மக்காசோளப் பயிரைத்தாக்கும் படைப்புழுவை கட்டுப்படுத்து

மக்காசோளத்தில் படைப்புழுத் தாக்குதலும், சரியான பயிர் மேலாண்மை உத்திகளும்
.
விவசாய பெருமக்களுக்கும், வேளாண் விரிவாக்க அலுவலர்களுக்கும் தற்போது பெரிய சவாலாக இருப்பது, மக்காசோளப் பயிரைத்தாக்கும் படைப்புழுவை கட்டுப்படுத்துவதேயாகும்.
முதலில், இந்தப் படைப்புழுவைப் பற்றி பார்ப்போம்.
மத்திய வெப்பமண்டல, மற்றும் மித வெப்பமண்டல நாடுகளில், இந்த மக்காசோளப் படைப்புழுவின் தாக்கம் அதிகம் உள்ளது.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவில் முதன் முதலாகப் பரவிய இந்த படைப்புழு, தற்போது 2016 ஆம் ஆண்டு மேற்கு ஆப்ரிக்காவில் பரவி, பின் 2018 ஆம் ஆண்டு இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பரவி, சுமார் 1,70,000 ஹக்ட்ர் நிலத்தில் கர்நாடகத்தில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளடைவில், இந்தப் படைப்புழு உலக அளவில் 50 க்கும்மேற்பட்ட நாடுகளில் பூச்சித்தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியமாக இந்தப் படைப்புழு, மக்காச்சோளம், நெல், சோளம், கரும்பு, பருத்தி போன்ற பயிர்களைத் தாக்கி விவசாயிகளுக்கு பொருளாதார நட்டத்தை ஏற்படுத்துகின்றது.
இந்தப் புழுவானது, 2 சென்டி மீட்டர் நீளத்தில், நிறமாறும் தன்மை கொண்ட, மக்காசோள இலை மடிப்புகளில் (1000) ஆயிரக்கணக்கான முட்டைகளை இட்டு பல்கிப்பெருகி, மக்காச்சோளப்பயிர்களை சேதப்படுத்துகின்றது.
சுமார் 30 முதல் 45 நாட்கள் வரை வாழ்க்கை சுழற்சியாக கொண்டுள்ளது. ( முட்டைப் பருவம் 4-6 நாட்கள், புழுப்பருவம் 14-17 நாட்கள், கூட்டுப்புழுப் பருவம் 7-8 நாட்கள் மற்றும் பூச்சிப் பருவம் 7-9 நாட்கள்). இதில், புழுப் பருவமே மிகவும் ஆபத்தானது.
இந்த படை புழுக்கள் மக்காச்சோளத்தின் குருத்து மடிப்புகளைக் கடித்து தின்று விடுவதால், மக்காச்சோளத்தின் வளர்ச்சித் தடைபடுவதோடு மட்டுமல்லாமல், மக்காச்சோள உற்பத்தியை முடக்கி விடுகின்றது.
பயிர்பாதுகாப்பு முறைகள்:
பயிர் கண்காணிப்பு மற்றும் பயிர் ஆய்வு மிகவும் இன்றிமையாதது.
பயிர் கண்காணிப்பு செய்ய ஏக்கருக்கு இனக்கவர்ச்சிப் பொறிகளை 5 / ஏக்கர் முறையில் வைத்து கண்காணிப்பு செய்யலாம்.
மேலும் மக்காசோளப் பயிர் முளைத்த 3-4 வாரங்களில், ‘W’ வடிவில் மக்காசோள வயலில் நடந்து பயிர் பூச்சிப் பாதிப்பை ஆய்வு செய்ய வேண்டும்.
அப்போது, 5 சதவிகித பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், பயிர்பாதுகாப்பு நடவடிக்ககளை எடுக்க வேண்டும்.
மத்திய பயிர் நிலைகளில் 5-7 வாரங்களில், 10 முதல் 20 சதவிகித பாதிப்பு இருப்பின் கட்டுப்பாடு மிகவும் முக்கியமாகும்.
கடை நிலைகளில், அதாவது பூ பிடித்த பின்பு 10 சதவிகித பாதிப்பு இருப்பின் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கக்கூடாது, மற்ற முறைகளில் கட்டுப்படுத்த வேண்டும்
.
இந்தப் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சிக்கட்டுப்பாடு முறையை விவசாய பெருமக்கள் செயல்படுத்துவதன் மூலம் பயிர் பாதுகாப்பு செய்து, படைப்புழுக் கட்டுப்பாடு செய்து நல்ல மகசூல் பெறலாம்.
1. முதலாவதாக, பயிர் சுழற்சி மூலம், மக்காசோளம் பயிரிடலாம், அதாவது, சென்ற ஆண்டு மக்காசோளம் பயிர் செய்த நிலத்தில் மீண்டும் மக்காசோளம் பயிர் செய்வதை தவிர்த்து வேறுநிலத்தில் மக்காசோளம் பயிர் செய்யலாம்.
2. கோடை உழவு செய்து ஆழ உழ வேண்டும், இவ்வாறு செய்வதால், படைப்புழுவின் முட்டைகளும், கூட்டுப்புழுக்களும் இறந்து விடுகின்றன.
3. சரியான பருவத்தில் விதைப்பு செய்தல் வேண்டும்.
4. மக்காசோளத்தினுடன், ஊடுபயிராக, பயறு வகைப் பயிர்களான உளுந்து, பாசிப்பருப்பு மற்றும் துவரை பயிரிடலாம்.
5. மக்காசோள வயலைச் சுற்றியும் பொறிப்பயிராக (Trap crop) தீவனச் சோளத்தைப் பயிர் செய்து எப்போதெல்லாம், தீவனச்சோளத்தில் படைப்புழுத் தாக்குதல் ஏற்படுகின்றதோ, அப்போது 5% NSKE அல்லது அசாடிராக்ட்டின் ( Azadirachtin 1500 ppm ) அளவு தெளித்து மேலாண்மை செய்யலாம்.
6. மக்காசோள வயலை சுத்தமாக வைத்திருந்து, சரியான அளவு உரமேலாண்மை செய்ய வேண்டும்.
7. அதிகப்படியான முட்டைகள், படைப்புழுக்கள் இலை மடிப்புகளில் இருப்பின் அவற்றை கைகளால், பறித்து அழித்து விடலாம். மேலும், உலர்ந்த மண்ணை, எடுத்து படைப்புழு பாதிக்கப்பட்ட இலை மடிப்புகளில், இடுக்குகளில் போட்டு அழித்து விடலாம்.
8. இனக்கவர்ச்சிப் பொறிகளை 15/ஏக்கர் என்ற முறையில் வைத்தும், ட்ரிக்கோ கிரம்மா ப்ரெஷஸும் என்ற உயூரி ஒட்டுன்னிகள் 50000 என்ற விகிதத்தில் ஒரு வார இடைவெளியில் 3-4 முறை வெளியிடலாம்
9. பேசில்லஸ் துறிஞ்சியென்சிஸ் என்ற பாக்டீரியாவை 2 கி/ லிட்டர் என்ற விதத்தில், கலந்து தெளிக்கலாம்.
10. இதுமட்டுமல்லாமல் பறவைகள் உட்கார பொறி வைப்பதன் மூலமும், நன்மை செய்யும் பூச்சிகளை ஆதரிப்பதுடன் எளிதாக பூச்சிக்கட்டுப்பாடு செய்து விடலாம்.
மேற்கூறியவாறு, சரியான பூச்சி மேலாண்மை உத்திகளை கடைப்பிடித்தால், மக்காச்சோளத்தில், படைப்புழு கட்டுப்படுத்தப் பட்டு, விவசாயிகள் நல்ல விளைச்சளைப் பெறலாம்.
– விவசாயிகளின் நலன் கருதி வெளியிடப்படுகின்றது.
நன்றி திரு. T. அருண்குமார்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories