வாழையைத் தாக்கும் நோய்கள்!

வாழையைத் தாக்கும் நோய்கள்!

 

வாழையைத் தாக்கும் நோய்கள்!

பனாமா வாடல் நோய்

இதனால் தாக்கப்பட்ட மரத்தின் அடியிலைகளில், குறிப்பாக, இலையின் ஓரம் மஞ்சளாக மாறி வாடியிருக்கும். பின்பு மஞ்சள் நிறம் மையப்பகுதியை நோக்கிப் பரவ, ஓரம் காய்ந்து விடும். தீவிரத் தாக்குதலில், உச்சியிலைகள் ஈட்டியைப் போல இருக்கும். அடியிலைகள் காம்புடன் ஒடிந்து தொங்கும். தண்டைக் குறுக்காக வெட்டிப் பார்த்தால், உட்புறத் திசுக்கள் செம்பழுப்பு அல்லது கருமையாக மாறியிருக்கும். இந்நோய், கன்றுகள், பாசன நீர், மண் மூலம் பரவும். வேர் மூலம் பூஞ்சை உள்ளே சென்று தாக்கும். மேலும், அமில மற்றும் வண்டல் மண்ணில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

மேலாண்மை

இரசாயன உரங்களைத் தவிர்த்து விட்டு, எக்டருக்கு, தொழுவுரம் மற்றும் 250 கிலோ வேப்பம் புண்ணாக்கை இட வேண்டும். இந்நோய்க்கு எளிதில் உள்ளாகும் இரஸ்தாளி, மொந்தன், கற்பூரவள்ளி போன்ற வாழைகளைத் தொடர்ந்து வளர்க்கக் கூடாது. பூவன், நேந்திரனைப் பயிரிடலாம். தொடர்ந்து வாழையைப் பயிரிடாமல், நெல், கரும்பைப் பயிரிட வேண்டும். நோயுற்ற கன்றுகளை அகற்றி 1-2 கிலோ சுண்ணாம்பை இட வேண்டும்.

மழைக்காலத்தில் நல்ல வடிகால் இருக்க வேண்டும். நோயுற்ற கன்று வழியாக மற்ற கன்றுகளுக்கு நீர் செல்லக் கூடாது. 60 கிராம் சூடோமோனாஸ் புளுரோசன்சை நிரப்பிய குப்பியை, கிழங்கில் 10 செ.மீ. ஆழத்தில் துளையிட்டு அதற்குள் இட வேண்டும். நடவின் போதும், 3, 5, 7 மாதங்களிலும் மரத்துக்கு 25 கிராம் வீதம் டிரைக்கோடெர்மா விரிடியை இட வேண்டும். மரம் ஒன்றுக்கு 50 மில்லி கார்பன்டாசிம் குப்பி அல்லது 2% மருந்தை ஊசி மூலம் தண்டில், 2, 4, 6 ஆகிய மாதங்களில் செலுத்த வேண்டும்.

எர்வினியா அழுகல் நோய்

இது பாக்டீரியா மூலம் ஏற்படுகிறது. இளம் கன்றுகளின் வேரைத் தாக்கி அழுகலையும் துர்நாற்றத்தையும் ஏற்படுத்தும். இந்நோயால் உச்சியிலைகள் திடீரெனக் காய்ந்து விடும். நோயின் தொடக்கத்தில் கரும்பழுப்பு அல்லது மஞ்சள் பகுதி உட்புறத்தில் இருக்கும். நோய்த்தொற்று மேல் நோக்கிப் பரவும் போது, கிழங்குப் பகுதி துர்நாற்றத்தை வெளியேற்றும். ரொபஸ்டா, கிராண்ட் நைன் போன்றவை இந்நோய்க்கு மிகுதியாக உள்ளாகும்.

நோயானது, மண், கிழங்கின் காயங்கள், நீர் மூலம் பரவுகிறது. சூடான பகலும், குளிர்ந்த இரவும் நோய்த்தொற்றைத் தீவிரப்படுத்தும்.

மேலாண்மை

நோயற்ற கன்றுகளை நட வேண்டும். நல்ல வடிகால் மற்றும் மண் சீரமைப்பால் நோயைக் கட்டுப்படுத்தலாம். அறுவடைக்குப் பின் நிலத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். மழைக்காலத்தில் கன்றுகளை நடக்கூடாது. நடவின் போதும், மூன்றாம் மாதமும் 2% பிளிச்சிங் பௌடர் கரைசலை ஊற்ற வேண்டும். 0.1% எமிசான் 6, அல்லது 10% பிளிச்சிங் பௌடர் கரைசலை மரத்துக்கு ஒரு லிட்டர் வீதம் ஊற்றலாம்.

இலைப்புள்ளி நோய்

தொடக்கத்தில் இலையில் தோன்றும் சிறு வெளிர் மஞ்சள் புள்ளிகள், விரிந்து நீளமாகப் பெரியளவில் பழுப்புப் புள்ளியாக மாறும். புள்ளியின் உட்பகுதியில் வெளிர் சாம்பல் நிறமும், வெளிப்பகுதியில் மஞ்சள் வளையங்களும் தோன்றும். இப்புள்ளிகள் நாளடைவில் ஒன்றாக, இலை காய்ந்து விடும். மிக விரைவில் இலைகள் காய்தல் மற்றும் இலை உதிர்தல் நோயின் முக்கிய அறிகுறியாகும். குலை தள்ளும் சமயத்தில் 15-18 இலைகள் இருக்க வேண்டும். ஆனால், இந்த இலைப்புள்ளி நோயால் 15 க்கும் குறைவான இலைகளே இருக்கும். இதனால் குலை சிறுத்தும், காய்கள் கோணலாகவும் இருக்கும்.

இந்நோய், காற்று, நீர், நோய் தாக்கி உலர்ந்த இலையின் மூலம் பரவும். அடர் நடவு, நிழல், வடிகால் வசதி குறைந்த இடத்தில் இதன் தாக்கம் மிகுதியாக இருக்கும்.

 

மேலாண்மை

நோயுற்ற இலைகளை அகற்றி அழிக்க வேண்டும். இடைக் கன்றுகள் மற்றும் களைகளை அகற்றி வயலைச் சுத்தமாக வைக்க வேண்டும். நெருக்கமாக மற்றும் நிழலில் பயிரிடக் கூடாது. நோய் அறிகுறி தெரிந்ததும் கீழ்க்கண்ட மருந்துகளை 15-20 நாட்கள் இடைவெளியில் ஐந்து முறை தெளிக்க வேண்டும்.

முதல் தெளிப்பு:  ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி புரோபிகோனசோல் வீதம் கலந்த கலவையில் ஒட்டும் திரவத்தையும் கலந்து தெளிக்க வேண்டும்.

இரண்டாம் தெளிப்பு: ஒரு லிட்டர் நீருக்கு 2.50 கிராம் மேங்கோசெப் வீதம் கலந்த கலவையில் ஒட்டும் திரவத்தையும் கலந்து தெளிக்க வேண்டும்.

மூன்றாம் தெளிப்பு: ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பண்டசிம் வீதம் கலந்த கலவையில் ஒட்டும் திரவத்தையும் கலந்து தெளிக்க வேண்டும்.

நான்காம் தெளிப்பு: ஒரு லிட்டர் நீருக்கு 0.5 கிராம் காம்பானியன் வீதம் கலந்த கலவையில் ஒட்டும் திரவத்தையும் கலந்து தெளிக்க வேண்டும்.

ஐந்தாம் தெளிப்பு: ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி புரோபிகோனசோல் வீதம் கலந்த கலவையில் ஒட்டும் திரவத்தையும் கலந்து தெளிக்க வேண்டும்.

பழ அழுகல் நோய்

வாழைப்பழத்தின் நுனிப்பகுதியைப் பூசணம் தாக்கும். சிறிய, வட்டக் கரும்புள்ளிகள் தோன்றி, நாளடைவில் புள்ளிகள் பெரிதாகி, பழத்தோலில் முழுமையாகப் பரவிக் கறுப்பாக மாறும். இறுதியில் தார் முழுவதும் பரவிப் பேரிழப்பை உண்டாக்கும். இது, காற்று, பூக்களுக்கு வரும் பூச்சிகள் மூலம் பரவும். மேலும், உயர் வெப்பநிலையும் நோய் பரவக் காரணமாகும்.

மேலாண்மை

நோயுற்ற பழங்களை அகற்றி அழிக்க வேண்டும். தார்களைச் சரியான நேரத்தில் அறுவடை செய்ய வேண்டும். அறுவடைக்கு முன் கார்பன்டசிம் 0.1% அல்லது குளோரோதயானில் 0.2% கரைசலை இரண்டு வார இடைவெளியில் தெளிக்க வேண்டும். அறுவடைக்குப் பின், ஒரு லிட்டர் நீருக்கு 0.1 கிராம் எரியோபங்கின்ஸெல் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 0.4 கிராம் கார்பன்டசிம் வீதம் கலந்த கலவையில் நனைத்துச் சேமிக்கலாம். நோயற்ற தார்களை 7-10 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் கவனமாகச் சேமிக்க வேண்டும்.

முடிக்கொத்து நோய்

நோயின் தொடக்கத்தில் கரும்பச்சைக் கோடுகள் இலையின் மைய நரம்பு மற்றும் தண்டில் தோன்றி இலை நரம்புகளுக்கு இடையேயும் இலை முழுவதும் பரவி வெளிர்ப் பச்சையாக மாறும். புதிய இலைகள் இயல்பை விடக் குறுகலாக இருக்கும். இலை ஓரத்தில் மஞ்சளாக இருக்கும். இலைகள் சிறுத்து அருகருகே தோன்றுவதால் இந்நோய் முடிக்கொத்து நோய் எனப்படுகிறது. கடுமையாக நோயுற்ற வாழையில் தார் வராது. வந்தாலும் சிறுத்தும் ஒழுங்கற்றும் இருக்கும். இது நச்சுயிரி நோயாகும். நோயுற்ற கன்று மற்றும் கறுப்பு அசுவினி மூலம் பரவும்.

மேலாண்மை

நோயுற்ற கன்றுகளை அகற்றி எரித்துவிட வேண்டும். நோயற்ற கன்றுகளை பெர்னொம்லோன் 4 மில்லி கலவையில் நனைத்து நட வேண்டும். 200-400 மி.கி. பெர்னொஸோன் குப்பிகளை இலையின் உள்ளுறையில் செலுத்தி நோயைத் தடுக்கலாம். நட்ட மூன்றாம் மாதத்திலிருந்து 45 நாட்கள் இடைவெளியில் நான்கு முறை நான்கு மில்லி மோனோகுரோட்டோபாசை வாழையில் இட்டுக் கட்டுப்படுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு 04182-201525, 293484.

ப.நாராயணன், வேளாண்மை அறிவியல் நிலையம், கீழ்நெல்லி 604410, திருவண்ணாமலை மாவட்டம்.  

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories