மாமர அடர் நடவு முறைகள்
தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், தேனி, திருநெல்வேலி, திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் தமிழ்நாட்டில் மாம்பழம் சாகுபடி செய்யும் முக்கியப் பகுதிகள். தோத்தாபுரி, செந்தூரா, நீலம், அல்போன்சா, பீத்தர், மல்கோவா, ருமானி, பங்கனப்பள்ளி, காலப்பாடு போன்றவை தமிழகத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் ரகங்கள்.
ஆண்டுக்கு 1.6 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, 11.56 டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தித் திறன் ஹெக்டேருக்கு 8.7 டன்கள் என்ற அளவில் உள்ளது. நகரமயமாக்குதலில் சாகுபடிப் பரப்பளவு குறைந்து வரும் பயிர்களில், மாவும் ஒன்று. எனவே, தேவைக்கேற்ப குறைந்த பரப்பளவில் அதிக மா உற்பத்தி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
காயாகவும் கனியாகவும் ருசித்து மகிழக்கூடிய பழங்களில் மா முக்கியத்துவம் வாய்ந்தது. மரங்களில் இருந்து அறுவடை செய்யும் மாங்காய்கள், பழுக்க வைத்துச் சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மாம்பழம், மாங்கூழ் ஆகிய ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு ரூ.100 கோடி மேல் அந்நிய செலாவணி ஈட்டப்படுகிறது. சந்தையில் வரத்து அதிகரித்துக் காணப்படும்போது மாம்பழங்கள் விற்பனை குறைந்து அழுகி வீணாவதைத் தடுக்க பழச்சாறு, பழக்கூழ் போன்றவை தயாரிக்கப்பட்டு மதிப்புகூட்டிய பொருட்களாக விற்கப்படுகின்றன.
இதேபோல் மாங்காய் ஊறுகாய் தயாரித்து நீண்ட நாட்கள் வைத்துப் பயன்படுத்துகிறார்கள். சிறு, சிறு துண்டுகளாக நறுக்கப்பட்டு தாளித்து எடுக்கப்படும் மாங்காய் ஊறுகாய் போல பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு காயாகவும், கனியாகவும் மக்களின் உணவில் பங்களிப்பதில் மா முக்கியப் பங்காற்றுகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தோட்டக்கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள பழப்பண்ணையில், மாவில் அடர் நடவு மேற்கொள்வதற்கான வழிமுறைகளைக் கூறும் செயல் விளக்கத் திடல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொழில்நுட்பத் திடல்
“நவீனத் தோட்டக்கலைத் தொழில் நுட்பமான அடர் நடவு முறையானது, பழப் பயிர் சாகுபடிக்கென உருவாக்கப்பட்டது. இம்முறையில் வழக்கமான நடவு முறையைக் காட்டிலும், மிக நெருக்கமாக நடவு செய்யப்பட்டு அத்துடன் மேம்படுத்தப்பட்ட தோட்டக்கலைத் தொழில்நுட்பங்களை இணைத்து, இடுபொருட்களான சூரிய ஒளி, நீர், ஊட்டச்சத்துகளைப் பயன்படுத்தி, அதிக மகசூல் பெறப்படுகிறது.
மா அடர் நடவு முறையில் சொட்டு நீர்ப்பாசனம், நீர்வழி உரமிடல், கிளைப் படர்வை மாற்றியமைக்கும் உருவமைப்பு, கவாத்து ஆகிய தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. இதன் மூலம் குறுகிய கால, அதிக, நிலையான சாகுபடியைச் செய்ய முடிகிறது. அந்த வகையில் மாவில் அடர் நடவு மேற்கொள்வதற்குச் செயல்விளக்கம் அளிக்கும் வகையில் இப்பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையப் பழப்பண்ணையில் 1.6 ஏக்கர் பரப்பளவில் 800 மா கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இந்தத் திடல் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், விவசாயிகள் ஆகியோர் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதற்கும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் துணையாக இருக்கும்” என்கிறார் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் என்.குமார்.
“மாவில் அடர் நடவு மேற்கொள்வதற்கான செயல் விளக்கத் திடலில், மா மரங்களுக்கான இடைவெளியைக் குறைக்கும் வகையில், மா மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. வழக்கமான மா நடவு முறையில் 10X10 மீட்டர் இடைவெளியில் நடவு செய்யப்படுகிறது. இதன் மூலம் ஹெக்டேருக்கு 40 மரங்கள் மட்டுமே பராமரிக்கப்படுகின்றன. ஆனால், அடர் நடவு முறையில் வரிசைக்கு வரிசை 4 மீ. இடைவெளியும், செடிக்கு செடி 2 மீ.
இடைவெளியும் இருக்குமாறு நடவு செய்யப்படுகிறது. இதன் மூலம் 1.6 ஹெக்டேரில் 800 மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. சேலம் பெங்களூரா, இமாம் பசந்த், பங்கனப்பள்ளி, பெங்களூரா ஆகிய ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன. மேல் மட்ட, கிடைமட்ட பரப்பு முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது.
நீரின் பயன்பாட்டுத் திறன் அதிகரிப்பதால், பாசன நீரின் தேவை 50 சதவீதம் குறைக்கப்படுகிறது. மரத்தின் வேர்ப்பகுதியில் மட்டும் நீர் பாய்ச்சப்படுவதால், களைகளின் தாக்கம் குறைகிறது. உரப் பயன்பாட்டுத் திறன் மேம்படுவதால், பரிந்துரைக்கப்பட்ட உரத்தேவையில் 30 சதவீதம் சேமிக்கப்படுகிறது.
இம்முறையால் மாவின் உற்பத்தித்திறன் 2-3 மடங்கு அதிகரிக்கும். ஏக்கருக்கு 5 முதல் 12 டன் வரையிலும், ஹெக்டேருக்கு 12.50 முதல் 30 டன்கள் வரையிலும் உற்பத்தியைப் பெற முடியும். ஆரம்பக் கட்டத்தில் ஊடுபயிர் சாகுபடி மேற்கொள்ளலாம். இதனால் மாவில் அடர் நடவுச் சாகுபடி மேற்கொள்வது விவசாயிகளுக்கு லாபகரமானதாக அமையும்” என்று நடவு முறை குறித்து நம்மிடம் விளக்கினார் தோட்டக்கலை கல்லூரி, ஆராய்ச்சி நிலைய முதல்வர் எல்.புகழேந்தி.
நன்றி: முதல்வர் எல்.புகழேந்தி.