வாழையில் நோய் மேலாண்மை

வாழையில் நோய் மேலாண்மை

வாழையில் நோய் மேலாண்மை
இலைப் புள்ளி நோய் அறிகுறிகள்
எர்வினியா கிழங்கு அழுகல் நோய் அறிகுறிகள்
முடிக்கொத்து நோய்
மடல் தேமல் நோய்
வெள்ளி தேமல் நோய்

வாழையில் நோய் மேலாண்மை

வாழையை சிகாடோக்கா என்ற இலைப்புள்ளி நோய், எர்வினியா கிழங்கு அழுகல் நோய், முடிக்கொத்து நோய், மடல் தேமல் நோய், இலைக் கருங்கோட்டு நச்சுயிரி நோய் உள்ளிட்ட நோய்கள் அதிக அளவு தாக்குகிறது.

இலைப் புள்ளி நோய் அறிகுறிகள்

வாழை இலைகளில் முதலில் மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றும். பின்னர், இலை பழுப்பு நிறக்கோடுகளாக மாறி நடுவில் சாம்பல் நிறமாக இருக்கும். பாதிக்கப்பட்ட இலைகள் நுனியிலிருந்து கருகி முழுவதும் காய்ந்துவிடும். காய்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு பிஞ்சிலேயே பழுத்து வீணாகிவிடும்.

(i) தடுப்பு முறைகள்

பாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி எரித்து விட வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் பூசணக் கொல்லிகளான கார்பன்டாசிம் ஒரு கிராம் அல்லது மாங்கோ செப் 2 கிராம் அல்லது புரோப்பிகோனசோல் ஒரு மில்லி மற்றும் ஒட்டும் திரவங்களான சான்டோவிட் அல்லது டீப்பால் போன்றவற்றை கலந்து தெளிக்க வேண்டும்.

எர்வினியா கிழங்கு அழுகல் நோய் அறிகுறிகள்

வாழையின் நடுக்குருத்து அழுகி, வளர்ச்சி குன்றி, அதற்கு சற்று முன்னர் தோன்றிய இலைத் தண்டினுள் சொருகியது போல காணப்படும். கிழங்கானது அழுகி பார்மலின் நாற்றத்தைப் போன்று தோற்றுவிக்கும். மகத்தை லேசாக காய்ந்து தண்டுப் பகுதி கிழங்கிலிருந்து பிரிந்து கீழேவிழும். கிழங்கு மட்டுமே மண்ணிலேயே இருக்கும்.

(i) தடுப்பு முறைகள்

நோய் தாக்கப்படாத தோட்டங்களிலிருந்து வாழைக்கன்றைத் தேர்வு செய்ய வேண்டும். கிழங்கை நடுவதற்கு முன் 0.1 சதம் எமிசான் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் என்ற அளவில் கரைசலை நனைத்து பின்னர் நடவு செய்யலாம். வெப்பக்காலத்தில் நன்கு நீர் பாய்ச்சியும், குளிர் காலத்தில் நீர் தேங்காதவாறும் செய்யவும், நோய் தாக்கிய வாழைக்கு 0.1 எமிசான் கரைசலை ஒன்று முதல் 2 லிட்டர் வரை மண்ணில் ஊற்ற வேண்டும். மக்கிய தொழு உரம், வேப்பம் பிண்ணாக்கு போன்றவற்றை மண்ணில் இட வேண்டும். மேலும், ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் பிளீச்சிங் பவுடர் என்ற விகிதத்தில் கலந்து 1-2 லிட்டர் வரை ஒரு வாழைக்குக் கொடுக்கலாம்.

முடிக்கொத்து நோய்

இந்த நோய் வைரஸ்களால் ஏற்படுத்தப்படுகிறது. இந்த நச்சுயிரி நோயை அசுவினிகள் பரப்புகிறது. நோய் தாக்கப்பட்ட மரங்களின் இலைகள் சிறுத்து, மஞ்சள், கரும்பச்சை கோடுகள் மற்றும் புள்ளிகளுடன் அடுக்கடுக்காக வெளிவரும்.

(i) தடுப்பு முறைகள்

தாக்கப்பட்ட மரங்களை அழித்து அப்புறப்படுத்த வேண்டும். மீதைல் டெமட்டான், ரால்போமிடான் அல்லது மோனோகுரோட்டோபாஸ் பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி என்ற விகிதத்தில் கலந்து 2 மாத இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும். மேலும், மோனோகுரோட்டோபாஸ் ஒரு மில்லி மருந்தை 4 மில்லி தண்ணீரில் கலந்து 45 நாள் இடைவெளியில் மூன்றாவது மாதத்திலிருந்து ஊசி மூலம் தண்டுப் பாகத்தில் செலுத்த வேண்டும்.

மடல் தேமல் நோய்

இந்த நோய் நச்சுயிரி நோய். அசுவினி, மாவுப்பூச்சி போன்ற சாறு உறிஞ்சுப் பூச்சிகளால் இந்த நோய் பரவும். நோய் தாக்கப்பட்ட மரத்தின் தண்டுப் பகுதியில் செந்நிற கோடுகள் காணப்படும். ஆண் பூ மடல்களில் நீளவாக்கில் கரும் திட்டுகள் காணப்படும். காய்களின் மீது கரும்பச்சை நிற தேமல் தோற்றமும் காணப்படுவதுடன் தார்களின் வளர்ச்சி குன்றி மகசூல் பாதிக்கப்படும்.

(i) தடுப்பு முறைகள்

நோய் தாக்கிய மரங்களிலிருந்து கன்றுகளை நட பயன்படுத்தக் கூடாது. நோய் பரப்பும் பூச்சிகளை அழிக்க மோனோகுரோட்டோபாஸ் அல்லது மீதைல் டெமட்டான் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை மாதம் ஒருமுறை தெளிக்கவும்.

வாழை இலைக் கருங்கோட்டு நச்சுயிரி நோய்: இலைகளில் மஞ்சள் நிறக் கோடுகள் நீள வாக்கில் தோன்றும். பின்னர், இந்தக் கோடுகள் கருப்பாக மாறும். பழங்களின் எண்ணிக்கை மற்றும் அளவு குறையும். நோய் தாக்கப்பட்ட கிழங்கு மற்றும் மாவுப்பூச்சிகளால் இந்த நோய் பரவுகிறது. பூவண் ரகங்களை அதிகம் தாக்குகிறது.

வெள்ளி தேமல் நோய்

இந்த நோய் கண் வடிவத்திலோ அல்லது வடிவமற்றோ வெளிறிய பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் இலைகளின் மேற்பரப்பில் தோன்றும் இந்த நோய் அசுவினிகள், நோய் தாக்கப்பட்ட கிழங்குகள் மூலமும் பரவுகிறது.

நோய் பரப்பும் மாவுப் பூச்சிகள், அசுவினிகளைக் கட்டுப்படுத்த ஊடுருவிப் பாயும் பூச்சி மருந்து ஏதேனும் ஒன்றை ஒரு லிட்டர் நீரில் ஒரு மில்லி என்ற வீதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். நோய் தாக்கிய கிழங்குளை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும், நோய் தாக்கப்படாத தோட்டத்திலிருந்து விதைக் கிழங்குகளைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் வாழையில் நோயைத் தடுத்து நல்ல மகசூலைப் பெறலாம்.

ஆதாரம்: தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சி

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories