*புடலங்காய் சாகுபடி முறை மற்றும் பயன்கள்*

*புடலங்காய் சாகுபடி முறை மற்றும் பயன்கள்*

புடலங்காய் கொடிவகையான காய்கறி வகையைச் சேர்ந்த ஒரு வெப்ப மண்டலப் பயிராகும்.

வீட்டுத் தோட்டங்களில் தொங்கும் புடலங்காயின் தாயகம் இந்தியா. இதன் தாவர விஞ்ஞானப் பெயர், டிரிச்சோசன்தீன் ஆங்கினா என்பதாகும்.

இவற்றின் காய்கள் நீண்டு பச்சையாக தொங்கும்.

புடலங்காயில் கொத்துப்புடல், நாய்ப்புடல், பன்றிப்புடல், பேய்ப்புடல் என பலவகை உள்ளது.

பன்றிப்புடல் கொடியாக இருந்தாலும் நீளமாக இல்லாமல் நீளம் குறைவாக இருக்கும்.

பேய்புடல் மிகவும் கசப்பானது. அதனால் இதனை சமையலுக்கு பயன்படுத்த மாட்டார்கள்.

புடலங்காய் எப்படி பயிரிடுவது…?

இரகங்கள் :

கோ 1, கோ 2, பி.கே.எம். 1, எம்.டி.யூ. 1, பி.எல்.ஆர்.(எஸ்.ஜி.) 1, பி.எஸ்.எஸ். 694, மைக்கோ குட்டை ஆகிய இரகங்கள் உள்ளன.

மண்

புடலங்காய் ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். இதன் சாகுபடிக்கு 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவைப்படும். இருமண் பாங்கான மண் வகைகள் குறிப்பாக மணற்சாரி வண்டல் மண் சாகுபடிக்கு ஏற்றது. மேலும் மித வெப்ப மண்டலப் பகுதிகளிலும் சாகுபடி செய்யலாம்.

பருவம்

ஜூன் – ஜூலை மாதங்களும், டிசம்பர் – ஜனவரி மாதங்களும் சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்றாக 3 அல்லது 4 முறை உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின்போது 20 டன் மக்கிய தொழு உரத்தை இட்டு 2 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீட்டர் அகலத்தில் வாய்க்கால் எடுத்து நிலம் தயாரிக்க வேண்டும். அந்த வாய்க்காலில் 1.5 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீட்டர் நீளம், ஆழம், அகலம் கொண்ட குழிகளை எடுத்து தொழு உரத்துடன், மேல் மண் கலந்து நிரப்பி வைக்க வேண்டும்.

விதை

ஒரு எக்டருக்கு 1.5 முதல் 2 கிலோ விதையளவு தேவைப்படும்.

விதைநேர்த்தி

விதைகளை நாட்டு மாட்டு சாணம் மற்றும் கோமியத்தில் 24 மணி நேரம் ஊற வைத்த பின்பு நடவு செய்யவேண்டும் .

விதைத்தல்

ஒரு குழிக்கு 5 விதைகள் வீதம் ஊன்ற வேண்டும். விதை நட்ட 8 முதல் 10 நாட்களில் முளைக்கத் தொடங்கிவிடும்.

நீர் நிர்வாகம்

விதை ஊன்றியவுடன் குடம் அல்லது பூவாளி வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். நன்கு வளர்ந்தவுடன் வாரம் ஒரு முறை வாய்க்கால் மூலமாக தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும்.

புடலங்காய் உரங்கள்:

ஒரு எக்டருக்கு அடியுரமாக 20 முதல் 30 கிலோ தழைச்சத்து, 30 முதல் 50 கிலோ மணிச்சத்து, 30 முதல் 40 கிலோ சாம்பல் சத்தை இட வேண்டும். மேலுரமாக 20 முதல் 30 கிலோ தழைச்சத்தை பூ பூக்கும் பருவத்தில் இட வேண்டும்.

வளர்ச்சி ஊக்கி

இரண்டு இலைப் பருவத்தில் எத்ரல் 250 பிபிஎம் என்ற வளர்ச்சி ஊக்கியை தெளித்தால் பெண் பூக்கள் அதிகளவில் உற்பத்தியாகும். இதே வளர்ச்சி ஊக்கியை ஒரு வாரத்துக்கு 3 முறை தெளிக்க வேண்டும். செடிகளை 18 லிருந்து 20 நாட்களுக்குள் களை செய்து 2 நாள் பூமியை உலர வைக்க வேண்டும். ஜீவாமிர்தம் தயார் செய்து அதனுடன் 20 கிலோ பிண்ணாக்கு நீர் கலந்து செடிகளுக்கு ஊற்ற வேண்டும்.

70வது நாளில் குழிக்கு, மட்கிய தொழு உரம் 1 கிலோ போட வேண்டும். இதனால் மண்ணில் மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

புடலங்காய் பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

செடி நன்கு வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். ஒரு குழியில் நன்கு வளர்ந்த 3 செடிகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற நாற்றுகளை பிடுங்கி விட வேண்டும். புடலைக் கொடி வளர்ந்து படருவதற்கு இரும்புக் கம்பிகளை வைத்து பந்தல் போடுவது அவசியமாகும். விதை முளைத்து கொடி வரும்போது, கொடியை மூங்கில் குச்சியோ அல்லது மற்ற குச்சிகளை வைத்தோ ஊன்று கொடுத்து பந்தலில் படர விட வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

15 முதல் 20 நாட்கள் இடைவெளியில் பஞ்சகாவ்யா தெளிக்க வேண்டும். தினமும் காலையில் நான்கு விளக்கு பொறிகளில் உள்ள பூச்சிகளை வடிகட்டி எடுத்து குழியில் புதைத்து விடவும். நல்ல பெண் பூக்கள் மலர அறப்பு மோர் கரைசல் பெளர்ணமி தினம் அன்று காலையில் தெளிக்க வேண்டும். வேப்ப எண்ணெய், புங்க எண்ணெய் உடன் சோப்பு கரைசல் கலந்து 20 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். அதிக வெப்பமும், குளிர் காற்றும் மாறி மாறி வந்தால் புளித்த மோரும், நடுப்பதம் உள்ள இளநீர் கலந்து தெளிக்க வேண்டும். விளக்கு பொறி, இனக்கவர்ச்சியினால் தாய் பூச்சிகள் அழிந்துவிடும். KNOX(Bio மருந்து) 60 நாள் வரை 8 – 10 மில்லி 10 லிட்டர் தண்ணீரில் கலந்து 12 முதல் 15 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

பூசணி வண்டின் தாக்குதல்

இதைக் கட்டுப்படுத்த 2 கிராம் செவின் அல்லது கார்பரில் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பழ ஈ தாக்குதல்

பழ ஈயின் தாக்குதலைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 1 சதவீதம் தெளிக்க வேண்டும்.

சாம்பல் நோய்

சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி டினோகாப் அல்லது அரை கிராம் கார்பன்டாசிம் மருந்துகளில் ஒன்றை தெளிக்கலாம்.

அடிச்சாம்பல் நோய்

அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு இரண்டு கிராம் மாங்கோசெப் அல்லது குளோரோதலானில் மருந்துகளில் ஒன்றை 10 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.

அறுவடை

விதை ஊன்றிய 80 நாட்கள் கழித்து முதல் அறுவடை தொடங்கும். பின்னர் ஒரு வார இடை வெளியில் 6 முதல் 8 அறுவடை செய்யலாம்.

மகசூல்

ஒரு எக்டருக்கு 20 முதல் 25 டன் மகசூல் பெறலாம்.

புடலங்காய் பயன்கள்:

புடலங்காய் சற்று நீரோட்டமுள்ள காய், இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும்.
தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும்.
அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் ஜீரணமாக்கும். நன்கு பசியைத் தூண்டும்.
வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும்.
இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலைப் போக்கும். மூலநோய்க்காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும்.
நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும். சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும். உடல் தளர்ச்சியைப் போக்கி வலு கொடுக்கும். கண் பார்வையை தூண்டும்.
இதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றும் தன்மை கொண்டது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories