மானாவாரி நிலக்கடலை சாகுபடி

மானாவாரி நிலக்கடலை சாகுபடி

நிலம் தயாரித்தல்

மணற்பாங்கான வண்டல், செம்மண், கருவண்டல் நிலங்கள் ஏற்றவை. சட்டிக் கலப்பையைப் பயன்படுத்தி உழுத பின்னர் 3 அல்லது 4 முறை இரும்புக் கலப்பை அல்லது நாட்டுக் கலப்பையால் கட்டிகள் நன்கு உடையும் வரை உழவேண்டும். குறைந்த ஆழத்தில் மண் கடின அடுக்கு உடைய நிலத்தை உளிக் கலப்பையால் 50 செமீ இடைவெளியில் ஒரு திசையில் உழவேண்டும். பின்னர் நேர் எதிர் திசையில் உழவேண்டும். இவ்வாறு 3 ஆண்டுக்கு ஒருமுறை செய்யவேண்டும். பின்னர் 12.5 டன் தொழு உரம் அல்லது நன்கு மக்கிய தென்னை நார்க்கழிவு இடவேண்டும். மண் கடின அடுக்கைத் திருத்த 2 டன் சுண்ணாம்புடன் தொழு உரம் நன்கு மக்கிய தென்னை நார்க்கழிவு 12.5 டன் என்ற அளவில் ஒரு ஹெக்டேருக்கு இடவேண்டும்.

பாத்தி

நீர் அளவு, நீர், மண்ணின் வகையைப் பொருத்து 10 சதுர மீட்டர் வரை பாத்தி அமைக்கவேண்டும். டிராக்டரை உபயோகப்படுத்தினால் பாத்தி அமைப்பானைப் பயன்படுத்தலாம். அல்லது 60 செமீ இடைவெளியில் வரப்புகள் அமைத்து இடையில் வாய்க்கால் அமைக்கவும் மற்றும் வரப்புகளின் இரண்டு பகுதியிலும் விதைக்கவும். அல்லது 60 செ.மீ அகலத்துக்கு படுக்கை அமைக்கவும் மற்றும் 15 செமீ அளவுக்கு வாய்க்கால் அமைக்கவும். படுக்கைகளின் இரண்டு பகுதிகளிலும் விதைக்க வேண்டும்.

 

உரம்

மண் பரிசோதனை அடிப்படையில் தழை, மணி, சாம்பல் சத்துகள் இடவேண்டும். மண் பரிசோதனை செய்யாவிட்டால் மானாவாரி நிலத்துக்கு 10: 10: 45 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து தரும் ரசாயன உரங்கள் இடவேண்டும். வேளாண் துறையால் பரிந்துரைக்கப்பட்ட நுண்ணூட்டச்சத்து கலவை 12.5 கிலோவுடன் உலர்ந்த மணலைப் பயன்படுத்தி 50 கிலோவாக தயாரித்து விதைத்தவுடன் மண் பரப்பில் தூவவேண்டும். நுண்ணூட்டக் கலவையை மண்ணுடன் ஒன்றாக சேர்க்கக்கூடாது.

துத்தநாகக் குறைபாடு: இலைப் பரப்பில் லேசான மஞ்சள் நிறக் கோடுகள் தோன்றும் முதிர்ந்த நிலையில் பச்சைப் பற்றாக்குறை, நுனிமொட்டு வளர்வது தடைபடும். துத்தநாகம் குறைவாக உள்ள மண்ணுக்கு ஹெக்டேருக்கு 25 கிலோ துத்தநாக சல்பேட் இடவேண்டும்.

இரும்பு குறைபாடு: நரம்புகளுக்கிடையே பச்சையக் குறைவு, நுனி, வளர்ச்சி குறையும். இதைப் போக்க இரும்பு சல்பேட் கரைசலை விதைத்த 30, 50ஆவது நாளில் தெளிக்கவேண்டும்.

போரான் குறைபாடு: இளம் இலைகளில் வளர்ச்சி தடைப்பட்டு குட்டையான புதர் அமைப்பு தரும். காய் வளர்ச்சி பாதிக்கப்படும்; விதையில்லாக் காய் தரும். 10 கிலோ போராக்ஸ், 200 கிலோ ஜிப்சம் விதைத்த 45ஆவது நாளில் இடவேண்டும்.

கந்தகக் குறைபாடு: குன்றிய வளர்ச்சி, ஒரே மாதிரி பச்சையக் குறைபாடுள்ள தாவரங்கள் சன்னமான தண்டு, வரை போன்ற அமைப்பு ஆகியவை கந்தகக் குறைபாட்டின் அறிகுறி.

விதையளவு

ஹெக்டேருக்கு 120 கிலோ பருப்பு போதும். தடிமன் விதையாக இருந்தால் ஹெக்டேருக்கு 175 கிலோ தேவை.

இடைவெளி: செடிகளின் வரிசைகளுக்கிடையே 30 செ.மீட்டரும், செடிகளுக்கிடையே 10 செ.மீட்டரும் இருக்கவேண்டும். வளை தேமல் நோய் பரவிய இடங்களில் 15-க்கு 15 செமீ என்ற இடைவெளி தேவை.

விதைநேர்த்தி

ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடியைக் கலக்கவும். இதை விதைக்கும் முன் (சற்று முன்னர்) செய்யவேண்டும். இது உயிர் உரங்களுடன் கலக்க ஏதுவானது. இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை பூஞ்சாணக் கொல்லிகளுடன் கலக்கக்கூடாது. விதைகளை திரம் அல்லது மாங்கோசெப்புடன் ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவிலோ அல்லது கார்பாக்சின், கார்பென்டாசிமுடன் ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவிலோ அல்லது கார்பென்டாசிமுடன் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவிலோ கலக்கவும். விதைகளை எ.டின்.யு. 14 ரைசோபியம் (600 கிலோ- ஹெக்டேர்) உடன் கஞ்சி விதை நேர்த்தி செய்யப்படாவிட்டால், 2 கிராம் ரைசோபியத்துடன் 25 கிலோ எரு, 25 கிலோ மணலுடன் கலந்து விதைக்க வேண்டும்.

களை மேலாண்மை

களை முளைப்பதற்கு முன்: ஃப்ளுகுளோரலின் 2 லிட்டரை 900 லிட்டர் தண்ணீரில் கலந்து தட்டை விசிறி நுண்குழாய் மூலம் அளிக்க வேண்டும். தொடர்ந்து நீர்ப் பாய்ச்ச வேண்டும். 35 முதல் 40 நாள்களுக்கு பிறகு கைக்களை எடுக்க வேண்டும். களைக்கொல்லி பயன்படுத்தவில்லையென்றால் 20, 40ஆவது நாளில் 2 கைக்களை, மண்வெட்டியால் களையெடுக்க வேண்டும். 2ஆவது கைக்களை எடுத்த பின்பு மண் அணைக்க வேண்டும்.

ஜிப்சம் இடுதல்: ஒரு ஹெக்டேருக்கு 400 கிலோ வீதம் 75வது நாளில் மானாவாரிப் பயிருக்கு செடிகளின் ஓரமாக மண்ணின் ஈரத்தன்மையைப் பொருத்து இடவேண்டும். மண்ணைக் கொத்தி ஜிப்சம் இட்டு மண் அணைக்கவேண்டும். கால்சியம், கந்தகக் குறைபாடுள்ள நிலங்களில் ஜிப்சம் இடுதல் நல்ல பலன் தரும். ஜிப்சத்தின் மொத்த அளவில் பாதியை ரசாயன உரங்களுடன் அடியுரமாக மானாவாரி, இறவைப் பயிரில் நூற்புழுக்களால் ஏற்படும் காளஹஸ்தி மெலடி மற்றும் நிலக்கடலையில் உண்டாகும் சொறி போன்ற பாதிப்புகளைக் குறைக்க முடியும்.

ஊட்டச்சத்து கலவை தெளிப்பு: பெரிய பருப்பு ரகங்களில் காய்களின் பருப்பின் வளர்ச்சி குறைபாடு என்பது ஒரு பெரிய இடர்பாடு ஆகும். தவிர்த்து நல்ல வளர்ச்சியடைந்த முழுமையான பருப்புகளைப் பெற பல ஊட்டச்சத்துகளை கலந்து தெளிக்கவெண்டும். இக்கலவையைத் தயாரிக்க டி.ஏ.பி 2.5 கிலோ, அம்மோனியம் சல்பேட் 1 கிலோ மற்றும் போராக்ஸ் (வெண்சுரம்) 0.5 கிலோவை 37 லிட்டர் தண்ணீரில் ஒன்றாகக் கலந்து ஓரிரவு முழுவதும் வைத்திருக்கவேண்டும். மறுநாள் காலை இந்தக் கலவையை வடிகட்டினால் 32 லிட்டர் வரை தெளிந்த ஊட்டச்சத்து நீர் கிடைக்கும். இதை 468 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து 500 லிட்டர் அளவில் சுமார் 25 மற்றும் 35ஆவது நாளில் தெளிக்கவேண்டும்.

அறுவடை

முதிர்ந்த இலைகள் காய்ந்துவிடுதல் மற்றும் மேல்மட்ட இலைகள் மஞ்சளாவதும் முதிர்ச்சியைக் குறிக்கும். கால அளவைப் பொருத்து பயிரைக் கண்காணித்து, தோராயமாக ஒருசில செடிகளைப் பிடுங்கி காய்களை உரிக்கவேண்டும். ஓட்டின் உள்புறம் வெள்ளையாக இல்லாமல் பழுப்பு கலந்த கருப்பு நிறத்தில் இருந்தால், அது முதிர்ச்சி நிலையைக் குறிக்கிறது. அறுவடைக்கு முன் நீர்ப்பாய்ச்ச வேண்டும். காய்ந்த நிலம் சுலபமாக அறுவடைக்கு உதவுகிறது. மண்ணில் போதுமான ஈரப்பதம் இருப்பின் அறுவடைக்குமுன் நீர்பாய்ச்சத் தேவையில்லை. அறுவடைக்கு முந்தைய பாசனத்துக்கு நீர் இல்லையெனில் நாட்டுக் கலப்பையைப் பயன்படுத்தி செடிகளைப் பிடுங்கி ஆள்களைக் கொண்டு மண்ணிலுள்ள காய்களைச் சேமிக்கவேண்டும்.

பிடுங்கப்பட்ட செடிகளைக் குவியலாக வைக்கக்கூடாது. ஏனெனில் ஈரமாக உள்ளபோது, குறிப்பாகக் கொத்து ரகங்கள் முளைக்கத் தொடங்கும். செடிகளிலிருந்து காய்களைப் பிரிக்க நிலக்கடலை பிரிப்பானைப் பயன்படுத்தலாம். காய்களை 4 அல்லது 5 நாள்வரை வெயிலில் உலர்த்தவேண்டும். 2 அல்லது 3 நாள் இடைவெளியில் 2 அல்லது 3 நாள் காயவைப்பது முழுவதுமான காய்தலுக்கு உதவும். வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது நேரடியாக வெயிலில் காயவைப்பதைத் தவிர்க்க வேண்டும். காய்களைக் கோணிப்பைகளில் கட்டி மணற்பரப்பின் மீது சேகரித்து வைக்கலாம். காய்ந்த காய்களுக்கு ஈரப்பதம் வருவதைத் தவிர்க்க வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories