குமிழ்… குறுகிய காலத்திலேயே குதூகல வருமானம்!
இரா.ராஜசேகரன்
வனத்துறை உதவி வனப்பாதுகாவலர் ஏக்கருக்கு 200 மரங்கள். பாசனம், கவாத்து மட்டும் போதும். 7-ம் ஆண்டு அறுவடை. 1 ஏக்கரில் 20 லட்சம் குறைந்த காலத்தில், அதிக வருமானம் தரும் மரவகைகளில் முக்கிய இடத்தில் இருப்பது குமிழ். இதை சாகுபடி செய்ய ஏக்கர் கணக்கில் இடம் தேவையில்லை. வரப்பு, வாய்க்கால், காலி இடம் என கைவசம் இருக்கும் எந்த இடத்திலும் நடலாம். இது, ஆணிவேர் தாவரம் என்பதால், பக்கவேர்கள் அதிகமாக வளராது. அதனால் குறைந்த இடைவெளியிலும் இந்த மரத்தை நடவு செய்யலாம். தேக்குக் குடும்பத்தைச் சேர்ந்த இம்மரம், இழைப்பதற்கு இலகுவாகவும், அதேசமயம் உறுதியாகவும் உள்ளதால்… கடந்த சில ஆண்டுகளாக குமிழ் மரத்தின் தேவை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக விற்பனையில் வீறுநடை போடுகிறது இம்மரம்! வறண்ட நிலத்திலும் குமிழ் வளரும் என பலர் தவறான எண்ணத்தில் உள்ளனர். ஆனால், போதுமான தண்ணீர் வசதி உள்ள நிலங்களில் மட்டுமே குமிழ் சாகுபடி வெற்றியைக் கொடுக்கும். சரி, குமிழ் மரத்தை வணிகரீதியாக எப்படி சாகுபடி செய்வது? மறுதாம்பிலும் வருமானம்!
குமிழ், நல்ல வடிகால் வசதியுள்ள ஆழமான மண்கண்டமுள்ள அனைத்து மண் வகைகளிலும் சிறப்பாக வளரும். சாகுபடி நிலத்தை உழவு செய்து 15 அடிக்கு, 15 அடி இடைவெளியில், இரண்டு அடி நீள, அகல, ஆழமுள்ள குழியெடுத்து, நடவு செய்யவேண்டும். ஒவ்வொரு குழியிலும் மட்கிய தொழுவுரம் மற்றும் வண்டல் மண்ணைக் கலந்து முக்கால் பாகத்துக்கு நிரப்பி, மீதமுள்ள குழியை மேல் மண் கொண்டு நிரப்ப வேண்டும். ஏக்கருக்கு 200 கன்றுகள் தேவைப்படும். மூன்று மாதம் வரை வாரம் ஒரு முறையும்… பிறகு, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையும் என நீர்பாய்ச்சுவது நல்லது. நடவு செய்த ஓராண்டில், 10 அடி உயரம் வரை வளர்ந்து விடும். முதல் மூன்று ஆண்டுகள் வரை கிளைகளை அவ்வப்போது கவாத்து செய்ய வேண்டும். முறையாக கவாத்து செய்யாவிட்டால், மரம் நேராக வளராது. நடவு செய்த 8 முதல் 10-ம் ஆண்டுக்குள் அறுவடை செய்யலாம். 10 ஆண்டுகளில் ஒரு மரம் ஒரு டன் எடையில் இருக்கும். ஒரு டன் குறைந்தபட்சம் 7,000 ரூபாய்க்கு விற்பனையாவதாக வைத்துக் கொண்டாலும், ஒரு ஏக்கரில் உள்ள 200 மரங்கள் மூலம் 14 லட்ச ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். அறுவடை செய்த இடங்களில், மறுபடியும் துளிர்க்கும். அதை முறையாகப் பராமரித்தால் அடுத்த 6 அல்லது 7-ம் ஆண்டு மறுதாம்பை அறுவடை செய்யலாம். முதல் அறுவடையில் கிடைத்ததில், 50 சதவிகித அளவு வரையில் இந்தத்தடவை மகசூல் கிடைக்கும். இதற்குப் பிறகு மறுதாம்பு விடக்கூடாது மேலே பார்த்தது… வனத்துறை பரிந்துரை செய்யும் சாகுபடி முறை. சில விவசாயிகள் 10 அடி இடைவெளியில், ஏக்கருக்கு 400 கன்றுகளைக்கூட நடுகிறார்கள். இந்த முறையில் சாகுபடி செய்யும்போது, 5-ம் ஆண்டில் ஒரு மரம் விட்டு, ஒரு மரம் என்று அறுவடை செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் 200 மரங்கள் கிடைக்கும். இதை விற்பனை செய்தால் தலா 1,500 ரூபாய் வீதம் 3,00,000 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். மீதமுள்ள 200 மரங்களை 10-ம் ஆண்டில் அறுவடை செய்யலாம். ஒரு மரம் குறைந்தபட்சம் 5,000 ரூபாய் வீதம் 200 மரங்களுக்கு 10 லட்ச ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். இதைத் தனிப்பயிராக சாகுபடி செய்ய வாய்ப்பில்லாத விவசாயிகள், வரப்பு, வாய்க்கால், வேலி ஓரங்கள், ஓடை, காலி இடங்கள் என கைவசம் இருக்கும் இடமெல்லாம் நடவு செய்யலாம். குமிழ் சாகுபடியைப் பொறுத்தவரை கவாத்தும், பாசனம் மட்டும்தான் பராமரிப்பு, இதைச் சரியாக செய்யாவிட்டால் எதிர்பார்க்கும் மகசூல் கிடைக்காது. அவ்வப்போது கம்பளிப்புழு தாக்குதல் இருக்கும், அது பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது. பாதிப்பு அதிகமாக இருக்கும் என தோன்றினால்… மூலிகைப் பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம். இதுவரை நாம் பேசிக் கொண்டிருந்தது குறைந்தபட்ச கணக்கு. இனி, குமிழ் சாகுபடியில் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், அன்னவயல் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சொல்வதைக் கேட்போமா…! மூணு வருஷம்தான் பராமரிப்பு!
”என்னைப் பொறுத்தவரைக்கும் குமிழ் மாதிரி குறைஞ்ச காலத்துல அதிக வருமானம் கொடுக்குற மரம் எதுவும் இல்லீங்க. 7 முதல் 10 வருஷத்துக்குள்ள ஒரு மரம் ஒரு டன் எடை வந்துடுது. இதை என் அனுபவத்துலயே உணர்ந்திருக்கேன். 10 வருஷத்துக்கு முன்ன 30 சென்ட் நிலத்துல 9 அடிக்கு 9 அடி இடைவெளியில குமிழை நடவு செஞ்சிருந்தேன். கவாத்து அடிச்சு, முறையா தண்ணி கொடுத்து பாத்துகிட்டதால மரங்க நல்லா வளந்திருக்கு. அதுல வேலியோரமா இருந்த நாலஞ்சு மரங்களை போன வருஷம் வெட்டி வித்தேன். ஒவ்வொரு மரமும் ஒன்றரை டன் எடை இருந்துச்சு. ஒரு டன் 10 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனதால, மரத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. மிச்ச மரங்களை இன்னும் வெட்டாம வெச்சிருக்கேன். இந்த மரத்துக்கு இருக்குற டிமாண்டை பாத்துட்டு ஒண்ணரை வருஷத்துக்கு முன்ன, செடிக்கு செடி 14 அடி, வரிசைக்கு வரிசை 13 அடி இடைவெளியில ரெண்டரை ஏக்கர்ல நடவு செஞ்சிருக்கேன். இப்படி நட்டா ஏக்கருக்கு 220 கன்றுகள் வரைக்கும் தேவைப்படும். முதல் வருஷம் வரைக்கும் ஊடுபயிரா கடலை, உளுந்துனு மாறி, மாறி ஊடுபயிர் செஞ்சிக்கலாம். குமிழைப் பொறுத்தவரைக்கும் 20 அடி உசரத்துக்கு மரம் போற வரைக்கும் கவாத்து எடுக்கணும். அதுக்கு மேல தேவையில்லை. அதேபோல முதல் ரெண்டு, மூணு வருஷம் வரைக்கும் முறையா தண்ணி கொடுத்து பராமரிக்கணும். இதையெல்லாம் செஞ்சிட்டா… குமிழ்ல நல்ல மகசூலை எடுத்துடலாம். நடவு செஞ்ச 7-ம் வருஷத்துல இருந்து 10-ம் வருஷத்துக்குள்ள அறுவடை செஞ்சிடலாம். ஒரு மரத்துக்கு சராசரி விலையா 10 ஆயிரம் கிடைச்சாலும், ஒரு ஏக்கர்ல 200 மரத்துக்கு, 20 லட்ச ரூபா வருமானமா கிடைக்கும். விற்பனையிலயும் பிரச்னையில்ல. உங்ககிட்ட குமிழ் மரம் இருக்கறது தெரிஞ்சா… உள்ளூர் வியாபாரிகளே வந்து பணம் கொடுத்து வெட்டிக்கிட்டு போயிடுவாங்க. அந்தளவுக்கு இதுக்கு டிமாண்ட் இருக்கு.” என்ன… அனுபவ விவசாயி ரவிச்சந்திரன் சொன்னதை மனதில் ஏற்றிக் கொண்டீர்கள்தானே! இனி, முடிவு எடுக்க வேண்டியது நீங்களேதான்! தொடர்புக்கு ரவிச்சந்திரன், அலைபேசி: 96551-82891.
