வேங்கை தரும் வெகுமதி

வறட்சியைத் தாங்கி வளரும். ஏக்கருக்கு 200 மரங்கள். ஒரு மரம் 50 ஆயிரம். வணிக ரீதியான மரங்களில், சிலவற்றுக்கு எப்பொழுதுமே கிராக்கி இருந்து கொண்டே இருக்கும். அந்த வரிசையில் வரும் தேக்கு, தோதகத்தி ஆகியவற்றுக்கு அடுத்து தரமான மரமாக கருதப்படுவது… வேங்கை! இது மருத்துவகுணம் வாய்ந்த மரமும்கூட. இம்மரத்தில் செய்த குவளையில் நீர் அருந்தினால் நீரிழிவு நோய் குணமாகும், இம்மரத்தின் பிசின் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்குச் சிறந்த மருந்து. இதை வெட்டும்போது, சிவப்பு நிறத்தில் ரத்தம் போல சாறு வடிந்துக் கொண்டே இருக்கும். இனி, வணிக ரீதியாக வேங்கையைப் பயிரிடும் முறை பற்றி பார்ப்போமா?கடற்கரைப் பகுதிக்கு ஏற்றதல்ல!
பொதுவாக தாழ்ந்தக் குன்றுப் பகுதிகள், மலையை ஒட்டியச் சமவெளிப் பகுதிகளில் நன்றாக வளரும். குறிப்பாக, மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலையோரப் பகுதிகளுக்கு ஏற்ற மரம். சமவெளிப் பகுதிகளில் நல்ல வளமான, ஆழமான செம்மண் நிலங்களில் நன்றாக வளரும். கடற்கரை மணல் பகுதிக்கு இது ஏற்றதல்ல. ஏக்கருக்கு 250 கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.   
10 லட்சம்!
12 அடிக்கு 12 அடி இடைவெளியில் குழியெடுத்து நடவேண்டும். ஒவ்வொரு குழியிலும் மண்புழு உரம்-ஒரு கிலோ, வேர்வளர்ச்சி உட்பூசணம்-30 கிராம் (வேம்), மட்கியத் தொழுவுரம்-ஒரு கிலோ, அசோஸ்பைரில்லம், பாஸ்போ- பாக்டீரியா- தலா 15 கிராம் ஆகியவற்றைக் கலந்து வைத்துவிட்டு, நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 250 கன்றுகள் தேவைப்படும். வேங்கையைப் பொறுத்தவரை முதல் இரண்டு ஆண்டுகள் வளர்ச்சி சற்று மந்தமாகத்தான் இருக்கும். அதற்கு மேல் அபார வளர்ச்சி இருக்கும். வளர்ச்சி குறைந்த மரங்கள் மற்றும் குறைபாடுள்ள மரங்கள் ஆகியவற்றை 5 அல்லது 6-ம் ஆண்டுகளில் கண்டறிந்து, சுமார் 50 மரங்களை கழித்து விடவேண்டும். ஒரு வேளை, இந்த மரங்கள் நன்றாக இருந்தாலும், கழித்துவிட்டால்தான், மற்ற மரங்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும். கழிக்கப்பட்ட மரங்கள் சிறு மரச்சாமான்கள் செய்வதற்கு பயன்படும். இதன் பிறகு சுமார் 200 மரங்கள் தோட்டத்தில் இருக்கும். அவ்வப்போது நோய் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் சேதப்படும் கிளைகளை அகற்றி விடவேண்டும். இது வறட்சியை நன்றாகத் தாங்கி வளரும். கடுமையான வறட்சிக் காலங்களில் இதன் இலைகள் உதிர்ந்து, மரமே பட்டுப் போனது போல் தோன்றும். ஆனால், மழை பெய்ததும் துளிர்த்து வளர்ந்துவிடும். இது ஓங்கி உயர்ந்து வளரும்போது அதிக சூரிய ஓளித் தேவைப்படும். அதனால் பிற மரங்களின் நிழல் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வேங்கையைப் பொறுத்தவரை 10 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். ஒரு மரத்துக்குச் சுமார் 5,000 ரூபாய்க்குக் குறையாமல் விலை கிடைக்கும். இந்தக் கணக்குப்படி பத்து ஆண்டுகளில் ஒரு ஏக்கரில் உள்ள 200 மரங்களில் இருந்து 10 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
வேங்கைக்கு ஊடுபயிர் சவுக்கு!
இரண்டு ஏக்கரில் வேங்கையை நடவு செய்திருக்கும் மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள சாலிச்சந்தை கிராமத்தைச் சேர்ந்த தயாநிதி சொல்வதைக் கேளுங்கள். ”எனக்கு 14 ஏக்கர் நிலமிருக்குது. இதுல 5 ஏக்கர்ல தென்னை, 5 ஏக்கர்ல தேக்கு, 2 ஏக்கர்ல சவுக்கு, 2 ஏக்கர்ல வேங்கை நடவு செஞ்சிருக்கேன். வேங்கையை நட்டு மூணு வருஷமாச்சு. 12 அடிக்கு 12 அடி இடைவெளியில ரெண்டு ஏக்கருக்கும் சேர்த்து 500 கன்னுகள நட்டுருக்கேன். வாய்க்கால் பாசனம் செய்றேன். ஆரம்பத்துல வாரம் ஒரு தண்ணி கொடுத்தேன், இப்ப மாசம் ரெண்டு தண்ணி கொடுக்குறேன். மத்தப்படி பராமரிப்புனு எதையும் செய்யல. வேங்கைக்கு இடையே ஆரம்பத்துல பாசிப்பயறு, உளுந்து மாதிரியான பயிர்களை ஊடுபயிரா சாகுபடி செஞ்சேன். ஒரு வருஷத்துக்கு முன்ன, வேங்கைக்கு இடையில 6 அடி இடைவெளியில, ஏக்கருக்கு 1,000 சவுக்கு மரத்தை நட்டு விட்டுட்டேன். இப்ப அதுவும் நல்லா வளர்ந்திருக்கு. வேங்கையில வருமானம் எடுக்க 10 வருஷம் காத்திருக்கணும். அதனால, சவுக்கை ஊடுபயிரா நட்டுட்டா… நாலு வருஷத்துக்கொரு தடவை ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் எடுத்துடலாம். 10-ம் வருஷம் வேங்கை மூலமாக ஏக்கருக்கு குறைஞ்சது 10 லட்சம் வருமானம் பாத்துடலாம்” தயாநிதி, இன்னும் வேங்கையில் வருமானம் எடுக்கவில்லை. இவர் சொல்லும் கணக்கும் இன்றையச் சந்தை நிலவரத்தின் அடிப்படையிலான உத்தேச கணக்குதான். நிச்சயம் இந்த விலை கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளவர்கள்… புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகேயுள்ள நகரம் என்ற ஊரைச் சேர்ந்த சிங்காரவேல் சொல்வதையும் கேட்டுவிடுங்களேன். ”இப்ப எனக்கு வயசு 91. என்னோட 31-ம் வயசுல ஒருத்தர் கொடுத்த கன்னுகளை விளையாட்டா நட்டு வெச்சேன். அப்பப்ப தண்ணி ஊத்துனதை தவிர பெருசா எந்த பராமரிப்பும் செய்யலை. மொத்தம் 34 மரம் இருக்கு. அறுபது வயசான அந்த மரம் ஒவ்வொண்ணும் பிரமாண்டமா நிக்குது. பல வியாபாரிக வந்து 20 லட்சம் தர்றேன், 25 லட்சம் தர்றேன்னு கேக்குறாங்க. ஒரு மரத்துக்கே 60 ஆயிரம் ரூபாய்ககு மேல வருது அவங்க சொல்ற கணக்கு. ஆனா, இதுவரைக்கும் யாருக்கும் கொடுக்கல. ஒரு காலத்துல விளையாட்டா வெச்ச மரம்… இன்னிக்கு என் குடும்பத்துக்கு பெரும் சொத்தா இருக்குறதை நினைச்சா பெருமையா இருக்கு.” ‘தாவரங்கள், தலைமுறைகளை வாழ வைக்கும் வரங்கள்’ என்ற கூற்று எத்தனை உண்மை!
வேங்கையின் தாயகம்!
‘டெரோகார்பஸ் மார்ஸுபியம்’ (Pterocarpus marsupium)என்கிற தாவரவியல் பெயருடைய வேங்கை, இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கையைத் தாயகமாகக் கொண்டது. வீட்டு நிலை செய்ய அதிகம் பயன்படுகிறது. ஜன்னல், மேசை, நாற்காலி போன்ற பொருட்கள் மற்றும் சிறிய மரச்சாமன்கள் தயாரிக்கவும் வேங்கை அதிகம் பயன்படுகிறது. இதன் இலை, பூக்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுகின்றன

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories