீதம் கரைசல், மீன் எண்ணெய் சோப்பு – ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம், சேதம் அதிகமாக இருக்கும் போது ரசாயனப் பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்கவும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories