தற்போது பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களில் இலை சுருட்டு புழு தாக்குதல் காணப்படுகிறது. இப்பூச்சிகள் இலையை சுருட்டி அடிப்பகுதியுடன் மடக்கி இணைத்து பின்னி அதற்குள் குடியிருக்கும். இலையின் பச்சையத்தை அரித்து உண்பதால் இலைகள் வன்மையாக மாறிவிடும். இதனால் பயிர் வளர்ச்சி குன்றி மணி பிடிப்பதும் பாதிக்கப்படுகிறது. இந்தப் பூச்சி பயிரின் அனைத்து வளர்ச்சிப் பருவத்திலும் தாக்குகிறது.
பெண் அந்துப்பூச்சிகள் இலைகளின் அடிப்பரப்பில் முட்டைகளை வரிசையாக இடுகின்றன. முட்டைகளில் இருந்து 6-7 நாட்களில் இளம்புழுக்கள் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் வெளிவரும். இது 25-30 நாட்கள் வரை நீடிக்கும். முழு வளர்ச்சி அடைந்த புழு இலைக்குள்ளேயே கூண்டுப்புழுவாக மாறி, 6-8 நாட்களில் தாய் அந்துப் பூச்சிகள் வெளிவரும். 23-35 நாட்களில் அதன் வாழ்க்கைச் சூழல் முடிந்து விடும். ஓராண்டில் 3 – 5 தலைமுறைகள் உருவாகும்.
தாய் அந்துப் பூச்சிகள் 8-10 மி.மீ நீளத்திலும் இறக்கைகளின் மேற்பகுதியில் அலைகள் போன்ற கருமை நிற கோடுகள் காணப்படும். இப்பூச்சிகளால் தழைப் பருவத்தில் 10 சதவீதம் வரை இலைச்சேதமும், பூக்கும் பருவத்தில் 5 சதவீதம் கண்ணாடி இலைச்சேதமும் ஏற்படுகிறது.
இதனை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். வயல்வெளிகளில் காணப்படும் புல், பூண்டுகள் நெல்லுக்கு மாற்றுப் பயிராக இப்பூச்சிகளுக்கு உதவுவதால் அவற்றை அகற்றி வயல்வெளிகளை சுத்தமாக பராமரிக்க வெண்டும்.
தழைச் சத்து உரங்களை மூன்று முறை பிரித்து இடவேண்டும். தாய் அந்துப்பூச்சிகள் வெளிச்சத்தால் ஈர்க்கப்படுவதால் இரவில் விளக்குப் பொறி வைத்து அவற்றை கவர்ந்து அழிக்க வேண்டும்.
பயிர் நடவு செய்த 37, 44 மற்றும் 51 நாட்களில் ஒரு எக்டேருக்கு ஒரு லட்சம் வீதம் டிரைக்கோகிரேம்மா கிலோனிஸ் எனப்படும் முட்டை ஒட்டுண்ணிகளை பயிரின் மீது விட வேண்டும். சுற்றுப்புறத்தில் 5 சதவீத வேப்பங்கொட்டைச்சாறு அல்லது 3 சதவீத வேப்பெண்ணெய் தெளித்து அந்து பூச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.
சேதம் அதிகமாக இருந்தால், ஒரு எக்டேருக்கு 1000 மில்லி அசாடிராக்டின் அல்லது 1000 கிராம் கார்டேப் ஹைட்ரோகுளேரைட் (50 சதவீத எஸ்பி) அல்லது 150 கிராம் குளோரானிட்டிரேனிலிபுரோல் (18.5 சதவீத எஸ்சி) போன்ற நச்சு பூச்சிக்கொல்லிகள் ஏதாவது ஒன்றை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
பேராசிரியர்கள் சாந்தி, ஜெயராஜ்,
பூச்சியியல் துறை
மதுரை விவசாய கல்லுாரி.
98949 39508