தென்னையின் வளர்ச்சியை தடுக்கும் பிரச்சனைகள் மற்றும் அவற்றின் நிவர்த்திகள்..

தென்னை மரங்கள் உரச் சத்துக்கள் முழுமையாகப் பெறுவதற்கும், தென்னை வேர்களுக்கு காற்றோட்டம் ஏற்படுத்துவதற்கும் புதிய இளம் வேர்களின் வளர்ச்சியைத் தூண்டுவதற்காகவும் வருடத்திற்கு இருமுறை அதாவது ஜூன் – ஜுலை மற்றும் டிசம்பர் – ஜனவரி மாதங்களில் அதிக ஆழமின்றி (10 செ.மீ. முதல் 15 செ.மீ.) மேலாக உழவேண்டும்.ஆழ உழுதால் மேல் மட்டத்தில் உள்ள தென்னை வேர்கள் அறுபடும்.

1.. ஒல்லிக்காய்கள்:

தென்னையில் 3 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை ஒல்லிக் காய்கள் ஏற்படுகின்றன. மானாவாரி தோப்புகளிலும் சரியாக பராமரிக்கப்படாத தோப்புகளிலும் ஒல்லிக்காய்கள் அதிகமாக தோன்றுகின்றன.

நிவர்த்தி முறை:

* தரமான கன்றுகளை நடவு செய்தல்.

* பரிந்துரை செய்யப்பட்ட உர அளவிற்கு மேலாக மரத்திற்கு கூடுதலாக ஒரு கிலோ பொட்டாஷ் மற்றும் 200 கிராம் போராக்ஸ் உரங்களை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு இடுதல்.

* தேனீக்களை வளர்த்தல்.

* 200 மில்லி தென்னை டானிக் ஆண்டுக்கு இரு முறை கொடுத்தல் போன்றவைகளாகும்.
2.. நுனி சிறுத்தல்:

மரத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மரத்தில் நுனிப்பகுதி பென்சில் முனை போன்று காணப்படும். காய்களின் உற்பத்தி குறைந்து சிறுத்துக் காணப்படும். இலைகளின் இணுக்குகளில் பச்சையம் குறைந்து காணப்படும். மட்டைகளின் நிறம் மற்றும் அகலம் குறைந்து சிறுத்துக்காணப்படும். பாளைகளின் உற்பத்தி குறைந்தும், சிறுத்தும் தோன்றும். இறுதியில் மரம் பட்டுவிடும்.

தீர்வுகள்:

* மரங்களை வெட்டிஅகற்றிவிட்டு தரமான புதிய கன்றுகளை நடவு செய்தல்.

* கோடையில் தண்ணீர் பாய்ச்சுவது.

* பரிந்துரை செய்யப் பட்ட உரங்களை இடுவது.

* அரை கிலோ நுண்ணூட்டக்கலவை அல்லது 200 மில்லி தென்னை டானிக் இரு முறை இடவேண்டும்.

3.. குரும்பை உதிர்தல்:

தென்னையில் குரும்பை உதிர்தல் ஒரு முக்கியமான பயிர் வினையியல் இடர்பாடாகும். பாளை வெடிக்கத் துவங்கியது முதல் 3-4 மாதங்கள் வரை குரும்பைகள் தொடர்ந்து கொட்டிக் கொண்டே இருக்கும்.

நிவர்த்தி முறைகள் :

* தோப்புகளில் ஒன்று அல்லது இரண்டு மரங்களில் பாரம்பரிய குணத்தால் குரும்பை முழுவதும் கொட்டிவிடும். காய்கள் பிடிக்காது. இவ்வகை மரங்களை அகற்றிவிட்டு தரமான கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

* மண்ணின் கார அமிலத்தன்மை (பிஎச்) குறைவாகவும் அல்லது அதிகமாகும்போது குரும்பைகள் உதிரும். எனவே மண் ஆய்வு செய்து அமிலத்தன்மை கொண்ட மண்ணுக்கு சுண்ணாம்பும் காரத்தன்மைக்கு ஜிப்சம் இட்டும் சரிசெய்யலாம்.

* தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு நீர் பாய்ச்ச வேண்டும். பொதுவாக 10 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சுதல் அவசியம்.

* நுண்ணூட்டச் சத்து பற்றாக் குறையினால் குரும்பைகள் உதிரும். தென்னைக்கு பரிந்துரை செய்யப்பட்ட கலவை மரம் ஒன்றிற்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை அரை கிலோ இடலாம். அல்லது தென்னை டானிக் 200 மில்லியை வேர் மூலம் செலுத்தலாம்.

4.. இலை விரியாமை:

தென்னை இலைகள் சிறுத்து விரிவடையாமல் காணப்படும். இவைகள் சாதாரண முறையில் விரிவடையாமல் ஒன்றுக்கு ஒன்று பின்னிக்கொண்டு இலைகள் வெளிவர இயலாத நிலையில் இருக்கும். சில சமயங்களில் குரும்பைகளும் உதிர்ந்து விழும்.

நிவர்த்தி முறைகள்:

மரம் ஒன்றிற்கு 50 கிராம் போராக்ஸ் உரத்தை அரை கிலோ மணலுடன்கலந்து இரண்டு முறை தொடர்ந்து மூன்று மாத இடைவெளியில் இட்டு மண் அணைக்க வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories