மா சாகுபடி!

மா சாகுபடி!

 

மா சாகுபடி!

ந்திய மாநிலங்கள் அளவில் மா சாகுபடிப் பரப்பில் ஆறாம் இடத்திலும் உற்பத்தித் திறனில் இரண்டாம் இடத்திலும் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் 1,25,104 எக்டர் பரப்பில் மாமரங்கள் உள்ளன.

இரகங்கள்

பெங்களூரா நீலம், ருமானி, பங்கனப்பள்ளி, செந்தூரம், அல்போன்சா, சேலம் பெங்களூரா, மல்கோவா, காலேபாடு, பாதிரி, பஞ்சவர்ணம், இமாம்பசந்த், குதாத், ஆலம்பூர் பனேசான், பெரியகுளம்1, பெரியகுளம்2, பையூர்1.

மண்

மா சாகுபடிக்கான மண் கண்டம், ஆறடி ஆழமும், ஒரே மாதிரியான மண் கட்டமைப்புடனும் இருக்க வேண்டும். மா சாகுபடி நிலங்கள் பெரும்பாலும் செம்மண் கலந்த இருமண் நிலங்களாகவே உள்ளன. மண்ணின் அமில காரத்தன்மை 6.5-8.0 க்குள் இருக்க வேண்டும்.

பருவம்

மழைக்காலமான ஜூன் முதல் நவம்பருக்குள் ஒட்டுக் கன்றுகளை நட வேண்டும். இதனால், வெய்யில் காலம் வருவதற்குள் கன்றுகள் நன்கு வேர் விட்டு வளரும்.

இடைவெளி

நன்கு உழுது சமப்படுத்திய நிலத்தில் பொதுவாக 7×10 மீட்டர் இடைவெளி, செம்மண் நிலமெனில் 10×5 மீட்டர் இடைவெளியில் நடலாம். இதற்கு ஒரு மீட்டர் நீள, அகல, ஆழமுள்ள குழிகளை எடுத்து, குழிக்கு 10 கிலோ தொழு உரம் மற்றும் 100 கிராம் லிண்டேன் 1.3% தூள் வீதம் இட்டு, கன்றுகளை நட வேண்டும்.

உர நிர்வாகம்

ஐந்து வயது மரங்களுக்கு 100 கிராம் வீதம் அசோஸ்பைரில்லம், அசட்டோபாக்டர் ஆகிய நுண்ணுயிர் உரங்களைத் தொழுவுரத்தில் கலந்து இட வேண்டும். இரண்டு ஆண்டுக்குள் கன்றுகள் செழித்து வளரும் வகையில் நன்கு பராமரிக்க வேண்டும்.

கவாத்து

மாங்கன்றுகள் 60 செ.மீ. உயரம் வளரும் வரையில் கிளைகளைக் கழித்துவிட வேண்டும்.  மாமரங்களை ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் கவாத்து செய்ய வேண்டும். தரையில் தொங்காத வகையில், கிளைகளை வெட்டி நீக்க வேண்டும். சீராக மகசூலைத் தராத வயதான மாமரங்களைக் கவாத்து செய்தால், அவற்றின் காய்ப்புத் திறனைக் கூட்டலாம்.

ஊடுபயிர்

நடவு முதல் 4-5 ஆண்டுகள் வரையில், சோளம், இராகி, சாமை, துவரை, பாசிப்பயறு, காராமணி, மொச்சை, கொள்ளு, நிலக்கடலை ஆகியவற்றை ஊடுபயிராகப் பயிரிட்டுக் கூடுதல் வருமானம் பெறலாம்.

வளர்ச்சியூக்கி

மாவில் பிஞ்சுகள் அதிகமாகக் கொட்டுவதைத் தடுக்க, என்.ஏ.ஏ. என்னும் தாவர வளர்ச்சி ஊக்கியை, ஒரு லிட்டர் நீருக்கு 20 மில்லி கிராம் வீதம் கலந்து, பிஞ்சுகள் பட்டாணி மற்றும் நெல்லிக்காய் அளவுகளில் இருக்கும் போது தெளிக்க வேண்டும், அல்லது பிளானோபிக்ஸ் என்னும் வளர்ச்சி ஊக்கியை, 2 மி.லி.க்கு 4.5 லிட்டர் நீர் வீதம் கலந்து தெளிக்கலாம். பூக்கள் மலர்வதற்கு, ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் வீதம் யூரியாவைக் கலந்து தெளிக்கலாம். பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்க, 2 சத பொட்டாசியம் நைட்ரேட் கரைசலைத் தெளிக்கலாம்.

பாதுகாப்பு: பூச்சிகள்

தத்துப்பூச்சி: சாற்றை உறிஞ்சும் தத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு பாசலோன் 1.5 மி.லி., அல்லது கார்பரில் 3 கிராம் அல்லது பாஸ்போமிடான் 1 மி.லி. அல்லது அசபேட் 1 கிராம் வீதம் கலந்து, பூக்கும் போதும், மீண்டும் 10 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.

சிவப்புத்துளைப்பான்: இதைக் கட்டுப்படுத்த, ஒரு தேக்கரண்டி கார்பரில் அல்லது கார்போபியூரானை, வண்டு துளைத்த துளைகளில் இட்டு களிமண்ணால் மூடிவிட வேண்டும். மரத்தண்டு மற்றும் கிளைகளில், ஆண்டுதோறும் கார்பரில் 50 சதத் தூளைப் பூச வேண்டும். காய்ந்த கிளைகளை நீக்கி, அவற்றில் வாழும் சிறிய புழுக்களை அழிக்க வேண்டும். சேதம் மிகுந்த மரங்களின் வேர் அல்லது தண்டுப்பட்டை மூலம் மோனோ குரோட்டோபாஸ் மருந்தைச் செலுத்தியும் கட்டுப்படுத்தலாம்.

பழ ஈ: இதைக் கட்டுப்படுத்த, மரத்தின் கீழேயுள்ள மண்ணைக் கிளறி, வேப்பம் புண்ணாக்கை இட்டுக் கூட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.  மீத்தைல் யூஜினால் என்னும் கவர்ச்சி மருந்தைப் பயன்படுத்தியும் ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம். காய்கள் சிறியளவில் இருக்கும் போது, 2 சத வேப்பெண்ணெய்க் கரைசலைத் தெளித்தால் ஈக்களின் வருகை குறையும்.

பழவண்டு: இதைக் கட்டுப்படுத்த, பூ மொட்டுக் காலம் முதல் கோலிக்குண்டு அளவில் காய்கள் உருவாகும் வரையில், பென்தியான் 100% மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

மலர்களைப் பிணைக்கும் புழு: இதைக் கட்டுப்படுத்த, பாசலோன் 0.07% மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

நோய்கள்

சாம்பல் நோய்: இதைக் கட்டுப்படுத்த, பூக்கள் விடுவதற்கு முன்பும், பிஞ்சுகள் வந்த பிறகும், மரத்துக்கு 500-1,000 கிராம் கந்தகத்தூளைத் தூவ வேண்டும். மரம் பூக்கும்போது, ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் கார்பரில், 2 கிராம் கரையும் கந்தம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். பத்து நாட்கள் கழித்து மீண்டும் தெளிக்க வேண்டும்.

பறவைக்கண் நோய்: இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2.5 கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது 2 கிராம் மேங்கோசெப் வீதம் கலந்து, நோயுற்ற சிறு கிளைகளை அகற்றிய பிறகு தெளிக்க வேண்டும்.

அறுவடை

மார்ச்-ஜூன் காலத்தில் மா அறுவடைக்கு வரும். 15 ஆண்டுகள் வரையில் எக்டருக்கு 8-10 டன் மகசூலும், 16-20 ஆண்டுகள் வரையில் 15-20 டன் மகசூலும் கிடைக்கும்.

முனைவர் இரா.வேலுசாமி, இணைப் பேராசிரியர், வேளாண்மை விரிவாக்கம் மற்றும் ஊரகச் சமூகவியல் துறை, வேளாண்மைக் கல்லூரி, மதுரை – 625 104.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories