மரிக்கொழுந்து சாகுபடி
மரிக்கொழுந்து சாகுபடி செய்வதால் அதிகம் தண்ணீர் தேவைப்படாது. குறைந்த வயதிலேயே நமக்கு மகசூல் கிடைத்துவிடும் முதல் தடவை நடவு செய்வது மட்டும் தான் அவற்றையே மூன்று வருடங்களுக்கு வைத்துக்கொள்ளலாம்.
செலவும் குறைவு நம்முடைய பயிரை வைத்தே அடுத்த வயல்களிலும் உற்பத்தி செய்து கொள்ளலாம்.எல்லா மலர்களுடனும் கலந்து வைத்து கட்டி விற்பதால் இவற்றிற்கு நல்ல வரவேற்பு உள்ளது
இப்பயிர் வளம் செறிந்த செம்மன் நிலங்களிலும், நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் நிலங்களிலும் நன்கு வளரும் மிதமான மழை, நல்ல சூரிய ஒளி, காலை பனி ஆகியவை நல்ல விளைச்சல் கிடைக்க உதவுகின்றன…
ஒரு ஏக்கருக்கு 5 டன் நன்கு மக்கிய தொழு உரம் போட்டு நன்றாக உழுவு செய்ய வேண்டும் பிறகு பார்கட்டி அவற்றில் 30 நாட்கள் ஆன நாற்றுக்களை செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளியும், வரிசைக்கு வரிசை 15 செ.மீ இடைவெளியிலும் நடவு செய்ய வேண்டும்.
மரிக்கொழுந்தை நடவு செய்த உடன் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் முதல் மாதத்தில் வாரம் இரு முறையும் பிறகு வாரம் ஒரு முறையும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
உரம் 125 கிலோ தழைச்சத்து, 125 கிலோ மணிச்சத்து மற்றும் 75 கிலோ சாம்பல்ச் சத்து உரங்களை அளிக்க வேண்டும்.
மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தினை அடியுரமாகவும், 50 கிலோ தழைச்சத்தினை நடவு செய்த 25வது நாளில் முதல் மேலுரமாகவும், பின்னர் 25 கிலோ தழைச்சத்தினை ஒவ்வொரு முறையும் அறுவடை செய்த பின்னர் மேலுரமாக இடவேண்டும்.
செடிகள் நட்ட 30 நாட்களில் முதல் களை எடுக்க வேண்டும். பின்னர் தேவைப்படும் போது களை எடுக்க வேண்டும்.
சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் தென்பட்டால் மஞ்சள் வண்ண ஒட்டுப் பொறி வைக்கலாம் அல்லது தாவர இலைச்சாறு வாரம் ஒரு முறை தொடர்து அடித்து வரலாம்
விதைத்த 45 வது நாளில் முதல் அறுவடையும், அதன் பின் 30 – 40 நாட்கள் இடைவெளியில் தொடர்ச்சியாக அறுவடை செய்ய வேண்டும்.
எண்ணெய் உற்பத்திக்கு, செடிகளில் அதிகளவு பூக்கள் வெடிக்கின்ற தருணத்தில் அதாவது பிப்ரவரி மாதத்தில் தரையிலிருந்து 10 செ.மீ உயரத்தில் அறுத்து எடுக்க வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 9,000 முதல் 10,000 கிலோ உலர்ந்த இலைகளும், 10-12 கிலோ வாசனை எண்ணெயும் மகசூலாகக் கிடைக்கும்.
பயன்கள்:
மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடியின் நிறம் மாறும்.
மாலை, கதம்பம் இவற்றில் வாசனைக்காக மரிக்கொழுந்து சேர்க்கப்படுகிறது.
மரிக்கொழுந்துகள் அழகு சாதனைகள், நறுமணபொருட்கள், வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுகின்றன.