சம்பங்கி, அரளி, காட்டு மல்லி, செவ்வந்தி… மலர்ச் சாகுபடியில் மணக்கும் லாபம்!

 

“எனக்கு விவசாயத்துல ரொம்ப ஆர்வம். படிப்பு முடிஞ்சதும் உடுமலைப்பேட்டை, தீபாலப்பட்டி கிராமத்துல இருக்குற எங்க பூர்வீக தோட்டத்துல பீட்ரூட் சாகுபடி செஞ்சுட்டுருந்தேன். போதிய மழை இல்லாம விவசாயம் நலிஞ்சு போச்சு. அதனால, விவசாயத்தை விட்டுட்டு வேற தொழிலுக்கு மாறிட்டேன். நான் ஆரம்பத்துல இருந்தே பசுமை விகடனைப் படிச்சுட்டு வர்றேன். அதைப் படிக்கப்படிக்க கொஞ்சம் கொஞ்சமா இயற்கை விவசாயம் மேல ஆர்வம் அதிகரிக்க ஆரம்பிச்சது.
எங்க பூர்வீக நிலத்துல தண்ணி பற்றாக்குறை இருந்ததால, வருஷம் மூணு லட்ச ரூபாய்னு குத்தகை பேசி இந்த 12 ஏக்கர் நிலத்தை எடுத்து மலர் விவசாயத்துல இறங்கினேன். இது கரும்பும் நெல்லும் வெளையக்கூடிய நல்ல வளமான வண்டல் மண் பூமி. வாய்க்கால் பாசனம் உண்டு. அதுபோக கிணறும் இருக்கு.
என்னோட விவசாய ஆசையைத் தெரிஞ்சுகிட்டதும், அக்கா பேபி, அக்கா வீட்டுக்காரர் ஆனந்த கிருஷ்ணன், அக்கா பையன் பாலாஜி, சித்தப்பா மௌனகுருசாமி நாலு பேரும் சேர்ந்துகிட்டாங்க. இவங்க நாலுபேரும்தான் முழுசா பண்ணையை நிர்வாகம் செய்றாங்க” என்ற சத்தியநாதன், தோட்டத்தைச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேசினார்.
“இது பல வருஷமா கரும்பு மட்டுமே விளைஞ்சுட்டுருந்த பூமி. கரும்புக் கட்டைகளால் இறுகிக் கிடந்த மண்ணை உழவு செஞ்சு பொலபொலனு மாத்தி, ஆறு ஏக்கர் நிலத்துல சம்பங்கி, மூணு ஏக்கர் நிலத்துல அரளி, ஒரு ஏக்கர் நிலத்துல காட்டு மல்லினு நடவு செஞ்சுருக்கோம். முழுசா இயற்கை விவசாயம்தான் செஞ்சுட்டுருக்கோம். மீதி நிலத்துல செண்டுமல்லி, செவ்வந்தி, கோழிக்கொண்டைனு நடவு செஞ்சுருக்கோம். இயற்கைமுறையில பூக்கள் நல்லா விளையுது. விடியற்காலையில் பூக்களை அறுவடை செய்றதுக்காக வேலை செய்றவங்க நெத்தி பேட்டரி போட்டு பூ பறிக்கிறாங்க.
பூ சாகுபடிக்கு ஆள்கள் அதிகம் தேவைங்கிறதால தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவங்களையும், வட மாநில ஆளுங்களையும் வேலைக்கு வெச்சுருக்கோம். அவங்க பண்ணையிலேயே தங்கிக்கிறாங்க. அவங்களுக்காக இங்க ஷெட் அமைச்சுருக்கோம். மாசச் சம்பளத்தோடு மூணுவேளை சாப்பாடு, டீ, மருத்துவச்செலவு எல்லாத்தையும் நாங்களே பார்த்துக்கிறோம். அவங்களை அக்கா பேபியும் சித்தப்பா மௌனகுருசாமியும்தான் பார்த்துக்கிறாங்க” என்ற சத்தியநாதன் மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொன்னார். “கோயம்புத்தூர், திருப்பூர், உடுமலைப் பேட்டை, ராஜபாளையம்னு நாலு ஊர்கள்ல இருக்குற சந்தைகளுக்குத் தினமும் பூக்களை அனுப்புறோம்.
போன வருஷம் (2017) ஜனவரி மாசத்துல இருந்து டிசம்பர் மாசம் வரைக்குமான ஒரு வருஷத்துல 1,727 கிலோ காட்டுமல்லி பூ மகசூல் கிடைச்சது. அதை விற்பனை செஞ்சது மூலமா 4,33,000 ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு. ஒரு வருஷத்துல மொத்தம் 6,147 கிலோ செண்டுமல்லி மூலமா 2,82,000 ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு. ஒரு வருஷத்துல மொத்தம் 3,650 கிலோ கோழிக்கொண்டை மூலமா 1,68,000 ரூபாய் கிடைச்சுருக்கு. ஒரு வருஷத்துல மொத்தம் 2,110 கிலோ செவ்வந்தி மூலமா 2,32,000 ரூபாய் கிடைச்சுருக்கு. ஒரு வருஷத்துல மொத்தம் 32,250 கிலோ சம்பங்கி மூலமா 35,16,382 ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு. ஒரு வருஷத்துல மொத்தம் 23,348 கிலோ அரளி மூலமா 27,50,000 ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு.
ஆக, 12 ஏக்கர் நிலத்துல பலவிதமான பூக்களைச் சாகுபடி செஞ்சது மூலமா போன வருஷம் ஜனவரி மாசத்துல இருந்து டிசம்பர் மாசம் வரை மொத்தம் 73,81,382 ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு. இதுல குத்தகை உள்பட எல்லாச் செலவும் போக 23,75,000 ரூபாய் லாபமாகக் கிடைச்சுருக்கு” என்ற சத்தியநாதன் நிறைவாக,
“எங்க பகுதியில பூ சாகுபடியே கிடையாது. இருந்தும் துணிச்சலா இயற்கை முறையில பூ சாகுபடியில இறங்கினோம். பசுமை விகடனைப் படிச்சு சரியான முறையில் பராமரிச்சதால நல்ல லாபம் எடுக்க முடியுது. சரியான பாதையில் போனா கண்டிப்பா விவசாயம் லாபமான தொழில்தான்” என்றார்.
தொடர்புக்கு,
டி.சத்தியநாதன்,
செல்போன்: 86674 65813,
97501 99222
இயற்கை மலர்ச் சாகுபடி பாடம்!
ஒரு ஏக்கர் நிலத்தில் சம்பங்கி மற்றும் அரளி ஆகியவற்றைச் சாகுபடி செய்யும்முறை குறித்துச் சத்தியநாதன் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே…
சம்பங்கி :
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தில் 8 டன் ஆட்டு எருவைக் கொட்டி நன்றாக உழவு செய்ய வேண்டும். பிறகு 3 அடி அகலம், முக்கால் அடி உயரம் என்ற அளவில் மேட்டுப்பாத்திகளை அமைக்க வேண்டும். நிலத்தின் அமைப்பைப் பொறுத்துப் பாத்திகளின் நீளத்தை அமைத்துக் கொள்ளலாம். மேட்டுப்பாத்தியில் ஓர் அடி இடைவெளியில் விதைநேர்த்தி செய்த சம்பங்கி விதைக்கிழங்குகளை விதைக்க வேண்டும். விதைக்கும்போது ஒவ்வொரு குழியிலும் 1 கிலோ தொழு உரம், 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கு கலந்த கலவையைப் போட்டு விதைக்க வேண்டும் (ஒரு ஏக்கர் நிலத்தில் நடவு செய்ய 600 கிலோ விதைக்கிழங்கு தேவைப்படும்).
பிறகு, தண்ணீர் வசதியைப் பொறுத்து பாசன அமைப்புகளைப் பொருத்திக்கொள்ள வேண்டும் (இவர் தெளிப்புநீர்ப் பாசனக்குழாய்களை அமைத்துள்ளார்). நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் கொடுத்து வர வேண்டும். நடவு செய்ததிலிருந்து மாதம் ஒருமுறை களைகளை அகற்றி வர வேண்டும். கடலைப்பிண்ணாக்கு 15 கிலோ, பருத்தி விதைப் பிண்ணாக்கு 30 கிலோ ஆகியவற்றை 3 நாள்கள் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அந்தக் கலவையுடன் தலா 500 கிராம் அசோஸ் பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா ஆகிய உயிர் உரங்களைச் சேர்த்து 200 லிட்டர் தண்ணீரில் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். நடவுசெய்த முதல் மாதம், ஒவ்வொரு செடியின் தூர்பாகத்திலும் இந்தக் கலவையில் சிறிதளவு ஊற்ற வேண்டும்.
நடவுசெய்த இரண்டாம் மாதம் 500 கிலோ மண்புழு உரத்தை அனைத்துச் செடிகளின் தூரிலும் பகிர்ந்து வைக்க வேண்டும். மூன்றாம் மாதம் 150 லிட்டர் தண்ணீரில் 10 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து கைத்தெளிப்பானமூலம் தெளிக்க வேண்டும்.
நான்காம் மாதம் 5 டன் ஊட்டமேற்றிய தொழு உரத்தை அனைத்துச் செடிகளின் தூரிலும் பகிர்ந்து வைக்க வேண்டும். ஐந்தாம் மாதம், 100 லிட்டர் தண்ணீருக்கு 10 லிட்டர் அமுதக்கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, ஒவ்வொரு செடியின் தூரிலும் ஒரு லிட்டர் அளவு ஊற்ற வேண்டும். நடவு செய்த ஆறாம் மாதம், தழை மணி சாம்பல் சத்துகள் அடங்கிய 250 கிலோ இயற்கை உரத்தை அனைத்துச் செடிகளின் தூரிலும் பகிர்ந்து வைக்க வேண்டும். தொடர்ந்து மாதம் ஒருமுறை இந்த இடுபொருள்களைச் சுழற்சி முறையில் கொடுத்து வர வேண்டும்.
சம்பங்கியில் நுனிக்கருகல் நோய் தாக்கினால்… 100 கிராம் சூடோமோனஸ் திரவ உரத்துடன் 200 மில்லி புளித்தமோர் சேர்த்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்கினால்… 1 லிட்டர் புங்கன் எண்ணெய், 4 லிட்டர் வேப்பெண்ணெய் ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் ஊற்றி, அதனுடன் 50 கிராம் காதி சோப் கலந்து தெளிக்க வேண்டும். சம்பங்கியில் நடவுசெய்த ஆறாம் மாதத்திலிருந்து பூக்கள் கிடைக்கத் தொடங்கும். தொடர்ந்து மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை பூக்களை அறுவடை செய்யலாம். அதன் பிறகு, கிழங்குகளைத் தோண்டி எடுத்து மறு நடவுசெய்யலாம். அந்தச் சமயத்தில் கிழங்குகள்மூலமாகவும் ஒரு வருமானம் பார்க்க முடியும்.
அரளி :
சம்பங்கிக்குத் தயார் செய்வதுபோலவே அரளி நடவுக்கும் நிலத்தைத் தயார் செய்துகொள்ள வேண்டும். வரிசைக்கு வரிசை 14 அடி, செடிக்குச் செடி 4 அடி என்ற இடைவெளியில் நாட்டு ரக அரளி நாற்றுகளை நடவுசெய்ய வேண்டும் (இவர் சேலம் அரளி என்ற நாட்டு ரகத்தை நடவு செய்துள்ளார்). தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துப் பாசனம் செய்ய வேண்டும். செடிகள் வளர்ந்துவரும் சமயத்தில் 3 மாதங்களுக்கு ஒருமுறை பக்கக் கிளைகளை ஒடித்து விட வேண்டும். சம்பங்கிக்குச் செய்வதுபோலவே அரளிக்கும் இடுபொருள்கள் கொடுப்பது மற்றும் பராமரிப்புப் பணிகளைச் செய்து வர வேண்டும். நடவுசெய்த ஆறாம் மாதத்திலிருந்து பூக்களை அறுவடை செய்யலாம். அரளியை மொட்டுக்களாகவே பறித்து விட வேண்டும்.”
விதைநேர்த்தி!
நாட்டுப்பசுஞ்சாணம் 5 கிலோ, பசுமாட்டுச் சிறுநீர் 5 லிட்டர், சுத்தமான கல்சுண்ணாம்பு தூள் 50 கிராம், நிலத்தின் வளமான மண்ணில் ஒரு கைப்பிடி ஆகியவற்றை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை ஊற விட வேண்டும். இதுதான் பீஜாமிர்தக் கரைசல்.
விதைக்கிழங்குகளை இரண்டு மணி நேரம் இக்கரைசலில் ஊற வைத்து எடுத்து நடவு செய்ய வேண்டும். நாற்றுகளின் வேர்ப்பகுதிகளையும் இக்கரைசலில் மூழ்க வைத்து நடவு செய்யலாம். இப்படிச் செய்வதன் மூலமாக வேர் சம்பந்தமான நோய்கள் தாக்குதலிலிருந்து பயிர்கள் காப்பாற்றப்படும்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories