பருத்தியைத் தாக்கும் மாவுப் பூச்சிகள்!

பருத்தியைத் தாக்கும் மாவுப் பூச்சிகள்!

லதரப்பட்ட பயிர்களின் சாற்றை உறிஞ்சும் தாக்கும் மாவுப்பூச்சிகள் பஞ்சைப் போல மென்மையாக, நீள்வட்டத்தில் இருக்கும். இவை, கூட்டம் கூட்டமாக இலைகள், தண்டுகள் மற்றும் வேர்களில் இருந்து சாற்றை உறிஞ்சும். இவற்றின் மேல் தோல் மெழுகைப் போல இருப்பதால், பூச்சிக் கொல்லிகள் இவற்றின் உடலுக்குள் ஊடுருவிச் செல்ல முடிவதில்லை. எனவே, இரசாயனப் பூச்சிக்கொல்லிகளாலும் மாவுப்பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.

உணவுப் பயிர்கள்

மாவுப்பூச்சிகள் மால்வேசியே, சொலனேசியே மற்றும் லெகுமினேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களைச் சார்ந்து வாழும். திராட்சை, அத்தி, ஆப்பிள், பப்பாளி, கொய்யா, அவகாடோ, வாழை, எலுமிச்சை, மரவள்ளிக் கிழங்கு, வெண்டை, தக்காளி, கத்தரி, பருத்தி மற்றும் பல அழகு தாவரச் செடிகளைத் தாக்கி அழிக்கும். பார்த்தீனியம், துத்தி, சாரணை, ட்ரைடாக்ஸ் போன்ற களைச்செடிகள் மாவுப்பூச்சிகளுக்கு உணவுப் பயிர்களாகப் பயன்படும்.

மாவுப்பூச்சிகள் பரவும் வழிகள்

இப்பூச்சிகள் காற்று மூலமாக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பரவும். மேலும் பூச்சிகள் தாக்கப்பட்ட இடங்களில் மனித நடமாட்டம் இருத்தலும், அங்கேயுள்ள பண்ணைக் கருவிகளும் இப்பூச்சிகள் விரைவாகப் பரவுவதற்கான வாய்ப்புகளாகும். எறும்புகளும் இப்பூச்சிகள் பரவுவதற்கு உதவுகின்றன.

பருத்தியில் மாவுப்பூச்சி

பருத்திச் செடிகளை ஒன்றுக்கு மேற்பட்ட மாவுப்பூச்சி இனங்கள் கூட்டாகத் தாக்கும். முக்கியமாக, பீனோகாக்கஸ் எனப்படும் பருத்தி மாவுப்பூச்சி, மேக்கோநெல்லி காக்கஸ் எனப்படும் இளஞ்சிவப்பு மாவுப்பூச்சி, பாராகாக்கஸ் மார்ஜினேட்டஸ் எனப்படும் பப்பாளி மாவுப்பூச்சி, இரட்டை வால் மாவுப்பூச்சி ஆகியன பருத்தியைத் தாக்கி மிகுந்த சேதத்தை உண்டாக்கும்.

தாக்குதல் அறிகுறிகள்

பஞ்சைப் போல் படர்ந்த முட்டைகளுடன் கூடிய இப்பூச்சிகள் செடியின் நுனிப்பகுதி, தண்டு, இலைகள் ஆகியவற்றில் சாற்றை உறிஞ்சும். இதனால் இலைகள் சிறுத்து, மடங்கி மஞ்சளாக மாறிக் காய்ந்து உதிர்ந்து விடும். தாக்குதல் மிகுந்தால் முழுச் செடியும் காய்ந்து விடும். இப்பூச்சிகள் இலைகளின் மேல் இடும் தேனைப் போன்ற கழிவால், இலைகளில் கரும் பூசணம் வளர்ந்து ஒளிச்சேர்க்கை தடைபடும். இதனால் செடிகள் வளர்ச்சிக் குன்றி மகசூல் பாதிக்கப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

நிலத்தில் களைச்செடிகள் இருக்கக் கூடாது. பார்த்தீனியம், துத்தி, சாரணை, ட்ரைடாக்ஸ் போன்ற களைச்செடிகளை அவ்வப்போது அகற்றிவிட வேண்டும். பண்ணைக் கருவிகளை நன்கு சுத்தம் செய்து, மாவுப்பூச்சிகள் இல்லையென உறுதி செய்த பிறகு தான் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். தாக்குதல் ஆரம்பித்ததும் 3% வேப்பெண்ணெய்க் கரைசல் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 10 மில்லி மீன் எண்ணெய் திரவம் மற்றும் 2 மில்லி வேப்பெண்ணெய்யைக் கலந்து தெளிக்கலாம்.

வயல் ஓரங்கள், வாய்க்கால்களில் தட்டைப்பயற்றைப் பயிரிட்டு, பொறிவண்டு போன்ற இயற்கையான எதிரிகளைப் பெருக்கினால் மாவுப்பூச்சிகள் ஓரளவு கட்டுப்படும். உயிரியல் முறையில் கட்டுப்படுத்த, அசிரோபேகஸ் பப்பாயே என்னும் குளவியின ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 100 வீதம் விட வேண்டும்.

பின்வரும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றைச் சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும். ஏக்கருக்கு புரோப்பனோபாஸ் 50 இ.சி. 500 மில்லி, குளோர்பைரிபாஸ் 20 இ.சி. 400 மில்லி, புப்ரோபெசின் 25 இ.சி. 500 மில்லி, தயோடிகார்ப் 75 டபிள்யு.பி. 250 கிராம்.

தண்டுக் கூன்வண்டு

தாக்குதல் அறிகுறிகள்: பெம்பெருலஸ் அபினிஸ் என்னும் கூன்வண்டுகள் பருத்தித் தண்டில் சிறு துளையை இட்டு முட்டைகளை இடும். இளம் செடிகள் வாடிக் காய்ந்து விடும். முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் தண்டைத் துளைத்து அதனுள்ளே வாழும். இதனால், தரைக்குச் சற்று மேலே தாண்டில் வீக்கம் காணப்படும். பிறகு, வீக்கத்தில் நீளவாக்கில் பிளவு ஏற்படும். இதனால் நன்கு காய்ப் பிடித்த செடிகள் காற்று வேகமாக அடிக்கும்போது ஒடிந்து விடும். தாக்குதல் இருந்தாலும் சில செடிகள் தாக்குப் பிடித்துவிடும். தண்டுக் கூன்வண்டுப் புழு வெள்ளையாக, கால்கள் இல்லாமல் இருக்கும். வண்டானது சிறிதாக, கருமையாக, வெள்ளைத் திட்டுகளுடன் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

அறுவடை முடிந்ததும் பயிர்க் கழிவுகளை உடனே நிலத்திலிருந்து அகற்றிவிட வேண்டும். கடைசி உழவில் ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு அல்லது 12 கிலோ கார்போபியூரான் மருந்தை இடவேண்டும். விதைத்த 10 நாட்கள் கழித்து குளோர்பைரிபாஸ் 20 இ.சி. மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 4 மில்லி வீதம் கலந்து தூர் நனைய ஊற்ற வேண்டும். இரண்டு வாரம் கழித்து மீண்டும் ஒருமுறை இவ்வாறு ஊற்றி மண்ணை அணைக்க வேண்டும்.

முனைவர் ஜெ.இராம்குமார், முனைவர் ந.சாத்தையா, முனைவர் ச.ஆரோக்கியமேரி, முனைவர் இரா.அருள்மொழி, வேளாண்மை அறிவியல் நிலையம், இராமநாதபுரம் – 623 503.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories