நிலக்கடலை சாகுபடி முறைகள்

நிலக்கடலை சாகுபடி முறைகள்

நிலக்கடலை சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற ஊட்டச்சத்துக் கரைசல் இரு முறை தெளித்தல், ஜிப்சம் உரமிடுதல் போன்ற பணிகளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும்

 

ஊட்டச்சத்துக் கரைசல்

நிலக்கடலைப் பயிர் பூக்கும் வேளையில் பூக்கள் உதிர்வதைத் தடுக்கவும் பூக்கள் அதிக அளவில் பூக்கவும் ஊட்டச்சத்துக் கரைசல் இலைவழியாகத் தெளிப்பது சிறந்ததாகும்.

ஊட்டச்சத்துக் கரைசல் தயாரித்தல்

ஏக்கர் ஒன்றுக்குத் தேவையான ஒரு கிலோ டி.ஏ.பி., 400 கிராம் அமோனியம் சல்பேட், 200 கிராம் போராக்ஸ் ஆகிய மூன்று உரங்களையும், தெளிப்பதற்கு முதல் நாள் இரவே ஏறத்தாழ 15 லிட்டர் நீரில் ஊறவைத்து அவ்வப்போது நன்கு கலக்கிவிடுதல் வேண்டும். மறுநாள் காலையில் இக்கரைசலை வடிகட்டியபிறகு கிடைக்கும் தெளிந்த கரைசலை மட்டும் (ஏறத்தாழ 13 லிட்டர்) எடுத்து அதனுடன் தேவையான அளவு நீர் சேர்த்து 200 லிட்டர் கரைசலாகத் தயார் செய்தல் வேண்டும். இக்கரைசலைக் கைத்தெளிப்பான் மூலம் விதைத்த 25-ஆம் நாள் ஒரு முறையும், பின்பு 10 நாட்கள் கழித்து 35-ஆம் நாள் ஒரு முறையும் என இருமுறை இலைகள் நன்கு நனையுமாறு தெளித்தல் வேண்டும். இக்கரைசலுடன் பிளானோபிக்ஸ் எனும் பயிர் வளர்ச்சி ஊக்கியை ஏக்கர் ஒன்றுக்கு 140 மில்லி அளவில் கலந்தும் தெளிக்கலாம்.

ஊட்டச்சத்துக் கரைசலின் பயன்கள்

இதனால் பூக்கள் உதிர்வது தடுக்கப்படுகிறது. பூக்கள் அதிக அளவில் பூப்பதற்கு உதவுகிறது. நன்கு திரட்சியான பொக்கற்ற காய்கள் நிறைய பிடித்து நல்ல மகசூல் கிடைக்கிறது. பயிர் நன்கு வளர்ச்சி பெற்று பூச்சி,நோய்களை எதிர்க்கும் தன்மையைப் பெறுகிறது.

இறவைக் கடலைக்கு ஜிப்சம் இட இதுவே சரியான தருணம்: பயிரிடப்பட்டுள்ள இறவை நிலக்கடலையில், விதைத்து 45 நாட்கள் வயதுடைய பயிரில் இரண்டாம் முறை களையெடுத்து ஜிப்சம் இட்டு மண் அணைக்கும் வேளையிது. ஜிப்சம் இட்டு மண் அணைப்பதால் விழுதுகள் நன்கு இறங்கி திரட்சியான காய்கள் கிடைக்கும்.

மண் அணைத்தல்

நிலக்கடலையில் உயர் விளைச்சல் பெற ஜிப்சம் இட்டு மண் அணைத்தல் எனும் தொழில் நுட்பம் மிக முக்கியமானதாகும்.

ஏன் ஜிப்சம் இடுதல் வேண்டும்

நிலக்கடலையில் திரட்சியான மிகுதியான காய்கள் பெற ஜிப்சம் இடுவது இன்றியமையாதது. ஜிப்சத்தில் சுண்ணாம்புச் சத்தும், கந்தகச் சத்தும் உள்ளன. நிலக்கடலை திரட்சியாக இருக்கச் சுண்ணாம்புச் சத்து தேவைப்படுகிறது.

எப்போது ஜிப்சம் இடுதல் வேண்டும்?

இறவை நிலக்கடலை விதைத்து 45 நாட்களில் களையெடுக்கும் சமயம் ஏக்கர் ஒன்றுக்கு 80 கிலோ ஜிப்சம் இட்டு செடிகளைச் சுற்றி நன்கு மண் அணைத்துவிடுதல் வேண்டும். இதனால் நிலக்கடலையில் நன்கு விழுதுகள் இறங்கி காய்கள் திரட்சியாகவும், எண்ணெய்ச் சத்து மிகுந்தனவாகவும் கிடைக்கும். ஜிப்சம் இடும் வேளை வயலில் ஈரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளல் வேண்டும். எனவே, இறவை நிலக்கடலைச் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஊட்டச்சத்துக் கரைசலைத்தெளித்து, ஜிப்சம் உரமிட்டு கூடுதல் மகசூல் பெறலாம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories