பருத்தி சாகுபடி

பருத்தி சாகுபடி

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்றாக உழுது பண்படுத்தவேண்டும். குறைந்த ஆழத்தில் மண் கடின அடுக்கு இருந்தால் நிலத்தை கத்திக் கலப்பையைக் கொண்டு 0.5 மீ இடைவெளியில் ஒரு திசையில் உழவேண்டும். பின்னர் அதற்கு நேர்செங்குத்தான திசையில் உழவேண்டும். இதனை மூன்று வருடத்திற்கு ஒரு முறை செய்யவேண்டும். மண் நன்கு பொடியாகும்படி உழுதபின்னர் எக்டருக்கு வேப்பம் புண்ணாக்கு 250 கிராம் இடுவதன் மூலம் கூன் வண்டின் தாக்குதலைத் தவிர்க்க முடியும்.

இயற்கை உரமிடல்

எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் (அ) மக்கிய உரம் (அ) 2.5 டன் மண்புழு உரத்தை உழுவதற்கு முன் மண்ணின் மீது பரப்பி உழவு செய்யவேண்டும். அசோபோஸ் 2கிகி/எக்டர் அல்லது அசோஸ்பைரில்லம் + பாஸ்பரஸில் கரைக்கக்கூடிய பாக்டீரியா + இளஞ்சிவப்பு நிறமுடைய நிலைமாறும் மெத்திலோடிராபிக் எக்டருக்கு 2.2 கிகி ஒவ்வொரு முறையும் அடியுரமாக அளிக்க வேண்டும்.

விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 100 மிலி 70 சத வணிக கந்தக அமிலத்தைப் பயன்படுத்தி அமில நேர்த்தி செய்யவேண்டும். இதன் மூலம் விதைகளின் மேற்பரப்பில் உள்ள துசும்புகளையும், பூச்சி முட்டை நோய்க்கிருமிகள் ஆகியவை அழிக்கப்பட்டு, விதையுறை மிருதுவாக்கப்பட்டு முளைப்புத்திறன் அதிகரிக்கிறது. விதை நேர்த்தி செய்ய பிளாஸ்டிக் பக்கெட் (அ) கண்ணாடி பாத்திரங்களை பயன்படுத்தப்பட வேண்டும். உலோக பாத்திரங்களைப் பயன்படுத்தக்கூடாது. ஒரு கிலோ விதையை ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் போட்டு 100 மில்லி அமிலத்தை ஊற்றவேண்டும். கண்ணாடி (அ) மரக்குச்சியால் 4 நிமிடங்கள் நன்கு கலக்கவேண்டும். பிறகு வேறு ஒரு பக்கெட்டில் நீர் நிரப்பி அமிலநேர்த்தி செய்த விதைகளை நிழலில் உலர்த்தி சேகரித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

நுண்ணூட்டம் இடுதல்

தமிழ்நாடு நுண்உரக் கலவையை இரகங்களுக்கு எக்டருக்கு 12.5கிகி கலப்பினமாக இருந்தால் 15கிகி ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்க வேண்டும். ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க 1:10 என்ற விகிதத்தில் நுண்உரக் கலவை மற்றும் தொழுவுரத்தை சேர்த்து தகுந்த ஈரப்பதத்தில் ஒரு மாதம் நிழலில் உலர்த்த வேண்டும். அடிப்படை இலைவழித் தெளிப்பாக 2% மெக்னீசியம் சல்பேட் + காய் உருவாகும் பருவத்தில் 1% யூரியாவும் தெளிக்க வேண்டும்.

எக்டருக்கு 12.5 கிராம் நுண்ணூட்டக் கலவையை சுமார் 50 கிலோ மணலுடன் கலந்து விதைச் சாலில் தூவவேண்டும்.

ஊட்டச்சத்துக் குறைபாடுகள்

  • துத்தநாகக் குறைபாடுள்ள நிலங்களுக்கு எக்டருக்கு 50 கிராம் துத்தநாக சல்பேட் இடவேண்டும். பயிர் வளர்ச்சியின் போது குறைபாடு தென்பட்டால் 0.5 சத துத்தநாக சல்பேட் கரைசலை விதைத்த 45,60 மற்றும் 75 நாட்களில் தெளிக்கவேண்டும்.
  • மக்னீசியம் குறைபாடு உள்ள நிலங்களுக்கு எக்டருக்கு 20 கிராம் மக்னீசியம் சல்பேட்டு இடவேண்டும்.
  • அடிப்படை இலைவழித் தெளிப்பாக 2% மெக்னீசியம் சல்பேட் + காய் உருவாகும் பருவத்தில் 1% யூரியாவும் தெளிக்க வேண்டும்.
பூஞ்சாண விதைநேர்த்தி

பஞ்சு நீக்கிய ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் ட்ரைகோடெர்மா விரிடி என்ற நன்மை செய்யும் ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் கலந்து உடன் விதைக்கவேண்டும். கார்பென்டாசிம் கலந்து விதையுடன் ட்ரைக்கோடெர்மா விரிடி கண்டிப்பாகக் கலக்கக்கூடாது. ஏனெனில் டிரைக்கோடெர்மா ஒரு உயிருள்ள நன்மை செய்யும் பூசணம், கார்பென்டாசிம் மருந்து அதனைக் கொன்றுவிடும். உயிர் உரங்களைக் கொண்டு ஏற்கெனவே கூறியபடி விதைநேர்த்தி செய்யவேண்டும்.

விதையை கடினப்படுத்தல்

ஒரு சதம் புங்க இலைச்சாறில் அதே அளவுடன் விதையை ஊறவைத்து உலர வைப்பதன் மூலம் முளைப்பு மற்றும் செடியின் வீரியத்தை அதிகப்படுத்தலாம்.

விதை முலாம் தயாரித்தல்

ஒரு கிலோ விதைக்கு அரப்பு இலை 100 கிராம், டி.ஏ.பி 40 கிராம், நுண்ணூட்டக் கலவை 15 கிராம், அசோஸ்பைரில்லம் 200 கிராம் எடுத்து ஐந்து சத மைதா பசையுடன் கலந்து விதை முலாம் தயார் செய்வதன் மூலம் முளைப்புத்திறன் மற்றும் செடியின் வீரியத்தைக் கூட்டலாம்.

விதைத்தல்

விதைகளை 3 செ.மீ ஆழத்தில் குழிகளில் ஊன்றவேண்டும். இரகங்களுக்கு வளம் குறைந்த நிலங்களில் குத்துக்கு இரண்டு செடியும், வீரிய ஒட்டு இரகங்களுக்கு ஒரு செடியும் விட்டு மற்ற செடிகளை விதைத்த 15 ஆம் நாள் நீக்கவேண்டும்.

இடைவெளி நிரப்புதல்

விதைத்த பத்தாவது நாள் முளைக்காமல் இருக்கும் இடங்களில் புதிய விதைகளைக் கொண்டு நிரப்பவேண்டும். இதனால் தேவையான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.

களைகளைக் கட்டுப்படுத்த உழவியல் முறைகள்

களைகளைக் கட்டுப்படுத்த மறைமுகமான சில உழவியல் முறைகள் உண்டு. அவற்றில் முக்கியமானவை பயிர் சுழற்சி, பசுந்தாள் உரம் பயிர் செய்தல், தரிசு விடுதல் முதலியவை. அடர்த்தியான தீவனப்பயிர் (அ) பயறு வகை போன்றவற்றையும் இடையுழவு செய்யக்கூடிய பயிர்களையும் பயிர் செய்தல் களைகளை குறைக்கப் பெரிதும் உதவும்.

களைக் கொல்லிகள்

எக்டருக்கு 3.3 லிட்டர் பெண்டிமெத்தாலின் (அ) புளூகுளோரலின் 2.2 லிட்டர் இவற்றில் ஏதாவது ஒரு களைக்கொல்லியைப் பயன்படுத்தி களையைக் கட்டுப்படுத்தவேண்டும். பருத்தி விதைத்த மூன்றிலிருந்த ஐந்து நாட்களுக்குள் 500 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவேண்டும். களைக்கொல்லி தெளிப்பதற்கு என்று தனியாக ஓர் தெளிப்பான் வைத்துக் கொள்ளவேண்டும். உலோகத்தினாலான தெளிப்பான்களைக் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது. இம்முறை தவிர 20 கிலோ மணலுடன் களைக்கொல்லியை கலந்து சீராக தூவியும் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

களைக்கொல்லி 30 நாட்கள் வரை களைகளை கட்டுப்படுத்தும். பின்பு 45வது நாள் கைக்களை எடுத்து மண் அணைத்து களையைக் கட்டுப்படுத்தலாம். பருத்தியை நீண்ட வரிசைகளில் விதைக்கும் போது, விதைத்த 30-35 நாட்களில் கொண்டிக் கலப்பைக் கொண்டு ஊடுழவு செய்யவும். பத்து நாட்களுக்குப் பிறகு நாட்டுக் கலப்பை மூலம் சாலெடுத்துப் பிறகு பார் கலப்பை மூலம் பார் பிடிப்பது நன்கு கட்டுப்படுத்துவதுடன் குறைந்த செலவில் மண் அணைத்து உரமிடவும் வழிசெய்கிறது.

மேலுரமிடல்
  • இரகங்களுக்கு 50 சத தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து விதைத்த 45ம் நாள் இடவேண்டும்.
  • வீரிய ஒட்டு இரகங்களுக்கு மூன்றில் ஒரு பங்கை 45 ஆம் நாளும் மற்றொரு பங்கை 65 ஆம் நாளும் இடவேண்டும்.
மண் அணைத்தல்

விதைத்த 45 ஆம் நாள் பார் சாலை களைந்து பார் எடுத்துக்கட்டி செடிகளுக்கு மண் அணைக்கவேண்டும்.

வளர்ச்சி ஊக்கிகள் தெளித்தல்

நாப்தலின் அசிட்டிலிக் அமிலம் 40 பிபிஎம் கரைசலை மொக்குவிடும் பருவத்தில் தெளிக்கவேண்டும். முதல் முறை தெளித்து ஒரு மாதம் கழித்து இரண்டாவது முறையாக 90ம் நாள் தெளிக்கவேண்டும். 40 மில்லி நாப்தலின் அசிட்டிக் அமிலத்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்தால் 40 பிபிஎம் கரைசல் கிடைக்கும். இவ்வாறு செய்வதால் மொட்டுகள் உதிர்வது குறைக்கப்பட்டு காய்கள் அதிகம் பிடிக்க உதவுகிறது.

நுனி கிள்ளுதல்

தழைச்சத்து உரங்கள் அதிகமாக இடுவதால் தேவைக்கு அதிகமாக உயரமாக வளர்ந்து விடுவதுண்டு. இதனால் செடிகள் அதிக பூச்சி நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும். இச்சந்தர்ப்பங்களில் நுனி கிள்ளுதல் அவசியமாகிறது. இவ்வாறு செய்வதால் பக்கக் கிளைகள் உருவாகி பூக்களும், காய்களும் அதிக எண்ணிக்கையில் உண்டாகி காய்கள் உரிய காலத்தில் வெடிக்க உதவுகிறது. இரகங்களுக்கு 75-80ம் நாளில் 15வது கணுவிலும், ஒட்டு இரகங்களுக்கு 85-90ம் நாளில் 20வது கணுவிலும் தண்டின் நுனியை சுமார் 10 செ.மீ அளவுக்கு கிள்ளிவிடவேண்டும். காய்கள் திரட்சியாகவும், பருமானகவும் வரை 2 சத டி.ஏ.பி கரைசலை 45 மற்றும் 75ம் நாட்களில் தெளிக்கவேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்த உடன் நீர்ப்பாய்ச்சவேண்டும். மீண்டும் விதைத்த மூன்றாம் உயிர்த் தண்ணீர் கட்டவேண்டும். தேவைப்பட்டால் விதைத்த 10-15ம் நாள் இடைவெளி நிரப்பும் சமயத்தில் ஒருமுறை தண்ணீர் கட்டவேண்டும். 20 நாட்கள் கழித்து 15-20 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் கட்டவேண்டும். நீர்ப்பாய்ச்சுதலை மண்ணின் ஈரம் காக்கும் தன்மை, மழை, செடியின் வளர்ச்சி முதலியனவற்றைக் கருத்தில் கொண்டு மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

அறுவடை

உயர்ந்த அளவில் விளைவிக்கும் பருத்தியை கட்டுக்கோப்பான அறுவடை செய்வதும் கிடைத்த மகசூலும் தரம் பிரித்து தக்கவாறு சேமித்து பின்பு விற்பனை செய்வதும், பருத்திச் சாகுபடியின் இறுதிக் கட்டத்தில் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான பணியாகும்.

தமிழ்நாட்டில் பருத்தி புரட்டாசி பட்டத்தில், அதாவது குளிர் காலப்பயிராக பயிரிடப்படும்பொழுது, ஆடிக் கடைசி மற்றும் புரட்டாசி மாதங்களில் விதைக்கப்பட்டு தை மற்றும் மாசி மாதத்திலும் மாசிப் பட்டத்தில் விதைக்கப்படும் பொழுது ஆனி, ஆடி மாதங்களிலும் பருத்தி எடுக்கமுடியும். இந்த இரு பருவங்களிலும் நிலவும் பெரும்பாலும் மிகவும் உதவுகின்றன.

அறுவடைக்கான இந்த சூழ்நிலையை, குறிப்பாக பருத்திக் காய்கள் நன்கு வளர்ச்சியடைந்து, முதிர்ச்சி பெற்று, சீராக வெடித்து முழுப்பலனையும் கொடுக்குமளவுக்குப் பயன்படுத்தல் மிகவும் முக்கியம். நீண்டகால இரகங்களான சுவின், டி.சி.எச்.பி 213, மத்திய கால இரகமான எம்.சி.யு 5, எல்.ஆர்.ஏ 5166, எம்.சி.யு 12, எம்.சி.யு 13 மற்றும் இடைவிட இன்னமும் குறுகிய காலத்தில் விளைந்திடும் எம்.சி.யு 7, எஸ்.வி.பி.ஆர் 2 அவற்றின் வயதுக்கேற்றபடி, தகுந்த பருவங்களில் விதைத்து, மழையற்ற தெளிவான சூழ்நிலையில் எல்லாக் காய்களும் வெடிக்கும்படி செய்வது நல்லது.

 

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories