வாழையில் தண்டு கூன்வண்டு

வாழையில் தண்டு கூன்வண்டு கட்டுப்பாட்டில் மேற்கொண்ட ஆய்வு

அறிமுகம்

தமிழ் நாட்டில் வாழை முக்கனிகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இது முக்கிய பணப் பயிராகும். பல மாவட்டங்களில் நன்செய் நிலங்களில் பயிரிடப்படுகிறது. இதன் அனைத்து பாகங்களும் பயன் தருவதால் இதனை “கல் ப தரு” என்றழைக்கின்றனர். இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் வாழை சாகுபடி செய்யும் நிலப்பரப்பு அதிகம் என்றாலும் உற்பத்தியில் பின்தங்கியுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும் பூச்சி தாக்குதலும் முக்கியமான காரணமாகும். பூச்சிகளில் “ஓடைபோரஸ் லாங்கிகாலிஸ்” என்றழைக்கப்படும் தண்டு கூன் வண்டு பெரும் சேதத்தை விளைவிக்கிறது.

அறிகுறிகள்

 • தாய் வண்டானது சிவப்பு நிறத்தில் பெரியதாக இருக்கும். இது வாழைத் தண்டில் சிறு துளையிட்டோ அல்லது இலை உறைகளுக்குள்ளோ தனது முட்டைகளை இடும். இதிலிருந்து வெளிவரும் இளம் சேய்கள் தண்டினை துளைத்து ஊடுருவி சேதப்படுத்தும்.
 • தாய் வண்டு பொய்த்தண்டையும், சேய்கள் தண்டையும் உண்டு, வளரும் தண்டுகளை அழிக்கின்றன.
 • பொய்த் தண்டில் வட்ட வடிவ துளைகள் மற்றும் பிசின் போன்ற திரவவெளிப்பாடு ஆகியவை இக்கூன் வண்டின் இருப்பினை அறிய உதவுகின்றன.

நீம்அசால் பயன்பாட்டு ஆய்வு

 • நீம்அசால் என்பது இ.ஐ.டீ பாரி நிறுவத்தின் தயாரிப்பாகும். இது வேம்பினை மூலப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இரசாயனமற்ற பூச்சி கொல்லியாகும். இதன் பூச்சி கொல்லித் தன்மைக்கு காரணமாக இருப்பது அசாடிராக்டின் என்கிற வேதிப் பொருளாகும்.
 • பெருமளவில் சேதத்தை விளைவிக்கும் இந்த கூன் வண்டின் பாதிப்பைக் கட்டுப்படுத்த கோவை அருகே சிறுமுகையில் நேந்திரன் இரக வாழையில் நீம் அசால் 1.2 சதத்தை ஊசி மூலம் தண்டுகளில் செலுத்தி ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இந்த மருந்து வாழைக் கன்று நட்ட 5 மாதத்திற்குப் பின் 30 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தண்டில் செலுத்தப்பட்டது.
 • இந்த ஆய்வில் நீம் அசாலின் திறன் மோனோகுரோட்டோபாஸ் (1 சதவீதம் நீரில் கரையும் செறிவு) உடன் ஒப்பிடப்பட்டது. வயல்வெளி ஆய்வின் போது மோனோகுரோட்டோபாஸை (1 மி.லி.) நீருடன் (3 மி.லி.) கலந்து தண்டிற்கும் செலுத்தப்பட்டது. மேலும், நீம் அசாலை நீருடன் 4:4 என்ற விகிதத்தில் ( 4 மி.லி. நீம் அசால் + 4 மி.லி. நீர்) கலந்து செலுத்தப்பட்டது. ஆய்வின் முடிவாக மோனோகுரோட்டோபாஸ் செலுத்திய மாதிரி திடலில் 92.8 இறப்பு சதவீதமும், நீம்அசால் செலுத்திய மாதிரி திடலில், 85.42 இறப்பு சதவீதமும் பதிவாகியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட தண்டில் மோனோகுரோட்டோபாஸ் 1 சதவீதம் மற்றும் நீம் அசால் 4 சதவீதத்தையும் பூசும் போது இக்கூன்வண்டுகளின் தாக்கம் குறைந்துள்ளது.
 • சோதனைக் கூடத்தில் தண்டு கூன்வண்டுக் கெதிரான ஆய்வில், கூன் வண்டுகளின் இறப்பு சதவீதம் மற்றும் தாய் கூன் வண்டுகளின் முட்டை இடும் எண்ணிக்கை ஆகியவை சோதனைக்குப் பின் 24, 48, 72 மற்றும் 96 மணி நேரத்திற்கு பின் கணக்கிடப்பட்டன.
 • ஆய்வின் போது மோனோகுரோட்டோபாஸ் (1 மி.லி.) நீருடன் (3 மி.லி.) கலந்து தண்டிற்கும் செலுத்தப்பட்டது. மேலும், நீம் அசால் நீருடன் 4:4 என்ற விகிதத்தில் (4 மி.லி. நீம் அசால் + 4 மி.லி. நீர்) கலந்து செலுத்தப்பட்டது. ஆய்வின் முடிவாக 97.3 இறப்பு சதவீதம் மோனோகுரோட்டோபாஸ் செலுத்திய மாதிரி திடலிலும், 94.25 இறப்பு சதவீதம் நீம் அசால் செலுத்திய மாதிரி திடலிலும் பதிவாகியுள்ளது.
 • மோனோகுரோட்டோபாஸ் பூச்சிகொல்லி தண்டில் ஊசி மூலம் மற்றும் மேற்பகுதியில் பூசியும் மேற்கொண்ட ஆய்வில் இந்த கூன்வண்டின் தாக்கம் வெளியுறையில் முறையே 87.99 மற்றும் 84.65 சதவீதம் குறைந்துள்ளது. மோனோகுரோட்டோபாஸ் 1 சதவீதம் மற்றும் நீம் அசால் 4 சதவீதம் ஆகியவற்றை தண்டில் பூசுவதால் உள் உறையில் இக் கூன்வண்டின் சேதாரம் முறையே 96.14 மற்றும் 95.65 சதவீதம் குறைந்து காணப்பட்டது.
 • தண்டின் நடுஉறையில் நீம்அசால் 4 சதவீதத்தை தண்டில் ஊசி மூலம் செலுத்துவதாலும் பூசுவதாலும் 83.99 சதவீதம் தாக்கம் குறைந்துள்ளது. மேலும், மோனோகுரோட்டோபாஸ் 1சதவீதத்தை தண்டில் பூசுவதால் 94.65 சதவீதமும், ஊசி மூலம் செலுத்துவதால் 89.31 சதவீதமும், இக்கூன்வண்டின் தாக்கம் குறைந்துள்ளது. மோனோகுரோட்டோபாஸ் 1 சதவீதம் மற்றும் நீம் அசால் 4 சதவீதம் ஆகியவற்றை தண்டில் பூசிய ஆய்விற்குப் பின் தாய் வண்டுகள் முட்டையிடும் எண்ணிக்கை மிக குறைவாகவே காணப்பட்டது. (1.2 முட்டைகள் /5 தாய் வண்டுகள், 1.6 முட்டைகள் 15 தாய் வண்டுகள்).
 • மேலும், மோனோகுரோட்டோபாஸ் (1 மி.லி.) நீருடன் (3 மி.லி.) கலந்து தண்டிற்கும் செலுத்தப்பட்டது. மேலும், நீம் அசால் நீருடன் 4:4 என்ற விகிதத்தில் (4 மி.லி. நீம் அசால் + 4 மி.லி. நீர்) கலந்து செலுத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் தாய் வண்டுகளில் முட்டையிடும் எண்ணிக்கை முறையே 1.0 முட்டை/ 5 தாய் வண்டுகள் மற்றும் 1.4 முட்டை/ 5 தாய் வண்டுகள் பதிவாகியுள்ளன.

இவ்வாறாக நீம் அசால் ஆனது இரசாயன பூச்சி கொல்லியான மோனோ குரோட்டோபாஸ் உடன் ஒப்பிடும் போது அதற்கு இணையாக பொய் தண்டு கூன்வண்டினை கட்டுப்படுத்துகிறது. மேலும், சுற்றுப்புறச் சூழலையும் மாசுறாமல் பாதுகாக்கிறது.

ஆதாரம் : வேளாண் பூச்சியியல்துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் – 641 003

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories