தேக்கு மரம் பூச்சி, நோய் தாக்காது. பாசனம் மட்டும் போது

பூச்சி, நோய் தாக்காது. பாசனம் மட்டும் போதும். மூன்று தவணைகளில்

அறுவடை செய்யலாம்.  தேக்கு மரம் பலமுள்ள பலகையை மட்டுமல்ல, பலமான வருமானத்தையும் கொடுக்கும் மரமாகும். நல்ல மண்வளமும், முறையானப் பராமரிப்பும் இருந்தால், ஒரு ஏக்கரில் இருந்து 25 ஆண்டுகளில் 25 லட்ச ரூபாயை வருமானமாகக் கொடுக்கும் அற்புதமான மரம் தேக்கு! பராமரிப்புக்காக அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஆடு, மாடு சாப்பிடாது… பூச்சி, நோய் தாக்குதலால் பாதிப்பு இருக்காது… முறையாக பாசனம் மட்டும் கொடுத்தால் போதும்! 6 அடி உயரத்துக்கு மேல் வளர்ந்துவிட்டால், தேக்கு மரம் தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளும். பல இடங்களில் நடவு செய்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் சவலைப் பிள்ளை மாதிரி வளர்ச்சி இல்லாமல் இருக்கும். குறைவான மண்கண்டம் மற்றும் வடிகால் வசதி இல்லாத நிலமாக இருப்பதுதான் அதற்குக் காரணம். இந்த மரம் வலிமையான, கரையான் தாக்காதத் தன்மை உடையது. இதன் கடினத் தன்மைக்காக ‘மரங்களின் அரசன்’ என்ற பெயரும் இதற்கு உண்டு. கப்பல், படகு, மரச் சாமான்கள், கதவு, ஜன்னல் மற்றும் அலங்காரப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுவதால், சர்வதேச அளவில் பெரும் தேவை இருக்கிறது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இது நன்றாக வளரும். சரி, தேக்கு மரத்தை வணிகரீதியாக எப்படி சாகுபடி செய்வது என்பதைப் பற்றி பார்ப்போமா?அடிக்கடி கவாத்து செய்யக்கூடாது!
தேக்கு, நல்லவடிகால் வசதியுள்ள ஆற்று வண்டல் மண் மற்றும் மணற்பாங்கான செம்மண் நிலங்களில் நன்றாக வளரும். நிலத்தை நன்றாக உழவு செய்து கொள்ள வேண்டும். மழைக் காலத்துக்கு முன்பாக 6 அடிக்கு 6 அடி இடைவெளியில் இரண்டு அடி நீள, அகல, ஆழத்தில் குழியெடுத்து, நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு குழியிலும் முக்கால் பாகத்துக்கு மட்கிய தொழுவுரத்துடன் வண்டல் மண்ணைக் கலந்து இட்டு, மீதமுள்ள குழியை மேல் மண்ணைக் கொண்டு நிரப்ப வேண்டும். இப்படி நடவு செய்தால், ஏக்கருக்கு 1,000 கன்றுகள் வரைத் தேவைப்படும். மூன்று மாதம் வரை… வாரம் ஒரு முறையும், அதன் பிறகு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையும் நீர்ப்பாய்ச்சுவது நல்லது. சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தால், நல்ல மகசூல் கிடைக்கும். நடவு செய்த ஒரு மாதத்துக்குப் பிறகு செடியைச் சுற்றி களை எடுத்து, மண் அணைத்துவிட வேண்டும். வேகமாக வளர வேண்டும் என்பதற்காக, அடிக்கடி கவாத்து செய்யக்கூடாது. இப்படிச் செய்தால் ஒளிச்சேர்க்கை நடப்பது தடைப்பட்டு மரத்தின் வளர்ச்சி குன்றிவிடும்.
7, 12, 25-ம் ஆண்டுகளில் அறுவடை செய்யலாம்!
தேக்கு மரங்கள் தரமானதாகவும், பக்கக் கிளைகள் இல்லாததாகவும் வளர்ந்தால்தான் அதிக வருமானம் கிடைக்கும். பக்கக் கிளைகளை தரைமட்டத்திலிருந்து மரத்தின் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் மட்டுமே கழிக்க வேண்டும். உதாரணமாக, மரம் 9 அடி உயரத்தில் இருந்தால், தரையில் இருந்து 3 அடி உயரம் வரை கழித்து விட வேண்டும். அடர்த்தியாக வளரும்போது மரம் பெருக்காது. அதனால் நடவு செய்த 7-ம் ஆண்டு குறுக்கு வரிசையில் ஒரு வரிசையை விட்டு ஒரு வரிசையில் உள்ள மரங்களை அறுவடை செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் 500 மரங்கள் கிடைக்கும். மீதியிருக்கும் 500 மரங்களை, 12-ம் ஆண்டில் நேர் வரிசையில் ஒரு வரிசை விட்டு ஒரு வரிசை மரங்களை அறுவடை செய்ய வேண்டும். இப்பொழுது 250 மரங்கள் மீதமிருக்கும். இந்த மரங்களை சுமார் 20 முதல் 25-ம் ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். இதைச் சரிவர கடைபிடித்து அறுவடை செய்தால்… நல்ல மகசூல் கிடைக்கும்.
25 ஆண்டுகளில் 25 லட்சம்!
7-ம் ஆண்டு அறுவடையின்போது, தலா 500 ரூபாய் வீதம் 500 மரங்களுக்கு 2,50,000 ரூபாயும், 12-ம் ஆண்டு தலா 3,000 வீதம் 250 மரங்களுக்கு 7,50,000 ரூபாயும், இறுதியாக 25-ம் ஆண்டு தலா 6,000 வீதம் 15,00,000 ரூபாயும் வருமானமாகக் கிடைக்கும். ஆக, ஒரு ஏக்கரில் இருந்து 25 ஆண்டுகளில் 25 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். மீண்டும் ஒரு முறை சொல்கிறேன், நான் சொல்லும் கணக்கு மிகவும் குறைந்தபட்ச கணக்கு. அதே நேரத்தில் நல்ல மண் வளமும், முறையானப் பராமரிப்பும் உள்ள நிலங்களில் வளரும் தேக்கில் மட்டுமே இந்த வருமானம் கிடைக்கும் என்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் மேலே பார்த்தது வனத்துறை பரிந்துரை செய்யும் சாகுபடி முறை. சில விவசாயிகள் தேக்கை வரப்பு ஓரங்களில் நடவு செய்கிறார்கள். இந்த மரம், ‘ஒளி விரும்பி’ என்பதால் வரப்புகளில் நடவு செய்யும்போது நல்ல மகசூல் கிடைக்கும். தனித் தோப்பாக சாகுபடி செய்யும் சிலர் 15 அடி இடைவெளியில் ஏக்கருக்கு 200 கன்றுகளை நட்டும் பராமரிக்கிறார்கள். இந்த முறையிலும் மேலே சொன்ன வருமானத்துக்குக் குறைவிருக்காது. எனவே, உங்களுடைய வசதிக்கு ஏற்ற முறையில் சாகுபடியைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இரண்டு ஏக்கரில் தனிப்பயிராக சாகுபடி செய்திருக்கும் மதுரை மாவட்டம், கவசக்கோட்டையைச் சேர்ந்த ராமநாதன் என்ன சொல்கிறார் என்று கேட்போமா..!
பாசனம் மட்டும்தான் பராமரிப்பு!
”எங்களுக்கு ஏழு ஏக்கர் நிலமிருக்கு. 2 ஏக்கர்ல தேக்கு, 2 ஏக்கர்ல சவுக்கு, 1 ஏக்கர்ல யூகலிப்டஸ் வெச்சிருக்கோம். மீதமுள்ள 2 ஏக்கர்ல நெல், காய்கறினு விவசாயம் செய்றோம். 15 அடிக்கு 15 அடி இடைவெளியில ஏக்கருக்கு 200 தேக்கு கன்றுகளை நட்டேன். நட்டு நாலு வருஷமாச்சு. தண்ணி கட்டுறதைத் தவிர வேற பராமரிப்பு எதுவும் செய்றதில்லை. 4 வருஷத்துல மரம் 15 அடி உயரத்துல நிக்குது. முதல் ரெண்டு வருஷமும் ஊடுபயிரா மிளகாய், துவரை, மக்காச் சோளம் மாதிரியான வெள்ளாமை செஞ்சோம். மரம் நிழல் கட்டிக்கிட்டாதால, ரெண்டு வருஷமா ஊடுபயிர் செய்றதில்ல. மாசம் ரெண்டு தண்ணி கொடுக்குறோம், தனியா இதுக்குனு எந்த உரமும் கொடுக்குறதில்ல. இந்த மரங்களப் பாத்துட்டு, ‘இதே வளர்ச்சி இருந்தா… 20 வருஷத்துக்கு மேல மரத்தை வெட்டலாம்’னு வனத்துறை அதிகாரிக சொல்லியிருக்காங்க. ஒரு மரம் சராசரியா 10 ஆயிரம் ரூபாய்க்கு வித்தாலும் குறைஞ்சது 20 லட்ச ரூபா வருமானம் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்.” நான் சொல்வதும், ராமநாதன் சொல்வதும் இன்றைய நிலவரத்தின் அடிப்படையிலான குறைந்தபட்ச கணக்கு. ஆனால், தேக்கு மரத்துக்குள்ள தேவையைப் பார்த்தால் விலை உயர்ந்து கொண்டேதான் இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்!
120 ஆண்டுகள் வாழும்!
தேக்கு மரம் இந்தியா மற்றும் ஜாவாவின் வடகிழக்கு பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. இதன் அறிவியல் பெயர் ‘டெக்டோனா கிராண்டிஸ்’ (Tectona grandis) வனங்களில் 100 முதல் 120 ஆண்டுகளும், சாகுபடி நிலங்களில் 70 முதல் 80 ஆண்டுகளும் இதன் வாழ்நாள் இருக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories