முட்டைக்கோஸ் சாகுபடி

முட்டைக்கோஸ் சாகுபடி

முட்டைகோஸ்

நாலு பேர் கூட வீட்டிற்கு வந்து விட்டாலோ, பெரியக் கூட்டத்திற்கு சமைக்க வேண்டும் என்றாலோ விரைவில், எளிதில் ஆகும் பொரியலோ, கூட்டோ எது என்றால் முதலில் நினைவுக்கு வந்து நிற்கும் ‘காய்’ முட்டைக்கோசு தான். விரைவில் நறுக்கி அதிவிரைவில் சமைத்துப் பரிமாற ஏற்றக் காய் ‘முட்டைகோசு’. சத்துள்ள, மருத்துவ குணமுடைய முட்டைக்கோஸ் கீரை வகைத் தாவரம்தான். எந்த பந்தியிலும் விருந்திலும், வீட்டிலும் தவறாமல் இடம் பிடிக்கும் முட்டைக் கோஸ் ஏனோ உணவு சுவைஞர்களின் மனதில் இரண்டாம் தர இடத்திலேயே இருந்து வருகின்றது. அதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது, அதன் குறைந்த விலை. முட்டைக்கோசு எப்போதும் நிதானமான விலையிலேயே விற்பனையாகி வரும் காய். ஒருபோதும் விலை உயர்ந்த காய்களின் வரிசையில் இருப்பதில்லை. இரண்டாவது முட்டைக்கோஸிலிருந்து வருகின்ற ஒருவிதமான மணம். இந்த மணத்தையும் பெரும்பாலோர் விரும்புவதில்லை. ஆனாலும் கூட உற்பத்தியிலும் விற்பனையிலும் சக்கைப் போடு போடும் காய் முட்டைகோஸுதான் என்பதில் இரண்டாம் கருத்து இல்லை. ’பிராசிகாசியா’ என்கின்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்த முட்டைக்கோசு ஆரம்ப காலத்தில் ’பிராசிகா ஒலிரேசியா’ என்கின்ற காட்டுவகைத் தாவரமாக இருந்தது. அதை உண்ணலாம் எனக் கண்டறிந்து கொத்தான இலைகளின் வடிவத்திலிருந்ததை ஆய்ந்து, முட்டை அல்லது தலை போன்ற அமைப்புடைய கெட்டியான முட்டைக்கோஸ் 11-ம் நூற்றாண்டில் தான் பயனுக்கு வந்தது. சுமார் 4000 ஆண்டிற்கு முன்னரே மத்திய தரைக் கடல் பகுதியில் காட்டுத் தாவரமாக இருந்து ஐரோப்பாவின் அட்லாண்டிக் கரையை ஒட்டிய பகுதியில் பரவி, வட ஐரோப்பாவில் முதலில் பயிரிடப்பட்டிருக்கிறதாக முட்டைக்கோஸின் மூதாதையரைப் பற்றிய வரலாற்று ஆய்வுகள் சொல்லுகின்றன.

 

முட்டைக்கோஸ் மனித இனக் குழுக்களின் இடப்பெயர்வு நடைபெறும் போது அவர்களுக்குத் தேவையான உணவின் விதைகளும் இடம் பெயர்ந்திருக்கின்றன. ஐரோப்பாவை விட்டு புறப்பட முட்டை கோசு கொஞ்சம் கொஞ்சமாய் இன்று உலகம் முழுவதும் பரவிவிட்டது. பூர்வீகம்தான் ஐரோப்பா. ஆனால் இன்றைய புள்ளி விபரங்கள்படி சீனாதான் உலகில் உற்பத்தி ஆகும் முடைக்கோசுவில் சற்று ஏறக்குறைய 47% அளவு உற்பத்தி செய்கின்றது என்பது வியப்பான செய்திதான். வழக்கம் போல 12% உற்பத்தி செய்து நமது இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கின்றது.

பயிரிடும் முறை

முட்டைக்கோஸ் பயிரை வளமான எல்லா மண்ணிலும் பயிரிடலாம். இதற்கு வடிகால் வசதி மிகவும் அவசியம். வண்டல், செம்மண் நிலங்களில் நன்றாக வளரும். மண்ணின் கார அமிலத்தன்மை ph 5.5 முதல் 6.5 வரை உள்ள நிலங்கள் மிகவும் ஏற்றவை. பொதுவாக இதுபோன்ற பனி மூட்டம் மலைப் பகுதியிலும் கிடைக்கும். தமிழகத்தின் மலையிலும் சமவெளிப் பகுதியிலும் குளிர் மாதங்களில் முட்டைக்கோசுவை பயிர் செய்யலாம். அடுக்கடுக்காக பெரிய இலைகளைக் கொண்டு முட்டை வடிவ அல்லது மனிதத் தலை போன்று இருக்கும் இந்தத் தாவரத்தின் பிரெஞ்சுப் பெயர் Caboche. அதற்கு ’தலை போன்ற’ என்பது பொருள். இதிலிருந்து தான் ஆங்கில வார்த்தையான cabbage எனும் வார்த்தை உருவாகியிருக்கின்றது. முட்டை வடிவத்திலிருந்ததால் தமிழில் இதற்கு முட்டைக்கோசு எனவும் இதைப் போலவே பூக்களாய் இருப்பதால் காலிப்ளவருக்கு பூக்கோசு எனவும் நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது.

இந்த முட்டைக்கோஸை எப்படி சாகுபடி செய்வது என்பதை தெரிந்து கொள்ளும் முன்னர் முட்டைக்கோஸில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

 

100 கிராம் எடையுள்ள முட்டைக்கோசு

சக்தி 25 கிலோ கலோரி மட்டுமே
கார்போஹைட்டிரேட்   எனும் மாவுச் சத்து 5.8 கிராம்
சர்க்கரை 3.2 கிராம்
நார்ச்சத்து 2.5 கிராம்
கொழுப்பு 0.1 கிராம
புரதம் 1.28 கிராம்

வைட்டமின்கள்  நுண்சத்துக்கள்

 

வைட்டமின்கள்

நுண் சத்துக்கள்

B1

5%

சுண்ணாம்பு 4%

B2

3%

இரும்பு 4%

B3

2%

மக்னீசியம் 3%

B5

4%

மாங்கனீசு 8%

B6

10%

பாஸ்பரஸ் 4%

B9

11%

  பொட்டாசியம் 4%

C

44%

  சோடியம் 1%

K

72%

  துத்தநாகம் 2%

’காய்’ என்பதைத் தாண்டி சரித்திர காலம் தொட்டே முட்டைக்கோஸ் ஒரு மருந்து பொருளாகவும் பயன்பட்டு வந்திருக்கின்றது. ரோமானிய படை வீரர்களுக்கு போரில் ஏற்பட்ட காயத்தைச் சுத்தம் செய்து, காயத்தின் மேலே வைத்து கட்ட ஜூலியஸ் சீசர் காலத்திலேயே முட்டைக்கோஸ் இலை பயன்பட்டிருக்கின்றது. சில வகைக் காளான்களால் ஏற்படும் விஷத்தன்மையைப் போக்க முட்டைக்கோஸ் நச்சு முறிவு மருந்தாகவும் பயன்பட்டிருக்கின்றது. அல்சர் போன்ற வயிற்றுப் புண்ணுக்கு முட்டைகோஸ் நல்ல மருந்து. வயிற்றுக்குள் செல்லும் தேவையற்ற திடப்பொருளான குண்டூசி, ஊக்கு போன்றவற்றை அறுவை சிகிச்சையின்றி வெளிக்கொண்டு வர முட்டைக் கோசு ஒரு அருமையான மருந்து. ஆனாலும் சிலருக்கு முட்டைகோஸ் குடலில் செரிமானத்தின்போது வாயுவை உற்பத்திச் செய்து சிரமத்தையும் கொடுக்கின்றது. முட்டைக்கோஸை அளவுக்கு அதிகமாக வேக வைக்கும்போது ’ஹைட்ரஜன் சல்பேடு’ எனும் துர்நாற்றமுள்ள வாயு வெளியேறுகின்றது. இதனால்தான் அநேகர் முட்டைகோஸ் உணவை தவிர்க்கின்றனர்.

நன்மைகள்

 

முட்டைக்கோஸின் பச்சைப் பகுதியாக உள்ள இலைகளில் தான் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளன. சிறிதளவு முட்டைக்கோசு சாப்பிட்டாலே ஒரு நாளைக்கு உடலுக்குத் தேவையான வைட்டமின் ‘சி’ யில் பாதியளவிற்கு கிடைத்துவிடுகின்றது. முட்டைக்கோஸ் கலோரி குறைந்த உணவு. அதனால் ‘டயட்டிங்’ இருப்பவர்களுக்கு முட்டைக்கோஸ் ஒரு நல்ல உணவு. அடிக்கடி முட்டைக்கோஸை உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். முட்டைக்கோஸ் அதிக நார்ச்சத்து உள்ள காய் என்பதால் மலச்சிக்கலை நீக்கி மூல நோயின் பாதிப்பைக் குறைக்கின்றது. முட்டைக்கோஸில் ‘குளுட்டோமைல்’ அதிக அளவில் இருப்பதால் அல்சரை குணப்படுத்தும். அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுவலியை நீக்க பயன்படுகின்றது. மேலும் உடலில் உள்ள பித்த நீரை சமநிலைப்படுத்துகிறது. பெண்கள் ‘மெனோபாஸ்’ காலத்தில் குறையும் சுண்ணாம்பு, பாஸ்பரஸ் சக்தியின் குறைபாட்டை முட்டைக்கோஸை உணவில் சேர்த்துக் கொள்வதனால் சரி செய்யலாம்.

இந்தியாவிற்கு முட்டைக்கோஸ் ஒரு மேல் நாட்டு வரவு. 18-ம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவின் மேற்குக் கடற்கரை வழியே நுழைந்த போர்த்துகீசியர்கள்தான் இந்தியாவிற்கு முட்டைக்கோஸை கொண்டு வந்தனர். தொடர்ந்து வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவின் மலைப்பகுதியில் முட்டைகோஸை பயிரிட துவங்கிக் கொஞ்சம் கொஞ்சமாய் இந்தியாவெங்கும் பரப்பினர். முட்டை கோசுவின் பயன்பாடும் தேவையும் அதிகரிக்கவே, சமவெளியில் விளையில் முட்டைக்கோசு ரகங்களிலும் கண்டறியப்பட்டன.

ரகங்கள்

மலைப்பகுதி ரகங்கள்

செப்டம்பர் எக்லிப்ஸ், பூசா ஒண்டர், பிரைடு ஆஃப் இந்தியா, ஏர்லி ஒண்டர், பூசா ட்ரம்ஹெட் ஓ.எஸ் இராஸ் போன்றவை மலைப் பகுதிக்கான ரகங்கள்.

சமவெளி பகுதி ரகங்கள்

ஏர்லி ஆட்டம்ன் ஜெயண்ட், லார்ஜ் சாலிட், லேட் ட்ரம் ஹெட், கோல்டன் ஏக்கர், ஜெயின், மகாராணி போன்ற ரகங்கள் ‘சமவெளியில்’ பயிரிட ஏற்றவை.

மண்: இது பொதுவாக குளிர் கால பருவங்களில் பயிரிடப்படுகிறது. சமவெளி பகுதிகளில் இது குளிர்காலப் பயிரா சாகுபடி செய்யப்படுகிறது. பலதரப்பட்ட மண் வகைகளிலும் நன்றாக வளரும். இதற்கு மண்ணின் கார அமிலத்தன்மை 5.5 முதல் 6.5 ஆக இருக்க வேண்டும்.

பருவம்

மலைப்பகுதி: ஜனவரி-பிப்ரவரி, ஜீலை-ஆகஸ்ட், செப்டம்பர்-அக்டோபர்

சமவெளிப்பகுதி: ஆகஸ்ட் – நவம்பர்

விதையளவு: 650 கிராம்/ஹெக்டேர்

நாற்றங்கால்

நாற்றங்கால் போடுவதற்கு 100 சதுர அடி நிலம் இருந்தாலே போதுமானது. 15 செ.மீ. உயரம், 1 மீ அகலம், தேவைப்படும் நீளம் கொண்டு விதைப்படுக்கையை உருவாக்கலாம். 2 கிலோ தொழு உரம், 200 கிராம் மண்புழு உரம், 40 கிராம் வி.ஏ.எம். 2008 அசோஜ்பைரில்லம், 2008 பாஸ்போ பாக்டீரியா போன்றவற்றை ஒரு சதுர அடிக்கு அளிக்க வேண்டும். விதைப் படுக்கைகளில் 10 செ.மீ. இடைவெளி விட்டு விதைகளை விதைக்க வேண்டும் . 20-25 நாள் வயதுடைய நாற்றுக்களை 45 செ.மீ. இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். வேர்முடிச்சு நோயால் நிலம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

விதை நேர்த்தி

வயலை தயார் செய்தல்

நிலத்தை பண்பட உழ வேண்டும். மலைப்பகுதிகளில் 40 செ.மீ. இடைவெளி விட்டு குழி தோண்ட வேண்டும். சமவெளிப்பகுதிகளில் 45 செ.மீ. பார் அமைக்க வேண்டும்.

இடைவெளி

மலைப்பகுதி: 40 X40 செ.மீ.

சமவெளிப்பகுதி: 45X30 செ.மீ.

பாசனம்: தொடர்ந்து ஈரப்பதமாக இருக்குமாறு பாசனம் செய்ய வேண்டும்.

உரமிடுதல்

வளர்ச்சி ஊக்கிகள்

 • பஞ்சகாவ்யாவை (3%) பயிரிட்ட ஒரு மாதம் கழித்து 10 நாட்கள் இடைவெளியில் தழைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும்
 • வெர்மிவாஷ் 10%ஐ பயிரிட்ட ஒரு மாதம் கழித்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்
 • மாட்டுக் கொம்பு சிலிக்கா 2.5 கிலோ/ஹெக்டேர் என்ற அளவில் எடுத்து 50 லிட்டர் நீரில் கரைத்து பயிரிட்ட 65 நாட்கள் கழித்து தழைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும்
 • பயிரிட்ட பின் ஆழமாக தோண்டுவது மற்றும் களை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

பூச்சிகள்

வெட்டுப் புழுக்கள்

 • விளக்குப் பொறியை கோடைக் காலத்தில் வயலில் பொருத்துவதால் தாய் அந்துப் பூச்சியை அழிக்கலாம்.
 • தெளிப்பு நீர் வாசன அமைப்பைப் பொருத்தி, பகல் வேளைகளில் பாசனம் செய்வதால் புழுக்களை மண்ணிற்கு வெளியே கொண்டு வரலாம். இவற்றை பறவைகள் உண்டு விடும்.
 • பைரித்ரம் கொல்லி, கோதுமைத் தவிடு, கரும்பு சர்க்கரை (2:1:1) என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்தலாம்.

அசுவிணிகள்

 • வேப்ப எண்ணெய் 3% தெளிக்க வேண்டும்.
 • வேப்ப இலை சாற்றை 110% பயிரிட்ட 45, 60, 75 வது நாளில் தெளிக்கலாம்.
 • கடுகுச் செடியை ஊடுபயிராக 20:1 என்ற விகிதத்தில் பயிரிடலாம்.
 • இனக்கவர்ச்சி பொறியை ஒரு எக்டருக்கு 20 என்ற எண்ணிக்கையில் வயலில் பொருத்தலாம்.
 • பேசில்லஸ் துரியன்ஜினஸ் 2 கிராம்/லிட்டர் என்ற அளவில் எடுத்து தெளிக்க வேண்டும்.
 • வேப்பங்கொட்டை சாற்றை 5% அளவு எடுத்து தெளிக்க வேண்டும்
 • டையாடிக்மா செமிகிளாசம் என்ற ஒட்டுண்ணியை ஒரு எக்டருக்கு 50000 என்ற அளவில் பயிரிட்ட 45,60, 75 வது நாட்கள் கழித்து தழைத் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்.

நோய்கள்

வேர்முடிச்சு நோய்

 • நோயற்ற விதை/நாற்றுக்களை தேர்ந்தெடுக்க வேண்டும்
 • சூடோமோனஸ் ப்ளுரோசென்ஸ் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்தி ஒரு எக்டருக்கு 2.5 கிலே என்ற அளவில் மண்ணில் கலந்து அளிப்பது (அ) ஒரு லிட்டர் நீரக்கு 5 கிராம் என்ற அளிவல் கலந்து நாற்றுக்களை முக்கி எடுத்தோ விதை நேர்த்தி செய்யலாம்
 • பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ளலாம்
 • தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு முட்டைக்கோஸ் இன வகைகளை பயிரிடக் கூடாது
 • டோலமைட் ஒரு எக்டருக்கு 10 கிலோ என்ற அளவில் அளிப்பதால் மண்ணின் கார அமிலத் தன்மையை அதிகரிக்கலாம்

இலைப்புள்ள நோய்

 • 5% மஞ்சூரியன் தேயிலைச் சாற்றை பயிரிட்ட ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு மாத இடைவெளி விட்டு 3 முறை தெளிக்க வேண்டும்
 • தசகாவ்யா 3%ஐ பயிரிட்ட ஒரு மாதம் கழித்து 10 நாட்கள் இடைவெளி விட்டு தழைத் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்
 • சுடுநீரில் (50 செ.மீ.) விதைகளை 30 நிமிடத்திற்கு ஊற வைத்து, பின் உலர்த்தி, விதைக்க வேண்டும்

இலைக் கருகல் நோய்

அக்ரி ஹோட்ரா சாம்பலை (200 கிராம் அக்ரி ஹோட்ரா சாம்பலை ஒரு லிட்டர் மாட்டுக் கோமியத்தில் கரைத்து 15 நாட்கள் ஊற வைத்து, 10 லிட்டர் நீரில் நீர்க்கச் செய்து தெளிக்க வேண்டும் விதைத்த பயிரிட்ட ஒர மாதத்திலிருந்து ஒரு மாத இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்.

கருப்பு அழுகல் நோய்

 • விதைகளை ஸ்டரப்டோசைக்ளின் 100 பிபிஎம்-ஐ 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்
 • ஸ்டரப்டோமைசின் 100 பிபி.எப்.ஐ பயிரிட்ட பிறகு 2 முறை தெளிக்க வேண்டும்

மண் வழியே பரவும் நோய்கள்

 • டிரைக்கோடெர்மா விரிடி 5 கிலோ எக்டர் நிலத்தைத் தயார் செய்யும் போது அளிக்க வேண்டும்
 • சூடோமோனஸ் ப்ளுரோசென்ஸ் 5 கிலோ எக்டர் நிலத்தைத் தயார் செய்யும் போது அளிக்க வேண்டும்

மகசூல்

 • மலைப்பகுதி 150 நாட்களில் ஒரு எக்டருக்கு 70-80 டன்கள்
 • சமவெளிப்பகுதி: 120 நாட்களில் ஒரு எக்டருக்கு 25-35 டன்கள்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories