சூரியகாந்தி சாகுபடி

சூரியகாந்தி சாகுபடி

குறைந்த மழையளவு உள்ள இடங்களில் நெற்பயிருக்கு பதிலாக ஒரு பருவத்துக்கு சூரியகாந்தி சாகுபடி செய்யலாம். விவசாயத்துக்கு ஆள்பற்றாக்குறை இருந்துவரும் நிலையில், குறைந்த வேலையாள்களைக் கொண்டு அதிக வருமானத்தை விவசாயிகள் பெற முடியும்

 

மானாவரிக்கு ஆடிப் பட்டமும், கார்த்திகை பட்டமும், இரவைக்கு மார்கழி, சித்திரைப் பட்டமும் சூரியகாந்தி சாகுபடிக்கு ஏற்றது. 90 முதல் 100 நாள்களில் பயிர் வைத்து, அறுவடை செய்துவிடலாம். கோ.எஸ்.எக்-2, சன்பிரிடு உள்ளிட்டப் பல ரகங்கள் உள்ளன.

நிலம் தயாரித்தல்

மணற்பாங்கான வண்டல், செம்மண், கருவண்டல் மண் ஆகியன சூரியகாந்தி சாகுபடிக்கு மிகவும் ஏற்றதாகும். இந்த நிலங்களை இரும்பு கலப்பையைக் கொண்டு, 2 முதல் 3 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின்போது, ஒரு ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழுஉரம் இட்டு மண் கட்டிகள் நன்கு உடையுமாறு உழவு செய்ய வேண்டும்.

பார் பிடித்தல்

60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். 1 செடிக்கும் மற்றொரு செடிக்கும் 30 செ.மீ. இடைவெளியும் பாருக்கு பார் 60 செ.மீ. இடைவெளியும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

விதை நேர்த்தி, விதைத்தல்

வீரிய ஒட்டு ரகம் 1 ஏக்கருக்கு 2 கிலோ போதுமானது. 1 கிலோ விதைக்கு 4 கிராம் என்ற வீதம் ட்ரேகோடெர்மா விரிடி என்ற உயிர் பூஞ்சானக் கொல்லி மருந்தைக் கலந்து பின்பு, 3 பாக்கெட் அசோஸ்பைரில்லம், 3 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் உரத்துடன் 400 மில்லி அரிசி கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்திச் செய்து, பிறகு அரைமணி நேரம் நிழலில் உலர்த்திவிட்டு விதைக்க வேண்டும்.

விதைகளை வரிசையாக பார்களின் பக்கவாட்டில் 30 செ.மீ. இடைவெளியில், 3 செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும்.

உர நிர்வாகம்

மண் பரிசோதனையின் அடிப்படையில் உரமிடுவது மிகவும் நல்லது. இல்லையெனில் பொது உர சிபாரிசான 5 டன் மக்கிய தொழு உரத்துடன் 24 கிலோ தழைச்சத்து, 36 கிலோ மணிச்சத்து, 24 கிலோ சாம்பல் சத்து அளிக்க வேண்டும்.

விதை விதைப்பதற்கு முன்பு 4 பாக்கெட் அசோஸ்பைரில்லம், 4 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் உரத்தை, 10 கிலோ தொழு உரத்துடன் கலந்து நிலத்தில் தூவ வேண்டும். விதை விதைத்தவுடன் 5 கிலோ நுண்ணூட்டச் சத்துக் கலவையை 10 கிலோ மணலுடன் கலந்து பார் இடைவெளியில் போட வேண்டும். சூரியகாந்தி பயிர் எண்ணெய் வித்து என்பதால், 8 கிலோ கந்தகச் சத்து உரத்தை மண்ணில் இட வேண்டும்.

களை, நீர் நிர்வாகங்கள்

பேசலின் என்ற களைக்கொல்லி மருந்தை 750 மில்லி எடுத்து 125 முதல் 150 லிட்டர் நீரில் கலந்து விதை விதைத்து, நீர் பாய்ச்சியவுடன் அதாவது 2 முதல் 3 நாள்களில் தெளிக்க வேண்டும். பிறகு விதைத்த 30-ஆவது நாள் ஒரு கைக்களை எடுக்க வேண்டும்.

மண் அமைப்புக்கு தகுந்தவாறு வாரம் 1 முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

ஊட்டச்சத்து கலவை தெளிப்பு

சூரியகாந்தி பூக்களின் விதைகள் நன்றாகப் பிடிக்கவும், விதைகளின் மணிகள் கெட்டியாக உருவாக்கத்துக்கும், நுண்ணூட்டச் சத்துகள், வளர்ச்சி ஊக்கிகள் தெளிக்க வேண்டும். போராக்ஸ் 0.2 சதவீதம் (1 லிட்டர் நீருக்கு 2 கிராம்) கரைசலை பூ பூத்திருக்கும் சமயத்தில் தெளிக்க வேண்டும். பிலனோபிக்ஸ் என்ற வளர்ச்சி ஊக்கியை 20 பி.பி.எம் (250 லிட்டர் நீரில் 112 கிராம்) என்ற அளவில் விதைத்த 30-ஆவது, 60-ஆவது நாள்களில் தெளிக்க வேண்டும். துத்தநாகச் சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு 0.5 சதவீதம் (1 லிட்டர் நீருக்கு 5 கிராம்) கரைசலை விதைத்த 30, 50-ஆவது நாள்களில் தெளிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

பொதுவாக இதர பயிர்களைக் காட்டிலும் சூரியகாந்தி பயிரில் பூச்சிகள், நோய்கள் பாதிப்பு குறைவு. பாதிப்பு ஏற்பட்டால் அருகில் உள்ள வேளாண் அலுவலரைத் தொடர்பு கொண்டு, பயிர் பாதுகாப்பு முறையை மேற்கொள்ள வேண்டும்.

அறுவடை

விதைத்த 90 முதல் 100 நாள்களில் பூக்கள் முதிர்வடைந்து அறுவடைக்குத் தயாராகிவிடும்.

மகசூல்

1 ஏக்கருக்கு சராசரியாக 1,000 முதல் 1,100 கிலோ வரை கிடைக்கும்.

எனவே விவசாயிகள் இந்த எளிமையான பயிரை சாகுபடி செய்து அதிக வருமானத்தைப் பெருக்க முடியும்.

 

ஆதாரம் : வேளாண் அறிவியல் மையம், காட்டுப்பாக்கம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories