‘சமைக்க வேண்டாம்… அப்படியே சாப்பிடலாம்’

சவ்சவ்

‘சமைக்க வேண்டாம்… அப்படியே சாப்பிடலாம்’ என்கிற வகையறா காய்கறிகளில் ‘சவ்சவ்’ என்கிற பெங்களூரு கத்தரிக்காயும் ஒன்று. ஆனால், அந்தத் தகவல் பலரும் அறியாதது. சமையலறை மெனுவில் கூட்டு இடம் பெறுகிற நாட்களில், அதிலும் வேறு எந்தக் காயும் சிறப்பாக அமையாத பட்சத்தில்தான் சவ்சவ்வின் பக்கம் பலரது பார்வையும் திரும்பும். அன்றாடம் சேர்த்துக் கொள்ளக்கூடிய அவசியமான காய்களில் சவ்சவ்வும் ஒன்று!

டயட் செய்கிறவர்களுக்கு சவ்சவ் மிக அருமையான ஒரு காய். தினசரி சவ்சவ்வை உணவில் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு சீக்கிரமே உடல் கொழுப்பு குறைந்து, சரியான வடிவத்துக்குத் திரும்பும்…’’ என்கிறார் டயட்டீஷியன் நித்யா. சவ்சவ்வின் மகத்துவம் மற்றும் மருத்துவத் தகவல்களுடன், சூப்பரான 3 ஆரோக்கிய ரெசிபிகளையும் செய்து காட்டியிருக்கிறார் அவர்.லேசான இனிப்புச் சுவையுடன் கூடிய சவ்சவ், கலோரி குறைந்த ஒரு காய். நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்சிடன்ட் என எல்லாம் நிறைந்தமுழுமையான காயும்கூட.

ஒரு கப் வேக வைத்த சவ்சவ்வில் இருப்பது வெறும் 38 கலோரிகள் மட்டுமே. சவ்சவ்வில் மருந்துக்குக்கூட கொலஸ்ட்ராலோ, சாச்சுரேட்டட் கொழுப்போ கிடையாது. இதில் உள்ள நார்ச்சத்தானது எடையைக் குறைக்க உதவுவதுடன், ரத்தத்தில் சர்க்கரையின்அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது. இதில் அதிக அளவு வைட்டமின் சி, ஃபோலேட், தயாமின், ரிபோஃப்ளோவின் உள்ளன.இதிலுள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம், ரத்த அழுத்த அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

எடைக் குறைப்புக்காக உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்கிறவர்கள் எந்தஉணவுடனும் சவ்சவ்வை சேர்த்துக் கொள்ளலாம். இதிலுள்ள நார்ச்சத்தானது கொஞ்சம் சாப்பிட்டதுமே வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுப்பதுடன், உணவு இடைவேளைகளுக்கு இடையில் எதையாவது கொறிக்கிற உணர்வையும் தடுக்கும்.
மலச்சிக்கல் பிரச்னைக்கு சவ்சவ் மிகச் சிறந்த மருந்து. தொடர்ந்து இதை உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு குடல் தொடர்பான கோளாறுகளும் குணமாகும். தவிர, இது உடலிலுள்ள கெட்ட கொழுப்பை நீக்கி, நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகிறது.

ரத்த அழுத்தப் பிரச்னையால் அவதிப்படுவோருக்கு அதைக் கட்டுக்குள் கொண்டு வரும் சவ்சவ். இதிலுள்ள அதிக பொட்டாசியமானது, சோடியம் சமநிலைமையின்மையை சரிப்படுத்தி, அதன் விளைவாக உயர் ரத்த அழுத்தம் வராமல் காக்கும்.ரத்தத்தில் Homocysteine என்கிற அமினோ அமிலம் அதிகமானால் இதய நோய்களும் பக்கவாதமும் வரும் அபாயம் அதிகரிக்கும். சவ்சவ்வில் உள்ள வைட்டமின் பி9, இந்த அமினோ அமிலத்தை சேரவிடாமல் தடுக்கிறது.

சவ்சவ்வில் உள்ள வைட்டமின் பி9 சத்தானது கர்ப்பிணிகளுக்கு மிகவும்அவசியமானது. கர்ப்ப காலத்தில் இந்தச் சத்து குறையும். அப்படிக் குறைவதால் பிறக்கும் குழந்தை கை வளர்ச்சிக் குறைபாடு, இதயக் கோளாறு உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு உள்ளாகலாம். கர்ப்பிணிகள் சவ்சவ்வை முறையாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் வைட்டமின் பி9 சத்துக் குறைபாடு ஏற்படாமல் காத்துக் கொள்ளலாம்.

ரத்தசோகைக்குக் காரணமான இரும்புச்சத்துக் குறைபாடு மற்றும் வைட்டமின் பி2 குறைபாடு இரண்டையும் ஈடுகட்டி, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அதன் மூலம் ஹீமோகுளோபின் அளவையும் கூட்டும் சக்தி கொண்டது சவ்சவ்.

எப்படித் தேர்வு செய்வது?

அளவில் சின்னதாக, உறுதியாக, பச்சை ஆப்பிளின் நிறத்தில் இருக்க வேண்டும். பெரிய காய்கள் முற்றியிருக்கலாம். அதில் சுவை இருக்காது. இளசான காய் என்றால் அதன் தோலைக்கூட நீக்கத் தேவையில்லை. சவ்சவ்வின் தோலிலும் ஏராளமான சத்துகள் இருக்கின்றன. பேப்பர் பையில் சுற்றி, 2 வாரங்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.

என்னவெல்லாம் சமைக்கலாம்?

வேக வைக்கலாம். பேக் செய்யலாம். பச்சையாக வெட்டிப் போட்டு காய்கறி மற்றும் பழ சாலட்டுடன் சேர்த்து சாப்பிடலாம். சவ்சவ்வில் சூப், குழம்பு, சாம்பார், கூட்டு, பொரியல், பஜ்ஜி, பச்சடி, துவையல், ஸ்டஃப்டு புரோட்டா என எது வேண்டுமானாலும் சமைக்கலாம். இயல்பிலேயே லேசான கசப்புச் சுவையுடைய சவ்சவ், சமைத்ததும் லேசான இனிப்புச் சுவைக்கு மாறும்.

என்ன இருக்கிறது? (100 கிராம் சவ்சவ்வில்)

ஆற்றல் 19 கிலோ கலோரிகள்
கார்போஹைட்ரேட் 4.51 கிராம்
சர்க்கரை 1.66 கிராம்
நார்ச்சத்து 1.7 கிராம்
புரதம் 0.82 கிராம்
வைட்டமின் சி 7.7மி.கி.
வைட்டமின் கே 4.1 மி.கி.

⭕ சவ்சவ் கேசரி

என்னென்ன தேவை?

சவ்சவ் – 100 கிராம்,
பாசிப் பருப்பு – 100 கிராம்,
நெய் – 100 மி.லி.,
முந்திரி – 25 கிராம்,
ஏலக்காய் – 2,
பால் – 200 மி.லி.,
பாதாம் – 25 கிராம்.

எப்படிச் செய்வது?

சவ்சவ்வை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக வெட்டி, தண்ணீரில் வேக வைத்து மசித்து வைக்கவும். பாசிப் பருப்பை கடாயில் வறுத்து பொடி செய்து கொள்ளவும். பாலை முக்கால் பாகமாக சுண்டும் வரை காய்ச்சவும். அதில் வறுத்துப் பொடி செய்த பாசிப் பருப்பு பொடியை சேர்த்து நெய் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு சவ்சவ் மசியலை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும். நன்கு கெட்டியானதும் வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்து ஏலக்காயை பொடித்து தூவி இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.

⭕ சவ்சவ் பாயசம்

என்னென்ன தேவை?

சவ்சவ் – 100 கிராம்,
பால் – 200 மி.லி.,
சர்க்கரை – 100 கிராம்,
முந்திரி – 5-10,
திராட்சை – 10,
நெய் – 100 மி.லி.,
கன்டென்ஸ்டு மில்க் – 50 மி.லி,
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

சவ்சவ்வை சுத்தம் செய்து தோல் நீக்கி துண்டுத் துண்டுகளாக வெட்டி, வேக வைத்துக் கொள்ளவும். பிறகு கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து வைக்கவும். பாலை சுண்டக் காய்ச்சி அதில் வேக வைத்த சவ்சவ்வை மசித்து சேர்க்கவும். நன்கு கொதித்தவுடன் சர்க்கரை, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கன்டென்ஸ்டு மில்க், ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும்.சுவையான சவ்சவ் பாயசம் தயார்.

⭕ சவ்சவ் கட்லெட்

என்னென்ன தேவை?

சவ்சவ் – 100 கிராம்,
கேழ்வரகு மாவு – 100 கிராம்,
வெங்காயம் – 50 கிராம்,
பச்சை மிளகாய் – 2-3,
எண்ணெய் – தேவையான அளவு,
சீரகம் – 1 டீஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன்,
சோள மாவு – 1 டீஸ்பூன்,
பிரெட் தூள் – 50 கிராம்,
கறிவேப்பிலை – சிறிது.

எப்படிச் செய்வது?

சவ்சவ்வை தனியாக வேக வைத்து மசித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில்எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம், சோம்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு அத்துடன் சவ் சவ், கேழ்வரகு மாவு, சோள மாவு சேர்த்துக் கிளறி கட்லெட் போன்று தட்டி தவாவில் போட்டு பொரித்தெடுக்கவும். தேவைக்கேற்ப வட்டம், சதுர வடிவில் மாவை தயாரித்து பிரெட் தூளில் புரட்டி எடுத்து பொரித்தால் சூடான கட்லெட் தயார்.

கர்ப்ப காலத்தில் வைட்டமின் பி9 சத்து குறையும். அப்படிக் குறைவதால் பிறக்கும் குழந்தை கை வளர்ச்சிக் குறைபாடு,இதயக் கோளாறு உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு உள்ளாகலாம். கர்ப்பிணிகள் சவ்சவ்வை முறையாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்தச் சத்துக் குறைபாடு ஏற்படாமல்
காத்துக் கொள்ளலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories