உடல் நலம், மண்வளம் பாதுகாக்கும் வகையில் இயற்கை விவசாயம்

மதுரையைச் சேர்ந்த பார்த்தசாரதி, வாடிப்பட்டி அருகே திருவாலவாயநல்லூரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.

இப்பகுதியில் ரசாயன உரங்களை பயன்படுத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

E_1374641912அவர்களுக்கு இடையில் 8 ஆண்டுகளாக முற்றிலும் இயற்கை வழி விவசாயத்தை மேற்கொண்டுள்ள பார்த்தசாரதி, “ரசாயன உரங்களால் உடல்நலத்துக்கு கேடு விளைகிறது. எனவே இயற்கை உரங்களை பயன்படுத்துகிறேன்,’ என்கிறார்.

திருவாலவாயநல்லூரில், 25 ஏக்கரில் இவரது விவசாய நிலம் பரந்து விரிந்துள்ளது.
பெரும்பாலும் தென்னை மரங்களே நிறைந்துள்ளன. அவர் தென்னையின் காய்களை மட்டுமே பறிக்கிறார்.
அடிமுதல் நுனிவரை பயன்படும் தென்னையின் ஓலைகள், மட்டைகள் எதையும் அவர் தொடுவதில்லை.
அவை அப்படியே மரங் களினூடே தரையில் கிடந்து, மண்ணோடு மண்ணாக மக்கிப் போகின்றன. இதனால் நுண்ணூட்டச்சத்துக்கள் அப்படியே மண்ணில் தங்குகின்றன என்றார் .
இதேபோல 2 ஏக்கரில் காய்கறிகள் பயிரிட்டுள்ளார். சுரை, புடலை போன்றவை படர்ந்து வளர்வதற்காக முந்திரி காடுகளில் உள்ளதைப் போல, கம்பியால் பின்னியுள்ளார்.
தண்ணீர் சிக்கனத்திற்காக அவற்றிற்கு சொட்டு நீர்ப்பாசன முறை வசதியை ஏற்படுத்தியுள்ளார்.
பார்த்தசாரதி கூறியதாவது:

நம்முன்னோர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வை நடத்தியதால்தான் ஆரோக்கியத்தை பெற்றிருந்தனர்.
வெளிநாடுகளில் இருந்து ரசாயன உரத்தை பெற்று பயன்படுத்த துவங்கியது முதல் மண்வளம் பாதித்துவிட்டது என்றார் .
மண்ணில் பயிர்களுக்குத் தேவையான நுண்ணுயிர்கள் அழிந்து விட்டன. இதனால் மகசூல், விளைபொருட்களில் சத்துக்கள் பாதிக்கப்படுகிறது.
எனவேதான், நாங்கள் பயிர்களில் இருந்து கிடைக்கும் பலனை பெற்றுக் கொள்கிறோம். இலை, தளைகளை அப்படியே மண்ணில் மக்கிப் போகும்படி செய்கிறோம். இதனால் நுண்ணூட்டச்சத்து, தழைச்சத்து பயிர்களுக்கு கிடைக்கிறது.
இதுதவிர பயிர்களுக்கு ரசாயன பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்துவதில்லை.
பஞ்சகாவ்யம், வேப்பம் பிண்ணாக்கு மட்டுமின்றி, வேம்பு எண்ணெயை 20 சதவீதம் தண்ணீருடன் கலந்து பூச்சிமருந்தாக பயன்படுத்துகிறோம்.
பால் வடியும் தாவரங்களில் இருந்து பாலை பெற்று, அவற்றை பயிர்களில் தெளிப்போம். அது நல்ல பூச்சிக் கொல்லியாக செயல்படுகிறது.
தேங்காய் பால், மோர் கலந்து தேமூர் கரைசல் சிறந்த ஊக்கியாக செயல்படும்.
மீன்கழிவுகளில் மண்டை வெல்லம் கலந்து
15 நாட்கள் காற்றுப் புகாத வகையில் இறுக்கமாக கட்டி வைத்துவிடுவோம். மீனோஅமிலமாக அதையும் பயிர்களுக்கு பயன்படுத்துகிறோம்.
கடந்த 2 ஆண்டுகளாக இப்பகுதியில் மழை இல்லை. நிலங்களில் ஈரப்பதமும், நிலத்தடி நீரும் இல்லை. ஆனாலும் சொட்டு நீர்ப்பாசனம் பயன்படுத்துவதாலும், தென்னை நார்க்கழிவுகளை மரங்களினூடே போட்டு, தண்ணீர் பாய்ச்சுவதாலும், நீண்ட நாட்கள் நிலத்தில் ஈரம் தங்குகிறது.
இதனால் வறட்சியிலும் பயிர்கள் தாக்குப்பிடிக்கின்றன.
இதுபோல் இயற்கை விவசாயத்தில் விளையும் பொருட்களை விற்பனையும் செய்கிறோம்.
மதுரை நாவலர் நகரில் வியாபாரம் செய்கிறோம். கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 25, பீர்க்கு 20, தேங்காய் 5, வாழைப்பழம் ஒன்று 4, கரும்பு வெல்லம் 30, கைக்குத்தல் பொன்னி அரிசி 45க்கு வழங்குகிறோம். இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இவரை தொடர்பு கொள்ள: 09942506253.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories