கற்பகத்தரு என்னும் பனை மரம்……

புராணங்களில் வேண்டுபவர்களுக்கு வேண்டியனவெல்லாம் கொடுக்கின்ற,ஒரு தேவலோகத்து மரம் தான் கற்பகத்தரு. தேவலோகத்து கற்பகத்தருபோல பூவுலகத்துக் கற்பகத்தருவாக அழைக்கப்படுவது பனை மரம்.

நுனியிலிருந்து நிலத்தின் கீழுள்ள வேர் வரையிலும்,முளைவிட ஆரம்பித்ததிலிருந்து,வெட்டி வீழ்த்தப்பட்டபின்னரும் நெடுங்காலத்துக்குப் பயன்தருவதால் பனை மரத்தை கற்பகத்தரு என முன்னோர்கள் அழைத்தனர்.இதன் தாவரவியல் பெயர் பொராசஸ் பிலபெலிபேரா.

பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை,இயற்கையிலே தானாகவே வளர்ந்துபெருகுகின்றன.பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. இதன் உச்சியில்,கிட்டத்தட்ட 30 – 40 விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.

ரு காலத்தில் பனைமரங்களின் பயன்பாடு அதிகமாக இருந்தது. இப்போது அதன் பயன்பாடு குறைந்துவிட்டது.அரசும்,மக்களும் பனை மரங்களில் இருந்துகிடைக்கும் உணவுப் பொருள்களை முறையாக சந்தைப்படுத்தாததால் இதன் முக்கியத்துவம் குறைந்துவிட்டது.

ஆசிய நாடுகளில்தான் பனை மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. இந்தியாவில்,கேரளம்,கோவா,மும்பை தொடக்கம் முதல் குஜராத் வரையுள்ள பிரதேசங்கள், தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை போன்ற இடங்கள் உள்பட சென்னை வரை பனைகள் காணப்படுகின்றன.இந்தியாவில்மொத்தம் 8.59 கோடி பனைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 5.10 கோடி பனைகள் தமிழ்நாட்டில்தான் உள்ளன.

1960-களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இலங்கையின் வடபகுதியில் சுமார் 70 லட்சம் பனை மரங்கள் வரை இருந்தனவாம். அண்மைக்கால உள்நாட்டுப் போர் காரணமாகவும், நிலத்தேவைகள் காரணமாகவும் ஏராளமான பனைகள் அழிந்துவிட்டதாகத் தெரிகிறது. உள்நாட்டுப் போரினால் மட்டும், 25 லட்சம் பனைகள் வரை அழிந்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.அண்மைக் கணக்கெடுப்பு ஒன்றின்படி,30 லட்சம் பனைகள் இருக்கக்கூடுமெனத் தெரியவருகிறது.

இலங்கையில் இருந்து பதனீர், கள் போன்றவை பதப்படுத்தப்பட்டு பாட்டில்களில் அடைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது.

தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களைக் குடித்து உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளும் இளைஞகள் மாற்றுப் பானமாக பதநீரைப் பருகலாம்.பதநீர் விற்பனையை அதிகரித்து,அதை ஏற்றுமதி செய்தால் கிராம மக்களின் பொருளாதாரம் ஏற்றம் பெறும்.

பனையிலிருந்து கட்டடங்களுக்கு வேண்டிய பல கட்டடப் பொருள்கள் மற்றும் தும்பு,நார் முதலியவற்றிலிருந்து செய்யப்படும் பல்வேறு பயன்படு பொருள்களையும் பனையிலிருந்து பெற முடியும். பொதுவாக, இது வளரும் இடங்களில் எல்லாம், வசதியற்ற ஏழை மக்களின் பொருளாதார நிலை உயர அடித்தளமாக விளங்குகிறது.

பனை மரத்தில் இருந்து ஆண்டொன்றுக்கு பதனீர்-180 லிட்டர், பனை வெல்லம் -25 கிலோ,பனங்கற்கண்டு -16 கிலோ, தும்பு -11.4 கிலோ, ஈக்கு – 2.25 கிலோ,விறகு- 10 கிலோ,ஓலை- 10 கிலோ, நார்- 20 கிலோ ஆகியவை கிடைக்கின்றன.

பனையிலிருந்து கிடைக்கும் பல உப உணவுப்பொருள்களில் மனிதர்களின் உணவும்,விலங்குகளின் உணவும் அடங்கும். கட்டடப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள்,வீட்டு உபயோகப் பொருள்கள் என பல பொருள்கள் பனையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

முற்காலத்தில் பனை ஓலைகளே எழுதப் பயன்பட்டு வந்தன.இன்றும் பல பழைய நூல்களைப் பனை ஓலைச் சுவடிகள் வடிவிலே காணலாம். அன்றைய காலனி ஆதிக்க நாடுகளான இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் போன்றவற்றில் உள்ள நூலகங்களில் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களின் முதல் பிரதி ஓலைச்சுவடிகள் இந்தியாவால் மீட்க முடியாமல் சிறைபட்டுக் கிடக்கின்றன.

அச்சுத்துறை இல்லாத காலத்தில் உருவான உலகம் போற்றும் திருக்குறள், தொல்காப்பியம்,சிலப்பதிகாரம் உள்ளிட்ட அனைத்து தமிழ் இலக்கியங்களும் பத்திரமாக புதிய தலைமுறைகளுக்குக் கிடைக்கக் காரணம் பனை ஓலைகள்தான்.

இதுபோல தமிழுக்கும்,தமிழர்களுக்கும் பனை மரங்கள் செய்த தொண்டு ஏராளம். தமிழைப் பாதுகாத்த பனை மரத்தை தமிழகமும்,தமிழர்களும் பொருள்படுத்தாமல் இருப்பது நன்றி மறந்த செயலாகும்.

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் (குறிப்பாக தென்மாவட்டங்களில்)பனை மரங்கள் களைச்செடியாகப் பரிதாபமாகக் காட்சி அளிப்பதைக் காண முடியும். உடல் உழைப்பையே நம்பியிருந்த 20-ம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முற்பட்ட காலங்களில் பனை ஏறுவதற்கு மனிதர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

பின்னர் ஏற்பட்ட இயந்திரப் புரட்சி காரணமாக அனைத்துத்துறைகளிலும் உடல் உழைப்பு குறைந்ததால், பனை ஏறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது.அரசுத்துறை மற்றும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட சில இயந்திரங்களும் பனை ஏறும் தொழிலுக்கு தொழிலுக்கு உகந்ததாக இல்லை. இதன் விளைவால் களைச்செடிகளாகி வருகின்றன கற்பகத்தருக்கள்.

21-ம் நூற்றாண்டின் இறுதியில் பனை மரங்கள் இருக்குமா என்பது கேள்விக்குறியே.எனவே,பண்டைய தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து நம் தலைமுறைக்கு வழங்கிய பனை மரங்களை,வாழையடி வாழையாக வரும் நமது அடுத்த தலைமுறைகளும் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பாக வளர்ப்பதுதான் பனை மரங்களுக்கு நாம் செய்யும் கைமாறு.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories