பயிர்களை பல பூச்சிகள் சேதப்படுத்தி மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன. அப்படிப்பட்ட பூச்சிகளில் ஒன்றுதான் மாவுப்பூச்சி……இங்கு மாவுப்பூச்சி பற்றியும் அதை கட்டுப்படுத்தும் முறை குறித்தும் இங்கு காணலாம்.
பொதுவாகவே தோட்டக்கலைப் பயிர்களில் பூச்சித் தாக்குதல் அதிகம் காணப்படும். அதிலும் பப்பாளி,மரவள்ளி, பருத்தி, கத்தரி ,வெண்டை ,செம்பருத்தி ஆகிய செடிகளை அதிக அளவில் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.
இதன் தாக்குதலால் பயிர்களின் மகசூல் 30 முதல் 40 சதவீதம் வரை பாதிக்கக்கூடும். இவை பெரும்பாலும் வறட்சியிலும் கோடைக்காலங்களில் பயிர்களை அதிகமாக தாக்கும். பொதுவாக செடிகளின் மேல் எறும்பு ஊர்ந்து சென்றால் அந்தச் செடியில் மாவுப்பூச்சி தாக்கப் போகிறது என அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த பூச்சிகள் தாக்கப்பட்ட ஆரம்ப நிலையில் இதன் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காணப்படும். .மேலும் செடிகளின் இலைகள் வளைந்தும்,நெளிந்தும் குருத்தில் உள்ள இலைகள் சிறுத்தும் திருகி கொண்டு இருக்கும். இலையின் அடிப்பகுதி இளம் குருத்து, கிளைகள் தண்டு பகுதிகளில் வெள்ளையாக ஆடை போல மாவுப்பூச்சிகள் படர்ந்து காணப்படும். பூச்சியின் தாக்குதல் அதிக அளவில் இருக்கும்போது இலைகள் வாடி கருகிவிடும்.
வயல்களில் உள்ள களைகளை அகற்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும். பூச்சிகள் தாக்கிய செடிகள் மற்றும் களைச் செடிகளை பிடுங்கி அழிக்க வேண்டும். செடிகளில் ஒட்டுண்ணிகள் இறை விழுங்கிகள் அதிகம் இருக்கும்போது பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதை தவிர்க்க வேண்டும் .தண்ணீரில் வேப்ப எண்ணெய் கரைசல் 2% கலந்து தெளிக்கலாம். மீன் எண்ணெய் சோப்பை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் சேர்த்து கலந்து தெளிக்க வேண்டும் .பயறு வகைகளை ஊடுபயிராக சாகுபடி செய்ய வேண்டும். இதனால் இறை விழுங்கிகள் அதிகம் உற்பத்தி ஆகிய மாவுப்பூச்சிகளை தாக்கி உண்ணும். வயலோரம் வாய்க்கால்களில் தட்டைப்பயறு பயிரிடுவதால் மாவு பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.